குட்டிப் பாப்பா

அலாரம் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்தோம். மணி ஐந்து நாற்பது. நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்து விட வேண்டுமென்பது எனது எண்ணம். அறையில் நன்றாக வெளிச்சம் வந்துவிட்டது. ஏற்கனவே கவரிலிருந்து பிரித்து வைத்திருந்த அந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் குச்சியை தீபாவிடம் கொடுத்தேன். எதுவும் பேசாமல் ஒருவித கலக்கத்துடன் பாத்ரூமிற்கு சென்றாள்.

இரண்டு நிமிடத்திற்கு பின் வெளியே வந்தாள். கையில் எதுவும் இல்லை. என் பார்வையாலே அது எங்கே என்று நான் கேட்டதை புரிந்து கொண்டாள்.

“உள்ள இருக்கு. நீங்களே போய் பாருங்களேன். ப்ளீஸ்”

உள்ளே சென்று பார்த்தேன். வாஷ் பேசின் மேல் இருந்தது. அதை பத்திரமாக எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்தேன். என் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள். நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாக ஒரு கோடு தெரிந்தது. இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இருவருக்கும் இதயத்துடிப்பு அதிகமாகி இருந்தது. இரண்டு நிமிடங்களுக்குப் பின் லேசாக இரண்டாவது கோடு தெரிய ஆரம்பித்தது. நன்றாக உத்துப்பார்த்தேன். அடுத்த இரு நிமிடங்களில் தெளிவாகவே தெரிந்தது.

தீபாவை என் மடியிலிருந்து தூக்கினேன். என்ன ரிசல்ட்? அவள் கண்களில் அந்த கேள்வி தெரிந்தது. இறுக்கமாக அணைத்து நெத்தியில் முத்தமிட்டேன். புரிந்து கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. ரொம்ப சந்தோஷப்பட்டா தீபா உடனே அழுதுவிடுவாள்.

“லூசு. அழாத” சொல்லிவிட்டு கண்ணை துடைத்தேன். மீண்டும் மடியில் சாய்ந்து கொண்டாள்.

அறை முழுக்க மௌனமே நிரம்பி வழிந்தது.

“என்னடா குட்டி உங்கம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லலாமா?”

“வேணாம். அவுங்க பேச மாட்டாங்க” லேசாக விசும்ப துவங்கினாள்.

அவளை தூக்கி நேராக என் முகத்தைப் பார்க்க வைத்தேன். விசும்பல் சத்தம் குறைந்தது.

”அழாதடா குட்டிப்பையா. இனிமே எல்லாம் சரி ஆகிடும். பாப்பா வர நேரத்துக்குள்ள எனக்கு மறுபடியும் வேலை கிடைச்சிடும். நம்ம ரெண்டு பேர் வீட்லயும் சரி ஆகிடுவாங்க. சரியா?”

“பாப்பானு எப்படி சொல்றீங்க?”

“எனக்கு ஜோசியம் தெரியும்”

“சொல்லுங்க. எப்படி சொல்றீங்க?”

“பெண் குழந்தை பிறந்தா தான் அம்மா அழகா மாறுவாங்களாம். பையன்னா குரங்கு மூஞ்சி மாதிரி மாறிடுமாம். நீ தான் இன்னும் அழகாயிட்டயே. அதான்”

“கதை விடாதிங்க. அதெல்லாம் ஏழு மாசத்துக்கு அப்பறம் தான் தெரியுமாம்”

“நீ வேணா பாரு. நிச்சயம் பாப்பா தான் பொறக்கும்”

”ஏன் உங்க அக்கா பையனுக்கு கொடுக்கணும்னு பாக்கறீங்களா? அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்”

“அதெல்லாம் அப்ப பாத்துக்கலாம்டா. நான் போய் இப்பவே இண்டர்நெட்ல பேர் பாக்கறேன். R இல்லைனா Sல தன் வைக்கணும்”

“நீங்க முதல்ல நௌக்ரில இருந்தோ மான்ஸ்டர்ல இருந்தோ ஏதாவது மெயில் வந்திருக்கானு பாருங்க”

“ஒரு வாரத்துல என்ன பெருசா மாறிடும்னு நினைக்கிற. எங்கயும் மேனஜர் போஸ்டிங்கு ஆள் எடுக்குற மாதிரி தெரியலை. ஃப்ரெஷர்னா கொஞ்சம் கஷ்டப்பட்டாவாது கிடைக்கும் போல. எலக்‌ஷன் வரைக்கும் அமைதியா இருந்துட்டு இப்ப கொத்து கொத்தா தூக்கறானுங்க.”

“அதுக்கு என்னங்க பண்ண? இப்ப பாப்பா வேற வர போகுதே சமாளிக்க முடியுமா?”

“ஏய்… ஏன் இப்படி ஃபீல் பண்ணற? வீட்டு லோன் இருபத்தி ரெண்டாயிரம் போக மீதி எட்டாயிரத்துல குடும்பத்தை நடத்திக்கலாம். ஆடம்பர சொலவெல்லாம் குறைச்சிட்டு அத்தியாவசிய தேவைகளை மட்டும் கவனிச்சிக்கலாம்”

“நம்ம ஆடம்பர செலவு எதுவுமே செய்யறதில்லையே”

“நம்ம ரெண்டு பேர் செல்ஃபோன் பில் நாலாயிரம் வருது. நான் என்னோடதை தூக்கப் போறேன். ஏதாவது இண்டர்வியூ கால்னாலும் லேண்ட்லைன்லயே பேசிக்கலாம். நீயும் அதை குறைக்க பாரு. இனிமே நோ சினிமா, ஹோட்டல். அப்பறம் கரெண்ட் பில் ரெண்டாயிரம் வருது. எங்கம்மா நூறு ரூபாய்க்கு மேல கட்டணதே இல்லை. அதையும் குறைக்கணும். இப்படி நிறைய குறைக்க வேண்டியது இருக்கு”

“சமாளிச்சிக்கலாம்னு சொல்றீங்களா? நான் வேணா ஏதாவது பர்சனல் லோன் எடுக்கவா?”

“அதெல்லாம் வேண்டாம்டா. வீட்டு லோனே நிறைய இருக்கு. எப்படியும் மூணு நாலு மாசத்துல சரி ஆகிடும். அப்ப நீயும் லீவு போட வசதியா இருக்கும். எப்படியும் வாங்கிடலாம்டா”

“உங்களை வேலையை விட்டு தூக்கினதுக்கு பதிலா என்னைய தூக்கிருந்தா கூட ஓரளவு சுலபமா சமாளிச்சிருக்கலாம். இன்னும் ஒரு பத்தாயிரம் அதிகமா வரும்”

“ஆமாம். நீயும் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருந்திருக்கும். உன்னை இப்ப வேலைக்கு அனுப்பவே எனக்கு கஷ்டமா இருக்கு”

“ஏன் அப்படி சொல்றீங்க? எல்லாம் நம்ம தேவைக்குத் தானே.”

“ஹ்ம்ம்ம். எப்படியும் நான் சீக்கிரம் வாங்கிடறேன்”

“சீக்கிரம் வாங்கிடுவீங்கனு எனக்கும் நம்பிக்கை இருக்கு. நீங்க எதுக்கும் கஷ்டப்படாதீங்க” என்னை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு முகம் கழுவ பாத்ரூம் சென்றாள்.

நான் எழுந்து போய் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். கடைசியாக எப்பொழுது ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வேலையை ஆரம்பித்தேன் என்று நினைவில்லை.

நௌக்ரியிலிருந்து சம்பந்தமே இல்லாத சில வேலை வாய்ப்பு மெயில்கள் வந்திருந்தன. எனக்கு வேலை போய் சரியாக இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. பத்து தூக்கம் இல்லாத இரவுகள். வீட்டில் பகைத்து கொண்டு செய்த காதல் திருமணம் என்பதால் இருவர் வீட்டிலும் தள்ளி வைத்து விட்டார்கள். அந்த வீராப்பிலே முப்பது லட்ச ரூபாய் செலவு செய்து இந்த அப்பார்ட்மெண்ட் வாங்கியிருந்தோம். ஃபர்னிச்சர் மத்த சாமான்கள் எல்லாம் சேர்ந்து முப்பத்தைந்து ஆகியிருந்தது. கையிலிருந்த அனைத்து சேமிப்புகளும் இதில் கரைந்து விட்டது.

இது வரை என்னுடைய  நிறுவனம் எப்பொழுதும் லே ஆஃப் செய்யாத தைரியம் இதையெல்லாம் என்னை செய்ய வைத்திருந்தது. எப்படியும் சமாளித்துவிடலாம் என்றும் நினைத்திருந்தேன். இப்பொழுது தான் பயம் வந்துள்ளது. எப்படியும் சிட்டியில் உள்ள சிறந்த மருத்துவமனையில் தான் தீபாவிற்கு காட்ட வேண்டும். அதை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை. அவசரத்திற்கு நண்பர்களிடமிருந்து கடன் வாங்கலாம். வேலை தேடும் போது நண்பர்களுக்கு நான் கணக்குப் பார்க்காமல் செலவு செய்திருக்கிறேன். ஒருத்தராவது உதவாமலா போய்விடுவார்கள். என் மனதில் உள்ள பயம் தீபாவிற்கு தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

காலை டிபனை தீபா தயார் செய்ய, முதன் முதலாக நான் கீழறங்கி குடிநீரை குடத்தில் பிடித்து தூக்கி வந்தேன். இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். கடந்த ஒரு வாரமாக அவளை என் வண்டியில் தான் அழைத்து சென்று கொண்டிருந்தேன்.

“குட்டி, இந்த நிலைமைல நீ டூவீலர்ல வரலாமா? பஸ்லயும் தூக்கி தூக்கி போடும் இல்லை? கால் டேக்சி ஏதாவது சொல்லவா?”

“அதெல்லாம் எதுவும் வேண்டாங்க. டூவீலர்லயே போகலாம்”

“ஹ்ம்ம்ம். மதியம் நான் ஏதாவது சமைச்சி கொண்டு வந்து கொடுக்கவா?”

”ஐயா சாமி. அன்னைக்கு நீங்க முட்டையை வேக வெச்சி கொடுத்ததே போதும். ஆஃப் பாயிலா முட்டையை வேக வெச்ச முதல் ஆள் நீங்க தான். எங்களை விட்டுடுங்க” வயிற்றில் கை வைத்து காட்டினாள்.

ஒவ்வொரு ஸ்பீட் ப்ரேக்கிலும் பார்த்து நிதானித்து ஓட்டினேன். வழக்கத்தை விட முப்பது நிமிடம் அதிகமாக எடுத்திருந்தேன். அவளை விட்டுவிட்டு எங்கும் போக மனமில்லாததால் வீட்டிற்கு வந்தேன். ஸ்டாக் மார்க்கெட் பார்க்கவும் மனமில்லை. இரண்டு லட்சம் இன்று முப்பதாயிரமாக மாறி இருப்பதை பார்த்து எரிச்சலடைவதை விட பார்க்காமலிருப்பதே மேல். அம்மாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லலாமா? ஓரளவு கோபம் குறையவும் வாய்ப்பிருக்கிறது. எதற்கும் டாக்டரிடம் ஒரு முறை சோதித்துவிட்டு இருவர் வீட்டிலும் சொல்லிவிடலாம். சனிக்கிழமை செக் அப் செய்துவிட்டு சொல்லிவிடலாம் என்று திட்டம். இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது.

ஒரு வழியாக இன்று வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. சமையலில் உதவவில்லை என்றாலும் பாத்திரத்தை கழுவி வைத்தேன். அவளை கனமான பொருட்களை தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டேன். என்னை நம்பி வந்தவளை மகாராணி போல பார்த்து கொள்வது என் கடமை. இரண்டு நாட்களாக தீபா டென்ஷனாகவே இருக்கிறாள். செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம் வந்துவிட்டது. வசதியாக வாழ்ந்தவள். எப்படியும் சமாளித்து கொள்ளலாம் என்று அவளுக்கு ஆறுதல் கூறி வந்தேன். சனிக்கிழமை வீட்டில் சொல்லலாம் என்று சொன்னதற்கு அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை. மௌனம் சம்மதம். வீட்டிலிருந்து உதவி கிடைத்தாலும் அதை ஏற்பதாக இல்லை. சமாளிக்க முடியாத பட்சத்தில் வண்டியை வித்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். எப்படியும் முப்பதாயிரம் கிடைக்கும். அதை வைத்து மூன்று மாதத்தை ஓட்டிவிட்டால் போதும். வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்திலே புது வண்டி வாங்கி விடலாம். இதை தீபாவிடம் சொல்லவில்லை.

”இந்த காலாண்டில் XXXXX நிறுவனம் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது சென்ற வருடத்தின் இதே காலாண்டை காட்டிலும் ஒரு சதவிகிதமே குறைவு. உலக பொருளாதார தேக்க நிலையிலும் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்தது பிரமிக்கத்தக்கது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்” டீவியில் ஓடிக்கொண்டிருந்தது

தீபா கம்பெனிதான். ஷேர் நஷ்டக்கணக்கு ஓரளவு குறைந்திருக்கும்.

மாலை ஆறு மணி. தீபாவிற்காக காத்திருந்தேன். தேவையில்லாமல் அழைப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தோம்.

வீடு திறக்கும் சத்தம் கேட்டது. கம்ப்யூட்டரை விட்டு ஹாலிற்கு வந்தேன்.

தீபாவுடன் வினோ வந்திருந்தாள். அவளைக் கைத்தாங்களாக பிடித்து உள்ளே அழைத்து வந்தாள். எழுந்து போய் தீபாவைப் பிடித்து கொண்டேன். தீபா மிகவும் களைத்துப் போயிருந்தாள்

“என்ன வினோ, தீபாக்கு என்ன ஆச்சு? ஏதாவது மயக்கமா?”

”ஒண்ணுமில்லை. அவளை படுக்க வை”

வைத்தேன்.

“சிவா, ஆபிஸ்ல கொஞ்சம் பிரச்சனை”

“”

“உனக்கே தெரியும் இப்ப சிச்சுவேஷன் சரியில்லை. அதனால பிரக்னண்ட் லேடீஸ் எல்லாத்துக்கும் மூணு மாசம் மேட்டர்னிட்டி லீவ் கொடுத்தா ஆப்பரேட்டிங் மார்ஜின் அஃபக்ட் ஆகும்னு”

“ஆகும்னு”

“தூக்கறாங்களாம். அதான்…”

“திஸ் இஸ் அன்ஃபேர். இவ்வளவு எத்திக்ஸ் பேசிட்டு எப்படி பெண்களுக்கு எதிரா இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணறாங்க?”

“பிராஃபிட் கணக்கு காட்டணுமில்லையா?”

“சரி, இப்ப தீபாவை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அதானே?”

“இல்லை அவ ப்ரெக்னண்ட்னு ஆபிஸ்ல யாருக்கும் தெரியாது”

“அப்பறம் என்ன பிரச்சனை?”

“உனக்கும் இப்ப வேலை இல்லை. வீட்டு லோன் வேற ஹெவியா இருக்காம்.”

“வினோ. டோண்ட் கில் மி. தீபாக்கு என்ன ஆச்சு?”

”அதுக்கு பயந்து அவ அபார்ஷன் பண்ணிட்டா”

இருதயத் துடிப்பே ஒரு நிமிடம் நின்றது போல் இருந்தது.  என்னால் இதை முழுதாக ஜீரணிக்க முடியவில்லை. எதையாவது பிடித்து கொள்ள வேண்டும். வேலையிலிருந்து நீக்கும் போது இருந்ததை விட ஆயிரம், லட்சம் மடங்கு உடைந்துவிட்டது போல் தோன்றியது. உள்ளே தீபாவின் விசும்பல் சத்தம் கேட்டது.

மெதுவாக உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்தேன்.

“ஏன்டா செல்லம் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே. இந்த வீட்டைக் கூட வித்திருக்கலாமேடா. இதுக்காக நீ இவ்வளவு வலியைத் தாங்கணுமாடா?”

“குட்டிப் பாப்பா ரெசஷன்ல கஷ்டப்பட வேண்டாம்னுதாங்க”

……………………..

இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

சும்மா சும்மா…

மானட மயிலாட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரும் நமீதா அணிந்து வரும் உடைகள் முகம் சுழிக்க வைக்கின்றன. மிக ஆபாசமாக உடையணிகிறார்.”

இப்படினு ஒருத்தர் சட்ட சபைல பேசியிருக்காரு. இதை பத்தி யாரும் பதிவு போடலையே. என்ன கொடுமை சரவணன்?

அப்படி என்ன மாதிரி ட்ரெஸ் போட்டு வராங்கனு போட்டோவோ அல்லது யூ டியுப் லிங்கோ கொடுத்தா நல்லா இருக்கும். தப்பா நினைக்காதிங்க. சும்மா தெரிஞ்சிக்கத்தான்…

தனியார் ரேடியோக்களும், டிவிக்களும் வந்த பிறகு தான் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி, பெற்ற மகளையே தந்தை மானபங்கம் செய்தார் போன்ற செய்திகள் எல்லாம் வருகின்றன.”

இப்படி வேற சொல்லியிருக்காரு. வலைப்பதிவுல படிக்கிற காமெடியெல்லாம் விட சட்டசபைல நிறைய காமெடி இருக்கும் போல. என்னமா சிந்திக்கிறாங்க.

இதுக்கு பேசாம தமிழ் வலைப்பதிவெல்லாம் படிக்கிறதால தான் நிறைய குடும்பத்துல சண்டை வருதுனு பேசியிருக்கலாம் 😉

————————————————-

இந்த வருஷம் ஆரம்பமே அசத்தலுங்க..

ஒரு பக்கம் பினாத்தல் சுரேஷ், வவ்வாலு இன்னோரு பக்கம் அய்யனார், தமிழச்சி, ஓசை செல்லா, லக்கி லுக், அண்ணாச்சி. இப்படி பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. கடைசியா செந்தழல் ரவி வேற கலத்துல இறங்கிட்டார். அவரை திரும்ப எழுத வெச்சதுக்காகவே இவுங்க எல்லாருக்கும் நன்றி சொல்லனும்…

—————————————————

நேத்து ஃபிரெண்டு ஒருத்தன்கிட்ட பேசிட்டு இருந்தேன்…

“மச்சான் தமிழ் நியூ இயரை மாத்திட்டாங்களாம்டா.. தெரியுமா?”னு கேட்டான்…

தமிழ்   நியு இயரா??? விளங்கனா போல தான்

——————————-

நெல்லிக்காய் – 12 இறுதி பாகம்

அனைவரின் ஆசிகளுடன், வாழ்த்துக்களுடனும் சீரும் சிறப்புமாக அருண்-தீபாவின் திருமணம் நடந்து முடிந்தது. ஒரு வாரம் தீபாவின் வீட்டிலும், அவள்

உறவினர்கள் வீட்டிலும் பலமாக விருந்து நடைபெற்றது. அடுத்த வந்த வார இறுதியில் தம்பதிகள் இருவரும் அருணின் சித்தப்பா வீட்டில் ஏற்பாடு செய்த விருந்திற்கு சென்றிருந்தனர்.

அங்கே அவனுக்கு கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் தங்கையும், பதினோராம் வகுப்பு படிக்கும் தம்பியும் இருந்தார்கள். காலை டிபன் முடிந்து அனைவரும் அமர்ந்து மகிழ்ச்சியாக பேசி கொண்டிருந்தனர். சித்தப்பா வெளியே செல்ல…

“அம்மா… நீ போய் சீக்கிரம் சமைமா. நாங்க அண்ணன்டயும், அண்ணிட்டயும் பேச வேண்டியது நிறைய இருக்கு” அருணின் தங்கை சுமதி.

“அப்படி என்ன பேச போறிங்க ரெண்டு பேரும்?”

“சாப்ட்வேர் கம்பெனில எப்படி வேலை செய்வாங்கனு கேட்டு தெரிஞ்சிக்க போறோம். அதெல்லாம் உனக்கு புரியாதுமா. நீ சீக்கிரம் போய் சமை.

இவனுக்கு இப்பவே பசிக்குதாம்” அருகிலிருக்கும் தம்பியை காட்டி சொன்னாள்.

“ஆமாமா. எனக்கு இப்பவே பசிக்குது. நீ சீக்கிரம் போய் சமைமா” தம்பி கௌதம்.

“சரிடா கண்ணு. அம்மா சீக்கிரம் ரெடி பண்ணிடறேன்” சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்றாள் அருணின் சித்தி.

“அப்பாடா… அம்மா போயிட்டாங்க. இப்பதான் ஜாலியா பேச முடியும். அண்ணி நீங்க அண்ணனை முதல்ல எங்க பார்த்தீங்கனு ஞாபகம் இருக்கா?”

“அடிப்பாவி இதுக்கு தான் சித்திய உள்ள போக சொன்னியா?” வேகமாக கேட்டான் அருண்

“அண்ணா. நான் உங்கிட்ட கேக்கல. நீ சும்மா இரு. நீங்க சொல்லுங்க அண்ணி” ஆர்வமாக கேட்டாள் சுமதி

முகத்தில் வெட்கத்துடன் பேச ஆரம்பித்தாள் தீபா… “பெங்களூர்ல… சிவாஜி நகர்ல”

“பராவாயில்லையே நியாபகம் வெச்சிருக்கியே” செல்லமாக பேசினான் அருண்

“அப்படினா… நீங்க வேலைக்கு சேறதுக்கு முன்னாடியே பழக்கமா?” முன்பை விட ஆர்வமாக கேட்டாள் சுமதி

“பழக்கம் தான்.. ஆனா அது வேற மாதிரி” கொஞ்சம் ஸ்டைலாக பதில் சொன்னான் அருண்

“அண்ணா.. நீ பேசன அவ்வளவுதான். நான் அவுங்ககிட்ட தானே பேசிக்கிட்டு இருக்கேன்” கொஞ்சம் சீரியஸாக பேசினாள் சுமதி

“சரி. அப்ப நான் வெளிய போயிடுவா?”

“உனக்கும் கேள்வி வரும். அப்ப நீ பதில் சொன்னா போதும். ஓகேவா?”

“சரிம்மா…”

“நீங்க சொல்லுங்க அண்ணி. அண்ணன் அன்னைக்கு உங்ககிட்ட என்ன பேசினாரு?
தீபா நீ அழகா இல்லைனு நினைக்கிறேன். உன்னை எனக்கு பிடிக்கல. நான் உன்னை காதலிக்கல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கனு
சொன்னாரா?”

“யாரு உங்க அண்ணனா? கிழிஞ்சிது. நான் அங்க பாவமா இருந்த பசங்களுக்கு இட்லி வாங்கி கொடுத்தது பிடிக்காம இதெல்லாம் பண்ண கூடாதுனு

அப்பவே அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாரு”

“ஏய் நான் அதிகாரம் எல்லாம் பண்ணல. அது தப்புனு தான் சொன்னேன்” வேகமாக சொன்னான் அருண்

“எது தப்பு? பாவமா இருக்கற பசங்களுக்கு சாப்பாடு கொடுக்கறது தப்பா?” தீபாவிற்கு துணைக்கு நின்றாள் சுமதி

“சரி நான் பேசல. நீங்களே பேசுங்க. நான் அப்பறமா சொல்றேன்” சூழ்நிலை சரியில்லாததால் ஒதுங்கி கொண்டான் அருண்.

“அப்பறம் நீங்க அண்ணனை பத்தி என்ன நினைச்சீங்க அண்ணி”

“வேண்டாம்மா… அத சொன்னா இங்கயே பிரச்சனையாயிடும்”

“அண்ணி.. அண்ணன் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டாரு. அதுவும் அப்ப அவர் உங்களுக்கு தெரியாதவர் தானே. தாராளமா சொல்லுங்க”

“இப்படி அதிகாரம் பண்றானே. இவனுக்கு பொண்டாட்டியா வரவ பாவம்னு நினைச்சுக்கிட்டேன்”

“அப்பறம்”

“அப்பறம் என்ன மறுபடியும் குருப் டிஸ்கஷன்ல பார்த்தேன்”

“வாவ்!!! ரெண்டு பேரும் எதிர் அணிதானே”

“பின்ன… நான் கொடுத்த தலைப்பு வேண்டாம்னு சொல்லி என்னை அசிங்கப்படுத்தனவுடனே எனக்கு கோபம் தாங்கலை. ஆனா எல்லார் பேரையும் நியாபகம் வெச்சி பேசனவுடனே கொஞ்சம் அசந்துட்டேன். மேல் மாடில கொஞ்சம் கொஞ்சம் இருக்கு அதனால தான் தலைகனம்னு

நினைச்சிக்கிட்டேன்”

“ஓ! சரி… அண்ணா இப்ப நீ சொல்லு… அண்ணி அதுல என்ன பேசினாங்க?”

“அதுவா… முதல்ல நான் இவளை எப்படியாவது தோக்க வைக்கணும்னு தான் தலைப்பையே மாத்தினேன். ஆனா இவ பேசாமலே இருந்தது எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சி… பேசினா எப்படியும் சண்டை போட்டு ஜெயிக்கலாம்னு பார்த்தேன். ஆனா இவ பேசவே இல்லை. அதனால கடைசியா

முடிவுரை கொடுக்க சொன்னேன். அதுல எல்லாரும் அசர மாதிரி பேசினா”

“அப்பவே உனக்கு பிடிச்சி போச்சா?”

“அதெல்லாம் இல்லை… எப்ப புடிச்சிதுனு கரெக்டா சொல்ல தெரியாது”

“அண்ணா.. பொய் சொல்லாத. ஒழுங்க சொல்லு”

“நிஜமா. வேணும்னா உங்க அண்ணியையே கேட்டு பாரு”

“அண்ணி நீங்க சொல்லுங்க. அண்ணனை உங்களுக்கு எப்ப பிடிச்சிது?”

“அப்படி ஒரு இடத்தை சொல்ல முடியாது. நிறைய இடமிருக்கு…”

“அண்ணி கொஞ்சம் சொல்லுங்களேன்.. ப்ளீஸ்”

தீபா அருணை தர்ம சங்கடமாக பார்க்க… அவன் கண்களாலே சம்மதமளித்தான்…

“நான் போய் பக்கத்துல உக்கார்ந்தவுடனே என்னை ராஜிக்கூட உக்கார வைச்சது, ராஜியையும் கார்த்தியும் சேத்து வெச்சது, ஒரு பொண்ண வண்டீல உக்கார வெச்சி ஓட்டறதுக்கு கூச்சப்பட்டது, எனக்கு அடிப்பட்டவுடனே கூடவே இருந்து கவனிச்சிக்கிட்டது. எங்க அம்மாவை எந்த வேலையும் செய்யவிடாம ஹாஸ்பிட்டல பாத்துக்கிட்டது. இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்…” சொல்லிவிட்டு அருணை பார்த்து அவள் புன்னகைத்தாள்.
அருணும் சந்தோஷத்தில் வானில் பறந்து கொண்டிருந்தான்…

“அண்ணி நீங்க போய் பக்கத்துல உக்கார்ந்தவுடனே வேற ஒருத்தவங்கள உங்க பக்கத்துல உட்கார சொன்னதுக்கு உங்களுக்கு கோபம் வரல”

“எனக்கு கோபம் தான். முதல்ல பாதி நாள் நான் தப்பா தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன். இவர்கிட்ட பேசவே கஷ்டமா இருக்கும். என்னடா எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கானேனு கடுப்பா இருக்கும்… ஆனா போக போக புரிஞ்சிக்க ஆரம்பிச்சவுடனே எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு”

“ஆமாம் எதுக்கு இப்படி விசாரிச்சிட்டு இருக்க? நீ எதாவது பண்றியா? காலேஜ்ல படிக்கும் போது இதெல்லாம் பண்ணக்கூடாது. தப்பு. புரியுதா? அண்ணனாக மாறி தங்கைக்கு அறிவுருத்தினான் அருண்

“அதெல்லாம் இல்லைனா. எங்க காலேஜ் மேகசின்ல போட ஒரு கதை எழுதலாம்னு பார்த்தேன். சரி உங்க கதையே இண்ட்ரஸ்டிங்கா இருக்கேனு கேட்டுக்கிட்டு இருந்தேன்”

“அடப்பாவமே! காலேஜ் மேகசின்ல எதெல்லாமா போடுவாங்க?” தீபாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது…

“அதெல்லாம் போடுவாங்க… அந்த மேகசின் எடிட்டர் எங்க சீனியர்தான். என்ன பார்த்து எப்பவும் வழிஞ்சிக்கிட்டே இருப்பாரு. அதனால நான் போய் கொடுத்தா கண்டிப்பா போட்ருவாரு. சரி கதைக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?”

“என்ன வைக்கலாம்?” அருணும் தீபாவும் யோசித்து கொண்டிருந்தனர்.

சரியாக அந்த நேரம் பார்த்து அருணின் சித்தப்பா வீட்டிற்கு வந்தார். கையில் ஒரு பேப்பர் போட்டலம் இருந்தது.

“அப்பா கைல என்ன பொட்டலம்? பகோடாவா?” ஆர்வமாக விசாரித்தான் கௌதம்

“வர வழியில ஒரு பாட்டி நெல்லிக்காய் வித்துட்டு போச்சு. சரி இந்த வெயில்ல வித்துட்டு போகுதேனு வாங்கிட்டு வந்தேன். இந்தாங்க எல்லாம் சாப்பிடுங்க” வீட்டு மருமகளிடம் கொடுத்தார் சித்தப்பா…

“ஐயோ! அப்பா நெல்லிக்காய் கசுக்கும்பா. அதுக்கு பதிலா பகோடா வாங்கிட்டு வந்துருக்கலாம்” முகத்தில் வெறுப்புடன் சொன்னான் கௌதம்.

“நெல்லிக்காய் தாம்பா உடம்புக்கு நல்லது. அதுல விட்டமின் C இருக்கு.
அதுவுமில்லாம நெல்லிக்காய் சாப்பிடும் போதுதான் கசக்கும் சாப்பிட்டு முடிச்சு தண்ணி குடிச்சா அமிர்தம் போல இனிக்கும்

இதை கேட்டவுடன் அருண், தீபா, சுமதி மூவரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்து சிரித்து கொண்டனர்…

நட்சத்திர நன்றி!!!

என்னடா நேத்து சொல்ல வேண்டியதை இன்னைக்கு சொல்றானேனு தப்பா நினைச்சுக்காதீங்க. சுத்தி இருக்குற மக்கள்ட எல்லாம் நல்லா பேசியே ரொம்ப நாளான மாதிரி ஒரு ஃபீலிங். அதனால இந்த வீக் எண்ட் அதிகமா கம்ப்யூட்டர் முன்னாடி உட்காராம அக்கம் பக்கத்துல இருக்கறவங்களோடையும், ரூம் மெட் கூடயும் ரொம்ப நாளைக்கு அப்பறம் உக்கார்ந்து ஜாலியா பேசிக்கிட்டே இருந்துட்டேன். (வேற என்ன வெட்டிக்கதை தான் ;))

பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் நட்சத்திரமா இருந்து கலக்கன இடத்துல நமக்கு ஒரு வாரம் இடம்னு சொல்லும் போது சந்தோஷமா ஒத்துக்கிட்டேன். ஆனா திடீர்னு ஒரு பயம் வந்துடுச்சு. இலக்கியமா எதுவும் நமக்கு எழுத தெரியாது. சமுதாயத்துல நடக்கிற தப்புக்கு என்ன காரணம்னு ஆராய்ச்சி பண்ணி அறிவுப்பூர்வமா எழுதவும் நமக்கு தெரியாது. கவிதை தெரியாது. அரசியல் தெரியாது. பொருளாதாரம் தெரியாது.

இப்படி எதுவும் தெரியாம எப்படி ஒரு வாரத்தை சமாளிக்கறதுனு ரொம்ப யோசிக்க வேண்டியதா போயிடுச்சு. நாம ஏதோ நமக்கு தெரிஞ்ச அறைகுறை விஷயத்தை வைத்து ஒப்பேத்திட்டு இருக்குற ஒரு சராசரிக்கும் சற்று குறைவான (below average) ப்ளாகர். ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதி இந்த வாரத்தை ஒப்பேத்திவிட்டேன்.

இன்னும் எழுத நினைத்த சில முக்கியமான கட்டுரைகளும், நகைச்சுவை பகுதிகளும் வேலை பளுவினால் முடியாமல் போனது. இன்னும் ஒரு சில பதிவுகளில் இருக்கும் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் போனது. அவை அனைத்தையும் வரும் வாரங்களில் சரி செய்துவிடுகிறேன். (கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – இனி தொடர்ந்து வரும்)

ஒரு வாரம் முழுதும் என்னால் தொடர்ந்து உற்சாகமாக எதையாவது எழுத முடிந்ததென்றால் அதற்கு முழு காரணமும் நீங்கள்தான். உங்கள் அனைவருக்கும் என் நன்றி. மேலும் எனக்கு இந்த வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும் என் நன்றிகள் பல.

தட்டுங்கள் திறக்கப்படும்!!!

எனக்கு பிடித்த வாசகங்கள்… (மலை சொற்பொழிவிலிருந்து)


துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்து கொள்ளுவார்கள்.

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

நான் உங்களுக்கு் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்கு பலனில்லை.

ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்.

நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.

ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?

மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும்.

ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுகொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்கு திறக்கப்படும்.

ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளை செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்…


நண்பர்கள் அனைவருக்கும் கிரிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!

சூரியனுக்கு டார்ச் லைட்டு

எனக்கு பிடித்த வலைப்பதிவர்களையும் அவர்களது ஒரு சில பதிவுகளையும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்…

கார்த்திக் பிரபு
கவிதை எல்லாம் அருமையா எழுதுவாரு. வெகுளித்தனமா பெசுவாரு. (கல்யாணமாயிடுச்சில்ல அதுதான் கொஞ்சம் மரியாதை). இப்ப அவருடைய கல்யாண வைபவத்தை நம் கண் முன் கொண்டு வருகிறார் இந்த தொடர் மூலம்
நான் கணவனான போது

இவருடைய இந்த கவிதைகளை படித்த பிறகு பலர் அவர்களுடைய தாத்தா, பாட்டிகளை திட்டியதாக எனக்கு தகவல் வந்தது (அத்தை இல்லாத காரணத்திற்காக)
அத்தை பெண்கள் என்னும் ராகஷசிகள்

என்னுடைய லொள்ளு சீரிஸை போலவே இவருடைய இந்த லொள்ளும் எனக்கு பிடித்திருந்தது.
லொள்ளு

ராகவன்
இவருடைய இந்த பயணக்கட்டுரையில் பல சமூக கருத்துக்களையும் அள்ளி தெளித்திருப்பார் – கோவை குற்றாலமும் ஜான் ஆப்ரகாமும்

என்னுடைய பல நாள் வருத்தத்திற்கு பதில் சொன்ன பதிவு – என் கொங்கை நின் அன்பர்

கைப்புள்ள
இவருடைய சித்தூர்கட் செலவு சீரிஸ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று
சித்தூர்கட் செலவு

இவருடைய ஆறு விளையாட்டு பதிவும் அருமையான ஒன்று – ஆறு

மேலும் இவருடைய பஸ் பயணங்களில், தடிப்பசங்கள் சீரிஸும் அருமையாக இருக்கும். ஒரு சின்ன ஆலோசனை, இந்த சீரிஸிற்கெல்லாம் ஒன்றிலிருந்து மற்றொன்று போக ஹைப்பர் லிங் இருந்தால் இன்னும் பலனளிக்கும். மேலும் முகப்பில் இதையெல்லாம் தனியாக எடுத்து போட்டால் இன்னும் நலம்.

நாகை சிவா
இவருடைய பின் தங்கிய மாவட்டம் இவரின் மாவட்டம் பற்றிய இவரின் தெளிந்த பார்வையை காட்டும் – பின் தங்கிய மாவட்டம்

இவரின் “எப்படி கிடைத்தது” இவரின் தேச பக்தியை வெளிப்படுத்தும் ஒரு சிறந்தபதிவு – “எப்படி கிடைத்தது?”

ராம்
இவருடைய கைப்புள்ள காவியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று – “கைப்புள்ள காவியம்”

இவர் போட்டோவை ப்ரோபைலிலிருந்து தூக்கிய இந்த கதை சூப்பர் (கண்டிப்பா படிங்க) – “நான் ஏன் மாத்தினேன்”

CVR– தமிழ்மணத்திலிருப்பவர்களுக்கு இவரை தெரியாது. என்னுடைய கதைகள் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக இவரின் கதைகள் நிச்சயம் பிடிக்கும்.

சவுண்ட் பார்ட்டி
இவருடைய கிரிக்கெட் அனுபவம் பற்றிய இந்த பதிவை படித்தால் சிரிக்காமலிருக்க முடியாது – நானாத்தான் நாறிட்டனா?

பொண்ணுங்க இந்த மாதிரி கூட ஓட்டுவாங்களானு இதை படிச்சதுக்கப்பறம்தான் தெரிஞ்சது – மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்

Syam
இவருடைய மேட்ரிமோனியல் விளம்பரங்கள் என்னுடைய ஆர்க்குட் அலும்பல்களை நினைவு படுத்தும் – மேட்ரிமோனியல் அட்வர்டைஸ்மெண்ட்

முதல் பதிவிலே கலக்க முடியுமா என்று நான் அசந்தேன். அதுவும் அமெரிக்கா வந்த புதிதில் நானும் இதையே அனுபவித்தேன் – ரிப்பீட்டு

இவருடைய காலேஜ் அனுபவமும் என்னை ரீல் சுத்த வைத்தது – தமிழ் மணமும் நானும்

தேவ்
இவருடைய கதைகளை போலவே எழுத வேண்டுமென்று நான் மிகவும் ஆசைப்படுகிறேன். ஆனால் முடியவில்லை 😦

நீங்களும் படித்து பாருங்கள்

கதிரேசன் கதை

இதை படித்து இவருக்கும் எனக்கும் பெரிய விவாதமே நடந்தது (ஆன்லைனில்) – ஆஷிரா

சந்தோஷ்
எந்த ஒரு நியூஸையும் அருமையான தலைப்பில் அவருக்கே உரிய பாணியில் கொடுப்பார் – திருந்தவே மாட்டீங்களாடா நீங்க

இவருடைய முதல் வீடியோ பதிவு – தேசிய கீதம்

தம்பி
இப்படி ஒரு கேள்வி கேட்டுத்தான் தம்பி நமக்கு பழக்கமானார் 😉 –
தண்டவாலத்துல ஒண்ணுக்கு போனா தப்பா?

ரீல் சுத்த வைத்த பதிவு, என்னுடைய நகைச்சுவை பதிவுகள் பிடித்தவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் – வாலிப வயசு
(ஒரு பதிவிலிருந்து மற்றொன்றிற்கு லிங் கொடுத்தால் நன்றாக இருக்கும்

தம்பியின் மற்றொரு பரிமானம். வெளிநாட்டிலிருப்பவர்கள் இதை படித்தால் மனம் கனக்கும் – என் நண்பனுடன் ஒரு நாள்

திவ்யா
நம்மல மாதிரி பசங்களுக்கு பயனுள்ள பதிவு (ஓரளவுக்கு உண்மையாக இருப்பதாகவே நினைக்கிறேன்) – பெண்களை கவர்வது எப்படி?

ஓசியிலே யூத் ஃபுல்லான படம் பார்க்க – கல்லூரி கலாட்டா
(என்னுடைய நெல்லிக்காய் படித்தவர்களுக்கு இந்த கதை மிகவும் பிடிக்கும்)

ஜி
இந்த வாரத்தில் நான் மிகவும் ரசித்த நகைச்சுவை பதிவு. என்னுடைய கவுண்டரின் காமெடியை விட நன்றாக வந்திருந்தது – லொள்ளு சபா பல்லவன்

வசனமே இல்லாத அருமையான கதை – குறும்பன்

கப்பி (நான் பொறாமைப்படும் ஒரே பதிவர். வெரைட்டியிலும் அசத்துபவர்)

என்னுடைய கொல்ட்டி கதையின் கருப்பொருள் இந்த கதையிலிருந்தே காப்பி அடித்தேன் – இன்றும்

இப்படியெல்லாம் எழுத முடியுமானு நான் ஆச்சரியப்பட்ட பதிவு – பின்நவினத்துவ கனவு

இது கற்பனை என்று நான் சத்தியமாக நம்பவில்லை – அந்த இரவு

கண்ணன் – கர்ணன்

நான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது.

அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெச்சி ஒரு சில தவறான முடிவு எடுத்தடறாங்க. அதுல என்னை ரொம்ப பாதிச்சது கர்ணன் படம்தான். கர்ணனை கண்ணன் ஏமாற்றி கொன்னுட்டார்னு நம்ம ஆளுங்களுக்கு கண்ணனை பிடிக்காம போயிடுது. இதுல கொடுமை என்னன்ன அவரை பிராடு, ஏமாற்றுக்காரர்னு நிறைய பேர் சொல்றத கேட்டுருக்கேன்.

நம்ம சினிமால சிவாஜி நடிச்சதால கர்ணனை அநியாயத்திற்கு நல்லவனா காண்பிச்சிருப்பாங்க. அதப்பத்தி பேசி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நான் பேச போவது கர்ணன் மரண தருவாயில் இருக்கும் போது கண்ணன் அவனுடைய தானத்தை எல்லாம் யாசகமாக ஏமாற்றி வாங்கி அவனை கொன்றுவிட்டான் என்ற குற்றச்சாட்டை பற்றியே பேச போகிறேன்.

கர்ணனின் மரணத்தை பற்றி வியாச பாரதத்தில் எவ்வாறு உள்ளது? அங்கே கண்ணன் வந்து கர்ணனுடைய தானத்தை யாசகமாக வாங்கினானா என்றால் இல்லை. போரில் கர்ணனின் தலையை கொய்தே அர்ச்சுணன் அவனை கொல்கிறான். அதுவும் கர்ணன் நிராயுதபாணியாக அந்த நேரத்தில் இல்லை. அவன் பிரம்மாஸ்திர பிரயோகத்தை யோசிக்க அந்த நேரத்தில் அவன் வாங்கிய சாபத்தால் அது அவனுக்கு மறக்கிறது. அந்த சமயத்திலே அவன் பார்த்தனால் கொல்லப்படுகிறான்.

சரி, இதையும் விட்டுவிடுவோம்… நாம் தமிழில் பார்த்த கர்ணன் படத்திற்கே வருவோம். கர்ணன் அம்புகளால் துளைக்கப்பட்டு விழுந்து கிடக்கிறான். அங்கே அவன் செய்த புண்ணியம் அவனைக் காக்கிறது. இப்போழுது உங்களை பொறுத்தவரை கண்ணன் கர்ணனை ஏமாற்றி கொள்கிறான் இல்லையா???

அங்கே நடப்பதை நன்றாக பார்த்தால் உங்களுக்கே கண்ணனின் உயர்ந்த குணம் புரியும். கர்ணன் மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகிறது. அங்கே கண்ணன் நினைத்திருந்தால் ஒரு அந்தணனையோ, அல்லது தேவேந்திரனை மீண்டும் வேடமிட்டு வர சொல்லியிருக்கலாம். யார் கேட்டாலும் கர்ணன் தானமளிக்கப்போகிறான். ஆனால் கர்ணனுக்கு புகழ் சேர்கக கண்ணனே வந்து யாசகம் வாங்குகிறான்.

மானிடருக்கும், தேவேந்திரனுக்கும் தானமளித்து பெரும் புகழ் பெற்ற கர்ணன் பரமாத்மாவிற்கே தானமளிக்க வழி செய்கிறான். அதுவும் கண்ணனாக சென்றிருந்தால் தாராளமாக கர்ணன் கொடுத்துவிடுவான். கண்ணனே நாராயணனின் அவதாரம் என்பது கர்ணனுக்கும் தெரியும்.

பரமாத்மா என்று அறிந்ததாலே அவ்வளவு எளிதாக அவன் தான் செய்த புண்ணியமனைத்தும் தானமளித்தான் என்று சுலபமாக அந்த வள்ளலை அனைவரும் குறைத்து மதிப்பிடக்கூடும். அதனாலே கண்ணன் ஏழை அந்தனனாக உருவெடுத்து போர்களத்தில் கர்ணன் முன் செல்கிறான். அதற்கு பிறகு அவனுக்கு பரமாத்வாவின் தரிசனம் கிடைக்கிறது. கிருஷ்ணனாக இருந்து அவதாரத்தை விட்டு வந்து நாராயணனாக மாறி தரிசனம் தந்து மீண்டும் கிருஷ்ணனாக மாறுகிறான். ரிஷிகளும், யோகிகளும், இந்திராதி தேவர்களும் எந்த தரிசனத்திற்காக அன்றாடம் ஏங்குகிறார்களோ அதை கர்ணனுக்கு அருளுகிறான்.

அர்ச்சுணனிற்கோ, தர்மனிற்கோக்கூட இந்த புகழ் கிடைக்கவில்லை. அவர்கள் மரணத்தின் போது நாராயணன் அவர்களுக்கு காட்சியளித்து மோட்சமளிக்கவில்லை. அதனால் கர்ணனுக்கு கண்ணன் அநியாயத்தை இழைத்தான் என்று சொல்வது நம் அறியாமையே!!!

பாண்டவர்கள் தவறே செய்யாதவர்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்கள் செய்த தவறிற்கு தான் அவர்கள் 12 ஆண்டுகள் வன வாசமும் ஒரு வருடம் அஞ்ஞானவாசமும் மேற்கொண்டனர். முதலில் மனதிலிருக்கும் இரும்பு திரையை விலக்கி பாருங்கள்.

மேலும் கண்ணன் நினைத்திருந்தால் போரில் ஆயுதமேந்தியிருக்கலாம். சுதர்சன சக்கரத்தை எதிர்க்க உலகில் எதுவும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அவன் போரில் ஆயுதமேந்தாமல் வேறும் சாரதியாகவே இருந்தான். ஒரு சமயத்தில் ஆயுதமுமெந்தினான். அதுவும் பக்தருக்காகவே.

போரின் இரண்டாம் நாள் அர்ச்சுணனின் சினத்தை கட்டுப்படுத்த முடியாமல் கௌரவர்கள் அஞ்சினர். பீஷ்மர், துரோனர் இருவருடைய ரதங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. போரின் முடிவில் கௌரவர்களுக்கு பெருத்த நஷ்டம். அன்று இரவு துரியோதனன் பிதாமகரை சந்தித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து, பாட்டனார் மேல் சந்தேகத்துடனும் பேசினான்.

அதை கண்டு கொதித்த பிதாமகர், போரில் கண்ணன் ஆயுதமேந்தாதவரை நம்மை கண்டிப்பாக அவர்களால் வெல்ல முடியாது என்று சொல்லவே அமைதியாகிறான் துரியோதனன். பிதாமகரின் வாக்கை காக்க தன் வாக்கை மீறி போரின் மூன்றாம் நாள் ஆயுதமேந்துகிறான் கண்ணன். அதையும் மற்றவர் உணராவண்ணம் பார்த்தன் மேல் கோபப்பட்டு பிதாமகரை தாக்குவது போல் நடிக்கிறான்.

மேலும் போரில் பழியை அவனே ஏற்கிறான். காந்தாரியின் சாபத்தையும் ஏற்று அவன் குலமே அழியும் பாவத்தையும் ஏற்கிறான். இப்படி பக்தருக்காகவே வாழ்ந்து பழியையும் சாபத்தையும் ஏற்கும் கண்ணனுக்கு போரினால் குண்டுமணி அளவு பலனுமில்லை. நியாயத்தை நிலைநாட்டுவதை தவிர…

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ (3) – தனுஷ்

நீங்க இப்ப பாக்கறது கவுண்டர் பெல்ஸ் Devil’s Advocate part – 3

இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர் தமிழக மக்களின் மனதில் மன்மத ராசாவாக இடம் பெற்றிருக்கும் தனுஷ்…

க: வாங்க தனுஷ்!
தனுஷ் அது எப்படிங்க உங்க அண்ணன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கும் போது இந்த சின்ன வயசுல நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.

த: எனக்கு சின்ன வயசுல இருந்தே சீக்கிரம் கல்யாணமாகி வாழ்க்கையில செட்டில் ஆகணுங்கறதுதான் லட்சியம்

க: ஆஹா லட்சியமென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். அவனவன் படிச்சி வாழ்க்கையில பெரிய ஆளு ஆகனும்னு ஆசைப்பட்டா நீங்க சின்ன வயசுல இருக்கும் போதே சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனுங்கறத லட்சியமா வெச்சிருக்கறீங்க. அத வெக்கப்படாம வெளிய வேற சொல்லிட்டு அலையறீங்க.

த: ஆமாங்க. கடைசியா படிச்சி பெரிய ஆளாயி என்ன பண்ணப்போறாங்க? எல்லாரும் கல்யாணம் தானே பண்ணிக்க போறாங்க. அதனாலத்தான் நான் அதை சீக்கிரமாவே பண்ணிட்டேன்

க: ஏன்டா எல்லாரும் கடைசியா சாகத்தானே போறாங்க? அதுக்கு ஆசைப்படுவியா? பேசறாம்பாரு…பெரிய இடமா கிடைச்சிது, விட்டா போயிடும்னு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு பேசற எகத்தாளத்தப்பாரு.
ஆமாம் அது என்ன பேரு இந்திய ப்ரூஸ்லி?

த: அதுவா? நான் போடற கராத்தே சண்டைய பார்த்து ரசிகர்கள் அப்படி கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

க: ஏன்டா ப்ரூஸ்லி ஒரு அடி அடிச்சா நீ தாங்குவியா? அவர் எப்படியும் செத்து போயிட்டாருங்கர தைரியத்தில நீயா வெச்சிக்கிட்ட. சரி விடு… அந்த காலத்துல தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் மாதிரினு வெச்சிக்கிறோம். சரி உன்னோட படத்துலயே உனக்கு பிடிச்சது எது?

த: சுள்ளான். அதுலதான் டைரக்டர் ரமணா என்னை ஆக்ஷன் ஹீரோவா காண்பிச்சாரு.

க: ஓ! நீயும் பசுபதியும் மாத்தி மாத்தி
டேய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு கத்துவீங்களே அந்த படமா?
ஏன்டா ஓவரா சவுண்ட் விட்டு நடிச்சா அது ஆக்ஷன் படமா?

த: அதுல பஞ்ச் டயலாக்லாம் வேற இருக்குமே!!!

க: ஓ! அதுவா? அந்த தீப்பந்தத்த எடுத்துட்டு வாங்கப்பா. தம்பிய சுட வைக்கலாம்

த: எதுக்குங்க?

க: நீ தான்டா சொன்ன! சுள்ளான் சூடானேன் சுலுக்கெடுத்துடுவேனு. எனக்கு கால்ல 2 நாளா சுலுக்கு அதான் உன்னைய சூடாக்கி சுலுக்கெடுக்க வைக்கலாம்னு பாக்கறேன்.

த: ஐயய்யோ அது சும்மா ரைமிங்கு பேசனதுங்க…

க: இந்த பாரு இனிமே சும்மா இப்படி மொக்கைத்தனமா பஞ்ச் டயலாக் ஏதாவது பேசின… அவ்ளோ தான். நான் எதுவும் பண்ண மாட்டேன். மக்களே படத்த ஃபிளாப்பாக்கிடுவாங்க…

த: அதுல க்ளைமாக்ஸ் காட்சி கூட அருமையா இருக்குங்களே!

க: டேய் வேணாம் என்னைய டென்ஷனாக்காத! அது ஒரு க்ளைமாக்ஸ் அதுக்கு உனக்கு பெருமை வேற…உன்னைய பேட்டியெடுக்கறதுக்காக என்னைய அந்த ட்ரீம்ஸ், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் எல்லாம் வேற பாக்க வெச்சிட்டானுங்க. ஏன்டா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா?

த: புதுக்கோட்டையிலிருந்து சரவணன் பார்த்தீங்களா? அது அப்படியே நம்ம உலகம் சுற்றும் வாலிபன் மாதிரியே இருக்குமே?

க: டேய் டூபாகூர் மண்டையா… அது உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி இருந்துச்சா? இதுக்கு முன்னாடி நீ அந்த படம் பார்த்திருக்கயா? தப்பி தவறி இத வெளிய சொல்லிடாத… எல்லாம் கல்லால அடிச்சியே கொன்னுடுவானுங்க…

சரி இதுக்கு மேல நீ கேள்வி கேட்டா தாங்க மாட்ட. ஓடி போயிடு!!!

மக்களே! என்ன நடந்துச்சுனு நீங்களே பாத்துட்டுதான் இருக்கீங்க. நான் சொல்றதுக்கு இதிலே ஒண்ணுமில்லை.நாளைக்கு உங்களை வேற ஒரு பிரபலத்துடன் சந்திக்கிறேன்… நன்றி! வணக்கம்!!!

பாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல்
———————————————-

இந்த சந்திப்பு இலக்கியத் தரமாக இல்லை என்று குற்றஞ்சாட்டி விடக்கூடாது என்பதற்காக, பதிவை இலக்கியத்தரமாக்கும் முயற்சியாக இரு கவிதைகள்:

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல் – எஸ்.பாபு : ஈ – தமிழ் | பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சந்திப்புகள்

பத்மா அரவிந்த் பாஸ்டன் வரப்போவதாக தெரிய வந்ததுதான் இந்த சந்திப்புக்கு கால்கோள். பத்மா அரவிந்தை சந்திக்க பலரும் பிரியப்படவே, அதையே பாஸ்டன் வலைப்பதிவர் சந்திப்பாக ஆக்கலாம் என்னும் எண்ணம் எழுந்தது.

பத்மா வரப்போகிறார் என்று அறிந்தவுடன் இந்த வார நட்சத்திரம் (வெட்டிப்பயல்) பாலாஜியை தொடர்பு கொண்டு, நத்தார் தினத்தை முன்னிட்டு வரவேற்பு கொடுக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்தேன். அங்கிருந்து வி.பி. பாலாஜி மற்ற ஒருங்கிணைப்புகளை முழுவதுமாக கவனித்துக் கொண்டார். நியூ ஜெர்சியில் இருந்து கண்ணபிரான் ரவி ஷங்கரை வரவழைத்தார். சந்திப்பு களை கட்டியது.

யாரெல்லாம் வந்திருந்தார்கள்?

1. தேன் துளி பத்மா அரவிந்த்

2. மாதவிப் பந்தல் கண்ணபிரான் ரவி ஷங்கர்

3. வெயிலில் மழை ஜி

4. வெட்டிப்பயல் பாலாஜி

5. பாடும் நிலா பாலு! சுந்தர்

6. Navan’s weblog நவன்

7. பார்வை மெய்யப்பன்

8. வேல்முருகன்

9. ‘பிரக்ஞை’ ரவி ஷங்கர்

10. அரை பிளேடு

கடைசி நேரத்தில் வர இயலாதவர்கள்:

1. Blogger: User Profile: சனியன்

2. வெற்றியின் பக்கம் வெற்றி

ஆத்திகம் எஸ்கே, செல்வன், சிகாகோவில் இருந்து தேன் சிறில் அலெக்ஸ், அட்லாண்டாவில் இருந்து சந்தோஷ்பக்கங்கள் சந்தோஷ் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்துக்களைப் பகிர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாக டானிக்காகவும் இருந்தது.

என்ன பேசினோம்?

மதியம் 1 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், பின்னிரவு இரண்டு மணி வரை தொடர்ந்தது. இதனாலேயே பேசிய பலதும் மறந்து போகுமளவு ஆயிற்று. விளையாட்டுப் போட்டியை நேரடியாக, லைவ் ரிலேவாக ரசிப்பதுதான் சுகம். ஆடி முடித்து, முடிவு தெரிந்தபிறகு ஹைலைட்ஸ் பார்ப்பது பிடிக்கும் என்றாலும், ஆட்டத்தை, இருக்கை நுனியில் அமர்ந்து, நகம் பிய்த்துக் கொண்டு, ரீப்ளே கடுப்பாகி சுவைப்பது போல் வராது. வித்தியாசமான பந்துவீச்சுகளும், முக்கிய திருப்பங்களும் ஆளுக்கு ஆள் மாறுபடுவதில்தான் வல்லுநர் பார்வையே அடங்கியிருக்கிறது.

எனக்கு ஆரம்பத்தில் பேசின விஷயங்கள் மட்டுமே மனதில் நிற்கும் எனபதற்கேற்ப துவக்கத்தில் பிரக்ஞை ரவி பகிர்ந்த இரு கட்டுரைகளை சொல்லலாம்.

சோமாலியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுகிறார்கள். அன்னிய தேசம்; புரியாத மொழி. தங்கள் மொழி பேசுபவர்கள் மெயிண் (Maine) மாகாணத்தின் கிராமமொன்றில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு படையெடுக்கிறார்கள். ஏற்கனவே அங்கு வசிப்பவர்களும் சோமாலியர்கள்தாம் என்றாலும், அவர்கள் வேறொரு இனம். அவர்களை அடக்கியாண்ட இனத்தை சேர்ந்த அகதிகள் இப்போது தங்கள் மொழி பேசுபவர் அருகாமையை நாடி அந்த இடத்திற்கு அடைக்கலம் கோருகிறார்கள்.

ஏற்கனவே தங்களை அடக்கியாண்டவர்களுடன் என்ன உறவு வேண்டிக் கிடக்கிறது என்று ஒரு சாரார் கோபம் கொள்கிறார்கள். ‘இவர்கள் அடிமைகளாக இருக்க வாய்க்கப்பட்டவர்கள்தானே… இப்படிப்பட்டவர்கள் இன்றைய சூழ்நிலையிலும் மேலோர் ஆகிய நமக்கு உதவ வேண்டும்’ என்று காரசாரமான மாற்றுக் கருத்துடன் இன்னொரு சாரார்.

சமகாலப் பிரச்சினைகளுக்கு இது ஒரு தேர்ந்த ஒப்புமையாக இருக்கும் என்பதை நான் இங்கு எழுதியதை விட இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக விளக்கினார்.

பேச்சு சுவாரசியத்தில் அறிவார்ந்த முடிவெடுக்கும் திறனுக்கு திரும்பினோம். Rationale என்னும் பதமே கேள்விக்குறியது. வாழ்க்கையே பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக artificial intelligence வல்லுநரும் அறிபுனை எழுத்தாளருமான எம்.ஐ.டி. பேராசிரியர் கருதுகிறார்.

‘தண்ணீர் மேலே விழுந்தால் குடை பிடிக்க வேண்டுமா?’ என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறது ரோபோ.

‘ஆம்’

‘மழைக்கு சரி. ஆனால், காலையில் நீங்களே பூத்துவாலைக்கடியில் போய் நிற்கிறீர்களே! அப்போதும் நான் குடை பிடிக்கத்தானே வேண்டும்?’ மீண்டும் ரோபோவின் வினயமான லாஜிக்கலான கேள்வி.

சமீபத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை தருவதற்கு முதியோரை விட இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகம் கிடைப்பது எனக்கு நினைவுக்கு வருகிறது. கிட்னி மாற்றினாலும், அறுவை சிகிச்சை வெற்றியடையும் வாய்ப்பு (இளமையை விடக்) குறைவு; மேலும் வாழ்ந்து முடித்தவர்கள் என்று rational-ஆக வயதானோரை தீர்த்துக் கட்டலாமா என்று விவாதம் சென்றது.

வலைப்பதிவுகள்

பெரும்பாலான பேச்சு இதை சுற்றியே அமைந்தது. பிடித்த வலைப்பதிவுகள் எது? ஏன் பிடிக்கிறது? எது பிடிக்கவில்லை?

எப்பொழுது படிப்பீர்கள்? எத்தனை நேரம் செலவிடுவீர்கள்? நண்பர் எழுதினால் படித்தே தீருவீர்களா? எப்படி ‘அதிகம் பார்வையிடப்பட்டவை’ ஆவது? எவ்வாறு வாசகர் பரிந்துரை நட்சத்திரங்களை ஏற்றுவது? பூங்கா, கில்லி பரிந்துரைகள் எவ்வாறு இருக்கிறது? புதிய பதிவர்களுக்கு உதவி எவ்வாறு கிடைக்கிறது?

வெளிப்படையாக எழுதுதல் அவசியமா? சாத்தியமா? வலைப்பதிவை எவ்வாறு மதிப்பிடுவது? எது சிறந்த பதிவாகக் கருதப்படும்? பார்வையாளர் எண்ணிக்கை முக்கியமா? பின்னூட்டங்களுக்கு மயங்கலாமா?

பதிவுகளில் என்ன எழுதுவது என்பது குறித்து எவருக்கும் சந்தேகங்கள் இல்லை.

பத்மா அரவிந்த்

சனி மாலையின் நட்சத்திர விருந்தினரான பத்மா மிகக் குறைவாகவே பேசினார். நல்ல எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், சிறப்பான மேடைப் பேச்சாளராக இருக்க வேண்டாம் என்பது போல், அவ்வப்போது சன்னமான குரலில் எண்ணங்களை ஓடவிட்டார்.

கேம்பஸ் இண்டர்வ்யூ நேர்காணலில் நடக்கும் க்ரூப் டிஸ்கசன் போன்ற அடிதடி சூழலில், கவர்ச்சிகரமான தலைப்புகளும், புரட்சிகரமான தடாலடிகளும் மேலெழுந்தது. இன்னும் கொஞ்சம் பத்மாவை கேள்வி கேட்டு, அனைவரின் வினாக்களும் பதிலளிக்குமாறு அமைத்திருக்கலாம்.

பிரக்ஞை ரவி

தேர்ந்த சினிமா விமர்சகர்; மானுடவியலாளர் என்பதற்கு ஒப்ப, பல இடங்களில் விவாதங்களை ஒழுங்குப்படுத்தினார். பெண் வலைப்பதிவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார். அமெரிக்க இதழியலில் வெளிவரும் சினிமா விமர்சனங்களின் கூறுகளை சுவையாக விளக்கினார்.

‘எந்த ஒரு ஊடகமுமே ஆரம்பத்தில் தரத்தை கொண்டிருப்பதில்லை; உச்ச நிலையையும் எளிதில் அடைவதில்லை’ என்னும் கருத்து வலைப்பதிவுகளில் நிலவும் க்வாலிடி குற்றத்திற்கு சிறப்பான சமாதானமாக இருந்தது.

கண்ணபிரான் ரவி கேயாரெஸ்

விளையாட்டாக சென்ற தருக்கங்களையும் கிண்டல்களையும் பல இடங்களில் நேர்படுத்தினார். திடீரென்று உணர்ச்சிவேகமாகப் போய்விடும் தருணங்களில் ஸ்பாண்டேனியஸ் நகைச்சுவையால் இயல்பாக்கினார்.

  • ‘பதிவரின் வீட்டில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் நிகழ்வுகள் என்ன?’;
  • ‘பாலியல் குறித்த கட்டுரைகள், புனைவுகள் ஏன் மிக அரிதாகவே வலைப்பதிவுகளில் வெளியாகிறது?’
  • ‘ஆன்மிகம் என்றால் என்ன? ஏன் எல்லோரும் ஆன்மிகத்தை நாட வேண்டும்?’

    என்று பல சேரியமான வித்துக்களைத் தூவி உரையாடலை உற்சாகமாக்கினார்.

    மற்றவர்கள்

    ‘வெயிலில் மழை’ ஜி ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார். ‘வெட்டிப்பயல்’ பாலாஜி தன் கருத்துக்களை தெளிவாக முன்வைத்து ஜோராக உரையாடினார். கொஞ்சம் தாமதமாக வந்ததாலோ என்னவோ, நைட் வாட்ச்மேன் போன்று ஒரமாக நின்று கொண்டே ‘பாடும் நிலா பாலு’ சுந்தர் அமைதி காத்தார். அதிகம் வலைப்பதியாததால் ஒவர் ஹெட் ட்ரான்ஸ்மிஷன் ஆன சில நிகழ்வுகளை விழிப்புடன் நவன் கேட்டுக் கொண்டிருந்தார்.

    ‘பார்வை’ மெய்யப்பன் இன்னும் பல இடங்களில் தன் விரிவான வாசிப்பையும் பரந்துபட்ட அவதானிப்புகளையும் முன்வைத்திருக்கலாம் என்று எண்ணினேன். சபாநாயகராக வேல்முருகன் அதிகம் அறியாத தகவல்களை முன்வைத்து தன் கருத்துக்களை காரசாரமாக விவாதித்து சந்திப்புக்கு உரமூட்டினார். அரை பிளேடு பல மறுமொழிகளுடன் தருக்கங்களுக்கு பொருள் கூட்டினார்.

    கேட்க மறந்த கேள்விகள்

    ஏன் வலைப்பதிகிறோம்? எப்படி பதிவுகளை உருவாக்குகிறோம்? பதிவினால் என்ன சாத்தியாமாகும் என்று நம்புகிறோம்? வலைப்பதிவதால் என்ன கிடைக்கிறது? தொடக்கத்தில் கிட்டும் என்று நினைத்ததற்கும், தற்போதைய நிலைக்கும் உள்ள தூரம் என்ன? இன்றைய நிலையில் ஏன் தொடர்கிறோம்?

    அடுத்த சந்திப்புகளில் கருத்தில் கொள்ள சில ஆலோசனைகள்

    விவாதங்களை மூன்றாக பிரிக்கலாம். முதல் பகுதியில் அனைவரும் பங்கு கொள்ள அவசியம் வாய்ப்பு தரப்படும். கலந்துகொள்பவர்களின் கேள்விக்கு அனைவரும் தங்கள் எண்ணங்களைப் பகிர வேண்டும். ஒரு பதிவர் குறைந்தது ஒரு கேள்வியாவது கேட்க வேண்டும். ஒரு கேள்விக்காவது முதல் ஆளாக பதில் தர வேண்டும். ஆம்/இல்லை போன்று இல்லாமல் பதில்கள் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இரண்டாவது பகுதியாக வலைப்பதிவு சுவாரசியங்கள்: என்னுடைய பதிவில் வந்த ரசமான பின்னூட்டம், அதிக மறுமொழிகள் பெறுவது, வார்ப்புரு மாற்றுவது, மறுமொழி பெறுவது போன்ற அவசியமான துப்புகள். சந்தேக விளக்கங்கள். பல காலமாக எழுதித் தள்ளுபவரின் அனுபவ ஆலோசனைகள்.

    மூன்றாவதாக இலக்கியம், அரசியல், நாட்டுநடப்பு குறித்த விவாதங்கள்: கடந்த வருடத்தில் எந்தப் புத்தகம் முக்கியமானது? ரெஹ்மான் தமிழுக்கு துரோகம் இழைக்கிறாரா? ஈழம் குறித்து என்ன செய்கைகள் செய்யலாம்? எவ்வாறு நமது தொண்டு ஆர்வங்களை ஒருங்கிணைத்து பலப்படுத்தலாம்?

    கடைசியாக…

    என் மனைவிக்கு நன்றி.

    எங்களின் ஆழ்ந்த வலைப்பதிவர் வாக்குவாதத்தின் நடுவே ‘அடுத்து நான் என்னப்பா செய்யலாம்?’ என்று குதித்த குழந்தையை மேய்த்தது; சமோசா, சல்ஸா என்று விதம் விதமாகப் பரிமாறியது; சந்திப்புக்கு உறுதுணையாக நின்று, உவகையுடன் செயல்பட்டது. நன்றிகள் பல!

    அடுத்து…

    விட்டதை பங்கு கொண்ட மற்றவர்கள் தங்கள் பார்வையில் பகிர வேண்டும். நியூ ஜெர்சியில் சந்திப்பு போட வேண்டும்.

    – பாலாஜி
    பாஸ்டன்

  • கற்றதும்… பெற்றதும்

    சரி இதுவரைக்கும் கும்மியடிக்கற மாதிரி பதிவே போடலைனு ஃபீல் பண்றவங்களுக்காக இந்த பதிவு

    வலைப்பதிவர் சந்திப்புக்கு போனியே அங்க எதாவது பயனுள்ளதா தெரிஞ்சிக்கிட்டியானு நிறைய நண்பர்கள் கேட்டாங்க. சரி அவுங்களுக்கு மட்டும் எதுக்கு, உங்க எல்லாருக்கும் சொல்லிடலாமேனு பதிவா போடறேன்… சில பல இடங்கள்ல எனக்கும் இதுல இவ்வளவு மேட்டர் இருக்கானு தோணுச்சு… ஒண்ணு ஒண்ணா சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க

    எனக்கும் அங்க இருந்த மூத்த பதிவர்களுக்கும் நடந்த உரையாடல் மாதிரி போட்டிருக்கேன்… இதுல மூத்த பதிவரென்பது ஒரு ஆள் இல்லை. என்னை தவிர எல்லாருமே மூத்த பதிவர்ங்க தான்… (ஜி, கண்டுக்காதீங்க)

    எந்த நேரத்துல பதிவு போடலாம்?

    மூ.ப: வெட்டி, பொதுவா நீ எந்த நேரத்துல பதிவ போடுவ?

    வெ: எந்த நேரத்துலயா? டைப் பண்ணி முடிச்சவுடனே போட்டுடுவேன்.

    மூ.ப: அதான் எந்த நேரத்துல டைப் பண்ணுவ?

    வெ: எந்த நேரத்தில பண்ணுவோம்… ஆபிஸ்ல மதியம் ஒரு 3லருந்து 4 மணிக்குள்ளதான்…

    மூ.ப: உடனே பின்னூட்டம் வருமா?

    வெ: உடனே வராது. கொஞ்ச நேரம் கழிச்சுதான் வரும்.

    மூ.ப: அப்படியெல்லாம் பண்ணாத வெட்டி. நான் சொல்ற மாதிரி பண்ணு

    வெ: சொல்லுங்க… நோட் பண்ணிக்கிறேன்

    மூ.ப: அதிகமா வலைப்பதிவ படிக்கறவங்க இருக்கறது இந்தியாவிலயும், அமெரிக்காவிலயும் தான்… அதனால முடிஞ்ச அளவு இந்தியால பகல் பொழுதுல இல்லை அமெரிக்க (கிழக்கு) நேரத்துல ஒரு 9 – 10 மணிக்கா போடு. அப்பதான் நிறைய பேர் பார்ப்பாங்க. அப்பறம் முடிஞ்ச அளவு வார நாட்கள்ல போடு. வார இறுதியோ வெள்ளிக்கிழமையோ வேண்டாம்.

    வெ: பதிவ தமிழ்மணத்துல போடறதுல இவ்வளவு விஷயமிருக்கா?

    மூ.ப: இதெல்லாம் ரொம்ப அடிப்படைப்பா. இதுக்கூடவா தெரியாது?

    வெ: எதுவும் தெரியாம அப்பாவியாவே இருந்துட்டேன்.

    பின்னூட்டம்

    மூ.ப: சரி அதெல்லாம் இருக்கட்டும் வெட்டி. உனக்கு மட்டும் எப்படி பின்னூட்டம் அதிகமா வருது?

    வெ: அதெல்லாம் ஒண்ணும் பெரிய விஷயமில்லைங்க. நம்மல மதிச்சி பின்னூட்டமிடறவங்க ஒவ்வொருவருக்கும் மதிச்சு நல்ல நண்பராக நினைச்சு பதில் சொன்னா போதும். பொதுவா முக்கால்வாசி பேர் அவுங்க பின்னூட்டத்துக்கு என்ன பதில் சொல்வாங்கனு வந்து பார்ப்பாங்க. அதனால நம்ம அவுங்களுக்கு சொல்ற பதில் அவுங்களை அடுத்த தடவை வர வைக்கற மாதிரி இருக்கணும். (They should feel comfortable)

    மூ.ப: ஓ! இதுல இவ்வளவு விஷயமிருக்கா?

    வெ: இது மட்டுமில்லைங்க. நம்ம திட்டி வர பின்னூட்டத்தக்கூட அப்படியே ஜாலியா மாத்திடணும். நம்ம நண்பர் ஒருத்தர் ப்ளாக்ல நான் பார்த்த கமெண்ட்

    Anony: Total time waste

    Blogger: ஏய் அனானி… என் ப்ளாக்ல வந்து யூஸ் ஃபுல்லா டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு பார்த்த இல்லை. உனக்கு நல்லா வேணும்.

    இந்த மாதிரி ஜாலியாக்கனாவே போதும்.

    மூ.ப: வெட்டி! இதுதான் நீ பின்னூட்டம் அதிகமா வாங்கர ரகசியமா?

    வெ: நான் ஒண்ணும் அதிகமா எல்லாம் வாங்கறதில்லைங்க. நம்மல விட அதிகமா வாங்கறவங்க நிறைய பேர் இருக்கறாங்க. ரசிக்கிற மாதிரி பதிவ கொடுக்கறதும் ஒரு முக்கியமான விஷயம்.

    மூ.ப: சரி. தமிழ்மண முகப்புல அதிக நேரம் நம்ம பதிவ எப்படி இருக்க வைக்கணும்னு தெரியுமா?

    வெ: அதுவும் ஒரு சின்ன டெக்னிக்தான். ராத்திரி படுக்கும் போது எல்லா பின்னூட்டத்தையும் பப்ளிஷ் பண்ணிடாதீங்க. ஒண்ணு ரெண்டு வெச்சிட்டு காலைல வந்தவுடனே அதை பப்ளிஷ் பண்ணுங்க. அப்பறம் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சி ரிப்ளை பண்ணுங்க. அதுக்காக அனானி கமெண்ட் எல்லாம் போட்டுக்க வேண்டாம். அது ரொம்ப ஆடா இருக்கும்.

    மூ.ப: நாங்க எல்லாம் அதிகமா இதுல கான்சண்ட்ரேட் பண்றதில்லை.

    வெ: தெரியுதே! அப்பறம் தமிழ்மணம்ல வாசகர் பரிந்துரைல எப்படி கொண்டு வர வைக்கணும்?

    மூ.ப: நீயே பதிவ போட்டதுக்கப்பறம் ஒண்ண குத்திக்கோ.

    வெ:நானேவா?

    மூ.ப: ஆமாம் உன் பதிவு உனக்கே பிடிக்கலைனா வேற எவனுக்கு பிடிக்கும்?

    வெ: அதுவும் சரிதான்.

    மூ.ப: அப்படியே ஆபிஸ் போனதுக்கப்பறம் கூட ஒண்ணு போட்டோக்கோ. அப்பறம் ஆபிஸ்ல கூட இருக்கறவங்க ரெண்டு பேரை ஆளுக்கு ஒண்ணு குத்த சொல்லு. அவ்வளவுதான் ஈஸியா வந்திடும்.

    வெ: அப்படினா நிறைய குத்திடலாமே…

    மூ.ப: ஓவர் சீன் உடம்புக்காகாது. மக்கள் “-” குத்தி கொன்னுடுவாங்க. அதனால அளவா ஆடணும். ஓகேவா?

    வெ: சரி. அப்பறம் தேன்கூடுல அதிகம் பார்வையிடப்பட்ட பகுதில எப்படி வர வைக்கறது?

    மூ.ப: அதுவும் ஒரு டெக்னிக் தான். போட்டவுடனே நீயே ஒரு பத்து தடவை க்ளிக் பண்ணு. அப்பறம் ப்ராஜக்ட்ல இருக்கற 2 பேர் சிஸ்டம்ல போய் உக்கார்ந்து ஒரு 10 தடவை பண்ணு. அவ்ளோதான்…

    வெ: ஆஹா. ஊர்ல இருக்கற ஃபிராடுத்தனம் எல்லாம் பண்ணனும் போல இருக்கே!

    மூ.ப: இதெல்லாம் ரொம்ப பண்ணா உன்னைய நாரடிச்சிடுவாங்க. நீ கேட்டியேனு சொன்னேன். எப்பவும் அடக்கமா இருந்தாதான் பெருமை.

    வெ: அதுவும் உண்மைதான். சரி இந்த பூங்கா, கில்லி பரிந்துரைல எல்லாம் வரது எப்படி?

    மூ.ப: பூங்கால வரணும்னா மேலோட்டமில்லாத ஆழமான விமர்சனம் பண்ணனும்

    வெ: நாந்தான் தெலுகு படமெல்லாம் பண்றனே. அது வர மாட்டீங்குதே!!!

    மூ.ப: வெட்டி? உனக்கு சனி உன் வாயில தான். அவர் சொல்றது ஏகாதிபத்யம், அடக்குமுறை இந்த மாதிரி விஷயங்களை விமர்சிக்கணும்.

    வெ: அப்படினா?

    மூ.ப: உனக்கு அதெல்லாம் புரியாது.

    வெ: சரி, கில்லில?

    மூ.ப: பொண்ணுங்களை ஜொள்ளுவிடற மாதிரி இருந்தா வந்திட போகுது… என்னங்க நான் சொல்றது கரெக்ட் தானே?

    வெ: ஆமாம் என்னுடைய ஆர்க்குட் அலம்பல் வேற வந்திருந்துச்சு…

    மூ.ப: சரி வெட்டி இதையெல்லாம் தேவையான இடத்துல பயன்படுத்தி பெரிய ஆளாகணும். புரியுதா?

    வெ: பாக்கலாம்… வண்டி எத்தனை நாள் ஓடுதுனு…

    மக்களே!!! நாளை காலை எப்படியும் வலைப்பதிவர் சந்திப்பை பற்றிய பதிவு வரும்… அதுவரை இதுல இருக்கற மேட்டர நல்லா மனப்பாடம் பண்ணிக்கோங்க.