சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல்
———————————————-
இந்த சந்திப்பு இலக்கியத் தரமாக இல்லை என்று குற்றஞ்சாட்டி விடக்கூடாது என்பதற்காக, பதிவை இலக்கியத்தரமாக்கும் முயற்சியாக இரு கவிதைகள்:
சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல் – எஸ்.பாபு : ஈ – தமிழ் | பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சந்திப்புகள்
பத்மா அரவிந்த் பாஸ்டன் வரப்போவதாக தெரிய வந்ததுதான் இந்த சந்திப்புக்கு கால்கோள். பத்மா அரவிந்தை சந்திக்க பலரும் பிரியப்படவே, அதையே பாஸ்டன் வலைப்பதிவர் சந்திப்பாக ஆக்கலாம் என்னும் எண்ணம் எழுந்தது.
பத்மா வரப்போகிறார் என்று அறிந்தவுடன் இந்த வார நட்சத்திரம் (வெட்டிப்பயல்) பாலாஜியை தொடர்பு கொண்டு, நத்தார் தினத்தை முன்னிட்டு வரவேற்பு கொடுக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்தேன். அங்கிருந்து வி.பி. பாலாஜி மற்ற ஒருங்கிணைப்புகளை முழுவதுமாக கவனித்துக் கொண்டார். நியூ ஜெர்சியில் இருந்து கண்ணபிரான் ரவி ஷங்கரை வரவழைத்தார். சந்திப்பு களை கட்டியது.
யாரெல்லாம் வந்திருந்தார்கள்?
1. தேன் துளி பத்மா அரவிந்த்
2. மாதவிப் பந்தல் கண்ணபிரான் ரவி ஷங்கர்
3. வெயிலில் மழை ஜி
4. வெட்டிப்பயல் பாலாஜி
5. பாடும் நிலா பாலு! சுந்தர்
6. Navan’s weblog நவன்
7. பார்வை மெய்யப்பன்
8. வேல்முருகன்
9. ‘பிரக்ஞை’ ரவி ஷங்கர்
10. அரை பிளேடு
கடைசி நேரத்தில் வர இயலாதவர்கள்:
1. Blogger: User Profile: சனியன்
2. வெற்றியின் பக்கம் வெற்றி
ஆத்திகம் எஸ்கே, செல்வன், சிகாகோவில் இருந்து தேன் சிறில் அலெக்ஸ், அட்லாண்டாவில் இருந்து சந்தோஷ்பக்கங்கள் சந்தோஷ் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்துக்களைப் பகிர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாக டானிக்காகவும் இருந்தது.
என்ன பேசினோம்?
மதியம் 1 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், பின்னிரவு இரண்டு மணி வரை தொடர்ந்தது. இதனாலேயே பேசிய பலதும் மறந்து போகுமளவு ஆயிற்று. விளையாட்டுப் போட்டியை நேரடியாக, லைவ் ரிலேவாக ரசிப்பதுதான் சுகம். ஆடி முடித்து, முடிவு தெரிந்தபிறகு ஹைலைட்ஸ் பார்ப்பது பிடிக்கும் என்றாலும், ஆட்டத்தை, இருக்கை நுனியில் அமர்ந்து, நகம் பிய்த்துக் கொண்டு, ரீப்ளே கடுப்பாகி சுவைப்பது போல் வராது. வித்தியாசமான பந்துவீச்சுகளும், முக்கிய திருப்பங்களும் ஆளுக்கு ஆள் மாறுபடுவதில்தான் வல்லுநர் பார்வையே அடங்கியிருக்கிறது.
எனக்கு ஆரம்பத்தில் பேசின விஷயங்கள் மட்டுமே மனதில் நிற்கும் எனபதற்கேற்ப துவக்கத்தில் பிரக்ஞை ரவி பகிர்ந்த இரு கட்டுரைகளை சொல்லலாம்.
சோமாலியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுகிறார்கள். அன்னிய தேசம்; புரியாத மொழி. தங்கள் மொழி பேசுபவர்கள் மெயிண் (Maine) மாகாணத்தின் கிராமமொன்றில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு படையெடுக்கிறார்கள். ஏற்கனவே அங்கு வசிப்பவர்களும் சோமாலியர்கள்தாம் என்றாலும், அவர்கள் வேறொரு இனம். அவர்களை அடக்கியாண்ட இனத்தை சேர்ந்த அகதிகள் இப்போது தங்கள் மொழி பேசுபவர் அருகாமையை நாடி அந்த இடத்திற்கு அடைக்கலம் கோருகிறார்கள்.
ஏற்கனவே தங்களை அடக்கியாண்டவர்களுடன் என்ன உறவு வேண்டிக் கிடக்கிறது என்று ஒரு சாரார் கோபம் கொள்கிறார்கள். ‘இவர்கள் அடிமைகளாக இருக்க வாய்க்கப்பட்டவர்கள்தானே… இப்படிப்பட்டவர்கள் இன்றைய சூழ்நிலையிலும் மேலோர் ஆகிய நமக்கு உதவ வேண்டும்’ என்று காரசாரமான மாற்றுக் கருத்துடன் இன்னொரு சாரார்.
சமகாலப் பிரச்சினைகளுக்கு இது ஒரு தேர்ந்த ஒப்புமையாக இருக்கும் என்பதை நான் இங்கு எழுதியதை விட இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக விளக்கினார்.
பேச்சு சுவாரசியத்தில் அறிவார்ந்த முடிவெடுக்கும் திறனுக்கு திரும்பினோம். Rationale என்னும் பதமே கேள்விக்குறியது. வாழ்க்கையே பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக artificial intelligence வல்லுநரும் அறிபுனை எழுத்தாளருமான எம்.ஐ.டி. பேராசிரியர் கருதுகிறார்.
‘தண்ணீர் மேலே விழுந்தால் குடை பிடிக்க வேண்டுமா?’ என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறது ரோபோ.
‘ஆம்’
‘மழைக்கு சரி. ஆனால், காலையில் நீங்களே பூத்துவாலைக்கடியில் போய் நிற்கிறீர்களே! அப்போதும் நான் குடை பிடிக்கத்தானே வேண்டும்?’ மீண்டும் ரோபோவின் வினயமான லாஜிக்கலான கேள்வி.
சமீபத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை தருவதற்கு முதியோரை விட இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகம் கிடைப்பது எனக்கு நினைவுக்கு வருகிறது. கிட்னி மாற்றினாலும், அறுவை சிகிச்சை வெற்றியடையும் வாய்ப்பு (இளமையை விடக்) குறைவு; மேலும் வாழ்ந்து முடித்தவர்கள் என்று rational-ஆக வயதானோரை தீர்த்துக் கட்டலாமா என்று விவாதம் சென்றது.
வலைப்பதிவுகள்
பெரும்பாலான பேச்சு இதை சுற்றியே அமைந்தது. பிடித்த வலைப்பதிவுகள் எது? ஏன் பிடிக்கிறது? எது பிடிக்கவில்லை?
எப்பொழுது படிப்பீர்கள்? எத்தனை நேரம் செலவிடுவீர்கள்? நண்பர் எழுதினால் படித்தே தீருவீர்களா? எப்படி ‘அதிகம் பார்வையிடப்பட்டவை’ ஆவது? எவ்வாறு வாசகர் பரிந்துரை நட்சத்திரங்களை ஏற்றுவது? பூங்கா, கில்லி பரிந்துரைகள் எவ்வாறு இருக்கிறது? புதிய பதிவர்களுக்கு உதவி எவ்வாறு கிடைக்கிறது?
வெளிப்படையாக எழுதுதல் அவசியமா? சாத்தியமா? வலைப்பதிவை எவ்வாறு மதிப்பிடுவது? எது சிறந்த பதிவாகக் கருதப்படும்? பார்வையாளர் எண்ணிக்கை முக்கியமா? பின்னூட்டங்களுக்கு மயங்கலாமா?
பதிவுகளில் என்ன எழுதுவது என்பது குறித்து எவருக்கும் சந்தேகங்கள் இல்லை.
பத்மா அரவிந்த்
சனி மாலையின் நட்சத்திர விருந்தினரான பத்மா மிகக் குறைவாகவே பேசினார். நல்ல எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், சிறப்பான மேடைப் பேச்சாளராக இருக்க வேண்டாம் என்பது போல், அவ்வப்போது சன்னமான குரலில் எண்ணங்களை ஓடவிட்டார்.
கேம்பஸ் இண்டர்வ்யூ நேர்காணலில் நடக்கும் க்ரூப் டிஸ்கசன் போன்ற அடிதடி சூழலில், கவர்ச்சிகரமான தலைப்புகளும், புரட்சிகரமான தடாலடிகளும் மேலெழுந்தது. இன்னும் கொஞ்சம் பத்மாவை கேள்வி கேட்டு, அனைவரின் வினாக்களும் பதிலளிக்குமாறு அமைத்திருக்கலாம்.
பிரக்ஞை ரவி
தேர்ந்த சினிமா விமர்சகர்; மானுடவியலாளர் என்பதற்கு ஒப்ப, பல இடங்களில் விவாதங்களை ஒழுங்குப்படுத்தினார். பெண் வலைப்பதிவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார். அமெரிக்க இதழியலில் வெளிவரும் சினிமா விமர்சனங்களின் கூறுகளை சுவையாக விளக்கினார்.
‘எந்த ஒரு ஊடகமுமே ஆரம்பத்தில் தரத்தை கொண்டிருப்பதில்லை; உச்ச நிலையையும் எளிதில் அடைவதில்லை’ என்னும் கருத்து வலைப்பதிவுகளில் நிலவும் க்வாலிடி குற்றத்திற்கு சிறப்பான சமாதானமாக இருந்தது.
கண்ணபிரான் ரவி கேயாரெஸ்
விளையாட்டாக சென்ற தருக்கங்களையும் கிண்டல்களையும் பல இடங்களில் நேர்படுத்தினார். திடீரென்று உணர்ச்சிவேகமாகப் போய்விடும் தருணங்களில் ஸ்பாண்டேனியஸ் நகைச்சுவையால் இயல்பாக்கினார்.
‘பதிவரின் வீட்டில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் நிகழ்வுகள் என்ன?’;
‘பாலியல் குறித்த கட்டுரைகள், புனைவுகள் ஏன் மிக அரிதாகவே வலைப்பதிவுகளில் வெளியாகிறது?’
‘ஆன்மிகம் என்றால் என்ன? ஏன் எல்லோரும் ஆன்மிகத்தை நாட வேண்டும்?’
என்று பல சேரியமான வித்துக்களைத் தூவி உரையாடலை உற்சாகமாக்கினார்.
மற்றவர்கள்
‘வெயிலில் மழை’ ஜி ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார். ‘வெட்டிப்பயல்’ பாலாஜி தன் கருத்துக்களை தெளிவாக முன்வைத்து ஜோராக உரையாடினார். கொஞ்சம் தாமதமாக வந்ததாலோ என்னவோ, நைட் வாட்ச்மேன் போன்று ஒரமாக நின்று கொண்டே ‘பாடும் நிலா பாலு’ சுந்தர் அமைதி காத்தார். அதிகம் வலைப்பதியாததால் ஒவர் ஹெட் ட்ரான்ஸ்மிஷன் ஆன சில நிகழ்வுகளை விழிப்புடன் நவன் கேட்டுக் கொண்டிருந்தார்.
‘பார்வை’ மெய்யப்பன் இன்னும் பல இடங்களில் தன் விரிவான வாசிப்பையும் பரந்துபட்ட அவதானிப்புகளையும் முன்வைத்திருக்கலாம் என்று எண்ணினேன். சபாநாயகராக வேல்முருகன் அதிகம் அறியாத தகவல்களை முன்வைத்து தன் கருத்துக்களை காரசாரமாக விவாதித்து சந்திப்புக்கு உரமூட்டினார். அரை பிளேடு பல மறுமொழிகளுடன் தருக்கங்களுக்கு பொருள் கூட்டினார்.
கேட்க மறந்த கேள்விகள்
ஏன் வலைப்பதிகிறோம்? எப்படி பதிவுகளை உருவாக்குகிறோம்? பதிவினால் என்ன சாத்தியாமாகும் என்று நம்புகிறோம்? வலைப்பதிவதால் என்ன கிடைக்கிறது? தொடக்கத்தில் கிட்டும் என்று நினைத்ததற்கும், தற்போதைய நிலைக்கும் உள்ள தூரம் என்ன? இன்றைய நிலையில் ஏன் தொடர்கிறோம்?
அடுத்த சந்திப்புகளில் கருத்தில் கொள்ள சில ஆலோசனைகள்
விவாதங்களை மூன்றாக பிரிக்கலாம். முதல் பகுதியில் அனைவரும் பங்கு கொள்ள அவசியம் வாய்ப்பு தரப்படும். கலந்துகொள்பவர்களின் கேள்விக்கு அனைவரும் தங்கள் எண்ணங்களைப் பகிர வேண்டும். ஒரு பதிவர் குறைந்தது ஒரு கேள்வியாவது கேட்க வேண்டும். ஒரு கேள்விக்காவது முதல் ஆளாக பதில் தர வேண்டும். ஆம்/இல்லை போன்று இல்லாமல் பதில்கள் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது பகுதியாக வலைப்பதிவு சுவாரசியங்கள்: என்னுடைய பதிவில் வந்த ரசமான பின்னூட்டம், அதிக மறுமொழிகள் பெறுவது, வார்ப்புரு மாற்றுவது, மறுமொழி பெறுவது போன்ற அவசியமான துப்புகள். சந்தேக விளக்கங்கள். பல காலமாக எழுதித் தள்ளுபவரின் அனுபவ ஆலோசனைகள்.
மூன்றாவதாக இலக்கியம், அரசியல், நாட்டுநடப்பு குறித்த விவாதங்கள்: கடந்த வருடத்தில் எந்தப் புத்தகம் முக்கியமானது? ரெஹ்மான் தமிழுக்கு துரோகம் இழைக்கிறாரா? ஈழம் குறித்து என்ன செய்கைகள் செய்யலாம்? எவ்வாறு நமது தொண்டு ஆர்வங்களை ஒருங்கிணைத்து பலப்படுத்தலாம்?
கடைசியாக…
என் மனைவிக்கு நன்றி.
எங்களின் ஆழ்ந்த வலைப்பதிவர் வாக்குவாதத்தின் நடுவே ‘அடுத்து நான் என்னப்பா செய்யலாம்?’ என்று குதித்த குழந்தையை மேய்த்தது; சமோசா, சல்ஸா என்று விதம் விதமாகப் பரிமாறியது; சந்திப்புக்கு உறுதுணையாக நின்று, உவகையுடன் செயல்பட்டது. நன்றிகள் பல!
அடுத்து…
விட்டதை பங்கு கொண்ட மற்றவர்கள் தங்கள் பார்வையில் பகிர வேண்டும். நியூ ஜெர்சியில் சந்திப்பு போட வேண்டும்.
– பாலாஜி
பாஸ்டன்
Filed under: Uncategorized | 32 Comments »