மதுர!!!

மதுரை மக்களே!!! இது உங்களை பத்தி இல்லை…
நம்ம இளைய தளபதி விஜய் நடிச்ச படம்… அப்ப பாக்காம விட்டுட்டேன். நேற்றுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பாத்துட்டு என்னால பதிவு போடாம இருக்க முடியலை.

இந்த படம் யார் யார் பார்க்கலாம்.
நம்ம முன்னால் பிரதம மந்திரி நரசிம்ம ராவ் மாதிரி சிரிப்பது எப்படினு தெரியாதா? கண்டிப்பா நீங்க இந்த படம் பாக்கனும். நம்ம வாழ்க்கையவிட இந்த உலகத்துல ஏதாவது கொடுமை இருக்கானு விரக்தில இருக்கீங்களா? இது உங்களுக்காகத்தான்.

படத்தோட கதை என்னனா? மன்னிச்சிடுங்க அப்படி எதுவும் இல்லை.

விஜய் மதுரைல கலக்டர். நான் கான்வெண்ட்ல படிச்சி கலெக்டராகல கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சி கலக்டரானவன்னு ஹை-பிட்ச்ல டயலாக் பேசிக்கிட்டே இருப்பாரு (இது எங்களை மாதிரி கவர்மெண்ட் பள்ளிகளில் படித்தவர்களை கேலி செய்வதற்காகத்தான்). சோனியா அகர்வாலை கொலை செய்துவிட்டார் என்ற குற்றத்திற்காக தலை மறைவாக மாறு வேடத்தில் வாழ்கிறார்.

எங்கனு கேக்கறிங்களா? சென்னைல கோயம்பேடு மார்க்கெட்ல. ஆனா 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட்டுட்டு சண்டை போட்டுட்டு இருப்பாரு. அதுவும் லாரி லாரியா ஆளுங்க வந்து அடி வாங்கிட்டு போறாங்க 🙂

அப்பறம் மாறு வேஷத்தப்பத்தி சொல்லியே ஆகனும். மீசைய ட்ரிம் பண்ணிட்டு (பேரையும் ட்ரிம் பண்ணிடுவாரு… மதுரைவேல் IASஅ மதுரனு ட்ரிம் பண்ணிடுவாரு.. அடையாளம் தெரியக்கூடாதுனு), கைல டேட்டூ குத்திருப்பாரு. அப்பறம் கட் பணியன் வேற போட்டுருப்பாரு. ஒரு சின்ன சூச்சூவைக் கேட்டக்கூட சொல்லிடும் அது விஜய்னு. ஆனா தமிழ்நாடு போலிஸால கண்டுபிடிக்க முடியாது.

அப்பறம் டாக்டருங்கெல்லாம் இந்த படம் பார்த்தே ஆகணும். ஊமை குழந்தையை எப்படி பேச வைக்கனும்னு ஒரு ஐடியா தராரு நம்ம தலைவர். அதாவது அந்த குழந்தைய நீங்க பீச்சுக்கு கூட்டிட்டு போகனும். அப்பறம் நீங்க கடல்ல குதிச்சு உங்களை கடல் இழுத்துட்டு போற மாதிரி பாவ்லா பண்ணனும் (அப்படியே உங்களை கடல் இழுத்துட்டு போனா அதுக்கு நான் பொறுப்பில்லை). அதை பார்த்து அந்த குழந்தை பயிந்து பேசிடும். இப்பவே கண்ண கட்டுதேனு பாக்கறீங்களா… இன்னும் இருக்கு!!!

ஹீரோயின்னு ஒருத்தவங்க (ரக்ஷிதா) வறுமையில வாடறவங்க (பாவம் துணிய பாத்தா அப்படித்தான் தெரியுது… ஆனா மினிஸ்டர் பொண்ணு) அந்த மார்க்கெட்ல ஏதோ ரிசர்ச் பண்றாங்க. என்ன ரிசர்ச்னு யாருக்கும் தெரியாது… ஆனா விஜய சுத்தி சுத்தி படம் எடுக்கறாங்க. ஒரு வேலை அதுதான் ரிசர்ச்சானு தெரியலை. ஸ்கிரின்ல நாலுல மூணு பகுதி இவுங்க எடுத்துக்கறாங்க.

வில்லன் பசுபதிதான் படத்தோட பெரிய ப்ளஸ் பாயிண்ட். அவருக்கு படத்தில் இரண்டு ரோல். ஒன்று வில்லன் அடுத்தது காமெடியன். அவர் செய்யும் காமெடிக்கு அளவே இல்லை. அவரோட இண்ட்ரொடக்ஷன் அருமை. கண்ணாடி டம்ப்ளர்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி கொண்டிருப்பார். அப்போழுது (விஜயிடம் போட்டு கொடுத்த) கூட்டாளி ஒருவன் அவர் காலில் விழும் போது தவறி அந்த டம்ப்ளர்களை தட்டிவிடுகிறார். உடனே பசுபதி “நான் இவ்வளவு கஷ்டப்பட்டு கட்டின கோட்டைய ஒரே நிமிஷத்துல கலச்சிட்டயேடா”னு (டபுள் மீனீங்காம்!!! ) சொல்லிட்டு அவரை சட்டத்திடம்(?) ஒப்படைக்கிறார். அங்கே அவரே நீதிபதி மாதிரி வந்து காமெடியா அவரை சுத்தியளால் அடித்து கொல்கிறார்.

சோனியா அகர்வால் மதுரைல இவர் கலக்டரா இருக்கும் போது இவருக்கு அசிஸ்டெண்டா இருக்காங்க. வில்லன் வீட்ல ஏதோ ரகசிய டாக்குமெண்ட் எடுக்கறன்னு போயி மசாலா அரைச்சி அங்க இருக்குற 2 தினத்தந்தி கட்டிங்க பாத்ரூம்ல இருந்து விஜய்க்கு ஃபேக்ஸ் பண்றாங்க. (அந்த கட்டிங் கலக்டர் ஆபிஸ்ல இருக்கும்னு பாவம் அவுங்களுக்கு தெரியல.)

அத நம்ம தலைவர் பசுபதி எப்படி கண்டுபிடிப்பார்னா அவருக்கு அந்நிய மூச்சுக்காத்து அடிக்குமாம் (எப்படிடா இப்படி எல்லாம் சிந்திக்கறீங்க?) அதை வெச்சி அவர் சோனியா அகர்வாலை கண்டுபிடித்துவிடுவாராம். பிறகு வழக்கம் போல் விஜயை மிரட்ட விஜய் அந்த தினத்தந்தி கட்டிங்கை அடை மழையில் நினைந்து கொண்டு எடுத்து வருகிறார். பிறகு அங்கு நடக்கும் சண்டையில் படத்தில் இருக்கும் ஒரே நல்ல ஃபிகரான சோனியா அகர்வாலையும் கொன்று விடுகிறார்கள்.

படத்துல முழுக்க குத்து பாட்டுதான்… “மச்சான் பேரு மதுரை”, “பம்பரக் கண்ணு”, “எலந்தை பழம் எலந்தை பழம் உனக்குத்தான்” (நியாயமா பலாப்பழம்னுதான் பாடியிருக்கனும்) …

படத்தின் க்ளைமாக்ஸ்தான் வெயிட்டான சீன். ஊருல இருக்குற எல்லாருக்கும் அஞ்சி ரூபா செல் போன் விற்கிறார் பசுபதி. அதில் பாம் வைத்து சரியாக பத்து நிமிடத்திற்கு முன் விஜயிடம் இதை தெரிவிக்கிறான். இதை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க!!!

(டைரக்டர் மாதேஷிக்கு தெலுகு ஃபீல்டில் நல்ல எதிர்காலம்ம் இருக்கிறது. ரவி தேஜாவை வைத்து இவர் படமெடுக்கலாம்)

லொள்ளு-3

லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…
சரினு களம் எறங்கிட்டேன்

ரெட்:
அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்… மழ நிக்கறதுக்குள்ள

மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்

அஜித்: அது!!!

———————————————————-

அருணாச்சலம்:

தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.

செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!!

————————————————————

ரன்:

அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?

விஜயன்: போட்டது சாம்பார் சோறு… அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல…

————————————————————-

வல்லவன்

சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற… நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்

மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு…

————————————————————–

தவசி

பு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லடா

இளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்… ஆனா உங்க படம் தியேட்டர்ல பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்

லொள்ளு-3

லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…
சரினு களம் எறங்கிட்டேன்

ரெட்:
அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்… மழ நிக்கறதுக்குள்ள

மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்

அஜித்: அது!!!

———————————————————-

அருணாச்சலம்:

தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.

செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!!

————————————————————

ரன்:

அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?

விஜயன்: போட்டது சாம்பார் சோறு… அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல…

————————————————————-

வல்லவன்

சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற… நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்

மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு…

————————————————————–

தவசி

பு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லடா

இளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்… ஆனா உங்க படம் தியேட்டர்ல பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்

மருந்து வேண்டும்!!!



சின்ன வயசுல இருந்தே இந்த வியாதி நமக்கு இருக்குங்க. ஆனால் காலேஜ் சேர்ந்ததுக்கு அப்பறம்தான் இதை நானே உணர ஆரம்பித்தேன். இந்த வியாதியால் என்னை மாதிரி யாராவது பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

எங்க அப்பாக்கிட்ட இதப்பத்தி ஒரு தடவை சொன்னேன். அதுக்கு அவர் வியாதியும் இல்ல ஒரு மண்ணும் இல்லை… எல்லாம் கொழுப்பு வேற ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டாரு. எங்க அம்மாகிட்ட சொன்னா ஏதாவது சாமி குத்தமா இருக்கும்னு சொல்லி ஏதாவது கோவிலுக்கு கூட்டிட்டு போயிடுவாங்கனு சொல்லலை. சரி உங்கள்ல யாராவது அந்த வியாதிக்கு தீர்வு சொன்னா பரவாயில்லை.

அது என்னடா வியாதினு கேக்கறீங்களா? அதுதாங்க சோம்பேறித்தனம்.
காலேஜ்ல இருக்கும் போதுதான் இதை நான் அதிகமா உணர ஆரம்பிச்சேன். சில நாள் சாப்பிடறதுக்கு சோம்பேறித்தனம் பட்டுட்டு சாப்பிடாம கூட இருந்திருக்கேன். எங்க ரூம்ல இருந்து ஒரு 30-40 அடிதான் மெஸ்ஸுக்கு இருக்கும்.

ஆனால் எழுந்திரிச்சி, செருப்பு போட்டு, அவ்வளவு தூரம் நடந்து போயி, சாப்பாட போட்டு, சாப்பிட்டு… இவ்வளவு கஷ்டப்பட்டு சாப்பிடனுமானு ஃபீல் பண்ணி சாப்பிடாம அப்படியே படுத்து தூங்கிடுவேன். (அப்பறம் நைட் பசிச்சிதுனா தண்ணி குடிச்சிட்டு வந்து தூங்க வேண்டியதுதான். ) ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுக்கற கூட்டத்த சேர்ந்த ஆளு.. (இங்க யாரும் அந்நியன் இல்லைனு நம்பறேன்)

இப்பக்கூட ஒரு ஒரு பதிவு போடறதுக்கும் நிறைய தோணுச்சினாலும் டைப் பண்ண சோம்பேறித்தனம் பட்டுட்டு பாதியோட நிறுத்திக்கறேன். (மேட்டர் இல்லைனாலும் நல்லா ஒப்பேத்தறாண்டானு யாராவது சொன்னீங்க??? அப்பறம் அதுதான் உண்மைனு நான் ஒத்துக்க வேண்டியது வந்துடும்… ஆமாம் சொல்லிட்டேன்)

காலைல ஆறு மணிக்கு எழுந்திரிச்சா போயிடும்னு என் ஃபிரெண்ட் ஒருத்தவங்க சொன்னாங்க. நானும் ஒரு வாரம் ஆறு மணிக்கு அலாரம் வெச்சிட்டு எழுந்திரிச்சி பார்த்தேன் (எழுந்திரிச்சி அலாரத்தை ஆஃப் பண்ணிட்டு தூங்கிடுவேன்). இருந்தாலும் அந்த நோய் சரியான மாதிரி தெரியலை.

சரி உங்கள்ல யாருக்காவது இந்த நோய் இருந்துச்சுனா தயவு செய்து சொல்லுங்க. வேற எதுக்கு நமக்கு கம்பெனிக்கு ஆள் இருக்குனு நானும் சந்தோஷப்பட்டுக்குவேன். மருந்து தெரிந்தால் கண்டிப்பாக சொல்லவும். சரிங்க ரொம்ப டைப் பண்ணி டயர்டாய்யிட்டேன்… ரெஸ்ட் எடுக்க போறேன் 😉

டான்!!!

ஹிந்தி புரியாது என்ற காரணத்தால் பல முறை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தும் பல நல்ல திரைப்படங்களை தவறவிட்டதுண்டு. ஆனால் இங்கே திரையிடப்படும் படங்கள் சப்-டைட்டிலுடன் இருப்பதால் துணிந்து சென்றேன்.

அமித்தாபின் டான் பார்த்ததில்லை என்றாலும் தலைவரின் பில்லா பார்த்திருந்ததால் கதை ஏற்கனவே தெரிந்திருந்தது.

படம் முழுதும் மலேசியாவில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக படம் படு ஸ்டைலாக இருக்கிறது. பாடல்களும் அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. ஷாருக்கின் ஸ்டையிலும் அருமை. (அமிதாப்போடு தயவு செய்து ஒப்பிட்டு பார்க்காதீர்கள்)

டானாக வரும் ஷாருக் அந்த பாத்திரத்தின் பெயரை ஓரளவு காப்பாற்றும் விதமாகவே நடித்திருக்கிறார் (கொஞ்சம் வயசான மாதிரி தெரிகிறார்). விஜயாக நடித்திருக்கும் ஷாருக் ஆள் மாறட்டத்திற்கு சுலபமாக ஒத்துக் கொள்வதைப் போல தெரிகிறது. பிறகு வழக்கம் போல் அவர் டானாக மாறி பட்டையை கிளப்புவது மசாலா பட ரசிகர்களுக்கு சாதாரண விஷயம்.

ப்ரியங்க சோப்ரா அந்த பாத்திரத்திற்கு அமர்க்களமாக பொருந்துகிறார். அவருக்கு ஒரு சில ஸ்டண்ட் காட்சிகளே வடிவமைத்திருக்கிறார்கள் என்றாலும் அந்த காட்சியில் அசர வைக்கிறார். டிசிபி டிசில்வா பாத்திரத்தில் நடித்திருக்கும் பொம்மன் இரானிக்கு பதில் அமிதாப்பை போட்டு சில மாற்றங்களை செய்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்குமென்றே தொன்றியது.

பழைய படத்திற்கு அருமையாக பாலிஷ் போட்டிருக்கிறார்கள். பழைய படத்தை ரீ-மேக் செய்யும் போது அப்படியே காப்பி அடிப்பது தவறு… காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றி இருக்க வேண்டும் என்று சொல்லலாமென காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். படத்தில் சில மாற்றங்கள் நம்மை அசர வைக்கிறது.

படத்தின் வசனங்கள் கூர்மை. அதில் முக்கியமாக “டானை பிடிப்பது கஷ்டமல்ல… இயலாத காரியம்

கண்டிப்பாக பார்க்கலாம். பக்கா மசாலா!!!

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!


என் இனிய வாசகர்களே உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

எனக்கு நினைவு தெரிந்த நாளாக என் பிறந்த நாளைவிட நான் அதிகம் ஆவலுடன் எதிர்பார்த்தது தீபாவளி திருநாளைத்தான். இப்ப அதை மிஸ் பண்றோம்னு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. சரி…. அடுத்த வருஷம் கண்டிப்பா அங்க இருப்பன்னு நம்பறேன்.

இந்தியால இருக்கவங்களுக்கு எல்லாம் என்னோட வேண்டுகோள். தயவு செய்து வீட்டிற்கு போய் அப்பா, அம்மாவோட சந்தோஷமா கொண்டாடுங்க. ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் போன் பண்ணி பேசுங்க. அதுக்காக வழக்கம் போல கடலை போட ஆரம்பிச்சிடாதீங்க. எல்லா ஃபிரெண்ட்ஸ்க்கும் ஒரு 2 நிமிஷமாவது பேசுங்க. (ஒரு சில நாயிங்க.. நம்ம போன் பண்ணவுடனே ரொம்ப நேரம் மொக்கைய போடுவாங்க… அவுங்க எல்லாருக்கும் மச்சி, அவசரமா வெளிய போகனும் வந்து குப்பிடறேன்னு கட் பண்ணிடுங்க 😉 )

பஸ் கூட்டமா இருக்கும், பிராஜக்ட் டெலிவரி, ரிட்டன் டிக்கட் கிடைக்கலைனு வீட்டுக்கு போகாமல் இருந்துடாதீங்க. எப்படியாவட்து வீட்டுக்கு போங்க… வீட்ல போய் நல்லா பலகாரம் சாப்பிட்டு, அம்மா அப்பாவோட நல்லா சந்தோஷமா பேசி கொண்டாடுங்க. டீவி முன்னாடியே உக்காந்திருக்காதீங்க. என்னாட இவன் அட்வைஸ் பண்றானேனு பாக்காதீங்க… நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்…

போன வருஷ தீபாவளியன்னைக்கு எனக்கு சத்தியமா அடுத்த வருஷம் நாம இங்க இருக்க மாட்டோம்ன்னு தெரியாது. அடுத்த வருஷம் உங்கள்ல யாராவது இந்த பதிவ போடலாம்… (நாங்க பின்னூட்டம் போடுவோம் ;)) அதனால இப்பவே சந்தோஷமா கொண்டாடுங்கோ!!!

மீண்டும்…

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

கவிதை! கவித!! கவுஜ!!!

நேத்து எனக்கும் என் நண்பனுக்கும் நடந்த உரையாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…

“டேய் பாலாஜி, ப்ளாக்ல கதையெல்லாம் எழுதறியே! நீ ஏன் கவிதை எழுத முயற்சி பண்ண கூடாது?”

“என்னது கவிதையா??? ஏன்டா யாரும் என் பிளாக் பக்கம் வரக்கூடாதுனு முடிவு பண்ணிட்டயா?”

“இல்லைடா… நீ எழுதறதை எல்லாம் கதைனு ஒத்துக்குறாங்க இல்லை… அதே மாதிரி கவிதையையும் ஒத்துக்குவாங்க”

“அட நாதாரி!!! இத சொல்லத்தான் போன் பண்ணியா?”

“இல்லடா மச்சி… நான் சீரியஸாத்தான் சொல்றேன்”

“டேய்!!! கவிதை எழுதனும்னா லவ் பண்ணனும்… நம்மளப்பத்தி தான் தெரியுமே. அப்பறம் நமக்கு எப்படி கவிதை வரும்”

“டேய் லூசு… அதெல்லாம் ஒண்ணும் இல்லை… பாரதியார் எழுதல… அவர் என்ன லவ்வா பண்ணாரு”

“டேய் அவர் லவ் பண்ணாரா இல்லையானு நமக்கு எப்படிடா தெரியும். அவர் எல்லா பாட்டுலையும் கண்ணம்மானு ஒருத்தவங்க வருவாங்க… ஒரு வேளை அவருக்கும் லவ் ஃபெயிலர் இருந்திருக்கலாம். விட்டா மணிரத்னம் டைரக்ட் பண்ணல அதே மாதிரி நீயும் டைரக்ட் பண்ணுனு சொல்லுவ”

“அதெல்லம் தேவையில்லைடா… சமுதாய கோபமிருந்தா தானா கவிதை வரும்”

“அது என்னடா கோபம்? “

“இந்த சமுதாயத்து மேல உனக்கு கோபமிருக்கா இல்லையா? உண்மைய சொல்லு”

“ஆமாம்…கண்டிப்பா”

“என்ன கோபம்???”

” அஜித் படத்தையும், கேப்டன் படத்தையும் தொடர்ந்து ஃபிளாப் ஆக்கறாங்க இல்லை.. அதனால கொஞ்சம் லைட்டா கோபமிருக்கு. அதெப்படி உனக்கு தெரிஞ்சிது?”

“போடா நாயே!!! அன்னைக்கு கமல் கவிதைக்கு “சூப்பர்.. அருமையா எழுதியிருக்காரு”னு பின்னூட்டம் போட்டிருந்த”

“ஓ!!! அதுவா? ஒண்ணுமே புரியலை… எல்லாரும் அட்டகாசமா இருக்குனு சொல்லிட்டாங்க… கமல் எப்படியும் நல்லாதான் எழுதியிருப்பாருனு அந்த மாதிரி பின்னூட்டம் போட்டுட்டேன். இதெல்லாம் இப்ப ஏன்டா நோண்டற?”

“உன்கிட்ட இத கேட்டது என் தப்புதான்… நான் போனை வெக்கறேன்” சொல்லிட்டு வெச்சிட்டான்.

நானும் இத பத்தி ரொம்ப யோசிச்சேன்… அப்ப ஒரு சந்தேகம் வந்துச்சு. திருக்குறள் கவிதையா???
யார்ட்ட கேக்கலாம்னு தெரியல… சரினு நம்ம நண்பன் ஒருத்தனுக்கு போன் பண்ணேன்.

“டேய் மச்சி ஒரு பயங்கரமான சந்தேகம்டா”

“என்னடா??? சிக்கன் சாப்பிட்டா சிக்கன்குனியா வருமானா? அந்த சந்தேகத்துலதான் நான் மட்டன் சாப்பிட்டு இருக்கேன்”

“அதெல்லாம் இல்லை. திருக்குறள் கவிதையா?”

“என்னடா திடீர்னு இப்படி கேட்டுட?”

“சொல்லு… அது கவிதையா?”

“இல்லைடா மச்சி… கவிதைனா கடைசி வார்த்தை எதுகை, மோனைல வரும் இல்ல”

“அப்ப அது ஒருவேளை கட்டுரையா இருக்குமோ???”

“இருக்கலாம். ஆனால் கட்டுரைனா பெருசா இருக்கும்டா. எதுக்கும் நீ நம்ம பாண்டிய கேளு அவந்தான் இதுல எல்லம் பெரிய ஆளு”

சரினு பாண்டிக்கு போன் செய்தேன்

“டேய் பாண்டி ஒரு சந்தேகம்”

“என்ன சொல்லு”

“திருக்குறள் கவிதையா?”

“ஆமாம். இதுல என்ன சந்தேகம்”

“எப்படி சொல்லற?”

“திருக்குறள் படிச்சா உனக்கு புரியுமா?”

“புரியாது?”

“திருக்குறள் பாட புத்தகத்துல எந்த பகுதியில வருது?”

“செய்யுள் பகுதில”

“முக்கியமான ஒண்ணு… “உன்னருகே நானிருந்தால்”ல பார்த்தி என்ன சொன்னாரு?”

“என்ன சொன்னாரு?”

“ஒரு வரி எழுதும் போது அந்த வரில நிறைய இடமிருந்தாலும் அடுத்த வரில எழுதுனா அது தான் கவிதைனு சொன்னாரில்லை”

“ஆமாம்”

“அப்ப திருக்குறள் கவிதை தானே???”

“ஆமாம்டா மச்சி… நீ பெரிய ஆள்தாண்டா”

————————————

பி.கு: கவிஞர்களே… இது உங்களை கிண்டல் பண்ணி எழுதின பதிவு இல்லை. எந்த கவிதை படிச்சாலும் நமக்கு ஒண்ணும் புரிய மாட்டீங்குதுங்கற ஃபீலிங்ல எழுதனது. தப்பா எடுத்துக்காதீங்க 😉

டைரி குறிப்புகள்

போன கதையை படிச்சிட்டு நம்ம ராம் ஏதோ டைரி குறிப்பை பார்க்கற மாதிரி இருக்குனு சொல்லிட்டாரு…

எனக்கு இது என்னோட பெங்களூர் டைரி குறிப்பை நியாபகப்படுத்திடுச்சி…

அடுத்தவங்க டைரி படிக்கறது தப்புனு ஃபீல் பண்ற நல்லவங்க இதோட நிறுத்திக்கோங்க…

இதுக்கு மேல படிக்கறவங்க.. என்ன மாதிரியே ரொம்ப நல்லவங்கனு வெச்சிக்குவோம் 🙂

காலை 7 : வீட்டிலிருந்து அம்மா போன் செய்திருந்தார்கள்.
அம்மா: என்னப்பா ஆபிஸிக்கு கிளம்பிட்டயா?
நான்: குளிச்சிட்டேன்மா… சாப்பிட்டு கிளம்பனும் அவ்வளவுதான்…

காலை 8: அலாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் படுத்தேன்…

காலை 8:30: ஹீட்டர் போட்டுவிட்டு மண்டும் வந்து படுத்தேன்…

காலை 9 : ஒருவழியா எழுந்திரித்துவிட்டேன்!!!

காலை 9:30 : டிபன் சாப்பிட்டு ஆபிஸிற்கு கிளம்பினேன்

காலை 10: என் சீட்டிலிருந்தேன்…
வந்த இ-மெயில் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன்

காலை 10:30: காபி குடிக்கும் நேரம். கேண்டின் சென்றேன்

காலை 11: மீண்டும் சீட்டிற்கு வந்து வந்திருந்த மெயிலுக்கு எல்லாம் பதில் சொல்லி மெயில் அனுப்பினேன்…

சுந்தர் நாயிக்கு அறிவே இல்லை. 15 பேருக்கு இந்த மெயில ஃபார்வேர்ட் பண்ணலனா யாராவது ரத்த வாந்தி எடுத்து சாவாங்களா? இந்த நாயெல்லாம் படிச்சி என்னத்த கிழிச்சுது?

சரி எத்தனை பேத்துக்கு அனுப்பனும்னு இன்னொரு தடவை பாத்துக்குவோம். பயமெல்லாம் ஒன்னும் இல்லை… சும்மா ஜாலிக்குத்தான்…

ராஜேஷ்தான் உண்மையாலும் நல்ல பிரெண்ட்… நல்ல வேளை இந்த மெயில எனக்கு அனுப்பனான். இந்த மெயிலை மட்டும் 20 பேருக்கு அனுப்பினேனா எனக்கு எப்படியும் AOLம் Microsoftம் $765,234 கொடுப்பாங்க. அப்பறம் அந்த காச வெச்சி நாமளும் இந்த மாதிரி ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிடனும். எத்தனை நாளைக்கு தான் இவனுங்களுக்கு கீழ நம்ம வேலை பாக்கறது. குடுக்கற காசுக்கு பிழிஞ்செடுத்தடறானுங்க..

மதியம் 12:00: சாப்பாட்டு நேரம் வந்தாச்சு. வழக்கம் போல் ஹைதராபாதி தம் பிரியாணி சாப்பிட்டு ஒரு ரவுண்டு வாக்கிங் போனேன்.

மதியம் 2: மீண்டும் சீட்டிற்கு வந்தேன்.
சரி நேத்து “R”ல இருக்கவங்களுக்கு போன் பேசியாச்சு. இன்னைக்கு “S”ல இருக்கவங்களுக்கு பேசனும். செல் பொன் எடுத்து “S”ல் ஆரம்பிக்கும் நண்பர்களுக்கு போன் செய்தேன். சுதிருக்கும் என்னை போலவே வேலை அதிகமாம். கம்பனி மாற வேண்டும் என்று சொல்லி கொண்டுருந்தான். எனக்கும் ஏதாவது ஓப்பனிங்ஸ் இருந்தால் சொல்ல சொன்னேன்.

மதியம் 3:30: டீ நேரம்.

மதியம் 4: டீம் மீட்டிங். இந்த மேனஜர் ரொம்ப மோசம். எல்லாரும் வீட்டுக்கு கிளம்பற நேரத்திற்கு மீட்டிங் வைத்திருக்கிறார். “That’s a good idea”, “sorry, I dont think it will work”, “it works as per the client requirement”, “Its not our responsibility. Onsite should have taken care of it”. இந்த வாக்கியங்களை தேவையான இடத்தில் பயன்படுத்திவிட்டேன்.

மாலை 5: ஸ்னாக்ஸ் சாப்பிட கேன்டீன் சென்றோம். நேத்து பானி பூரி சாப்பிட்டாச்சு… இன்னைக்கு பேல் பூரி சாப்பிடுவோம்.

மாலை 6: டாக்குமண்ட் வேலை செய்ய ஆரம்பித்தேன்… நடுநடுவே மதியம் வந்த மெயிலுக்கு பதில் அனுப்பினேன். அப்படியே சில நண்பர்கலிடமிருந்து வந்த போன் கால்களுக்கும் பதில் சொல்லிவிட்டு ஒரு வழியாக வேலையை முடித்தேன்.

இரவு 8: ஆன் சைட்டிற்கு டாக்குமெண்டை மெயில் செய்தேன்.

இரவு 9: வீட்டிற்கு புறப்பட்டேன்…

இரவு 10: சாப்பாடு முடித்துவிட்டு… சன் மியுசிக் பார்த்து கொண்டே நண்பர்களுடன் அரட்டை

இரவு 12:30: படுக்கைக்கு சென்றேன்…

இதுதாங்க நம்ம பெங்களூர் வாழ்க்கை… எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பாத்துருக்கேன்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும்!!!

அதுக்குதான் இவன் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லடானு சொல்லி அமெரிக்காவுக்கு அனுப்பி வெச்சியிருக்காங்க 😉

சுக்கல்லோ சந்திருடு

மக்களே!!! உங்களுக்காக மீண்டும் ஒரு தெலுகு படம்…

படம் வந்து பல நாட்களானாலும் சமீபத்தில்தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
சரி உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த பதிவு.

படத்தின் நாயகன் சித்தார்த். நாயகிகள் சதா, சார்மி, சலோனி (இந்த ஒரு காரணத்திற்காகத்தான் DVD எடுத்தோம் ;))

வெளிநாட்டில் சந்தோஷமாக வாழும் கதாநாயகன், தன் தாத்தா(ANR) வின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஆனால் தனக்கு பிடித்த பெண்ணைதான் திருமணம் செய்வேன் என்று முடிவெடுக்கிறார்.

சிறுவயதில் தன்னுடன் பழகிய பெண்களில் யாராவது ஒருவரை காதலித்து திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் நாயகன். ஆனால் அவர்களுக்கு தான் யாரென்று சொல்லாமல் அவர்களும் தன்னை விரும்பும் பட்சத்தில் அதில் ஒருவரை மணக்க திட்டமிடுகிறார். அவருக்கு துணைக்க்கு நண்பனாக சுனில் (நம்ம விவேக் மாதிரி)


முதல் நாயகி சலோனி, டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை (சானியா மிர்சா மாதிரி). அவளை நாயகன் கவரும் விதம் அருமை. சித்தார்த்ட்துடன் ஊர் சுற்றுவதற்காக முக்கியமான ஆட்டத்தில் தோற்கிறார் சலோனி. அதற்காக சித்தார்த் மிக்க மகிழ்ச்சியடைகிறார். (இந்த இடத்தில் எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு வாக்குவாதமே நடைப்பெற்றது. இந்தியாவை ரெப்ரசண்ட் செய்யும் நாயகி காதலுக்காக வேண்டுமென்றே தோற்பது தவறான ஒரு செயலென்று அவன் சொல்ல. காதலுக்கு முன் எதுவுமே பெரிதல்ல… அதுவும் போக டென்னிஸ் நாடுகளுக்கிடையே நடுக்கும் போட்டியுமல்ல என்று நான் சொல்ல… இறுதியில் இருவருமே அவரவர் எண்ணமே சரியென்று முடித்து கொண்டோம்). ஆனால் இதனால் மனமுடையும் நாயகியின் தந்தை பிரதாப் போத்தனுக்காக காதலை தியாகம் செய்கிறார் சித்தார்த்.


இரண்டாவது நாயகி சார்மி (இவரை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டோம்). இவருக்கு அட்டகாசமான பாத்திரம், சமுதாயத்திற்காக உழைக்கும் பாத்திரம் (சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்). அடிக்கடி உணர்ச்சிவசப்படும் பாத்திரம். அருமையாக செய்திருக்கிறார். இவரிடம் மாட்டிக்கொண்டி சித்தார்த்தும், சுனிலும் தவிக்கும் காட்சிகள் அருமை. இவருக்கும் சித்தார்த்திற்கும் திருமணம் வரை கொண்டு சென்று இறுதியில் அவரை அவர் காதலன் பிரபுதேவாவுடன் இணைக்கிறார் சித்தார்த்.


மூன்றாவது நாயகி சதா, டாக்டருக்கு படிக்கும் சராசரி நடுத்தர வர்க்கத்து பெண். தன்னம்பிக்கையிழந்து ஓரளவு பயந்த சுபாவம் உள்ள இவரை மாற்றுகிறார் நாயகன். இறுதியில் சதா இவரை தவறாக புரிந்து கொண்டு வேறொருவரை மணக்க சம்மதித்து, திருமணம் வரை சென்று இறுதியில் சித்தார்த்தை கை பிடிக்கிறார்.

படத்தின் பாடல்கள் மனதை கவரும் விதமாக அமையாதது ஒரு பெரிய குறை. மேலும் நாயகனுக்கு நாயகி மேல் காதல் வரும் இடமும் அழுத்தமாக இல்லை. மூன்று நாயகிகளை வைத்து இன்னும் இளமையாக எடுத்திருக்கலாம். ஆனால் படத்தை தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

இது இயக்குனருக்கு முதல் படமென்று நினைக்கிறேன். அடுத்த படம் இன்னும் சிறப்பாக எடுப்பார் என்று நம்புவோம்.

தூறல்!!!

டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது…

வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அருகே நின்று கொண்டிருந்தேன். எலக்ட்ரானிக் சிட்டி போய் சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். நல்ல வேளை இந்த i-pod இருப்பதால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது.

இந்த மழை ஏன் இங்க பெஞ்சி உயிர வாங்குதுனு தெரியல… மழை வரலைனு யாகமெல்லாம் நடத்தறானுங்க… அங்க வராம இங்க வந்து நம்ம உயிர வாங்குது. அதுவும் ஆபிஸ் போற நேரத்துல.

அருகே கம்பெனி ஐடி கார்டை மாட்டிக் கொண்டு நான்கு, ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர். இவனுங்களுக்கு எல்லாம் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியர்னு பெருமை. இந்த ஐடி கார்டை கம்பெனிக்குள்ள மாட்டினா போதாதா? லைசன்ஸ் வாங்குன நாய் மாதிரி எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு திரியறானுங்க.

கடைசியாக சுரிதார் அணிந்து கொண்டு புதிதாக ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். நான் பார்ப்பதை பார்த்து சிரித்தாள்.

ச்சீ என்ன பொண்ணு இவ… யாராவது பார்த்தா… உடனே சிரிக்கணுமா???

பஸ் வந்தவுடன் வேகமாக சென்று ஒரு நல்ல இடம் பார்த்து ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்தேன்… i-podல் நேற்று டவுன்லோட் செய்த பெயர் தெரியாத படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

சரியாக எட்டு மணிக்கு என் சீட்டிலிருந்தேன்… வழக்கம் போல் யாரும் இன்னும் வரவில்லை. இன்று அப்ரைசல் வேறு இருக்கிறது. இந்த முறை ஆன் சைட்டிலிருந்து அப்ரிஸியேஷன் மெயில் வந்திருக்கிறது. அதனால் எப்படியும் இந்த முறை நல்ல ரேட்டிங் கிடைக்கும்.

மேனேஜர் சரியாக பத்து மணிக்கு வந்தார். மற்றவர்கள் அவர் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன் வந்தனர். அவரை பொருத்த வரை அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததாகத்தான் கணக்கு. மற்றவர்களை கேட்டால் டிராபிக் ஜாம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி தப்பிவிடுவார்கள். 7 மணிக்கு புறப்பட்டால் எப்படியும் 8 மணிக்குள் வர முடியும். 8 மணிக்கு புறப்பட்டு 2 மணி நேரம் டிராபிக்கில் சிக்கி வரவே அனைவரும் விரும்புகின்றனர். தலை சரியில்லாத இடத்தில் மற்றவர்களை சொல்லி பயனில்லை.

சரியாக 11 மணிக்கு அப்ரைசல் மீட்டிங். தேவையானவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு மீட்டிங்கிற்கு சென்றேன். உள்ளே மேனஜர் தயாராக இருந்தார். இந்த முறையும் அப்ரைசலில் எல்லா டாஸ்கிற்கும் “C” போட்டிருந்தார்கள். அதற்கு அவர் சொன்ன காரணம் டீம் மக்களோடு சரியாக கலக்காமலிருக்கிறேனாம்.

சரியாக வேலை செய்யவில்லை என்றால் சரி. ஆனால் மக்களோடு பழகவில்லை என்று அவர் சொல்வது சும்மா ஒரு சப்பைக்கட்டு!!! இவர்கள் வேலை செய்வது போல் நடிப்பவர்களைத்தான் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் உண்மையாக வேலை செய்பவர்களை என்றும் மதிக்கமாட்டார்கள்.

மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பிட கிளம்பினேன்.

“கார்த்திக்… இன்னைக்கு பிராஜக்ட் பார்ட்டி. பஸ் 12:30க்கு வரும். இப்ப எங்க போற?” அக்கரையாக விசாரித்தாள் ஹாசினி.

“சாரி… நான் வரலை. நான் தான் மெயில்லையே சொல்லிட்டனே… எனக்கு இந்த பார்ட்டி எல்லாம் பிடிக்காதுனு” சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட சென்றேன்.

சாப்பிட்டுவிட்டு என் சீட்டிற்கு வந்த போழுது என் ப்ளோர் முழுதும் விரிச்சோடி கிடந்தது. 2 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினேன். வீட்டில் தனியாக என்ன செய்வதென்று தெரியாமல் கிடைத்த ஒரு ஆங்கில நாவல் படிக்க ஆரம்பித்தேன். எப்போழுது தூங்கினேனென்றே தெரியவில்லை. தூங்கி எழுந்திரிக்கும் பொழுது மணி 8 ஆகியிருந்தது.

அருகே இருக்கும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். டிவியை ஆன் செய்து ஒரு மணி நேரத்தில் 120 சேனல்களையும் 40 முறை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். 6 மணிக்கு அலாரம் அதன் வேலையை சரியாக செய்ய 7 மணிக்கு பஸ் ஸ்டாப்பில் இருந்தேன்.

வழக்கம் போல் பஸ்ஸிற்காக காத்திருப்பவர்கள் இருந்தார்கள். நேற்று புதிதாக வந்திருந்தவளும் அங்கே நின்று கொண்டிருந்தாள். நேற்றை போலவே இன்றும் பார்த்து சிரித்தாள்.

பஸ் வந்ததும் வழக்கம் போல் ஜன்னலோர சீட்டருகே சென்று அமர்ந்தேன்.

“ஹாய்… நான் இங்க உக்காரலாமா?” ஒரு பெண்ணின் குரல்.
திரும்பி பார்த்தேன். அவள் என் பதிலை எதிர்பார்க்காமல் அருகில் அமர்ந்தாள்.

வழக்கத்தைவிட i-podல் சத்தத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினேன். அதை புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் ஒரு ஆங்கில நாவலை கையில் வைத்து படிக்க ஆரம்பித்தாள். வண்டி வழக்கத்தைவிட சீக்கிரம் சென்றாலும் ஏதோ ஒரு யுகம் போனது போலிருந்தது.

தினம் செய்யும் வேலையையே செக்குமாடு போல் செய்துவிட்டு 8 மணிக்கு ஆபிஸிலிருந்து வீட்டிற்கு கிளம்பினேன். அடுத்த நாளும் அதை போலவே என் அருகில் அமர்ந்து பயணம் செய்தாள். இதுவே ஒரு வாரம் தொடர்ந்தது.

அன்றும் லேசான தூறல் போட்டுக்கொண்டிருந்தது. நடைபாதையிலிருந்து கீழிறங்கி பஸ்ஸிற்காக காத்துக்கொண்டிருந்தேன். வலதுபக்கம் நின்றிருந்த ஒரு ஜோடி ரோட்டில் நிற்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ஒருவர் கையை ஒருவர் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். என் கோபம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே வந்தது.

இதுங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா? சாப்ட்வேர் இஞ்சினியர்னா பெருசா அமெரிக்கால இருக்கற நினைப்பு. இதுங்களாலதான் எல்லாருக்கும் கெட்டப்பேரு!!! திடிரென்று யாரோ என் கையை பிடித்து பின்னால் இழுத்தார்கள். திரும்பி பார்ப்பதற்குள் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. கொஞ்சமிருந்தால் மேலே ஏத்தியிருப்பான். இந்த பெங்களூர்ல ஆட்டோக்காரங்களுக்கு அறிவே இருக்காது.

சரி, பின்னால் இழுத்தது யாரென்று பார்த்தால் அவள் நின்று கொண்டிருந்தாள். சைட்ல இருந்த அந்த ஜோடியப் பாத்துட்டிருந்த நேரத்துல இந்த மாதிரி ஆயிடுச்சு. அவளுக்கு நன்றி சொல்லலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பஸ் வந்து சேர்ந்தது.

எப்போழுதும் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தேன். அவளும் வந்து அமர்ந்து கையில் நாவலை எடுத்தாள்.

“ரொம்ப தேங்கஸ்ங்க…” தயங்கியவாறே சொன்னேன்.

“ஓ!!! உங்களுக்கு பேச வருமா??? நீங்க ஊமைனு இல்ல நினைச்சேன்” புத்தகத்தை பையில் வைத்து கொண்டே சொன்னாள்.

“இல்லைங்க…சாரி. நான் உங்களை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டேனு நினைக்கிறேன்”

“ஐயய்யோ அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க…
பை த வே, ஐ அம் ஆர்த்தி”

“ஐ அம் கார்த்திக்”

இன்று பஸ் பயணத்தின் 60 நிமிடங்களும் 60 நொடிகளைவிட குறைவாக தெரிந்தது. 60 நிமிடத்தில் வாழ்க்கை வரலாறையே சொல்ல முடியும் என்று இன்று தான் உணர்ந்தேன்.

பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன்…

“கார்த்திக்… உன் கூட நான் சாப்பிட வரலாமா? தனியா சாப்பிட போர் அடிக்குது. என் டீமெட்ஸ் எல்லாம் பத்து மணிக்குதான் வருவாங்க”

“உங்களுக்கு எதுவும் பிராபளம் இல்லைனா வாங்க”

“ஏன் ரொம்ப ஃபார்மலா பேசறீங்க??? நீ, வா, போனே பேசலாம்”

“சரிங்க”

“பாத்திங்களா??? திரும்பவும் வாங்க போங்கனு சொல்றீங்க”

“சரி… போலாமா?”

சாப்பிட்டு விட்டு சீட்டிற்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இன்று நாள் போனதே தெரியவில்லை.

அடுத்த நாள் மீண்டும் பஸ் பயணம்…

“ஏய்!!! நேத்து மதியம் உன்ன கேண்டின்ல பாத்தேன்… தனியா சாப்பிட்டு இருந்த… உன் பிராஜக்ட் மேட்ஸ் யாரும் வரலையா?”

“நான் எப்பவும் தனியாதான் சாப்பிடுவேன்”

“ஏன்?”

“யாருக்கும் தொந்தரவு வேண்டாம்னுதான். எனக்கு உங்களை மாதிரி எல்லாம் பேச வராது”

“யார் சொன்னா அப்படியெல்லாம். என் கூட வேணா வரியா?”

“வேணாம். உங்கூட உன் பிரண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க. எனக்கு அன்கம்ஃபர்டபுலா இருக்கும்”

“இல்ல… யாரும் வர மாட்டாங்க. உன் செல் நம்பர் தா. நான் மதியம் கூப்பிடறேன்”

“ஏன்கிட்ட செல் போன் இல்ல”

“என்னது செல் போன் இல்லையா??? எத்தனை வருஷம் சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க?”

“3 வருஷம். ஏன் செல் போன் இல்லனா வாழ முடியாதா? எனக்கு தான் எக்ஸ்டென்ஷன் இருக்கு இல்ல. அதுக்கே எவனும் கூப்பிட மாட்டான். எனக்கு எதுக்கு செல் போன்? எப்பவாவது ஊர்ல இருந்து கூப்பிடுவாங்க. அவ்வளவுதான்”

“சரி உன் எக்ஸ்டென்ஷன் சொல்லு… ” குறித்து கொண்டாள்

காலையும், மதியமும் அவளுடன் சாப்பிட்டேன்… இன்றும் நாள் பொனதே தெரியவில்லை.

அடுத்த நாள்…

“ஏன் இப்படி வயசானவன் மாதிரி டல் கலர்ல சட்டை போடற??? ஒழுங்கா ப்ரைட்டா சட்டை போட்டா என்ன?”

“ஏன் இந்த கலர்க்கு என்ன குறைச்சல். நான் பொதுவா கலரே பாக்க மாட்டேன். போய் எது பிடிச்சியிருந்தாலும் எடுத்துக்குவேன்”

“சரி… இந்த வாரம் நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போகலாம். உனக்கு செல் போன் வாங்கனும்.. அப்பறம் நல்லதா ஒரு நாலு அஞ்சு சட்டை வாங்கனும்”

“எனக்கு எதுக்கு செல் போனெல்லாம்?”

“நேத்து நைட் உங்கிட்ட பேசலாம்னு பாத்தேன்… ஆனால் உங்கிட்ட போன் இல்லாததால பேச முடியல”

“நிஜமாவா?”

“ஆமாம்… சத்தியமா!!! இந்த வாரம் கண்டிப்பா போய் வாங்கறோம்”

“சரி…”

வார இறுதியன்று கடைக்கு சென்றோம்…

“லேட்டஸ்ட் மாடலா பாத்து வாங்கிக்கோ… இல்லைனா பின்னாடி மாத்த வெண்டியிருக்கும்”

“எனக்கு சாதரண மாடலே போதும்… காஸ்ட்லியா எல்லாம் வேண்டாம்”

“நீ சும்மா இரு…நான் செலக்ட் பண்றேன்… உனக்கு ஒன்னும் தெரியாது”

“சரிங்க… நீங்களே எடுங்க”

கடைசியாக பத்தாயிரத்தி சொச்சத்திற்கு ஒரு செல் பொன் வாங்கி ஏர்டெல் கனெக்ஷனும் வாங்கினேன். அதிலிருந்து அவள் நம்பருக்கு போன் செய்து அவள் போனை என்னிடம் குடுத்து பேச சொன்னாள். பக்கத்து பக்கத்துல இருந்து செல் பொனில் பேசுவது அசிங்கமாக இருந்தது… ஆனாலும் அவள் அதை பற்றி கவலைப்படவில்லை.

“பாத்தியா… உன் போன்ல ஃபர்ஸ்ட் பேசனது நான் தான், ஃப்ர்ஸ்ட் பண்ணது என் நம்பருக்குத்தான்”

“சரி சரி… எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க… வா போகலாம்”

அன்றே 5 புது சட்டைகள் வாங்கினோம். ஒவ்வொன்றும் 1500க்கு மேல்.

வீட்டிற்கு சென்றவுடன் போன் செய்து பேசினாள்…

திங்கள் காலை அலுவலகத்தில்

“கார்த்திக்… புது சட்டையெல்லாம் சூப்பரா இருக்கு…கைல ஏதோ செல் போன் மாதிரி இருக்கு” ஹாசினி

“ஆமாம்… நேத்துதான் வாங்கினேன்”

“எங்களுக்கு எல்லாம் நம்பர் தர மாட்டீங்களா?” ராஜிவ்

“உங்களுக்கு இல்லாமலா… இந்தாங்க நோட் பண்ணிக்கோங்க…”
அனைவரும் அவர்கள் நம்பரிலிருந்து மிஸ்ஸிடு கால் குடுக்க அனைவரின் நம்பரையும் சேவ் செய்தேன்.

ஆர்த்தியிடமிருந்து 11 மணிக்கு போன் வந்தது.

“கார்த்திக்… இன்னைக்கு எனக்கு பிராஜக்ட் பார்ட்டி…
நான் மதியம் உங்கூட லஞ்ச்க்கு வர முடியாது. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”

“ஓகே… நான் பாத்துக்கறேன்”

“கார்த்திக்… புது போனெல்லாம் வாங்கியிருக்கீங்க… ஏதாவது விசேஷமா?” மேனஜர் குரல் பின்னாலிருந்து வந்தது.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க… சும்மா வாங்கனும்னு தோனுச்சு… வாங்கிட்டேன்”

“சரி… இன்னைக்கு டீம் லஞ்ச்… எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்னு பிளான். நீயும் கண்டிப்பா வரணும்”

“ஷுர்… கண்டிப்பா வரேன்”

மதியம் அனைவரிடமும் நன்றாக பேசினேன்… எல்லாரும் எவ்வளவு ஜாலியா பேசறாங்க… நான் ஏன் இத்தனை நாள் இப்படி பேசாம போனேன். ரொம்ப தப்பு பண்ணிட்டு இருந்தனோனு தோனுச்சு…

வாழ்க்கையில் ஏதோ பெரிய மாற்றம் நடந்த மாதிரி இருந்தது.

ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. டீமில் அனைவரும் இப்போது நல்ல நண்பர்களாகி விட்டனர். 5 நிமிடம்கூட பேசாமல் இருக்க முடியாது போல் தோன்றியது. அனைத்து மாற்றத்திற்கும் காரணம் ஆர்த்திதான்.

“கார்த்திக் நான் இந்த வீக் எண்ட் சென்னை போறேன்… எப்ப வருவேன்னு தெரியாது. கொஞ்சம் லேட்டானாலும் ஆகலாம். நீ இதே மாதிரி இருக்கணும். ஓகேவா?”

“ஏன் இப்படி சொல்ற? ஏதாவது பிரச்சனையா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல… அதனால சொன்னேன்”

“சரி… அப்ப அப்ப போன் பண்ணு”

“கண்டிப்பா பண்றேன்”

அவள் சென்றதிலிருந்து முதல் இரண்டு, மூன்று நாட்கள் வேலை செய்யவே முடியவில்லை. பிறகு ஓரளவு சமாளித்தேன். ஒரு வாரம் ஓடியது.
அவளிடமிருந்து போனும் வரவில்லை. அவளும் வரவில்லை. ஒரு மாதமாகிய நிலையில் போன் வந்தது.

“ஹலோ கார்த்திக்கா???”

“ஆமாம். நீங்க யார் பேசறது?”

“நான் ஆர்த்தியோட அண்ணன் பேசறேன்… நீங்க சென்னை அப்போலோ வர முடியுமா? ஆர்த்தி கடைசியா உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்” அவர் குரலில் நடுக்கம் தெரிந்தது

கடைசியா???” இந்த வார்த்தையை கேட்டவுடன் இதயம் நின்றுவிடும் போலிருந்தது.
“ஆர்த்திக்கு என்னாச்சு???”

“நீங்க இங்க வாங்க… அத சொல்ற நிலைமைல நாங்க இல்ல… சென்னை வந்தவுடனே இந்த நம்பருக்கு கூப்பிடுங்க… நான் வந்து உங்களை பிக்-அப் பண்ணிக்கிறேன்”

அந்த நம்பர் மனதில் பதிந்தது…

சென்னைக்கு அப்போழுதே நேராக புறப்பட்டேன்…

ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார் ஆர்த்தியின் அண்ணன். அவளுக்கு ஸ்பைனல் கார்டில் ஏதோ பிரச்சனையாம். ஒரு வருடமாக ட்ரீட்மெண்ட் செய்து வந்தார்களாம். சரியாகிவிடும் என்று அனைத்து டாக்டர்களும் நம்பிக்கையூட்டிய நிலையில் திடீரென்று அவள் மூளையை பாதித்துவிட்டதாம். எனக்கு எதுவும் விளங்கவில்லை. புதுப்புது வார்த்தைகள். புது உலகம்.

ஹாஸ்பிட்டலில் காய்ந்து போனா பூச்சரமாக இருந்தாள் ஆர்த்தி. ஆனாலும் வாசம் மறையவில்லை. ஓரளவு பேசும் நிலைதான்… என்னை விட்டுவிட்டு அவள் அண்ணன் டாக்டரை பார்க்க சென்றார்.

எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.

“கார்த்தி… அழுவாத!!! எனக்கு கஷ்டமா இருக்கு”

“ஏன் ஆர்த்தி? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல”

“நான் எப்படியும் பொழைக்க மாட்டேனு தெரியும். ஆனா எங்க வீட்லதான் ரொம்ப நம்பிட்டு இருந்தாங்க. இங்க எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்கனுதான் நான் பெங்களுருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன்”
ஒரு நிமிட அமைதிக்கு பிறகு தொடர்ந்தாள்

“அன்னைக்கு உன்ன முதல் தடவை பார்க்கும் போதே… உன் கண்ல ஒரு விரக்தி தெரிஞ்சிது. வாழ்க்கையோட அருமை உனக்கு தெரியலனு என் மனசுல பட்டுச்சு. சரி நான் சாவறத்துக்குள்ள உனக்கு ஏதாவது உதவி செய்யனும்னுதான் உன்கூட பேச ஆரம்பிச்சேன். போக போக உன்கூட பேசறதே எனக்கு ரொம்ப சந்தோஷத்த குடுக்க ஆரம்பிச்சிடுச்சு. உங்கிட்ட சொல்லி உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான் சொல்லல.”

“ஆர்த்தி… உனக்கு ஒன்னும் ஆகாது. நீ என்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்ட”

“ஆமாம். நான் எங்கயும் போக மாட்டேன் கார்த்திக்…
நீ பாக்கற ஒவ்வொரு புது மனிதர்களிளும் நான் இருப்பேன். நீ அவுங்ககிட்ட பேசும் போது அது என்கிட்ட பேசற மாதிரி… என்ன சரியா???”

ஒரு வாரம் சென்னையில் தங்கிவிட்டு வந்தேன்…

காலை 7 மணி…

வழக்கம் போல் லேசாக தூறல் போட்டு கொண்டிருந்தது. பஸ் வந்தவுடன் ஏறினேன்.

“ஹாய்… நான் இங்க உக்காரலாமா?”

“தாராளமா”

“என் பேர் கார்த்திக்…”

“நான் பாலாஜி…”

(ஆர்த்தியுடன் பேசி கொண்டிருந்தேன்…)