நன்றி! நன்றி!! நன்றி!!!

நண்பர்களே!!! இது நமக்கு இந்த வலைப்பூவில் 100வது பதிவு. அது என்னுமோ தெரியல, 100 எப்பவுமே ஒரு க்ரேஸ் தான். பப்ளிக் எக்சாம் எதுலயும் நான் 100 எடுத்ததில்லைனு எங்க வீட்ல ரொம்ப வருத்தப்பட்டிருக்காங்க. எனக்கும் அப்ப கொஞ்சம் இருந்துச்சு. அதுவே இந்த நம்பர் மேல ஒரு க்ரேஸ உருவாக்கிடுச்சுனு நினைக்கிறேன். ஆரம்பிச்சி 5 மாசத்துல (தமிழ்மணத்தில் இணைந்தது ஜீன் 29) 100 பதிவு அதிகம் தான்… இனிமே குறைச்சிக்கிறேன் 🙂

சரி இந்த பதிவ கொஞ்சம் வித்யாசமா செய்யலாம்னு யோசிக்கும் போது, யாராவது கொஞ்சம் பெரிய ஆளுங்களை கூப்பிட்டு நம்ம ப்ளாக் பத்தி எழுத சொல்லலாம்னு பார்த்தா, அது எதுக்கு நம்ம ஆசையா எழுதனும்னு ஆரம்பிச்ச ப்ளாக்ல வேற ஒருத்தர எழுத வைக்கனும்னு தொனுச்சு.

சரி அதுவே கொஞ்சம் ஆழமா யோசிச்சவுடனே ஏன் வெட்டியோட இந்த ப்ளாக்ல இந்த பதிவ பாலாஜிக்கு கொடுக்க கூடாதுனு தோனுச்சு. வெட்டி கேள்விகள் கேட்டு அதுக்கு பாலாஜி பதில் சொன்னா எப்படி இருக்கும்?

வேண்டாம் என்ன இருந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளதால் அது ஒரு தலை பட்சமாகவே இருக்கும். அதனால் பாலாஜியின் நெருங்கிய நண்பர் (அவனுடைய alter ego என்று நண்பர்கள் மத்தியில் கருதப்படும்) தீபனை கேள்விகள் கேட்க சொல்லலாம் என்று தோன்றியது. கேள்வி கேக்கறது ஈஸி பதில் சொல்றது கஷ்டம்னு பாலாஜிய ஃபீல் பண்ண வெச்சிட்டார் அவர்.

தீபன் இதுவரையில் என் ப்ளாக் தவிர வேறு எதுவும் அதிகம் படித்ததில்லை. என்னுடையதிலும் அனைத்தையும் படித்ததில்லை என்றே நினைக்கிறேன். இதுவரை ஒரு கமெண்ட் கூட போட்டதில்லை. தமிழ்மணம், தேன்கூடு எதுவும் தெரியாது. சரி… கேள்வி-பதில் ஆரம்பிக்கிறது. பாலாஜியுடன் நானும் (வெட்டி) பதில் சொல்ல போகிறேன்… ஸ்டார்ட் த மீசிக்

தீ: ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உனக்கு எதற்கு தோன்றியது?

பா: இந்தியாவிலிருக்கும் போது எனக்கு தமிழில் வலைப்பூக்கள் இருப்பதே தெரியாது. அங்கே பார்த்திருந்தால் நிச்சயமாக துவக்கியிருக்க மாட்டேன். யூ.எஸ் வந்த பிறகு ஏற்பட்ட ஒரு வித தனிமையே எனக்கு வலைப்பூ ஆரம்பிக்க முக்கிய காரணம். வந்த புதிதில் சனி ஞாயிறு நைட் முழுக்க விழித்திருந்து இந்தியாவிலிருக்கும் நண்பர்களுடன் பேசினேன்றாலும் இதுவரை யாருக்கும் தொந்தரவாக இல்லாமல் இப்போது அப்படி மாறியிருப்பதாக தோன்றவே, புது நண்பர்களையும், புது உலகையும் சேர ப்ளாக் ஆரம்பித்தேன்.

வெ: எல்லாரும் எழுதும் போது நாமலும் எழுதிதான் பாக்கலாமே…எப்படி எழுதனாலும் 4 பேர் திட்ட போறாங்க 2 பேர் நல்லா இருக்குனு சொல்ல போறாங்க. அந்த தைரியம் தான் 🙂

தீ: நீ எழுதறது எல்லாமே உண்மையா? இல்லை கற்பனையா?

பா: நகைச்சுவை பதிவுகள் முக்கால்வாசி கற்பனைதான்… கதை முழுக்க முழுக்க கற்பனை.நிகழ்வுகள் பெரும்பாலும் உண்மையே

வெ: எல்லாமே படிச்சா சிரிப்புதான் வருது… இதுல கேட்டகிரி வேற பிரிக்கிறான். எல்லாம் தமிழ்மணம் படிக்கிற எஃபக்ட்.

தீ: ஏன் அதிகமா லவ் ஸ்டோரி எழுதற? எதாவது அனுபவம் இருக்கா?

பா: இந்த கேள்விக்கு விடை உனக்கே தெரியுமென்பதால் விட்டுவிடுகிறேன்.

வெ: மக்களே அந்த கண்றாவியெல்லாம் இருந்தா ஏன் இராத்திரி, பகலா வெட்டியா ப்ளாக் எழுதறேன்?

தீ: இந்த ப்ளாக் மூலமா ஏதாவது நல்ல செய்தி மக்களுக்கு சொல்ற எண்ணமிருக்கா?

பா: கண்டிப்பா! முதலில் என்னை சரி செய்து கொள்கிறேன். கொஞ்சம் பக்குவம் வந்தவுடன் கண்டிப்பாக ஏதாவது நல்ல விஷயங்களை செய்வேன்.

வெ: என்னது நல்ல செய்தியா? பாலைய்யா படத்தையும், கேப்டன் படத்தையும் தனியா பார்க்க வேணாம்னு சொல்லியுருக்கேனே. இதுவே நல்ல விஷயமில்லையா? அதுவுமில்லாம நம்ம சொல்லி எவன் கேப்பான்?

தீ: அடுத்து சுவாரசியமா எழுத ஏதாவது திட்டமிருக்கா?

பா: இஞ்சினயரிங் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தொடர் எழுதலாம்னு இருக்கேன். அது போல கலை மற்றும் அறிவியல் படிக்கும் மாணவர்கள் சாப்ட்வேர் துறைக்குள் நுழைய சில டிப்ஸ்கள் அடங்கிய தொடரை எழுதலாம்னு இருக்கேன். மற்றும் எனது அமெரிக்க பயணம் குறித்து ஒரு தொடர் எழுதலான் என்று எண்ணம்.

வெ: இன்னும் லொள்ளு நிறைய எழுதனும். தர்மபுரி பார்த்து ரிவியு எழுதனும். அப்பறம் கோழி தொடர் கொஞ்சம் பாக்கி இருக்கு

தீ: அடிக்கடி தெலுகு படம் பத்தி எழுதறியே காரணமென்ன? கொல்ட்டி கதைக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?

பா: பல தடவை சொல்லியாச்சு… பழைய ரூமெட் தெலுகு அதனால் வந்த ஆர்வம். தமிழ் படமும் நிறைய பார்க்கிறேன். ஆனால் முன்ன மாதிரி முதல் நாள் பார்க்க வாய்ப்பில்லாததால் போடுவதில்லை. கொல்ட்டி கதைக்கு வரலாறு எதுவுமில்லை.

வெ: பாலைய்யா, ஜீனியர் என்.டி.ஆர், ரவி தேஜாவோட ட்ரெஸ்ஸிங் சென்சும் டென்சும்தான் முக்கிய காரணம்.

தீ: வெட்டிப்பயல்னு பேர் வெச்சதன் காரணம் என்ன?

பா:எடுத்தவுடனே மக்களை கவரும் என்பதுதான். டுபுக்கு பேற பார்த்து நான் எப்படி உடனே அந்த ப்ளாகிற்கு போனேனோ அந்த மாதிரி யாராவது வர மாட்டாங்களானு ஒரு நப்பாசைதான்.

வெ: ஏன் என் பேருக்கு என்ன குறைச்சல்? பதிவுக்கு தகுந்த மாதிரி பேர் இருக்க வேணாமா?

தீ: எல்லா கதையும் சாப்ட்வேர் கம்பனியே மையமா வெச்சி எழுதறயே? ஏன்? நீ அதுல இருக்கனா?

பா: ஆமாம். அதுதான் ஒரு முக்கிய காரணம். எனக்கு அதுல டயலாக் மட்டும் யோசிச்சா போதும். கதைக்கான களம் அமைப்பது எனக்கு ஈஸியா இருக்கு. இப்ப நிறைய பேர் எழுதறதால நான் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டிய நிலையிலிருக்கிறேன்.

வெ: பின்ன க்ரைம் எழுதனா கூலா வந்து வெட்டி காமெடில உன்னய அடிச்சக்க முடியாதுனு கூசாம சொல்லிட்டு போறாங்க… நான் என்ன பண்ண?

தீ: எதுக்கு ப்ரொபைலில் பாப்பாய் போட்டோ?

பா: செல்வனுடைய ப்ரோபைல் போட்டோவினால் வந்த தாக்கம்.பாப்பாய் எனக்கு பிடித்த கார்ட்டூன் கேரக்டர்.

வெ: பேருக்கு ஏத்த மாதிரி இருக்குனு ஒரு ஃபீலிங் 😉

தீ: உன் போஸ்ட்ல முக்கால்வாசி காமெடியா இருக்கு. உன் கேரக்டர் உண்மையில் காமெடியா இல்லை சீரியஸா?

பா: எனக்கு தெரிஞ்சி நான் கொஞ்சம் சீரியஸ் டைப் தான்… ஆனா அப்பப்ப காமெடியும் வரும்…

வெ: சீரியஸா??? அட்ரஸ் மாத்தி வந்துட்டயா?

தீ: இந்த ப்ளாக் மூலமா நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் என்று நினைக்கிறேன். இந்த அனுபவம் எப்படியுள்ளது?

பா: ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் எப்படி இருப்பனுகூட தெரியாம, என் குணம் தெரியாம, என் எழுத்துக்காகவே எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு நான் இவ்வளவு சந்தோஷமா இருக்கேனா அதுக்கு இவுங்க தான் ஒரு முக்கிய காரணம். உன்னையும் அதிகம் தொந்தரவு செய்யாததற்கு அதுவே காரணம்!!!

வெ: ரொம்ப ஃபீலிங்க இருக்குப்பா… ஃபிரெண்ட்ஸ்… உங்க யார் பேரையும் நான் தனியா சொல்ல விரும்பல… நீங்க இல்லைனா நான் சத்தியமா 100 பதிவு வந்திருக்கவே மாட்டேன்…

தீ: உன் போஸ்ட்லயே உனக்கு மிகவும் பிடித்தது?

பா: சாப்ட்வேர் இஞ்சினயராகலாம் வாங்க, லிப்ட் ப்ளீஸ், கொல்ட்டி

வெ: கவுண்டரும் கடையேழு வள்ளல்களும்!

சரி இதோட கேள்வி பதில நிறுத்திக்கலாம்… அப்பறம் மிச்சத்த இன்னொரு பதிவுல பார்க்கலாம்…

நான் பெரிய எழுத்தாளன் இல்லை. ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதுகிறேன். என் எழுத்து மூலமாக உங்களை ஏதாவது வகையில் வருத்தப்பட வைத்திருந்தால் மன்னிக்கவும்…

என்னுடைய ஒவ்வொரு பதிவும் உங்களின் ஊக்கத்தினால்தான் வருகிறது… உங்கள் அனைவருக்கும் என் நன்றி! நன்றி!! நன்றி!!!

ஏன் இந்த கொலை வெறி???

மக்கள்ஸ் கதை எழுதி போர் அடிச்சிடுச்சு… சரினு என்னோட முதல் தெலுகு பட அனுபவத்தை உங்களோட பகிர்ந்துக்கலாமனுதான் இந்த பதிவு… (எல்லா பதிவுக்கும் ஒரு விளக்கம் குடுக்க வேண்டியதா இருக்கே)

பெங்களூர்ல எலக்ட்ரானிக் சிட்டில தங்கி இருந்த சமயம். பக்கத்து ரூம்ல ஒரு பத்து ஆந்திர மக்கள்ஸ் ரூம் எடுத்து தங்கியிருந்தாங்க. ரொம்ப நல்ல பசங்க. நம்மகிட்டயும் ரொம்ப பாசமாவும் மரியாதையாவும் பேசுவாங்க.

ஒரு முக்கிய காரணம் நான் தினமும் எல்லாருக்கும் ஏதாவது சொல்லி கொடுத்துட்டு இருப்பேன். சொல்லி கொடுக்கறதுக்கு உனக்கு என்ன தெரியும்னு இங்க கேள்வி கேக்கப்படாது. அதே மாதிரி அவுங்களுக்கு தமிழ் படத்துல ஏதாவது டவுட்னாலும் நம்ம கிட்டதான் கேட்பாங்க. பாதி டிஸ்கஷன் ரீ-மேக் பத்திதான் இருக்கும்.

ஒரு நாள் ஞாயிற்று கிழமை மதியம், பாலாஜி இன்னைக்கு சிக்கன் செய்யறோம் நீயும் எங்க கூட வந்து சாப்பிடனும்னு ரொம்ப பாசமா கூப்பிட்டாங்க. சரி ஆந்திரா சாப்பாடும் காரமா நல்லாதான் இருக்கும்னு போனேன்.

அங்க போனவுடனே அவனுங்க என்னை கூப்பிட்டதுக்கான இன்னொரு காரணத்தை சொன்னாங்க. அவுங்க தலைவர் பாலக்கிருஷ்ணா நடிச்ச படத்தை நான் பார்க்கணும்தான் என்னைய கூப்பிட்டானுங்களாம். அந்த படம் ஆந்திரால பயங்கர ஹிட்டாம். படத்து பேரு “சமரசிம்மா ரெட்டி”.

சரி சிக்கனுக்காக அந்த கொடுமைய தாங்கிக்கலாம்னு நானும் உக்கார்ந்திட்டேன். படத்துல பார்த்தா நம்ம சிம்ரனும் அஞ்சலா ஜவேரியும் இருந்தாங்க. சரினு ரொம்ப சந்தோஷமா அட நம்ம பசங்கனு கூட்டத்துக்கு நடுவுல போய் உக்கார்ந்துட்டேன். அதுதான் நான் பண்ண பெரிய தப்பு.

வழக்கம் போல ஒரு மணி நேரம் வரைக்கும் ஒரு பெரிய மேட்டரும் இல்லாம சாதரணமா போயிட்டு இருந்தது. திடீர்னு ஒரு ஃப்ளாஷ் பேக் . பொதுவா தெலுகு மசாலா படத்துல எல்லாம் ஒரு பயங்கரமான ஃப்ளாஷ் பேக் இருக்கும். அது எனக்கு அப்ப தெரியலை.

பாலைய்யா ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்… ரெட்டிதான். வழக்கம் போல ஒருத்தர ஒருத்தர் மாத்தி மாத்தி கொன்னுக்கறானுங்க. அப்பறம் ஹை-பிட்ச்ல டயலாக் வேற அப்பப்ப…

பாலாஜி இப்ப வரப்போறதுதான் படத்துலயே சூப்பரானு சீனு. தொன தொனனு பேசாம படம் பாருனு ஒருத்தவன் சொன்னான். அவன் கண்ணில கொஞ்சம் லேசா கொலை வெறி தெரிஞ்சிது.

நானும் அப்படி என்னடா முக்கியமா சீன்னு பார்த்தா… வில்லனோட கைய பாலைய்யா தொரத்தி தொரத்தி வெட்டறார். அந்த வெட்டு பட்ட கையோட ரத்தம் ஒழுக ஒழுக அந்த வில்லன் தெரிச்சி ஓடறார். தெரு தெருவா ஓடறான். இவனுங்களா அங்க போறான் பிடி இங்க போறான் பிடினு சவுண்ட் விட்டுட்டு இருக்கானுங்க.

எனக்கா பீதி கிளம்புது. ஆஹா. இதுக்கு மேல இங்க உக்கார்ந்தா நம்மல போட்டு தள்ளிடுவானுங்களோனு பயந்து எழுந்திரிக்க முயற்சி செஞ்சேன். அப்ப பார்த்து பின்னாடி இருந்து ஒரு சவுண்ட்… டேய் எந்துக்குடா லேசாவு??? கூச்சோடானு.

ஆஹா!!! நடவுல உக்கார்ந்து இப்படி மாட்டிக்கிட்டேனே? அபிமன்யூ சக்கர வியூகத்துல மாட்ன மாதிரி சிம்ரன பார்த்து நடுவுல உக்கார்ந்து மாட்டிக்கிட்டேனே!!! ஓரமா உக்கார்ந்தாவாது அப்படியே எஸ்ஸாகிருக்கலாம். இப்ப அதுக்கும் வழியில்லாம போச்சே!!!

அதுக்கு அப்பறம் சும்மா ஒரு நூறு பேத்த மட்டும் வெட்டி கொன்னாருங்க… எங்க நடுவுல எழுந்திரிச்சா நம்மல போட்டு தள்ளுடுவானுங்களோனு ஒரு பயம். அப்படியே எதுவும் பேசாமல் அமைதியா உக்கார்ந்திருந்தேன். கடைசியா அந்த ஒத்த கைய வெட்னவற தலைய வெட்டி கொன்னுடறாரு… எல்லாரும் ஜோரா கை தட்னானுங்க…

அடப்பாவிகளா!!! இத்தன நாளா நல்லவங்கலாத்தானடா பழகனீங்க. உங்களுக்குள்ள இவ்வளவு கொல வெறியா??? நான் இத்தன நாளா கொல கார கும்பலோடவா சவகாசம் வெச்சிருந்தேன்???

சரி இதுக்கு மேலையும் எப்படி தெலுகு படம் பார்த்தனு கேக்கறீங்களா? அதுக்கு பேருதான் விதி 🙂

தோழர்களே அடுத்த பதிவு ஒரு ஸ்பெஷல் பதிவு… என்னனு கெஸ் பண்ணி வைங்க பார்க்கலாம் 😉

நெல்லிக்காய் – 5

காய் 4

கார்த்திக் புது மேனஜரை பார்க்க அவர் இடத்திற்கு சென்றான். அவர் திடீரென்று ஒரு மீட்டிங் வந்துவிட்டதால் அவனை மதியம் 3 மணிக்கு மேல் வர சொல்லி அனுப்பினார். அவனும் சரி என்று சொல்லிவிட்டு நண்பர்கள் ஜோதியில் ஐக்கியமாக கேன்டினை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

கேன்டினிலிருந்து ராஜி வந்து கொண்டிருந்தது அவனுக்கு நன்றாக தெரிந்தது. அவள் கீழே குனிந்து கொண்டே வந்தது அவனுக்கு விநோதமாக இருந்தது. அவள் அவனை கவனிக்கவே இல்லை. அவள் அருகில் வந்ததும்…

“ஏய் ராஜி! நீ மட்டும் என்ன தனியா வர?”

அவள் நிமிர்ந்து கார்த்திக்கை பார்த்தாள். அவள் அழுது முகம் சிவந்திருந்ததும் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“ஏய் ஏன் அழுவுற? என்னாச்சு? அவுங்க ரெண்டு பேரும் எங்க?”

அவள் எதுவும் பேசாமல் அவனை மௌனமாக பார்த்தாள். இருந்தும் அவள் கண்ணிலிருந்து நீர் வந்து கொண்டே இருந்தது.

“என்னாச்சு? சொல்லு… ஏன் இப்படி அழுவற. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”

“எல்லாம் உன்னால தான். நேத்து என்ன நடந்துச்சு?” அழுகையும் கோபமுமாக கேட்டாள் ராஜி.

கார்த்திக்கிற்கு திக்கென்று இருந்தது. அருண் ராஜியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான் என்று கோபமும் வந்தது.

“ப்ளீஸ் என்னை தப்பா நினைக்காத. நான் அந்த மாதிரி தப்பான எண்ணத்துல பழகல”

“அப்படினா ஒரு வார்த்தைல முடிச்சிருக்கலாம் இல்லை. நைட் முழுசா பேசிருக்க”

“நேத்து நைட் கரெண்ட் இல்லைனு பேச வேண்டியாத போச்சி. இல்லைனா நான் கம்ப்யூட்டர் முன்னாடிதான் உக்கார்ந்திருப்பேன். ப்ளீஸ் என்னை தப்பா நினைச்சிக்காத” வார்த்தைக்கு வார்த்தை அதையே சொல்லி கொண்டிருந்தான்.

“என்னது கரெண்ட் இல்லைனு அவ்வளவு நேரம் பேசினய? என்ன லூசுனு நினைச்சிட்டியா?
உனக்கு பிடிச்சிருக்குனு சொன்னியா?” முன்பைவிட கோபம் அதிகமாக கேட்டாள்.

“ஆமாம்… ஸாரி. ப்ளீஸ் என்னை தப்பா நினைச்சிக்காத”

அவள் மீண்டும் முன்பை விட அதிகமாக அழ ஆரம்பித்தாள்.

“உனக்கும் அவளை பிடிச்சியிருக்கா? இத்தனை நாள் ஏன்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை. இல்ல?”

“எவளை பிடிச்சிருக்கா?” கார்த்திக்கிற்கு ஒன்றும் புரியவில்லை.

“ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்காத. அருண் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான்”

கார்த்திக்கிற்கு டென்ஷன் அதிகமாகியது. அருண் என்ன சொன்னானென்றும் தெரியவில்லை. இவள் ஏன் இப்படி கோபம், அழுகை என வேறு வேறு விதமாக நடந்து கொள்கிறாள் எனவும் புரியவில்லை.

“நீ கவிதாவை லவ் பண்றியா இல்லையா? உண்மைய சொல்லு”

கார்த்திக்கிற்கு தலையில் இடி விழுந்தது போலிருந்தது.

“நான் கவிதாவ லவ் பண்றனா? என்ன உளற? அவள்ட நான் ஒரு வார்த்தை கூட இது வரைக்கும் பேசனதில்லை”

“பொய் சொல்லாத கார்த்திக். அப்பறம் சத்தியமா உன்கூட நான் சாகற வரைக்கும் பேச மாட்டேன். கடைசியா கேக்கறேன் நீ கவிதாவ லவ் பண்ணல?”

கார்த்திக் கோபம் தலைக்கேறியது. அருண் மட்டும் அங்கிருந்தான் என்றால் கண்டிப்பாக கார்த்திக் நரசிம்ம அவதாரம் எடுத்திருப்பான். அவள் “சாகும் வரை” என்று சொல்லிய வார்த்தையும் அவனுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது

“நீ என்ன லூசா? நான் உன்னை லவ் பண்ணும் போது அவளை எப்படி நினைக்க முடியும்”

அவனையறியாமலே வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வந்தன. சொல்லி முடித்தவுடன் தான் அவன் தான் செய்த தவறை உணர்ந்தான்.

அவளுக்கும் இந்த வார்த்தைகளை கேட்டவுடன் அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒரு சேர வந்தது.

“என்ன சொன்ன கார்த்திக்?” மீண்டும் ஒருமுறை அதை தெளிவுப்படுத்தி கொள்ள கேட்டாள்.

“ராஜி ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு. எனக்கு மத்தவங்க மாதிரி கவிதையா காதல சொல்ல தெரியாது. கோர்வையா பேச வராது. ஆனா இதுதான் உண்மை. எனக்கு தெரியாமலே நீ என் மனசுக்குள்ள வந்துட்ட. நீ என்கூட இருந்தா வாழ்க்கை முழுசும் சந்தோஷமா இருக்கும்னு நான் நம்பறேன். உன்னை கடைசி வரைக்கும் நானும், என்னை கடைசி வரைக்கும் நீயும் நல்லா பார்த்துக்குவோம்னு நான் தீர்க்கமா நம்பறேன். நான் ஏதாவது தப்பா பேசிருந்தா என்னை மன்னிச்சிடு. ஆனா என்கூட பேசறத மட்டும் நிறுத்திடாத” அவன் சொல்லிமுடிப்பதற்குள் அவள் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

ஆனால் முன்னால் அழுததற்கும் இதற்கும் வித்யாசம் தெரிந்தது. அவள் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. வாழ்க்கையில் முதன்முதலாக ஆனந்த கண்ணீரை அவன் பார்த்தான். மகிழ்ச்சியிலும் கண்ணீர் வரும் என்பதை இருவரும் அன்றுதான் உணர்ந்து கொண்டனர்.

கார்த்திக்கிற்கு உலகையே வெற்றி கொண்ட சந்தோஷமிருந்தது. அவன் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் எது என்றால் அடுத்து நொடிக்குள் சொல்ல கூடிய தருணமாக அது அமைந்தது. சரியாக அந்த நேரம் அவனுடைய செல்போன் சிணுங்கியது.

அருணிடமிருந்து போன்.

“டேய் ராஜிய பார்த்தியா? அவளை ஆளையே காணோம். 10 நிமிஷமா தேடிக்கிட்டு இருக்கோம்”

“சரி நீ இங்க வா!!!”

“இங்கனா? எங்க?”

“கேன்டினுக்கு”

“இப்பதான் அங்க இருந்து வறோம்”

“நீ நம்ம காபி குடிக்கற பக்கமாவா திரும்பி போன?”

“இல்லை. காபி வாங்கும் போது அவர்ட சில்லைரையில்லைனு அப்பறம் தரேனு சொல்லிட்டாரு. அதனால அத வாங்கிட்டு அந்த கேட் பக்கமா வந்தோம்”

“சரி… இப்ப நீ முடிகிட்டு இங்க வர. ஓகேவா?”

“ராஜி அங்க இருக்காளா?”

“இருக்கா. நீ இங்க வந்து சேரு முதல்ல”

“அப்பாடியா… இரு நான் அங்க வரேன்”

அருண் திரும்பி தீபாவிடம்…

“ஹலோ… ராஜி கார்த்திக்கோடத்தான் பேசிக்கிட்டு இருக்கலாம். நான் போயிட்டு வந்துடறேன்”

“ஆஹா… இந்நேரம் என்ன ஆயிருக்கும்னு தெரியலை. எப்படியும் அவன் சொல்லலனாலும் ராஜியே அவன்ட சொல்லியிருப்பா. இரு, நானும் உங்கூட வரேன்”

“நீ இங்க இரு. மேனஜர் வந்து பார்த்தாருனா யாரையும் காணோம்னு டென்ஷனாயிடுவாரு. நான் போயி அவளை கூப்பிட்டு வரேன். நம்ம லஞ்ச்ல பேசிக்கலாம்”

“இல்லை… நானும் வருவேன்”

“சரி… நீ போ! நான் இங்கயே இருக்கேன்”

“சரி.. நீயே போயிட்டு வா. ஆனா நீ திட்டு வாங்கறத பார்க்கலாம்னு ஆசை பட்டேன் அது முடியாம போச்சு”

“திட்டுதானே… அவுங்களை நீ இருக்கும்போது வேணும்னா ஒரு தடவை திட்ட சொல்றேன். நீ அப்ப பார்த்து சந்தோஷப்பட்டுக்கோ… இப்ப நான் போயிட்டு வரேன்” சொல்லிவிட்டு அருண், கார்த்திக் ராஜி இருக்குமிடத்திற்கு சென்றான்.

அவர்கள் அங்கு இல்லாததால் கேன்டினுக்குள் சென்று பார்க்க இருவரும் அங்கே காபி வாங்கி வைத்து கொண்டு குடிக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர். ராஜி முகத்தில் ஒருவித சந்தோஷத்தை அவனால் உணரமுடிந்தது…

(தொடரும்…)

அடுத்த பகுதி

நெல்லிக்காய் – 4

காய் 3
காய் 2
காய் 1

ஒரு வழியாக ட்ரெயினிங் முடித்து அனைவரையும் அவரவர் கற்றதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ப்ராஜக்டில் போட்டனர். ஒரு வழியாக அருண், தீபா, ராஜி மூவரும் ஒரே ப்ராஜக்டில் வர கார்த்திக் மட்டும் ப்ராஜக்ட் எதுவும் இல்லாமல் பெஞ்சில் இருந்தான்.

பெரும்பாலும் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கும், ஆர்வக் கோளாறுகளுக்கும் அவ்வளவு சீக்கிரம் ப்ராஜக்ட் கிடைக்காது.பெஞ்சில் இருந்த காரணத்தால் அவனும் பெரும்பாலும் இவர்கள் க்யூபிக்களிலே இருந்தான்.

ட்ரெயினிங்கில் அருணும் கார்த்திக்கும் நன்றாக பழகி நல்ல நண்பர்களாகி இருந்தனர். ட்ரெயினிங் முடியும் சமயத்தில் இருவரும் ஒன்றாக வீடெடுத்து தங்கினர்.வீட்டில் பெரும்பாலும் டீவியும் கம்ப்யூட்டரிலுமே இருவரும் நேரத்தை செலவிட்டு கொண்டிருந்தனர்.

அன்று நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டில் கரெண்டும் இல்லாததால் இருவரும் பழைய காலேஜ் விஷயங்களை பேசி கொண்டிருந்தனர்.தீடிரென்று பேச்சு ராஜீயைப் பற்றி வந்தது.

“கார்த்திக், நீயும் ராஜியும் காலேஜ்லயே நல்ல ஃபிரெண்ட்ஸா”

“நல்ல ஃபிரெண்ட்ஸ்னு சொல்ல முடியாது. ஆனா ஓரளவுக்கு பேசுவோம் அவ்வளவுதான். பொதுவா ராஜீ காலேஜ் பசங்கக்கிட்ட பேச மாட்டா”

“டேய் அடிச்சி விடாதே! அப்பறம் எப்படி ட்ரெயினிங்ல உன் பக்கத்துல வந்து உக்கார்ந்துக்கிட்டா. அதுவும் முதல் நாளே”

“டேய் நாயே! ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து சிஸ்டம்ல உக்கார்ந்திருந்தோம். அந்த முட்டை கண்ணன் (ராஜிவ்) பக்கத்துல இருக்கவங்க் கூட ஷேர் பண்ணிக்கோங்கனு சொன்னவுடனே வேற வழியில்லாம அவ என் கூட சிஸ்டம் ஷேர் பண்ணிக்கிட்டா”

“மச்சி நான் பொறந்து பத்து மாசத்திலே எனக்கு காது குத்தியாச்சு… திரும்பவும் நீ முயற்சி பண்ணாத. அவளோட அந்த பக்கத்துல ஒரு பொண்ணு உக்கார்ந்திருந்தா. அவ கூட உக்காராம எதுக்கு உன் கூட உக்கார்ந்தா?”

“என்னய கேட்டா நான் என்ன சொல்லுவேன். அவளைத்தான் கேக்கனும். ஒரு வேளை நான் எங்க க்ளாஸ் டாப்பர்னு டவுட் கேட்டு படிக்க வசதியா இருக்கும்னு உக்கார்ந்திருக்கலாம்”

“என்ன டவுட் கேட்டு படிக்க பக்கத்துல உக்கார்ந்தாளா? டேய் காதுல வாழைபூவ வைக்க முயற்சி பண்ணாதடா.
நாளைக்கு மதியம் நான் அவளையே கேக்கறன். நீயும் என் பக்கத்தில இருக்க… ஓ.கேவா?”

“தெய்வமே… நான் இருக்கும் போது அவளை கேட்டு தொலைச்சிடாத. அப்பறமா நான் இல்லாதப்ப கேளு”

“ஏன்?”

“வேணாம். எனக்கு ஒரு மாதிரி இருக்கும்”

“என்னட ஓவரா பொண்ணு மாதிரி வெக்கப்படற? நீ இருக்கும் போது கேட்டாத்தான் சரியா இருக்கும். சரி அவளை உனக்கு பிடிச்சிருக்கா?”

“அது எதுக்கு உனக்கு?”

“புரிஞ்சிடுச்சு.. எனக்கு புரிஞ்சிடுச்சு”

“டேய் அதெல்லாம் ஒண்ணும் இல்லைடா…”

“இதையே தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் சூர்யாவும் சொல்லிட்டு இருந்தாரு. நீ சும்மா இரு… நான் பாத்துக்கறேன்”

“டேய் எதாவது பண்ணி கெடுத்துடாதடா ப்ளீஸ்”

“நீ சும்மா இரு… அவளை நான் பார்த்துக்கறேன்”

“டேய்… என்னடா சொல்ற?”

“டேய் சந்தேகப்படாதடா நாயே… அவள் என்ன நினைக்கிறானு நான் கண்டுபிடிச்சி சொல்றேன்”

“டேய் அவள்ட எனக்கு அவளை பிடிச்சிருக்குனு சொல்லிடாதட. அப்பறம் அவளுக்கு பிடிக்கலைனு கடைசி வரைக்கும் பேசாமலே போயிடுவா”

“மச்சி… யாமிருக்க பயமென். நீ ஜாலியா ராஜிய நினைச்சிக்கிட்டே தூங்கு. உங்களை எப்படி சேத்து வைக்கிறதுனு நான் யோசிக்கிறேன்”

“சரி அதெல்லாம் இருக்கட்டும். உனக்கும் தீபாவுக்கும் என்ன பிரச்சனை. ஏன் எப்பவும் எலியும் பூனையுமாவே இருக்கீங்க?”

“அது பெரிய கதை. பெங்களூர்ல இருந்தே சண்டைதான்” ஒருவழியாக பழைய கதையை சொல்லி முடித்தான் அருண்.

“டேய் மோதல்ல ஆரம்பிச்சா… காதல்ல தான் முடியும்னு ஒரு லாஜிக் இருக்கு. பாரு கடைசியா நீ அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போற” கார்த்திக் சொல்லி முடிக்கவும் கரெண்ட் வரவும் சரியாக இருந்தது.

“பாத்தியா. கரெண்ட் வந்துடுச்சு… அப்படினா என் வாக்கு பலிக்க போகுது” கார்த்திக் உற்சாகத்தோடு கூறினான்.

“டேய் இப்படித்தான் இந்தியா வேர்ல்ட் கப்ல ஜெயிக்கும்னு ஆயிரம் லாஜிக் சொன்னீங்க. கடைசியா படு கேவலமா தோத்தோம். இப்படி லாஜிக் சொல்றத முதல்ல நிறுத்துங்க. அப்பறம் அவளுக்கு என்னை சுத்தமா பிடிக்காது” சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து டி.வி பார்க்க சென்றுவிட்டான் அருண்.

அடுத்த நாள் காலையில் வழக்கமாக காபி குடிக்குமிடத்தில் கார்த்திகைத் தவிர மீதி மூவரும் இருந்தனர். கார்த்திக்கிற்கு புது ப்ராஜக்ட் வந்திருப்பதாக மெயில் வந்ததால் அருணுக்கு போனில் சொல்லிவிட்டு மேனஜரை பார்க்க சென்றிருந்தான்.

“ஏய் எங்க கார்த்திக்க காணோம்” அக்கரையாக விசாரித்தாள் ராஜி.

“அவனா… ஒரு சின்ன பிரச்சனை. மதியம் லஞ்சுக்கு வந்துடுவான்”

“என்ன பிரச்சனை?” இன்னும் கொஞ்சம் அதிக அக்கரையுடனும் ஆர்வமுடனும் விசாரித்தாள் ராஜி

“நம்ம கவிதா இல்லை. நேத்து நைட் அவனுக்கு போன் பண்ணி ஓனு அழுகை”

“ஏன்? எதுக்கு? என்ன பிரச்சனை” கேள்வி மேல் கேள்வியாக அடுக்கினாள் ராஜி

“அவ கார்த்திக்க லவ் பண்றாளாம். அவளை தான் அவன் கல்யாணம் பண்ணிக்கனுமாம்”

“அதுக்கு அவன் என்ன சொன்னான்?”

“தெரியல.. நைட் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தான். நான் தூங்கிட்டேன். சரி இன்னைக்கு நைட் பேசிக்கலாம்னு விட்டுட்டேன்.” அப்பாவியாக சொல்லிவிட்டு ராஜியின் முகத்தை பார்த்தான் அருண்.

ராஜியால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை. அமைதியாக சிலை போல் நின்றாள். அவளை அறியாமலே அவள் கண்ணிலிருந்து த(க)ண்ணீர் வந்து கொண்டிருந்தது. அவளால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை. யாருடனும் எதுவும் சொல்லாமல் உடனே அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

அங்கு நடப்பதை அமைதியாக பார்த்து கொண்டிருந்த தீபா, பொறுமையாக அருணிடம் பேசினாள்.

“ஏன் பொய் சொன்ன?”

“என்ன நான் பொய் சொல்றனா?”

“ஆமாம். உன் முகத்துல இருந்தே தெரியுது. அதுவும் இல்லாம இது உண்மையா இருந்தா நீ அவள்ட இப்ப சொல்லியிருக்க மாட்ட”

அருணுக்கு ஆச்சர்யமாக இருந்தது. தீபா எப்படி அவனை நன்றாக புரிந்து வைத்திருக்கிறாள் என்று. இருந்தாலும் பாம்பின் கால் பாம்பறியும் என்பதை போல அருணை அவள் அறிந்து வைத்திருந்தாள் என்று சமாதனப்படுத்தி கொண்டான்.

“அதுவா? ஒரு உண்மை தெரிஞ்சாகனும். அதுக்குத்தான்…”

“என்ன உண்மை?”

“அதெல்லாம் உனக்கு வேணாம். நீ சின்ன பொண்ணு”

“என்ன ராஜி கார்த்திக்க லவ் பண்றாளானு தானே?”

அருணுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“உனக்கு எப்படி தெரிஞ்சிது?”

“பசங்களைவிட பொண்ணுங்க என்னைக்கும் ஸ்மார்ட்… ஆனா நீ அத ஒத்துக்கமாட்ட”

“இங்க பாரு. பொண்ணுங்க ஸ்மார்ட்னா அவ இந்நேரம் கண்டு பிடிச்சிருக்கணுமே. நான் சொன்னத அவ நம்பிட்டுதானே போறா. அப்பவே தெரியல பசங்க என்னைக்குமே ஸ்மார்ட்னு”

“இங்க பாரு. காதல்னு வந்துட்டா அறிவுக்கு இடமே இல்லை. அது பசங்களா இருந்தாலும் சரி பொண்ணுங்களா இருந்தாலும் சரி. அது போகட்டும். அவுங்களுக்குள்ள இருக்க வேண்டியதுல நீ ஏன் தலையிடற?”

“ஆமாம். அவன் கஷ்டம் எனக்கு தானே தெரியும். பாவம் அவ லவ் பண்றாளா இல்லையானே அவனுக்கு தெரியல”

“அதுக்கூட தெரியல. அவன் எதுக்கு லவ் பண்ணனும்”

“பொண்ணுங்க என்ன நினைக்கிறாங்கனு தெரிஞ்சிட்டா உலகத்துல பாதி பிரச்சனை தீர்ந்திருக்கும். சரி… முதல்ல நான் போய் கார்த்திக்கை விட்டு அவளை சமாதனப்படுத்தறேன்”

“அவன் எங்க? சரி, இது அவன் ப்ளானா இல்லை உன்னுதா? உன்னுதாதான் இருக்கும். அவனுக்கு இந்த மாதிரி க்ரிமினல் யோசனை எல்லாம் வராது”

“என்ன ஓவரா பேசிட்டே போற… அந்த பிரச்சனைய முடிச்சிட்டு உன்னைய கவனிச்சிக்கிறேன்”

இருவரும் சண்டை போட்டு கொண்டே கேபினுக்கு சென்றனர். அங்கே ராஜியை காணவில்லை…

(தொடரும்…)

அடுத்த பகுதி

சூரியன் எஃப்-எம் ஆன்லைனில்!!!

ஊரு விட்டு ஊரு வந்து (நாடு விட்டு நாடு வந்து), ஊரை தொலைச்சிட்டோம்னு வருத்தப்படும் மக்களே… இதோ நமக்காக இப்போ சூரியன் எஃப்.எம் (இன்னும் நிறைய இருக்கு) வின்ஆம்போட (Winamp) இணைந்து வருது…

பழைய Win Amp வெர்ஷனில் வருதானு எனக்கு தெரியல…
புது வெர்ஷன் 5.32ல வருது…
நீங்க செய்ய வேண்டியது இதுதான்…
Winamp download செய்ய இங்கே கிளிக்கவும்
காசு வெச்சிட்டு செலவு பண்றது எப்படினு தெரியாதவங்க காசு கொடுத்து டவுண்லோட் செய்து கொள்ளவும்… நம்மல மாதிரி ஓசில கிடைச்சா போதும்னு நினைக்கறவங்க அப்படியே Free வெர்ஷன் டவுன்லோட் செய்து கொள்ளவும்…

இன்ஸ்டால் செய்த பிறகு, படத்தில் உள்ளது போல் இடது பக்கம் உள்ள மெனுவில் ஆன்லைன் சர்வீஸசில் shoutcast radioவை செலக்ட் செய்யவும். பிறகு Genre “T” தேர்ந்துடுத்து அதில் Tamilஐ கிளிக் செய்யவும்… உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்துடுத்து பாட்டு கேட்டு ரசிக்கலாம்…

பிரிலனா பின்னூட்டமிட்டு கேட்கவும் 😉

நெல்லிக்காய் – 3

காய் 1
காய் 2

முதல் இரண்டு நாள் அந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்கள், எந்த பிரச்சனைக்கு யாரை அணுக வேண்டும் என்ற தகவல்கள், சம்பளத்திற்கான வங்கி கணக்கு துவங்குதல், பி.எஃப் கணக்கு துவங்குதல், மதிப்பெண் பட்டியல் சரி பார்த்தல் போன்றவைகள் நடைபெற்றன.

மூன்றாவது நாள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட லேபில் அனைவரும் ஆளுக்கொரு கணினி முன்பு அமர்ந்திருந்தனர். அவர்களுக்கென்று ஒரு மேய்ப்பாளர் (இன்ஸ்ட்ரெக்டர்) இருந்தார்.

“நண்பர்களே, இங்கு ஆளுக்கு ஒரு கணினி கொடுக்க முடியாத நிலையால் ஒரு கணினியை இருவர் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் அருகிலிருப்பவரோடோ அல்லது உங்கள் நண்பர்களுடனோ நீங்கள் சேர்ந்து அமர்ந்து கொள்ளலாம். நான் இதற்கு 10 நிமிடம் அவகாசம் தருகிறேன்” என்று சொல்லிவிட்டு இன்ஸ்ட்ரெக்டர் சென்று விட்டார்.

அனைவரும் அவரவர் நண்பர்களுடன் அமர அருணுக்கு யாரும் கிடைக்காமல் தனியே அமர்ந்தான். அனைவருக்கும் PC பார்ட்னர் கிடைத்துவிட அருணுக்கு மட்டும் யாரும் கிடைக்காதது அவனுக்கு வருத்தத்தை தந்தது.

அன்று ஒரு வழியாக வகுப்புகள் முடிய அவன் மட்டும் தனியாக கணினியில் சொல்லி கொடுத்ததை கற்று கொண்டிருந்தான். அவனுக்கு அந்த தனிமையும் ஒரு விதத்தில் நல்லதாகவே பட்டது. யாருடனும் நேரத்தை பங்கு போடாமல் நன்றாக படிக்கலாம் என்று தோன்றியது.

அடுத்த நாள் வழக்கம் போல் அவன் அவனது கணினியில் படித்து கொண்டிருக்க, தீபா இண்ஸ்ட்ரெக்டருடன் ஏதோ பேசி கொண்டிருந்தாள். அது அவனுக்கு நன்றாகவே கேட்டது.

“சார், நேத்து நான் வரலை. இன்னைக்கு வந்து பார்த்தால் எல்லா கம்ப்யூட்டர்ஸும் ஃபுல்லா இருக்கு. நான் எங்க உட்காறதுனு சொன்னீங்கனா நல்லா இருக்கும்”

“இங்க பாரும்மா, இது காலேஜ் இல்லை. இங்க சார்னு கூப்பிடக்கூடாது. என்ன ராஜிவ்னு கூப்பிடு”

“சரிங்க. எனக்கு ஒரு கம்ப்யூட்டர் கொடுங்களேன் ராஜிவ்”

“எல்லா கம்ப்யூட்டர்லயும் ரெண்டு ரெண்டு பேர் இருக்கணும்… ஏதுலயாவது ஒரு ஆள் உக்கார்ந்திருந்தால் நீ அவரோட ஷேர் பண்ணிக்கோ. ஓகேவா? எதாவது பிரச்சனைனா எங்கிட்ட சொல்லு”

“ஓகே”

சொல்லி விட்டு ஒரு ஒரு வரிசையாக பார்த்து கொண்டே வந்தாள்.

அருண் மட்டும் தனியே இருப்பதை பார்த்துவிட்டு மீண்டும் ஒரு முறை லேப்பை சுற்றி வந்தாள். வேறு வழியில்லாததால் மீண்டும் அருணிடம் வந்தாள்.

“உங்ககூட யாராவது கம்ப்யூட்டர் ஷேர் பண்றாங்களா?”

“இல்லையே”

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா நான் உங்க கூட ஷேர் பண்ணிக்கலாமா?”

“இது என்ன என் சொந்த கம்ப்யூட்டரா நான் ஆட்சேபம் தெரிவிக்க. நீங்க தாராளமா ஷேர் பண்ணிக்கலாம்”

சொந்த கம்ப்யூட்டராக இருந்தால் நிச்சயமாக ஆட்சேபம் தெரிவித்திருப்பான் என்றே அவளுக்கு தோன்றியது.

“நேத்து க்ளாஸ்ல சொல்லி கொடுத்த ஸ்லைட்ஸ் இங்க இருக்கு. நீங்க வேணும்னா படிச்சிட்டு இருங்க. நான் வரேன்”

சொல்லிவிட்டு பக்கத்து கம்ப்யூட்டரிலிருந்த கார்த்திக்கிடம் ஏதோ பேசி அவனை வெளியே கூப்பிட்டு சென்றான்.

காபி குடிக்குமிடத்திற்கு கார்த்திக்கை அழைத்து சென்றான் அருண்.

“கார்த்திக், நீ தப்பா எடுத்துக்கலனா நீயும் நானும் ஒரு கம்ப்யூட்டர்ல உக்கார்ந்துக்கலாம். ராஜியும், தீபாவும் ஒரு கம்ப்யூட்டர்ல உக்கார்ந்துக்கட்டுமே. ப்ளீஸ்”

“டேய், லூசாடா நீ? அவனவன் பொண்ணுங்க பக்கத்துல உக்காரத்துக்கு அலையறானுங்க. நல்ல வேளை அவள் என் க்ளாஸ் மேட்டுங்கறதால எனக்கு எப்படியோ சான்ஸ் கிடைச்சது.நீ என்னடானா அதை கெடுத்துக்க சொல்றீயே”

“எப்படியும் பக்கத்து கம்ப்யூட்டர்லதான அவ உக்கார்ந்திருப்பா. நீ ஈஸியா பேசலாம். எனக்கு அந்த பொண்ணு பக்கத்துல உக்கார்ந்து வேலை செய்ய முடியாது.. ப்ளீஸ்”

“ஏன்டா ஏதோ கவர்ன்மெண்ட் பஸ்ல சீட் மாத்தர மாதிரி மாத்த சொல்ற. போனா போகுது, நான் ராஜிக்கிட்ட பேசி பாக்கறேன்.”

கார்த்திக் உள்ளே சென்று ராஜியிடம் ஏதோ சொல்ல ராஜி தீபாவின் கம்ப்யூட்டருக்கு சென்றாள். இதை பார்த்தவுடன் சந்தோஷமாக உள்ளே வந்து கார்த்திக் பக்கத்தில் அமர்ந்தான் அருண்.

நடந்ததை யாரும் சொல்லாமலே புரிந்து கொண்டாள் தீபா.

சில நாட்களிலே கார்த்திக்கும், அருணும் நல்ல நண்பர்களாகினர். ராஜியும் தீபாவும்தான். ஒருவருக்கொருவர் தெரியாததை சொல்லி கொடுத்து உதவி கொண்டனர். அனைத்து தேர்விலும் கார்த்திக்தான் முதல் மதிப்பெண் எடுத்தான். அருணும் ஓரளவு நல்ல மதிப்பெண்ணே பெற்றான்.

நால்வரும் ஒன்றாகவே சுற்ற ஆரம்பித்தனர். சாப்பிட சென்றாலும், காபி, டீ இடைவேளைகளிலும் ஒன்றாகவே இருந்தனர். அருணும் தீபாவும் மட்டும் அவ்வளவாக பேசிக்கொள்ளாததை கார்த்திக்கும் ராஜியும் நன்கு அறிந்திருந்தனர்.

பெரும்பாலான நாட்களில் அருணும் கார்த்திக்கும் அசைவ உணவையே சாப்பிட தீபா ஒரு நாள் கேட்டே விட்டாள்.

“எப்படி நீங்க ஆடு, கோழி எல்லாம் சாப்பிடறீங்க? உங்களுக்கு அத பார்த்தா பாவமா தெரியலையா?”

கார்த்திக் அமைதி காத்தான். அருண் பேச ஆரம்பித்தான்.

“நீங்க மட்டும் கீரையெல்லாம் சாப்பிடல. அதுக்கும் தான் உயிர் இருக்கு. வேரோட பிடிங்கி தானே சாப்பிடறீங்க? இதுவாவது பரவாயில்லை. இலை, காய், பழம் எல்லாம் சாப்பிடறது எப்படி தெரியுமா? கைய கால பிக்கிற மாதிரி. அதுக்கு எப்படி வலிக்கும். அதையே தான் இந்த ஆடும் செய்யுது. செடிய கடிச்சி சாப்பிடுது. அந்த செடியெல்லாம் எப்படி அழுதுச்சினு உங்களுக்கு தெரியுமா? செடி கொடிகளை காப்பாத்த வேற வழியே இல்லாம நாங்க ஆடு, கோழினு சாப்பிட வேண்டியதா போச்சு”

“பழமெல்லாம் மத்தவங்க சாப்பிடத்தான் செடியே தருது. அதுல இருக்கற விதைதான் அதோட குழந்தை. பழத்தை சாப்பிடறது தப்பில்லை” என்று மீண்டும் வாதாடினாள் தீபா.

“சரி நீங்க இதுவரைக்கும் சாப்பிட்ட பழத்துல இருந்து ஒரு சதவிகிதமாவது விதைய எடுத்து நட்டிருக்கீங்களா?
சாப்பிட்டு குப்பைல போட வேண்டிய்து. இல்லைனா பாலித்தீன் பேப்பர்ல பத்திரமா போட்டு குப்பை தொட்டில போட வேண்டியது. இதுல விதைக்காத்தான் பழத்தை சாப்பிட்டோம்னு கதை விட வேண்டியது. அதுக்கு எங்களை மாதிரி கொன்றால் பாவம் தின்றால் தீரும்னு சொல்லிட்டு போகலாம்” மீண்டும் விதாண்டாவாதம் பேசினான் அருண்.

ஒருவழியாக பேச்சை திசைத்திருப்பினான் கார்த்திக்.

“தீபா அந்த ராஜிவ்க்கு உன் மேல ஒரு கண்ணுனு நினைக்கிறேன். எப்பவுமே உன்னய சைட் அடிச்சிக்கிட்டே இருக்கறான்”

“அப்படியெல்லாம் இல்லை. நீ எதாவது கதை கட்டிவிடாதப்பா சாமி” சமாளித்தாள் தீபா…

“அருண், நான் சொல்றது உண்மைதான?” அருணையும் துணைக்கு அழைத்தான் கார்த்திக்.

“ஆமாம்.. அப்படித்தான்னு நினைக்கிறேன்” சொல்லிவிட்டு தீபாவை பார்த்தான் அருண்.

அவள் அவனை முறைத்து கொண்டிருந்தாள். அந்த முறைப்பிலும் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்று அவன் உள்ளுணர்வு அவனுக்கு சொல்லியது…

(தொடரும்…)

அடுத்த பகுதி

உதவி தேவை

Hi,
One of my friend’s dad got diagnised with Pancreatic cancer and undergone a surgery called Whipple’s surgery in one of the hospitals at Coimbatore. I beleive the doctors said its a critical one and he is still in danger. They also said that the survival of the person affected by Pancreatic tumor is very less. When I checked in Internet it says for the same disease the survival is 75% – 95% in US. I am not sure whether its not the case in India. If you are a doctor or If you know anyone who survived after the surgery(in India), please let me know.

If someone from any other cities have any information about Whipple’s surgery and Pancreatic cancer (I beleive he is in critical stage) and if you believe you can help me please shoot out a mail to balaji.manoharan@gmail.com or deepan.thirumalaisamy@gmail.com.
Also you can call me @ (US: 201-233-6832) and if you are in India, please call my other friend Deepan @ 9940063037. (Since my friend is in hospital with his dad and he cannot attend calls)

Also if you want, you can forward this one and today’s date is 21st Nov 2006 (so that people can beleive its not a hoax)

With great regards,
Balaji

நண்பர்களே,
என்னுடைய ஒரு சில பதிவுகளை நீங்க ஃபார்வேர்ட் பண்ணிருக்கீங்க… இதையும் நீங்க அந்த மாதிரி செய்தால் நான் மிகவும் மகிழ்வேன்.

உதவ முடியாதவர்கள் அவர் குணமடைய இறைவனை பிரார்த்திக்குமாறு பணிவன்புடன் வேண்டி கொள்கிறேன்.

மிக்க நன்றி

பாலாஜி

நெல்லிக்காய் – 2

காய் 1

அந்த குளிருட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்த பனிரெண்டு பேருக்குமே அவர்களின் முகத்திலிருந்த வழிந்த வேர்வை அவர்களின் பயத்தைக்
காட்டி கொடுத்து கொண்டிருந்தது. எப்படியும் வேலை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருந்தது.

அந்த அறையின் மேற்பார்வையாளர் க்ரூப் டிஸ்கஷனை ஆரம்பிக்குமுன் அனைவரையும் தங்களை அறிமுகப்படுத்தி கொள்ள சொன்னார். அனைவரின் பெயரையும் நன்கு உன்னிப்பாக கவனித்தான் அருண். அவன் கவனிக்க வேண்டாமென்று நினைத்தும் அவன் மனதில் அந்த பெயர் பதிந்தது. தீபா
என்ற இரண்டு எழுத்து மனதில் பதிய ஒரு நொடிக்கூட தேவைப்படவில்லை.

குருப் டிஸ்கஷனை துவங்கலாம் என்று மேற்பார்வையாளர் சொன்னவுடன் தீபாதான் ஆரம்பித்தாள். தெளிவாக ஆங்கிலத்தில் பேசினாள். நண்பர்களே
நாம் அனைவரும் பங்குபெறும் வகையில் ஒரு நல்ல தலைப்பை தேர்ந்தெடுப்போம். நீங்கள் விரும்பும் பட்சத்தில் இந்த தலைப்பில் விவாதிக்கலாம். காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணமா? இரண்டில் எது சிறந்தது? அனைவரும் மகிழ்ச்சியாக ஒத்துக்கொண்டனர்.

அருணுக்கு இந்த தலைப்பு சுத்தமாக பிடிக்கவில்லை. தீபாவளியன்று சன் டீவியில் வரும் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற தலைப்பை
போலிருந்தது தீபா கொடுத்த தலைப்பு. அனைவரும் ஒத்துக்கொண்ட நிலையில் அருண் பேச ஆரம்பித்தான்.

நண்பர்களே! நாட்டில் பல பிரச்சனைகளிருக்கும் போது இந்த மாதிரி தலைப்புகளில் விவாதிப்பது நேர விரயமே! நான் இன்று வரும் வழியில் பல பேர் பிச்சையெடுத்து கொண்டிருந்தார்கள். அதற்கு தங்கள் இரக்ககுணத்தை காட்டுகிறோமென்று ஒரு சிலர் அவர்களை ஊக்கப்படுத்தி கொண்டிருந்தனர்.
அதை பார்த்து யார் மேல் தவறு அதிகமென்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் விரும்பும்பட்சத்தில் இதை பற்றியும் விவாதிக்கலாமே!வழக்கம் போல் அனைவரும் இதற்கும் ஒத்துக்கொண்டனர்.

தீபாவிற்கு கோபமாக வந்தது. இது தன்னை தாக்கி நடக்கும் விவாதமென்று நன்றாக புரிந்து கொண்டாள். அவளால் பேச முடியவேயில்லை.
அனைவரும் அரசையும், அரசியல்வாதிகளையும் தாக்கி பேசிக்கொண்டிருந்தனர். அனைவரையும் பெயர் சொல்லி கூப்பிட்டதால் அருணையே தலைவனாக ஏற்று கொண்டனர். அந்த விவாதத்தில் பங்கு பெற முடியாமலிருந்த 4 பேரையும் வரிசையாக கூப்பிட்டு அவர்களின்
கருத்துக்களையும் கேட்டான் அருண் (தீபாவை தவிர). இறுதியாக தீபாவை கூப்பிட்டு அவளை முடிவுரை கொடுக்குமாறு சொன்னான் அருண்.

அவளுக்கு அவன் கட்டளையிட்டது பிடிக்கவில்லை. இருந்தாலும் அவனுக்கு மூக்கு உடைய வேண்டுமென்று பேச ஆரம்பித்தாள்.”நண்பர்களே நம் நாட்டில் மக்கள் பிச்சையெடுப்பது கவலையான விஷயம்தான். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிச்சை ஒழிய வேண்டுமே ஒழிய பிச்சைக்காரர்கள் அல்ல. ஒருவன் பசியால் இருக்கும் போது அவனுக்கு மீனை கொடுத்து பிறகுதான் மீன் பிடிக்க கற்று கொடுக்க
வேண்டுமேழொழிய பசியால் வாடுகிறவனுக்கு மீன் பிடிக்க சொல்லி கொடுத்தால் அது அவன் மனதிலும் பதியாது. சொல்லி கொடுப்பவனுக்கு பசியின் வலி தெரியாது. பசியோடு இருப்பவனால் மீன் கிடைக்கும் வரை காக்கவும் முடியாது. அதனால் மனிதாபிமானத்தால் ஒருவனுக்கு உதவுவது
தவறல்ல. அவனை தனக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டுமென்று நினைப்பதுதான் தவறு.” என்று தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேசி
முடித்தாள்.

முடிவுரையென்பதால் யாரும் எதுவும் பேச முடியவில்லை. அருணையும் சேர்த்து.

ஒரு மணி நேரத்தில் தேர்வானவர்களின் பெயரை அறிவித்தார்கள். அதில் அருணின் பெயர் இருந்தது. அதன் பிறகு அன்றே நேர்முகத்தேர்வை
முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, யாருடனும் பேசாமல் அடுத்த தேர்வுக்கு தயாரானான்.

இரண்டாவது நாள் அவனுக்கு அந்த xxxxx கம்பெனியிலிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. ஒரு வாரத்தில் அந்த கம்பெனியின் சென்னை கிளையில் வந்து சேருமாறு மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தது. அன்றே பெங்களூரிலிருந்து சொந்த ஊருக்கு கிளம்பினான் அருண்.

நண்பர்களிடம் சொல்லி கிளம்பலாம் என்று தோன்றியும் அவர்கள் செய்தது அவனால் மன்னிக்கவே முடியாததாக இருந்ததால் அவர்களுக்கு
மின்னஞ்சலில் தகவல் சொல்லிவிட்டு ஊருக்கு பயணமானான்…

ஒரு வாரம் முடிந்த நிலையில் சென்னையில் திருமண மண்டபம் போல் விசாலமான அந்த கான்ஃபரன்ஸ் அறையில் கழுத்தில் டையுடன்
அமர்ந்திருந்தான் அருண். அந்த அறையில் 100க்கும் மேற்பட்ட இளம் பொறியாளர்கள் முகத்தில் மகிழ்ச்சியுடனும் ஒரு விதமான எதிர்பார்ப்புடனும் அமர்ந்திருந்தனர். அந்த அறையில் அருணால் தீபாவை எளிதாக கண்டிபிடிக்க முடிந்தது. தீபாவாலும் தான்…

(தொடரும்…)

அடுத்த பாகம்

அந்த இரண்டு படங்கள்!!!

நான் முதன்முதலில் எழுதிய தெலுகு பட விமர்சனத்தில் இரண்டு படங்களை குறிப்பிட்டிருந்தேன் “ஆ நலுகுரு”, “அனுகோகுண்ட ஒக ரோஜு”. இந்த படங்களுக்கு விமர்சனம் எழுத சொல்லி ஒரு அனானி நண்பர் கேட்டிருந்தார். கொஞ்சம் நாளானதற்கு அவர் மன்னிப்பாராக.

ஆ-நலுகுரு
இதன் அர்த்தம் அந்த நால்வர். எந்த நான்கு பேர்? என்பதே படத்தின் கதை.
படத்தின் கதாநாயகன் ராஜேந்திர பிரசாத். பொதுவாக நகைச்சுவை படத்தில் நடிப்பவர். ஆனால் இதில் குணச்சித்திர பாத்திரம். (நம்ம சிவக்குமார் மாதிரினு வெச்சிக்கோங்க)

படத்தின் நாயகன் தன்னை சுற்றி உள்ள மனிதர்களுக்கு தன்னால் இயன்றவரை உதவுகிறான். யாருக்கு பண பிரச்சனையென்றாலும் இவரிடம் போனால் எப்படியாவது உதவுவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கமளவுக்கு உயர்ந்த குணத்தை உடையவர்.

இவர் வசிக்கும் அதே தெருவில் வசிக்கிறார் கோட்டா சீனிவாசராவ். இவர் உலகை ஆள்வது பணமே என்ற கொள்கை உடையவர். பணமில்லையென்றால் பிணமும் மதிக்காது என்று தீவிரமாக நம்புபவர். யாராக இருந்தாலும் பத்திரம் எதுவுமின்றி பணம் தரமாட்டார்.

கதாநாயகனுக்கு அவன் பிள்ளைகள், மற்றும் மருமகனால் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இவருக்கு இருக்கும் நல்ல பேரை பயன்படுத்தி ஃபைனன்ஸ் கம்பெனி ஆரம்பித்து மக்களை ஏமாற்றலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதை தடுக்க வேறு வழியில்லாமல் கோட்டாவிடம் கடன் வாங்குகிறார் நாயகன்.

ஏற்கனவே ஒரு ஏழைக்கு உதவ தன் வீட்டு பத்திரத்தை அடகு வைத்ததால், வேறு எதுவுமின்றி கடன் கேட்கிறார் நாயகன். ஏற்கனவே இருவருக்கும் இருந்த போட்டியில் தோற்பதாக ஒத்துக்கொள்கிறார் நாயகன் (உலகில் முக்கியம் மனித நேயமா அல்லது பணமா?). பணமே வெள்கிறது.

அன்று இரவே இறந்துவிடுகிறார் நாயகன். கடன்காரர்களுக்கு பயந்து தலைமறைவாகிறார்கள் நாயகனின் பிள்ளைகளும், மருமகனும். நடக்கும் காட்சிகளை நாயகனின் ஆவியும் எமதூதர்களும் பார்க்கிறார்கள். தன் பிள்ளைகளின் செயலையும், மருமகனின் செயலையும் கண்டு துடிக்கிறார் நாயகன். அவரால் வேறு எதுவும் செய்ய முடியாதே!!!

இறுதியில் அவர் மரணம் தற்கொலை என்று அவர் குடும்பத்தாருக்கு மட்டும் தெரியவருகிறது. பிள்ளைகளின் இழிசெயலால் தற்கொலை செய்து கொள்கிறார். இவரின் மரணத்திற்காக ஊரே மரியாதை செய்கிறது. ஊரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு அரசியல்வாதிகளும் வந்து மரியாதை செலுத்துகிறார்கள்.

கொள்ளி வைக்க பிள்ளைகள் வராததால் ஊர் மக்களே அவரை சுமந்து செல்கிறார்கள் (அந்த நால்வர்). அந்த நேரம் யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு போக பார்க்கிறார்கள் பிள்ளைகள். (அதுவரை அதே ஊரில் ஒரு ஹோட்டலில் மறைந்திருக்கிறார்கள்). அவர்கள் சவம் வரும் வழியில் தெரியாமல் சென்று ஊர் மக்களிடம் சிக்குகிறார்கள்.

மக்களும் இவர்கள் இதற்காகத்தான் வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று இவர்களை அழைத்து கொண்டு சுடுகாடு செல்கிறார்கள். அங்கே தன்னிடமிருந்து வாங்கிய பணத்தை கொடுத்தால்தான் எரிக்க விடுவேன் என்று கோட்டா சொல்ல, அவர் பிள்ளைகள் எங்களிடம் பணமில்லை, வேண்டுமென்றால் சவத்தை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று சொல்ல, ஊர் மொத்தமும் சேர்ந்து கோட்டாவிற்கு பணம் தருகிறார்கள்.

தான் பணம் கேட்டது நாயகனின் பெருமையை அவர் பிள்ளைகளுக்கு உணர்த்தவே என்று சொல்லி அவர்களை திருத்துகிறார். இறுதியில் அனைவரும் திருந்த மகிழ்கிறார் நாயகன். உடனே எமதூதர்கள் மறைந்து தேதூதர்கள் தோன்றுகிறார்காள்.

மக்களே நல்ல படத்தை கேவலமா சொல்லிட்டன்னு நினைக்கிறேன்… உண்மையாலுமே இது அருமையான படம்…

அனுகோகுண்ட ஒக ரோஜு த்ரில்லர் படம். காட்சிக்கு காட்சி நன்றாக இருக்கும். நான் கதை சொல்லி கெடுக்க விரும்பவில்லை… முடிந்தால் பார்க்கவும்… அனானி நண்பரே, நீங்கள் சொல்லி ஒரு மாதத்திற்கு மேலாகிறது என தெரியும். தாங்கள் இதை படித்து எனக்கு தெரியப்படுத்தினால் மகிழ்வேன்…

என்னாது… இலவசம்.. இல்லையா???

வழக்கம் போல் அலுவகத்திலிருந்து வீட்டிற்கு சென்றவுடன் என் சொந்த உபயோகத்திற்கான மின்னஞ்சலை பார்க்கலாம் என்று என் மடிக்கணினியை
திறந்து பார்த்தேன்.

யாரென்று தெரியாத ஒருவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல். அதை திறந்தவுடனே அமெரிக்க அரசிடமிருந்து வந்திருப்பது புரிந்தது. அவசரமாக படிக்க ஆரம்பித்தேன்.

அதன் தமிழாக்கமிங்கே (அப்பப்ப ஆங்கிலமுன் வரும் கண்டுக்காதீங்க, அப்படியே பிராக்கெட்ல இருக்கறது நம்ம கமெண்ட்)

திரு.பாலாஜி மனோகரன், (மரியாத தெரிஞ்ச பசங்க)
இது முனைவர். ஜோனதன் பி போஸ்டல் அவர்களின் வழக்கின் வெற்றியை முன்னிறுத்தி அனுப்பப்பட்டுள்ளது. (எவனோ ஜெயிச்சதுக்கு எனக்கு எதுக்குடா மெயில் அனுப்பறீங்க)

முனைவர். ஜோனதன் பி போஸ்டல் அவர்கள் வலையுலகின் தந்தை என்பது தாங்களறிந்ததே (அட நாயிங்களா? இது எனக்கு எப்படா தெரியும்?).
பல ஆண்டுகளாக அவர் ஆராய்ந்து கண்டுபிடித்த வலையுலகை மக்கள் இலவசமாக பயன்படுத்துவதால் பொறுப்பற்ற தன்மையுடன்
பயன்படுத்துவதாகவும், ஆகவே அவர்கள் பயன்படுத்துவதற்கு அரசிற்கு பணம் செலுத்த வேண்டுமென்றும் அதில் ஒரு சிறு பகுதியை தங்களுக்கு வழங்க வேண்டுமென்றும் அவர் வாரிசுகள் இட்ட வழக்கின் நியாயத்தை உணர்ந்து நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமான வழக்கை வழங்கியதும் தாங்களறிந்ததே. (உங்களுக்கு காசு வருதுன்னவுடனே அதுல நியாயம் இருக்குனு சொல்லிட்டேங்களேடா… சரி அதுக்கு எதுக்குடா எனக்கு மெயில் அனுப்பறீங்க?)

இதுவரை நீங்கள் வலையுலகை எவ்வாறு உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள் என்று 6 மாதங்களாக நாங்கள் செய்த ஆராய்ச்சியின் மூலம் நீங்கள்
எங்களுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்ற கணக்கு தயாராகி வரும் நிலையில் அதை பற்றிய ஒரு முன்னோட்டத்திற்காகவே இந்த
மின்னஞ்சல்.(டேய் வெளக்கெண்ணெய்ங்களா… இத முன்னாடியே சொல்லியிருக்கலாமே. இப்ப வந்து சொன்னா நான் என்ன பண்ணுவேன்)

நீங்கள் அனுப்பிய ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் 10 ரூபாய்.(இது தெரியாம கண்ட கண்ட நாயிக்கெல்லாம் மெயில் அனுப்பிட்டனே… ஆண்டவா நான் என்ன பண்ணுவேன்)

உங்களுக்கு வந்த மின்னஞ்சலுக்கு 5 ரூபாய். (டேய் எவனோ எனக்கு மெயில் அனுப்பனதுக்கு நான் என்னடா பண்ணுவேன்… இதுல வேற அப்பப்ப லேப்-டாப் ஃபிரியா வாங்கிக்கோங்க, $500க்கு கிஃப்ட் வவுச்சர் வாங்கிக்கோங்க, I-Pod still Pending இப்படி வந்த மெயிலுக்கு எல்லாம் நான் என்னடா பண்ணுவேன்)

ஆர்குட்டில் நீங்கள் செய்த ஒவ்வொரு ஸ்க்ரேப்புக்கும் 5 ரூபாய். (சரி… இது வரைக்கும் வாங்கன சம்பளம் அவுட்)

உங்களுக்கு வந்த ஸ்க்ரேப்புக்கு 3 ரூபாய்… (சரி ICICIல பர்சனல் லோன் எப்படியும் 8% கொடுப்பானுங்க. பாத்துக்கலாம்)

நீங்கள் ப்ளாகரில் அக்கவுண்ட் வைத்திருப்பவர் என தெரியவந்துள்ளது. (அடப்பாவிகளா அது ஒரு தப்பா?)

நீங்கள் போட்ட பதிவொன்றுக்கு 10 ரூபாய். (ஆஹா நல்ல வேலை நம்ம இன்னும் 100 கூட போடலை… )

அதுவே இவர் பார்வைக்கு, அவர் பார்வைக்கு என்று இட்டிருந்தால் 20 ரூபாய் (என்னடா சொல்றீங்க. நீங்களும் தமிழ்மணம் படிச்சிருக்கீங்களா?)

உங்களுக்கு மற்றவர்கள் இட்ட பின்னூட்டம் ஒவ்வொன்றுக்கும் 3 ரூபாய் (ஆஹா… சந்தோஷப்பட்டதெல்லாம் வீணா போச்சே. அடப்பாவமே இது
தெரிஞ்சிருந்தா எல்லாத்தையும் ரிஜக்ட் பண்ணிருப்பேனே)

நீங்கள் உங்கள் பதிவில் நன்றி சொல்லி இட்ட பின்னூட்டங்களுக்கும், பதில் பின்னூட்டங்கள் ஒவ்வோன்றுக்கும் 2 ரூபாய். (நன்றி சொல்றது தப்பா?
இறைவா இது என்ன சோதனை. எல்லாரும் செஞ்சதையே தானே நானும் செஞ்சேன். இது ஒரு பாவமா?)

மற்றவர் பதிவில் உங்கள் பெயரில் நீங்கள் இட்ட பின்னூட்டங்களுக்கு 1 ரூபாய். (பரவாயில்லைப்பா. ஓரளவுக்கு நல்லவனாத்தான் இருக்கானுங்க)

மற்றவர் பதிவில் அனானியாக அவரை புகழ்ந்து இட்ட பின்னூட்டங்களுக்கு 3 ரூபாய் (டேய் நீங்களும் விவரமாத்தான் இருக்கீங்க)

மற்றவர் பதிவில் அனானியாக அவரை திட்டி இட்ட பின்னூட்டங்களுக்கு 10 ரூபாய் (இப்பதாண்டா உங்களை நல்லவன்னு சொன்னேன் அது தப்பா?)

உங்கள் பதிவிலே உங்களை புகழ்ந்து அனானியாக பின்னூட்டமிட்டிருந்தால் 20 ரூபாய் (ஆஹா… நம்மல புகழ்ந்து நாலு வார்த்தை போட்டா தப்பா?
இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்டா)

தமிழ்மணத்தில் வருவதற்காக சும்மா ஒரு பின்னூட்டம் போட்டிருந்தால் 5 ரூபாய்(டேய் இதெல்லாம் அநியாயம்டா. உங்களை எதிர்த்து கேக்க ஆளே
இல்லையா?)

100 பின்னூட்டத்திற்கு மேல் வருவதற்கு கயமைத்தனம் செய்திருந்தால் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் 10 ரூபாய்… (ஆடிய ஆட்டமென்ன
பாடல் கண்முன்னே வந்தது… தலைவா கொத்ஸ் நீ எங்கிருக்கிறாய்? உன்னிடம் பாடம் பயின்ற எனக்கா இந்த சோதனை?)

அக்கவுண்ட் இல்லாதவர்கள் அனானியாக இட்ட பின்னூட்டங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 1 ரூபாய். (எனக்கு ஏன்டா இதெல்லாம்)

மற்றவர் பெயரில் பின்னூட்டமிட்டிருந்தால் (அதர் ஆப்ஷனில்) 50 ரூபாய். (50 ரொம்ப கம்மி. 100 ரூபாயாக்க சொல்லி ஒரு மெயில் அனுப்பனும். நமக்கு கவலையில்லை :-))

ஒரு முக்கியமான விஷயம் நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் இந்த எண்களை அப்படியே அமெரிக்க டாலருக்கு மாற்றி கொள்ளவும். (என்னது
இதயத்துடிப்பு குறைஞ்சிக்கிட்டே வர மாதிரி இருக்கு… ஏண்டா ஒரு பிளாக் ஆரம்பிச்சது தப்பாடா. எல்லாரும் பண்ணதையே தான்டா நானும் பண்ணேன். இது தெரிஞ்சா ஊரே கை கொட்டி சிரிக்குமே.

நாதாரிங்களா… ஆறு மாசத்துக்கு முன்னாடி அடக்கமாத்தாண்டா இருந்தேன் அப்பவே சொல்லியிருக்க கூடாதா? இப்படி நாடு விட்டு நாடு வந்து
சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிட்டேனே!!!

நல்ல வேலை அனானியா ஆட்டம் போடலை. இருந்தாலும் யார் யார் சொத்தெல்லாம் பறிமுதல் ஆகப்போகுதோ தெரியலையே! அதையும் எவனாவது பதிவுல போடுவான். தப்பி தவறி கூட பின்னூட்டம் போட்ற கூடாது. முடியுமானு தெரியலையே)

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். (எப்படிடா உங்களால மட்டும் ஆப்படிச்சிட்டு அருள் வாக்கு சொல்ல முடியுது?)

– அமெரிக்கன் கவர்ன்மெண்ட்

மக்களே! நீங்களே இது நியாயமானு சொல்லுங்க. ஊரவிட்டு வந்து தனியா இருக்கற ஒரு அப்பாவி பையன் பொழுத போக்கறதுக்காக
விளையாட்டுத்தனமா எழுதறது தப்பா? இவனுங்க கேக்கற காசுக்கு நான் வாழ்க்கை முழுசா சம்பாதிச்சாலும் பத்தாதே! பேசாம யாருக்கும்
சொல்லிக்காம ஊரு பக்கம் வந்து விவசாயம் பாக்கலாம்னு யோசிக்கிறேன்!

ஒரு பத்து மணிக்கா இந்தியால இருந்து போன் வந்துது.

“ஹலோ பாலாஜி ஹியர்”

“டேய் பாலாஜி, நான் கோழி பேசறேன்டா”

“டேய் கோழி எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன்டா… அப்பறம் ஊருக்கு வர போறனு மச்சான் சொல்லிட்டு இருந்தான்”

“ஆமாண்டா கோழி… நம்ம எழுதின அந்த ப்ளாகால சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிட்டேண்டா. சரி அதெல்லாம் உனக்கு புரியாது. ரூம்ல
எல்லாம் எப்படி இருக்கீங்க?”

“நாங்க எல்லாம் நல்லா இருக்கோம். அப்பறம் அந்த லிஸ்ட்ல நன்றி சொல்லி போட்ட பதிவுக்கு 5 ரூபாய்னு ஒரு கேட்டகிரிய சேர்த்துக்கோ”

“டேய் கோழி என்னடா சொல்ற? உனக்கு எப்படி அதெல்லாம் தெரியும்”

“ஏன்டா அனுப்புனவுக்கு தெரியாதா உள்ள என்ன இருக்குதுனு”

“அடப்பாவி உன் வேலை தானா அது?”

“ஆமாம் மெயில்ல IP addressஐ வெச்சி இந்தியால இருந்து வந்திருக்குனு நீ கண்டுபிடிக்க கூடாதுனுதான் யூ.எஸ் சர்வருக்கு கனெக்ட் பண்ணி
மெயில் அனுப்பினேன்”

“அது சரி… நான் அதெல்லாம் பாக்கவே இல்லையே! ஏன்டா கோழி இப்படி பண்ண?”

“நீ மட்டும் என்னய எப்பவும் லந்து பண்ணுவ. நான் பண்ண கூடாதா?”

“ஏன்டா கொஞ்சமிருந்தா என் இதயமே நின்னுருக்குமே… இனிமே உன்னைய லந்து பண்ண மாட்டேன் தெய்வமே”

“அது… போனா போவுது எப்பவும் போல எதையாவது லூசுத்தனமா எழுதிட்டு இரு. நான் ஆர்குட்ல வரேன்”

“ஆர்குட்டா? சரி வா”

ஆஹா நல்ல வேலை அப்ப எல்லாமே இலவசம் தான்….இல்லைனா?