ஏழைப்பெண் மகாலட்சுமி கல்விக்கு உதவுங்களேன் – மீள்பதிவு

மேலும் சில தகவல்களுடன்…
செந்தழல் ரவி அவர்களின் பதிவை மீண்டும் ஒரு முறை இங்கே பதிப்பிக்கிறேன்…

இதுவரை எந்த பதிவை எழுதுவதற்க்கு முன் யோசித்ததில்லை…அதிகபட்சமாக
பத்து நிமிடத்தில் கடகடவென டைப்செய்வதுதான்…ஆனால் இதனை எழுதுமுன் தினறல்…பெரிய யோசனை…எப்போது பப்ளிஷ் செய்யலாம்….இதனை வலைப்பூவினர் வரவேற்ப்பார்களா ? வெற்றிகரமாக செய்ய முடியுமா ?

ஏற்கனவே என்றென்றும் அன்புடன் பாலா நிறைவாக செய்தாரே !! நம்மாலும்
முடியும் – என்ற உந்துதல் ஏற்பட – முதலில் ஒரு பதிவரிடம் சொன்னபோது அவர் மிகச்சிறந்த வழிகாட்டுதலை தந்தார்…இவ்வளவு பீடிகை வேண்டாம் இல்லையா…விஷயத்துக்கு
வந்துவிடுகிறேன்…!!!

சமீபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு நன்பரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கடந்த வாரம் – கல்விக்காக பணம் கட்டமுடியாததால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாணவியை பற்றி கூறினார்…இதயம் கனத்துப்போனது…இதனை நம் வலைப்பூவினரிடம் கூறி
தேவையான நிதியை திரட்டி அந்த மாணவியின் கல்விக்கண் திறந்தாலென்ன என்ற எண்ணம் உதயமானது…!! அதை செயல்படுத்துமுகத்தான் இந்த பதிவு…

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி கிராமத்தை சேர்ந்த இந்த மாணவியின் பெயர் ஆர்.மகாலட்சுமி..தந்தையார் பெயர் ராமன்..படித்தது எம்.எஸ்.ஸி / காந்திகிராமம் கல்லூரியில்…எம்.எஸ்.ஸி அப்ளைடு பயாலஜி பிரிவில் பட்டம் பெற்றுள்ள இவரது மதிப்பெண் ( 1978 / 2750 ). இப்போது பி.எட்: ஆர்.வி.எஸ் எஞ்சினீயரிங் கல்லூரியில் படிக்கும் போது தான் இந்த நிகழ்வு அந்த பெண்ணுக்கு…தந்தையார் கடைகளில் எண்ணையை வாங்கி வீடுவீடாக விற்கும் பணியை செய்து சொற்ப வருமானம் பெறுகிறார்…ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர்..தம்பி படிக்காததால் ஒரு மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் வேலைசெய்கிறார்…தங்கை ஐ.டி.ஐ படிக்கிறாராம்… இவள் முன்னுக்கு வந்தால்தான் குடும்பம் வாழமுடியும் என்னும் நிலை….மிகுந்த ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது கல்விக்கண் திறந்தால் வாழுமே ஒரு குடும்பம்…

இந்த சமயத்தில் நம் உள்ளத்தில் எழும் சாதாரண கேள்விகள் என்ன ? இந்த பெண் உண்மையிலேயே உதவியை பெற தகுதி உள்ளவரா ? நாம் கொடுக்கும் நிதியை இவர் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த மாட்டார் என்பது என்ன நிச்சயம் ? இந்த விவரங்களை சரிபார்த்தது யார் ? மாணவியின் மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டனவா ? இந்த மாணவிக்காக நாம் அளிக்கும் நிதி சரியாக கல்லூரி கட்டணத்தை செலுத்த பயன்படுத்தப்படுமா ? என்பன போன்றவையே…

வலையுலகின் மூத்த பதிவரும் நம் அனைவரின் மதிப்புக்கும் அன்புக்கும் உரியவருமாகிய பதிவர் ஞானவெட்டியானை அவரது இல்லத்தில் நேற்று மாலை மாணவி மகாலட்சுமி சந்தித்தார்…அய்யா அவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்ததோடல்லாமல் முழு இதயத்தோடு இந்த மாணவிக்கு நாம் உதவி செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறார்…..

இப்போது நமது திட்டம் என்ன ? ஞானவெட்டியான் அய்யா அவர்கள் முகவரிக்கு வங்கி வரைவோலையை / காசோலையை அனுப்பிவிட்டால் அவர் அதை தொகுத்து கல்லூரியிலேயே கட்டிவிடுவதாக கூறி இருக்கிறார்…அவரது விவரங்கள் (N.JAYACHANDRAN – a/c @ SBI – NEHRUJI NAGAR.)

அவரது மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்
njaanam@gmail.com
0451-2436844

வங்கி கணக்கு

N.JAYACHANDRAN
SBI Account No: 10261284116
NEHRUJI NAGAR
DINDUKKAL

அனுப்பியபிறகு தனக்கு ஒரு மடல் அனுப்புமாறு ஞானவெட்டியான் கேட்டுள்ளார்..அவரது மின்னஞ்சல் மீண்டும் njaanam@gmail.com

ஐசிஐசியை வங்கி கணக்கு தேவையுள்ளது என்று தெரிந்துள்ளதால் என் ஐசிஐசிஐ வங்கி கணக்கையும் தருகிறேன்…

ICICI A/C : 625301514495
Branch : Kumar Park Branch
Name : Ravindran A

எனக்கு ஒரு மடலும் அனுப்பி தகவலை தெரிவித்துவிட்டால் நன்றாக இருக்கும்…
zyravi@yahoo.com

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்…!!!

பின்னூட்டத்தில் வினவிய நன்பருக்காக – மாணவியின் மொத்த தேவைப்பாடு ரூ அறுபது ஆயிரம் !!!! வேறு ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும்…மேலும் சில பின்னூட்டங்களை பார்த்ததும் தமிழர் நெஞ்சில் ஈரம் இன்னும் வற்றிவிடவில்லை என்பதை அறிந்தேன்…நெஞ்சு நெகிழ்கிறது..

புது வெள்ளம்!!!

1904ஆம் ஆண்டு நாசிக் நகரில் ப்ளேக் நோய் தாக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காலமாயினர். உயிருக்கு பயந்து ஊரை விட்டு பலர் காலி செய்தனர். ப்ளேக் நோயால் இறந்தவர்களை தொடவே அவர்கள் உறவினர்களும் அஞ்சினர். அந்த நிலையில் ஊரில் பெருவணிகனாக இருந்த 25 வயதே நிரம்பிய ராகுல் சின்ஹா என்பவர் களமிறங்கி இறந்தவர்களை தன் முதுகில் சுமந்து சுடுகாட்டிற்கு எடுத்து சென்றார். இதை பார்த்து அவருடைய நண்பர்களும் அவருக்கு உதவினர்.

1909ல் 9 வயதில் திருமணம் செய்து, கணவனை இழந்த, தன் சகோதரியின் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்து புரட்சியை ஏற்படுத்தினார்.

நாசிக் நகரின் சிறப்பு மாஜிஸ்ட்ரேட்,நகர வங்கி, மத தேவஸ்தான அறக்கட்டளை தலைவர் போன்ற 29 துறைகளுக்கு தலைவராக பணியாற்றிய அவர் காந்திஜியின் வழி சேர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்து பதவிகளையும் தூக்கியெறிந்தார்.

ஒரு பவுன் 10 ரூபாய் பெறாத அந்த காலத்தில் வருடத்திற்கு 20,000 ஈட்டும் குடும்ப தொழிலை விட்டு நாட்டு விடுதலையில் பங்கு கொண்டார். நாசிக் நகரில் ஆங்கிலேயரால் முதன் முதலில் 144ல் கைதி செய்யப்பட்டார். அதன் பிறகு காந்திஜியின் அறைகூவலை ஏற்று அன்றிலிருந்து அவர் கதராடையையே உடுத்த ஆரம்பித்தார். அவரது குடும்பத்தினறையும் அவ்வாறே செயல்பட வைத்தார்.

கள்ளுக்கடை மறியலை காந்திஜி துவங்குவதற்கு காரணமே இவரின் மனைவியும், தங்கையும் தான். கள்ளுக்கடை மறியலையும் தானே முன்னின்று நடத்தினார். மேலும் கள் உற்பத்திக்காக தன் நிலத்தில் வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட மரத்தை வெட்டி வீழ்த்தினார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராகவும் 4 ஆண்டுகள் தலைமை ஏற்று நடத்தினார். இடஒதுக்கிட்டீன் தேவையை முதன்முதலில் பறை சாற்றியவரும் இவரே. மகாராஷ்ட்டிரத்தில் நிலவிய தீண்டாமையை ஒழிக்க இவர் போராடிய அளவிற்கு யாருமே இந்தியாவில் போராடியதாக தெரியவில்லை.

இவர் கட்சி தலைமை பதவி வகித்திருந்தாலும் ஆட்சியில் அமர முற்பட்டதில்லை. இவர் விருப்பப்பட்டிருந்தால் எளிதாக முதலமைச்சராகியிருக்கலாம். ஆனால் பதவியை இவர் விரும்பவில்லை. செல்வ சீமானான இவருக்கு பணத்திலும் விருப்பமில்லை. பிற்காலத்தில் காந்திஜியின் பாதையையே தவறென்று கடுமையாக சாடினார். புகழுக்கு ஆசைப்பட்டிருந்தால் காந்திஜிக்கு ஜால்ரா போட்டு மென்மேலும் புகழடைந்திருக்கலாம். ஆனால் இவருக்கு பணம், பெயர், புகழ் எதிலும் ஆசையில்லை. போராட்டமே இவர் வாழ்க்கையாக இருந்தது.

எந்த மனிதனும் மற்றவனுக்கு குறைந்தவனில்லை என்று உரக்க கூவினார். மனிதனே மனிதனை அடிமைப்படுத்துவதை எதிர்த்து போராடினார். இதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் அடித்து நொறுக்கி அவனுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கினார். அது விநாயகர் சிலையாக இருந்தாலும் சரி இராமர் திருவிக்ரகமாக இருந்தாலும் சரி.

“நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?”

இதை புரிந்தவர்களுக்கு அவரின் செயல் எந்த விதத்திலும் தவறாக படாது. இந்து மதத்தில் புரையோடிக்கிடந்த தவறுகள் இவரால் அடித்து நொறுக்கி சீர்பட்டன. தேங்கி கிடந்த குட்டையில் புதுவெள்ளம் பாய்ந்து அதை தூய்மை செய்தது.
கோவிலுக்கு வெளியே நின்று வணங்கியவர்கள் கோவிலுக்குள் சென்று வழிபட வழி பிறந்தது.

எரிமலைகள் வெடிக்கும் போது ஒரு சில ரோஜாக்களும் கருகுவதை போல இவரின் போராட்டத்தால் ஒரு சிலரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இவருடைய ஒரு சில கொள்கைகளில் தவறிருக்கலாம். அதை இவரும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். நானும் உங்களை போல ஒரு சாதாரண மனிதன்தான் என்று. இவரின் போராட்டங்கள் எதுவும் அவருடைய சுயநலத்திற்காக செய்யப்படவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். கடைசி வரை மக்களின் உண்மையான விடுதலைக்காகவும், சுயமரியாதைக்காகவுமே போராடினார்.

சரி இப்போது சொல்லுங்கள் இந்த நபர் நல்லவரா? கெட்டவரா?

நண்பர்களே ஒரு சிறு தவறு ஏற்பட்டுவிட்டது. மேலே நீங்கள் ஒரு சில மாற்றங்களை செய்து மீண்டும் ஒருமுறை படிக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
தவறான சொல் – சரியான சொல்
நாசிக் – ஈரோடு
ராகுல் சின்ஹா – ஈ.வே.ராமசாமி (@) பெரியார்
மகாராஷ்ட்ரா – தமிழ்நாடு

எதுக்கு இவன் பேரை மாத்தி போட்டானு பாக்கறீங்களா? ஒரு சிலர் இந்த பேரை கேட்டவுடனே மனசுக்கு முன்னாடி ஒரு இரும்பு திரையை போட்டுக்கறீங்க. வாழ்க்கை முழுதும் சுயநலம் பாராமல் போராடிய ஒருவனை வெறும் கடவுள் மறுப்பு கொள்கைகளில் அடைத்து வைக்க முடியாது.
வரும் 24ஆம் தேதி அவரின் மறைந்த நாளை முன்னிட்டு இந்த பதிவை அவருக்கு காணிக்கையாக்குகிறேன்.

பின்குறிப்பு:
இந்த பதிவிற்கு சாதி பெயர்களுடனோ, பெரியாரை தரக்குறைவாக தாக்கி வரும் பின்னூட்டங்களோ வெளியிடப்படமாட்டாது.

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – பேரரசு

வணக்கம்!!! நீங்கள் பார்த்து கொண்டிருப்பது கவுண்டர் பெல்ஸ் Devil’s Advocate பார்ட் 2.

இந்த வாரம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் நான்கு வெற்றி திரைப்படங்களை இயக்கிய ஸ்பீட் லாயர் பேரரசு!!!

க: வா மேன்!!! உன்னையத்தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன். நீயே வந்து மாட்டிக்கிட்ட. திருப்பாச்சி படத்தோட வெற்றிக்கு என்ன காரணம்னு நினைக்கிற?

பே: மக்களோட மனச நான் நல்லா புரிஞ்சி வெச்சதுதான் காரணம். படத்துல ஆக்ஷன் சீன் அப்பறம் செண்டிமெண்ட் தான் படத்தோட வெற்றிக்கு காரணம்.

க: ஓ! நீங்க மக்கள் மனச நல்லா புரிஞ்சி வெச்சிருக்கீங்க. ஏன்டா ஒன்றையனா சந்தனத்தை முகத்துல பூசுனா ஆள் அடையாளம் தெரியாதா? எங்க இருந்துடா புடிச்ச இந்த கான்ஸெப்ட.

பே: நான் ஒரு தடவை இப்படித்தான் சந்தனத்தை பூசிக்கிட்டு எங்க வீட்ல இருந்து வெளிய வந்தப்ப எங்க பக்கத்து வீட்டு நாயிக்கு அடையாளம் தெரியாம துரத்துச்சு. அப்பத்தான் சந்தனம் பூசனா யாராலயும் கண்டு பிடிக்க முடியாதுனு தெரிஞ்சிக்கிட்டேன்…

க: டேய் நாயே!!! அது அடையாளம் தெரியாம தொரத்தியிருக்காதுடா.
உன்னைய எல்லாம் விட்டு வைக்கக்கூடாதுனு தான் நாயே அந்த நாய் உன்னைய தொரத்தியிருக்கும்.
சரி உன் படத்து வில்லனுங்க பேரு எல்லாம் கொஞ்சம் நம்ம மக்களுக்கு சொல்லு

பே: பட்டாசு பாலு, பான்பராக் ரவி, சனியன் சகடை, மூளி முங்காயி, பல்லாக்கு பாண்டி, சிலந்தி கருப்பு, பெருச்சாலி கருப்பு

க: அடேய் அர டவுசர் மண்டையா! எங்க இருந்துடா இந்த மாதிரி பேரெல்லாம் பிடிக்கற.

பே: சின்ன வயசுல எல்லாம் என்னைய அப்படித்தான் பசங்க ஓட்டுவாங்க. அதான் அதையே படத்துல யூஸ் பண்ணிக்கிட்டேன்…

க: பாரு வெக்கமே இல்லாம இத வெளிய சொல்லிக்கிட்டு இருக்கு!
சரி நீ பாட்டு எழுதி மக்கள கொடுமை பண்றியாமே! ஏன் அப்படி?

பே: யார் சொன்னா நான் கொடுமை படுத்தறேனு. நான் எழுதன கட்டு கட்டு பாட்டும், அப்பன் பண்ணு தப்புலையும் அந்த வருஷத்துலயே பெரிய ஹிட்.

க: எங்க அந்த அப்பன் பண்ண தப்புல பாட்ட எடுத்துவிடு கேப்போம்

பே: அப்பன் பண்ண தப்புல
ஆத்த பேத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
வெளஞ்சி சமஞ்சிடுச்சிடா

க:ஓ! நோ!!!
நிறுத்து மேன்!
இது ஒரு பாட்டு இத எழுதனதுல உனக்கு பெருமை வேற?
மவனே நீ மட்டும் இனிமே பாட்டு எழுதனனு கேள்வி பட்டேன்.. உனக்கு சங்குதாண்டி. என்ன புரியுதா?

பே: இந்த பாட்டையும் ஒரு தடவை கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்களேன்…

க: சரி அது என்ன பாட்டு.. பாடி தொலை கேக்கறேன்

பே: கட்டு கட்டு கீரை கட்டு ( கவுண்டர் பாதி பாட்டு வரை கேட்கிறார்)

க: டேய் நிறுத்து! என்னடா கீர கட்டு, ஜப்பான் ஜாக்கெட்டு, ஒடஞ்ச பக்கெட்டுனு பாட்டு எழுதிட்டு இருக்க?
மவனே! ஐ ம் ஸ்ட்ரிக்ட்லி டெல்லிங்…இனிமே யூ நோ பாட்டெழுதிஃபயிங். புரியுதா?

பே: சரிங்க

க: அது சரி… நீ ஏதோ படத்துல எல்லாம் வரியாம். என்ன ராசா விளையாட்டு அது?

பே: அது சும்மாச்சுக்கும்…

க: சும்மாச்சுக்குங்கூட நீ படத்துல நடிக்கக்கூடாது புரியுதா? அஜித் பாவம் படம் எதுவும் ஹிட்டாகலனு உன் படத்துல நடிச்சா அதுல நீயே ஹீரோவாயிட்ட.
மவனே இனிமே இந்த படத்துல பாதில நீ யாரானு எவனாது கேட்டதுக்கப்பறம் பேர் போடறது, அப்பறம் பாட்ஷா மியூசிக்ல வரது இந்த மாதிரி ஏதாவது கேள்விப்பட்டேன்… உன் படத்துல பான்பராக் ரவிய வாயுல கொசு மருந்து அடிச்சி கொன்ன மாதிரி உன்னைய நாங்க கொல்ற நிலைமை வந்துடும் புரிஞ்சிதா?

பே: சரிங்கண்ணே! நான் கிளம்பளாமா?

க: உன்னைய அவ்வளவு சீக்கிரத்துல வீட்டுடுவோமா? நீ என்ன லேசுப்பட்ட ஆளா?

பே: நான் ஏதாவது தெரியாம பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்களேன்.

க: சரி! கடைசியா இந்த கேள்விக்கு மட்டும் பதில சொல்லிட்டு ஓடிப்போ நாயே!

பே: கேளுங்க

க: ஏன்டா Gaptain படத்த ஏற்கனவே அவனவன் நாறடிக்கிறானுங்க. இதுல நீ என்னனா அவர் இடப்புல அருணாக்கயிருல சாமிக்கு படைக்கிற அந்த தட்டை கட்டிவிட்டு துப்பாக்கியால சுட்டா புல்லட் அப்படியே திரும்பி வில்லன அட்டாக் பண்ணும்னு காமெடி பண்ணியிருக்க. அதை நம்பி நம்ம போலிசுக்கெல்லாம் அவர் முதலமைச்சர் ஆன உடனே அரணாக்கயிரும் படையல் தட்டும் கொடுத்தா என்னடா நடக்கும்? எதுக்கு அப்படி பண்ண? நீ வாசிம் கான் ஆளா?

பே: ஐயய்யோ தெரியாம பண்ணிட்டேங்க. இனிமே நான் கோடம்பாக்கம் பக்கமே தலைய வெச்சி கூட படுக்க மாட்டேன். என்னைய விட்டுடுங்க…

(பேரரசு அப்படியே ஜம்ப் செய்து ஓடுகிறார்)

க: மக்களே! ஏதோ என்னால முடிஞ்ச ஒரு நல்ல காரியத்தை பண்ணிட்டேன். இனிமே இந்த மாதிரி டைரக்டருங்களை எல்லாம் பெரிய ஆளாக்கி நம்ம மக்கள் ரசனைய கேவலம்னு நினைக்கிற மாதிரி பண்ணிடாதீங்க.

நெல்லிக்காய் – 11

தீபாவிடம் கோபமாக பேசியதால் கொஞ்சம் வருத்தமும், கார்த்திக்கிற்கு ராஜியால் ஏற்பட்ட காயத்தால் கோபமும் கொண்ட ஒரு மன நிலையிலிருந்தான் அருண்.

ஒரு மணி நேரத்திற்கு பின்பு தீபாவிற்கு போன் செய்தான்.

“ஹலோ. சொல்லு எப்ப வர?”

“ஏன் கேக்கற?”

“கேட்டா ஒழுங்கா பதில் சொல்லு”

“இவர் பெரிய இவரு. கேட்டா நாங்க உடனே சொல்லிடனும். என்ன தான் ஆட்டோ பிடிச்சி வர சொல்லிட்ட இல்லை. அப்பறம் நான் எப்ப வந்தா உனக்கு என்ன?”

“இங்க பாரு மனுசன டென்ஷனாக்காத. இப்ப நீ சொல்லலனா நான் கட் பண்றேன்”

“ஏய்! கட் பண்ணிடாத இரு. நான் காலைல ஒரு 5:30 மணிக்கா வருவேன். நீ எழுந்திரிச்சிடுவியா? உனக்கு கஷ்டமா இருந்தா நான் ஆட்டோலயே வந்துக்கறேன். அப்பறமா நாம மீட் பண்ணலாம்”

“அதெல்லாம் எழுந்திரிச்சிடுவேன். சரி இது என்ன ஒரு வாரம் முன்னாடியே வர?”

“வீட்ல பயங்கர போர். அம்மாவும் காலைல ஸ்கூலுக்கு போயிடுவாங்க. வீட்ல தனியா இருக்க பிடிக்கலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் அப்பா இருந்தாரு. இப்ப தனியா இருக்கவே கஷ்டமா இருக்கு. அதான் இங்க இருக்குற டாக்டரை போய் பார்த்தேன். அவரு ப்ராப்ளம் இல்லை. நீங்க கிளம்பலாம்னு சொன்னாரு. அதான் உடனே புறப்பட்டு வரேன்”

“சரி. நாளைக்கு காலைல மீட் பண்ணலாம்”

“ஓகே. பை”

போனை அணைத்தான்.

சரியாக காலை 5:30 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்தான். அவள் பஸ் ஒரு பதினைந்து நிமிடம் கழித்தே வந்தது. அவனை பார்த்தவுடனே மிகவும் உற்சாகமாக அவனை நோக்கி நடந்து வந்தாள்.

“வந்து ரொம்ப நேரமாச்சா?”

“இல்லை. இப்பதான். உன் செல்லுக்கு கூப்பிட்டேன். ரிங் போயிட்டே இருந்துச்சு”

“ஓ! மறந்தே போயிட்டேன். ராத்திரி சைலண்ட் மோட்ல வெச்சிருந்தேன்”

“சரி. போகலாமா?”

“ஒரு காபி குடிச்சிட்டு போகலாமா?”

“சரி வா”

இருவரும் அருகிலிருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர்.பெரும்பாலும் அனைவரும் அங்கே காபியே குடித்து கொண்டிருந்தனர்.இருவரும் காபி ஆர்டர் செய்து 2 நிமிடத்தில் ஆவி பறக்க அவர்கள் முன் இருந்தது.

“அருண், இந்த நேரத்தில நான் உன்னை வர சொன்னனே! உனக்கு வித்யாசமா தெரியலையா?”

“ஆமாம் வித்யாசமாத்தான் தெரியுது. அதனால தான் வந்தேன்”

“எனக்கு எப்படி சொல்றதுனே தெரியல” அருண் அவளை வித்யாசமாக பார்த்தான்

“எங்கம்மா, நீயும் நானும் லவ் பண்றோமானு என்கிட்ட கேட்டாங்க?”

“நீ என்ன சொன்ன?”

“நான் அப்படியெல்லாம் எதுவும் இல்லைனு சொன்னேன்”

“அத சொல்லத்தான் என்னைய இங்க வர சொன்னியா?”

“இல்லை. நீங்க ரெண்டு பேரும் விரும்பினா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்லிட்டாங்க. எங்க அம்மாவுக்கு உன்னை எப்படி பிடிச்சுதுனே தெரியல”

“ஏன்னா உங்க அம்மா நல்லவங்க அவுங்களுக்கு என்னை பிடிச்சியிருக்கு”

“அப்ப என்னை கெட்டவனு சொல்றியா?”

“அப்ப உனக்கு என்னைய பிடிக்கலையா?” அருண் இதை கேட்டதும் தீபாவால் பதில் சொல்லமுடியவில்லை. தயங்கியவாறே மெதுவாக கேட்டாள்

“முதல்ல, உனக்கு என்னை பிடிச்சிருக்கா?”

“பிடிச்சிருக்கு. ஆனா உனக்கு தான் என்னை பிடிக்கலையே”

“யார் சொன்னா?”

“நீ தான் உங்க அம்மாகிட்ட சொன்னியே”

“ஆமாம் அவுங்க கேக்கும் போது எதுக்கு கேட்டாங்கனு தெரியல. உன்னை கேக்காம ஒத்துக்கவும் மனசில்லை. அப்பறம் நீ உங்க வீட்ல பேசி முதல்ல சம்மதம் வாங்கணும். அதனால நான் எதுவும் எங்க அம்மாகிட்ட சொல்லல”

“அடிப்பாவி. அதுக்குள்ள இவ்வளவு விஷயமிருக்கா? நான் எங்க வீட்ல கேட்டு சம்மதம் வாங்கினாத்தான் லவ் பண்ணவே ஒத்துக்குவியா? இது அநியாயமா இல்லை?”

“இங்க பாரு. கடைசியா உங்க வீட்ல ஒத்துகலனா உங்க அப்பா, அம்மாவை விட்டு நீ வரணும். அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே. நான் உன் காதலை ஏத்துக்கலைனும், நீ என்னை காதலிக்கவே இல்லைனு நானும் நினைச்சிட்டு இருந்துக்கலாம்”

“பெரிய வார்த்தையெல்லாம் பேசற. அப்பறம் உனக்கு நிஜமாலுமே என்னை பிடிச்சிருக்கா?”

“எத்தனை தடவை இதையே கேப்ப?”

“எத்தனை தடவை கேட்டாலும் சொல்லனும். புரியுதா? இப்பவே இப்படி பண்ணா நாளைக்கு கல்யாணத்துக்கப்பறம் நீ என்னை மதிக்கவே மாட்ட போலிருக்கே”

“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். இப்ப முதல்ல உங்க வீட்ல பேசி பர்மிஷன் வாங்கு. வா கிளம்பலாம். எல்லாம் நம்மையே ஒரு மாதிரி பாக்கறாங்க”

“சரி வா”

இருவரும் கிளம்பினர். வண்டியில் செல்லும் போது ராஜி வீட்டில் நடந்ததை சொல்லி கொண்டே வந்தான்…

சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு…

“என்ன கணேசன் பையனுக்கு இவ்வளவு சீக்கிரம் நிச்சயம் வைக்கறீங்க?”

“என்னங்க பண்றது. லவ் பண்ணி தொலைச்சிட்டான். கட்டிக்கிட்டா இந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்குவனு சொல்றான். சரி இந்த “அலைபாயுதே” படத்த மாதிரி ஓடி போயி கட்டிக்காம நம்ம கால்ல விழுந்து கெஞ்சிட்டிருக்கனேனு ஒத்துக்கிட்டேன். பொண்ணும் நல்ல குடும்பத்து பொண்ணுதான்”

“நம்ம சாதி மாதிரி தெரியலையே”

“ஆமாம் நம்ம சாதி இல்லைதான். என்னங்க செய்ய? நாம கடன்ல இருக்கும் போது எந்த சாதிக்காரன் நம்ம வீட்டுக்கு வந்தானு கேக்கறான். அவன் கேட்டதும் நியாயமாத்தான் இருக்கு. அவன சுத்தி மலை மாதிரி அவன் ஃபிரெண்ட்ஸ் இருக்காங்களாம். இப்பவெல்லாம் சொந்தக்காரவங்களைவிட நண்பர்கள் தான் முக்கியமா போயிடறாங்க”

“என்ன இருந்தாலும் சொந்த பந்தம் மாதிரி வருங்களா?”

“சரிவிடுங்க. எல்லாத்தையும்விட நமக்கு அவன் தானே முக்கியம். அந்த பொண்ணும் நாங்க ஒத்துக்காம கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்லிடுச்சி.
இவ்ளோ நல்ல பசங்கள எதுக்கு பிரிச்சிக்கிட்டு? சந்தோஷமா இருக்கட்டுமே. நாளைக்கு நமக்கு கடைசி காலத்துல கஞ்சி ஊத்த போறது அந்த பொண்ணுதானே. சாதி சாதினு பார்த்து பண்ணி வெச்சி கடைசில நம்மல வீட்டுவிட்டு துரத்தற பொண்ணா வந்துட்டா என்ன பண்ண?”

“அதுவும் சரிதான்”

………

“சரி இப்பவாவது சொல்லு” அருண் கெஞ்சி கொண்டிருந்தான்.

“என்ன?”

“ஐ லவ் யூனு”

“அதெல்லாம் முடியாது. கல்யாணத்துக்கு அப்பறம் தான்”

“அடிப்பாவி. நிச்சயம்தான் ஆயிடுச்சே”

“சரி நீ கண்ண மூடிக்கோ நான் சொல்றேன்”

சரி நீங்க எல்லாம் காதை மூடிக்கோங்க… தீபா அருண்கிட்ட “ஐ லவ் யூ” சொல்றத யாரும் ஒட்டு கேக்காதீங்கோ…

(தொடரும்…)

பின்குறிப்பு:
மக்களின் விருப்பத்திற்கிணங்க இன்னும் கொஞ்சம் ஜாலியான வசனங்களுடன் அடுத்த பாகத்தில் முடிவடையும்…

அடுத்த பகுதி

விகடனும் நானும்!!!

நான் கல்லூரியில் நான்காமாண்டு படித்து கொண்டிருந்த பொழுது விகடன் பவள விழா கொண்டாடி கொண்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கென்று ஒரு போட்டியும் அறிவித்திருந்தனர். மாணவர்கள் சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏதாவது கட்டுரை எழுத வேண்டும் என்பதே அந்த போட்டி.

பொதுவாக போட்டிகளில் நான் பங்கு பெற மாட்டேன்.ஒரே காரணம் சோம்பேறி தனம். இதில் மக்களுக்கு உதவும் வகையில் ஏதாவது சொல்ல வாய்ப்பிருக்கிறது என்று கருதியதால் கலந்து கொண்டேன். ஆனால் விகடனாருக்கு ஏனோ பிடிக்கவில்லை போலும்.

இதோ நான் அனுப்பிய படைப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் பொழுது சுயநலத்தின் காரணமாக பிறருக்கு உதவவில்லையென்றாலும் இறந்த பிறகாவது உதவலாம். இறந்த பிறகு உதவுவதா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம். இறந்த பிறகு நமக்கு நம் கண்ணோ மற்ற எந்த உறுப்புகளோ உதவ போவதில்லை. வீணாக அதை புதைத்தோ எரித்தோ என்ன பயன்?

ஒவ்வொரு வீட்டிலும் யார் இறந்தாலும் அடுத்த செய்ய வேண்டிய சடங்கை பற்றியே சிந்திப்பர். மேலும் அந்த துக்கத்திலிருந்து விடுபடவே பல நாட்களாகும். இந்த நிலையில் யாரும் கண் தானத்தை பற்றியோ, உடல் உறுப்புகள் தானத்தை பற்றியோ சிந்திக்க மாட்டார்கள். இதனால் யாருக்கும் உதவ முடியாமலே விலைமதிப்பில்லாத உடலுறுப்புக்கள் மண்ணுக்கோ, நெருப்பிற்கோ உணவாகின்றன.

மற்றவருக்கு உதவ கூடாது என்ற எண்ணத்தில் யாரும் இதை செய்வதில்லை. இது அறியாமையினாலேதான் பெரும்பாலும் நடக்கிறது. இதற்கு நாம் செய்ய வேண்டியது மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் மற்றும் இதை ஒழுங்கு படுத்துவதுமே!

முதலில் ,எந்தந்த உறுப்புகளை தானமாக அளிக்க முடியும் என்று அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நான் கேள்விப்பட்ட வரையில் கண் தானமாக அளிக்க முடியும் . கமல் தன் உடலுறுப்புகள் அனைத்தையும் தான் இறந்த பிறகு தானம் செய்வதாக அறிவித்ததாலே மற்ற பாகங்களையும் தானமாக அளிக்க முடியும் என்று தோன்றுகிறது.

இதை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் எந்தெந்த உறுப்புகளை தானமாக அளிக்க முடியும் என்ற பட்டியல் வெளியே எழுதியிருக்க வேண்டும். மேலும் அனைத்து திரையரங்குகளிலும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இதை பற்றிய அறிவிப்பு வெளியாக வேண்டும்.

அடுத்து ஒவ்வோரு வார்ட்டிலும் வார்ட் மெம்பர் என்று ஒருவர் இருப்பார். அவரிடம் ஒவ்வொரு வீட்டிலும் இன்னன்னார் இந்த இந்த உறுப்பை தானம் செய்வதாக ஒரு பட்டியல் இருக்க வேண்டும். தானமளிக்க விரும்பும் நபரின் கையொப்பம் வாங்கி ஒரு பிரதி அரசு மருத்துவமனையிலும் மற்றொன்று வார்ட் மெம்பரிடமும் இருக்க வேண்டும்.

எப்படியும் ஒரு வீட்டில் யாராவது மரணமடைந்தால் அந்த வார்ட் மெம்பருக்கு எளிதில் தெரிந்துவிடும். இல்லையென்றால் இந்த திட்டத்தின் மூலம் அந்த தெருவில் வசிப்போர் அவரிடம் தெரிவிக்க முடியும். அவரிடமிருக்கும் பட்டியலை சரி பார்த்து அதற்கு தகுந்தவாறு அவர் மருத்துவமனையை தொடர்பு கொண்டு எளிதில் இறந்தவரின் ஆசையை நிறைவேற்ற முடியும்.

இதற்கு ஆகும் செலவும் அதிகமில்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பட்டியல் மற்றும் அவர்கள் இறந்தால் ஒரு லோக்கல் கால். ஆனால் இதன் பலன் என்னவென்று நான் சொல்லி தெரிய தேவையில்லை.

ஒவ்வொரு தேர்தல் முடியும் போதும் பட்டியல் புதிய வார்ட் மெம்பருக்கு கைமாறும். அவ்வளவே. அதை போல இடமாறுபவர்கள் புதிதாக செல்லுமிடத்தில் பதிந்து கொள்ளலாம்.இயற்கை நமக்களித்த வரத்தை ஏன் நாம் சரிவர பயன்படுத்தி கொள்ள கூடாது?

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – சிம்பு

CNN-IBN Devil’s advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் கேட்டால் முதல்வனில் “Q” TVக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படுமென்பதால் சினிமா நடிகர்களை கேள்விகள் கேட்டு ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

தமிழில் கதாநாயகர்களை திக்குமுக்காட வைப்பதில் சிறந்தவர் யார் என்று யோசித்ததில் அனைவரின் மனதிலும் உதித்தது கவுண்டரே! அவர் பல படங்களில் பிஸியாக இருந்தாலும் மக்களுக்காக இந்த நிகழ்ச்சியை நடத்த ஒத்துக்கொள்கிறார். இனி…

முதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிம்பு…

க: வாங்க சிம்பு. உங்க வல்லவன் படம் படுதோல்வி அடைஞ்சதுக்கு என்ன காரணம்?

சி: படுதோல்வியா? யார் சொன்னது? படம் வசூல்ல சந்திரமுகிய முந்திடுச்சுனு எனக்கு ரிப்போர்ட் வந்துட்டு இருக்கு.

க: எங்க? அந்த ரிப்போர்ட்ட இங்க காட்டு பார்ப்போம்.

சி: அதெல்லாம் இப்ப இங்க இல்லை. படத்த ஓட விடாமா தடுக்கறதுக்கு ஒரு சிலர் முயற்சி செஞ்சாலும் படம் பயங்கரமா ஓடுதுனு அகில இந்திய லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு ரசிகர் மன்றத்துல இருந்து எனக்கு தகவல் வந்துருக்கு.

க: எங்க தியேட்டர்ல இருந்து ஓட விடாமா தடுக்கவா? அதென்னடா லிட்டில் சூப்பர் ஸ்டார்? யாரு உனக்கு அந்த பேர கொடுத்தது. (கவுண்டர் அவர் பாணிக்கு செல்கிறார்)

சி: தமிழக மக்கள்… (சொல்லிவிட்டு ஸ்டைலாக லுக் விடுகிறார்)

க: டேய் நானே டக்கால்டி! நீ எனக்கே டகால்டி கொடுக்கறயா? உங்க அப்பா அந்த தாடிக்காரனே படத்துல டைட்டில் கார்ட்ல போட்டா நீ லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆயிடுவீயா? (ஹை பிட்ச்சில் கேட்கிறார்). அப்ப உன் தம்பிய லிட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டாராடா???

சி: இந்த சிம்புவ பத்தி யாருக்கும் இப்ப புரியாது… போக போகத்தான் இவன் திறமை எல்லாருக்கும் புரியும்.

க: சரி அதல்லாம் இருக்கட்டும். ஏன் அந்த பொண்ணு நயந்தாரா உதட்ட புடிச்சி கடிச்சு வெச்ச?

சி: அது படத்துக்கு தேவைப்பட்டுச்சு. படம் பார்த்தா உங்களுக்கே புரியும்.

க: டேய்! உன்னய கேள்வி கேக்கனும்னு அந்த கொடுமைய வேற பார்த்தனேடா… (அழுகிறார்)
அது ஒரு படம். அதுக்கு இந்த காட்சி ரொம்ப முக்கியம்? ஏன்டா சம்பந்தமே இல்லாம நக்மாக்கூட டூயட் ஆடன எனக்கே நீ டக்கால்ட்டி கொடுக்கப்பாக்கற.

சி: அப்ப உங்களுக்கே அந்த காட்சியோட முக்கியத்துவம் புரிஞ்சிருக்கும்.

க: டேய் சிம்பு மண்டையா, ஏன்டா இந்த ஒன்றையனா படத்த எடுக்க உனக்கு ரெண்டு வருஷமாச்சு?

சி: அது அந்த படத்த பார்த்தா உங்களுக்கே புரியும்…

க: வீனா என்னய டென்ஷனாக்காத. ஒன்னுமே இல்லாத ஒன்றையனா படத்த எடுத்து வெச்சிட்டு எத கேட்டாலும் படத்த பாருங்க புரியும்… படத்த பாருங்க புரியும் சொல்லிக்கிட்டே போகற. அதுல புரிஞ்சிக்க அப்படி என்னடா இருக்கு?

சி: நீங்க யார் சொல்லி இந்த மாதிரி கேள்வியல்லாம் கேக்கறீங்கனு எனக்கு தெரியும். “அவன் அம்பானி பொண்ணை கட்டிக்கிட்டு பெரிய ஆளாகணும்னு பாக்கறான். ஆனா நான் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்”

க: உன்னைய எவன்டா ஆக வேணாம்னு சொன்னா?
ஓ! நீ யாரை மனசுல வெச்சி சொல்றனு ஐ அம் கெட்டிங் யா.
ஏன்டா அவனே ஒரு தீஞ்ச மண்டையன். அவன் நடிக்கற படமே ஃப்ளாப் மேல ஃப்ளாப் ஆகுது. இதுல அவன் உனக்கு போட்டி. உங்க அக்கப்போரு தாங்கமுடியலைடா.

சி: போட்டில யார் முதல்ல போறாங்கன்றது முக்கியமில்லை. யார் கடைசியா முன்னாடி போகறாங்கன்றதுதான் முக்கியம்.

க: டேய்! டேய்!!!
இப்பத்தான உனக்கு சொன்னேன். இதுக்கு மேல இங்க பஞ்ச் டயலாக் பேசன உன் காத புடிச்சி கடிச்சி வெச்சிடுவேன். ஆமா…
அதுசரி… அது என்னடா மன்மதன் படத்துல கடைசியா Film By Simbuனு போட்ட?

சி: ஏன்னா அது என்னோட படம். நான் தான் அதை உண்மையாலுமே டைரக்ட் பண்ணேன்…
20 வயசுல டைரக்ட் பண்ற திறமை இங்க யாருக்கு இருக்கு?

க: அப்பறம் எதுக்குடா எடுத்தவுடனே வேற ஒருத்தன் பேற போட்ட???
அவர் என்ன உங்க பினாமியா?
படம் ஃபிளாப் ஆனா அடுத்தவன் பேற போட வேண்டியது ஹிட்டான உங்க பேர போட வேண்டியது. எதுக்குடா இப்படி ஊர ஏமாத்தி திரியறீங்க?

சி: !@#$%^&

க: அது சரி! ஏன்டா எப்ப பார்த்தாலும் கைய விசுக்கு விசுக்குனு சுத்தி எஃபக்ட்ட கொடுக்கற?

சி: ஏன்னா, நான் லிட்டில் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டார் மாதிரி இந்த மாதிரி ஸ்டைல் பண்ணனும்.

க: டேய் ஆப்ப சட்டி தலையா, அடத்தவங்க ஸ்டைல காப்பி பண்ணாதீங்கடா. உங்களுக்குனு ஒரு ஸ்டைல உருவாக்குங்க. அப்ப தான் உருப்புடுவீங்க.சரி இதெல்லாம் உனக்கு யார்டா சொல்லி கொடுத்தா.

சி: ஆக்ஷன் தான் இங்க. டைரக்ஷன் அங்க. (சொல்லிவிட்டு ஸ்டைலாக திரும்பி பார்க்க. செட்டிற்குள் ஒரு உருவம் வருகிறது)

க: ஐய்யோ கரடி! டேய் சிம்பு மண்டையா நீ பண்ண அலும்பல நான் கேட்டேனு என்னைய கரடிய விட்டு கொல்ல பாக்கறியா?
டேய் யாராவது அத புடிச்சி கட்டுங்கடா…

சி: சார்! கத்தாதீங்க. அது எங்க அப்பா.

TR:
த்ரீ ரோசஸச முந்திடுச்சிடா டாப் ஸ்டாரு
அந்த தனுச முந்துவாண்டா என் லிட்டில் சூப்பர் ஸ்டாரு

க:இவன் வேற வந்துட்டானா?. டேய் ரெண்டு பேரும் இப்படியே ஓடி போயிடுங்க இல்லைனா நானே உங்க மூஞ்சில ஆசிட் ஊத்திடுவேன்.
மக்களே நல்லா பாத்துக்கோங்க இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகமாட்டேன். இவனுங்க பண்ற அளும்புக்கெல்லாம் நீங்களே நல்லா கவனிச்சிக்கோங்க…

இந்த வாரம் முழுதும் இந்த தொடர் வரும்… தினம் ஒரு பிரபலங்களுடன்…

இந்தியா ஒளிர்கிறதா???

எங்க ஊர் கள்ளக்குறிச்சிங்க. இது தென்னாற்காடு மாவட்டத்துல (தற்போது விழுப்புரம்) இருக்கற ஒரு சின்ன ஊர். நகரமா கிராமமானு சொல்ல முடியாது. எங்க ஊர்ல தொழில்னு பார்த்தா ரைஸ் மில் அதிகமா இருக்கும். கொஞ்சம் பக்கத்துலயே பெரிய சுகர் பேக்ட்ரி இருக்குது.

அதனால சுத்தி இருக்குற கிராமங்கள்ல விவசாயம்தான் அதிகமா இருக்கும். எனக்கு விவசாயத்தை பத்தி அதிகமா எதுவும் தெரியாது. நான் பஸ்ல போகும் போது அதிகமா நெல்லு, கரும்பு தான் பார்ப்பேன்.

நான் பெங்களூர் போனதுக்கப்பறம் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஊருக்கு போவேன். போகும் போது பஸ் மாறி மாறி போவேன். எப்படினா சேலத்துக்கு வண்டி இருந்தாலும் ஏறாம ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் இப்படித்தான் மாறி மாறி போவேன். அப்படி போகும் போது ரொம்ப நேரம் பிரயாணம் செய்யற மாதிரியும் இருக்காது. நிறைய மக்களை பார்க்கலாம். அப்பறம் முக்கியமா நிறைய படம் பார்க்கலாம்.

வரும் போது எங்க ஊர்ல இருந்து பெங்களூர் வண்டீல ரிசர்வ் பண்ணி வந்துடுவேன். பாதி பேருக்கு என்னடா கள்ளக்குறிச்சில இருந்து பெங்களூர்க்கு வண்டி இருக்கானே சந்தேகம் வரும். இராத்திரி தமிழ் நாடு அரசு பேருந்து இரண்டு மற்றும் பெங்களூர் KSRTC வண்டி ஒண்ணு இருக்கு. அதுவும் பஸ்ல கூட்டத்தை பார்த்தீங்கனா நம்ம ராஜ்கிரணோட மாணிக்கம் பாக்கற மாதிரி அத்தனை பேர் இருப்பாங்க. எப்படியும் ஒரு பஸ்ல குறைஞ்சது 100 பேருக்கு மேல இருப்பாங்க. நான் எலக்ட்ரானிக் சிட்டில இறங்கனும்னா ஓசூரை தாண்டிய உடனே எழுந்து வந்தால்தான் இறங்க முடியும். அதுவும் வழியெல்லாம் கால் வைக்க கூட இடமில்லாமல் எல்லாரும் உக்கார்ந்திருப்பாங்க. பாதி பேர் கை குழந்தை வேற வெச்சிருப்பாங்க. நம்மதான் பார்த்து பக்குவமா போகணும்.

என்னடா கிராமம் மாதிரி இருக்கே இங்க இருந்து இத்தனை சாப்ட்வேர் இஞ்சினியர்களானு யோசிக்கறீங்களா? இல்லைங்க. அந்த வண்டீல வரதுல 98% பேர் பெங்களூர்ல கொளுத்து வேலை (பில்டிங் கட்டும் பணி) செய்யறதுக்குத்தான் வருவாங்க. இத்தனை பேர் அந்த பக்கத்துல இருந்து கொளுத்து வேலை செய்ய போறாங்களானு ஆச்சரியமா இருக்கா? போன வருஷத்துக்கு முன்னாடி ஒரு 4 – 5 வருஷமா மழையே இல்லைங்க. அதனால விவசாயம் அதிகமா பாதிச்சிருச்சாம். பொழைக்க வழி தெரியாம கொஞ்ச கொஞ்சமா எல்லாம் கொளுத்து வேலை செய்ய ஆரம்பிச்சாங்களாம். இதே வேலை எங்க ஊர்ல செஞ்சா ஒரு நாள் கூலி 60 ரூபாயம். தினமும் வேலை இருக்குமானும் சொல்ல முடியாதாம்.

பெங்களூர், சென்னை மாதிரி பெரு நகரங்களில் தற்போது ஏற்பட்டுள்ள தொழிற் வளர்ச்சியால் அங்கே இவர்களின் தேவை அதிகமாக இருப்பதால் அங்கே தினமும் வேலை கிடைப்பதாகவும் சம்பளமும் 120 – 150 வரை கிடைக்கிறதாம். ஒரு குடும்பத்தில் 6 பேர் இருந்தால் (நாம் இருவர் நமக்கு இருவர் எல்லாம் அவர்களிடையே கிடையாது) அதில் 4 பேர் வைலை செய்தால் ஒரு நாளைக்கு 300-400 ரூபாய் அதிகமாக கிடைக்கிறதாம். அதில் செலவு போக எப்படி பார்த்தாலும் 200 ரூபாய் கையில் நிற்குமாம். இதனால் அவர்களும் ஓரளவு திருப்தியாக இருப்பதாகவே சொல்கிறார்கள். மழை வந்த பிறகும் இதில் பெரும்பாலானோர் ஓரளவு நல்ல வருமானம் கிடைப்பதால் அதே தொழிலையே செய்கின்றனர். யாரும் விவசாயத்திற்கும் திரும்புவதில்லை போலும்.

இங்கே எனக்கு ஏற்படும் சந்தேகம் இதுதான். இங்கே நடப்பது முழுக்க முழுக்க சரியா?.
வருமானம் அதிகம் கிடைக்குமிடத்தில் வேலை செய்வது தான் புத்திசாலித்தனம். இருப்பினும் என் மனதில் தோன்றிய சில கேள்விகள்
1. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறதா இல்லையா? இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.
2. நம்மிடையே இன்று ஏற்பட்டிருக்கும் ஒரு சமமற்ற வளர்ச்சியை (Unbalanced Growth) எப்படி சமாளிக்க போகிறோம்?
3. இதை சமாளிக்க என்னை போன்ற படித்த இளைஞர்களிடம் சமுதாயம் என்ன எதிர்பார்க்கிறது?
4. முன்பை விட ஓரளவு அதிக வருமானம் கிடைப்பதால் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்கிறதா?
5. உண்மையாகவே இந்தியா ஒளிர்கிறதா?

நானா? நிஜமாவா???

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நம்ம புராணம் ஏற்கனவே நிறைய தடவை சொல்லியாச்சு. இருந்தாலும் புதுசா படிக்கறவங்களுக்கு உற்சாகமா இருக்கட்டுமேனு மறுபடியும் இந்த நட்சத்திர வாரத்தை அதிலே ஆரம்பிக்கிறேன்.

வலைப்பூவில் எழுதுவதற்கு முன்னால் பெரிதாக நான் எதையும் எழுதியது கிடையாது. ஒரு முறை விகடனுக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன்.
அது வெளியாகவில்லை என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. அதற்கு பிறகு எதையும் எழுத முயற்சி செய்யவில்லை. பிறகு நண்பர்களின் கூட்டத்தையும், பெற்றோர்களையும் விட்டு இங்கு வந்த பிறகு அந்த தனிமையின் விரக்தியை போக்கி கொள்ளவே வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்தேன்.

என்ன எழுதுவதென்றே தெரியாமல் வலைப்பூ ஆரம்பித்துவிட்டேன். எல்லோரும் எழுதுகிறார்களே என்ற ஒரு ஆசைதான் காரணம். எனக்கு தெரிந்த
வகையில் நான் அதிகம் படிக்கும் வலைப்பூக்களில் அவர்கள் அன்றாடம் பார்க்கும் நிகழ்ச்சிகள், அவர்களை அதிகம் பாதித்த நிகழ்ச்சிகளே அருமையாக எழுதப்பட்டிருந்தது. அதுவே எனக்கு நம்மாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

ஆரம்பித்த புதிதில் என்ன எழுதுவெதென்றே தெரியாமல் ஆரம்பித்தேன். எனக்கு அதிகம் தெரிந்தது சினிமா மட்டுமே. அதிலும் நுணக்கமோ, தொழில் நுட்பமோ தெரியாது. பழைய படங்களையும் விரும்பி பார்ப்பேன். MGR, சிவாஜி இருவர் படத்தையும் சமமாக ரசித்து பார்ப்பேன். இப்போதும் ரஜினி, கமல் இருவர் படங்களையும் ரசித்து பார்ப்பேன். சரி அதை பற்றி எழுதலாமென்று தோன்றியது. அதில் தான் ஆரம்பித்தேன்.

தமிழ் மணத்தை ஒரு மாதத்திற்கு மேல் படித்தாலும் அதில் அரசியல் பதிவுகளை அதிகம் படிக்க விரும்பியதில்லை. பெரும்பாலும் பெரியார் பற்றிய சர்ச்சைகளே அதிகம் இருந்தது. அதனால் எழுந்த ஒரு சில சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு போட்ட பதிவே தமிழ்மணத்தில் என் முதல் பதிவு. அதில் எழுந்த பல சர்ச்சைகளினால் இனி என்ன எழுதுவதென்றே தெரியாமல் போனது.

அந்த சமயத்தில் மூன்று வருடங்களாக நான் செய்ததையும், கண்டதையும் வைத்து சாப்ட்வேர் இஞ்சினியராகலாம் வாங்க என்ற தொடர் எழுதினேன்.
அதற்கு பெரும்பாலும் பின்னூட்டங்ளே இருக்காது. வடுவூர் குமார் மற்றும் குமரனே எனக்கு உற்சாகம் அளித்தனர். நான் ஒரு சமயம் எழுதி இரண்டு நாட்களாக யாரும் எட்டி பார்க்காத நிலையில் குமரன் அவர்களிடமிருந்து வந்த பின்னூட்டமே என்னை தொடர்ந்து எழுத வைத்தது. அன்று அவர் ஊக்கப்படுத்தவில்லை என்றால் தொடர்ந்து எழுதியிருப்பேனா என்பதே நிச்சயமில்லை. துவக்கத்திலிருந்து என்னை அதிகமாக உற்சாகப்படுத்தியவர்கள்
செல்வன் மற்றும் பாபா.

தொடர் முடித்த நிலையில் என்ன எழுதுவதென்றே தெரியாமல் இருந்த போது தான் நகைச்சுவையாக எழுத ஆரம்பித்தேன். நகைச்சுவைக்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனக்கு நகைச்சுவையாக எழுத வருமென்பதும் அப்போதுதான் தெரிந்தது. வ.வா.சவில் பரிந்துரைக்கப்பட்ட போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதில் யாரையும் இன்றளவும் பார்த்தது கிடையாது. போனிலும் பேசியதில்லை. அவர்களின் ஊக்குவிப்பும் நமது நாட்டாமை ஸ்யாம் அவர்களின் பாராட்டுமே தொடர்ந்து நகைச்சுவையாக எழுத வைத்தது.

பிறகு கப்பியின் கயல்விழியில் கிழமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரனும் நானும் கும்மியடிக்கும் போது என்னையும் கதை எழுத சொல்லி அவர்கள் தூண்டிவிட்டதே நான் சிறுகதை(?) எழுத ஆரம்பிக்க காரணமாக இருந்தது. அதற்கு வலைப்பூ நண்பர்கள் கொடுத்த உற்சாகமே தொடர்ந்து கதை எழுதவும் காரணமாக இருந்தது. (படிக்க விரும்புபவர்கள் வலது பக்கமிருக்கும் சிறுகதை பகுதிகளை பார்க்கவும்)

எனக்கு வலைப்பூ எழுத ஆரம்பித்த புதிதில் நகைச்சுவை, கதை எழுத வருமா என்று சத்தியமாக தெரியாது. (இப்போழுதும் நான் எதையும் பெரிதாக
எழுதிவிடவில்லை என்பதும் உண்மையே). ஆனால் நான் எழுதுவதும் ஒரு சிலரை கவர்கிறது. வலைப்பூ எழுத ஆரம்பித்திருக்கும் நண்பர்களுக்கும், பல நாட்களாக படித்து கொண்டு மட்டுமே இருக்கும் நண்பர்களுக்கும் நான் சொல்வது இதுவே! தயங்காமல் எழுதுங்கள்! நமக்கு எது பலமென்பது நமக்கே தெரியாது. தொடர்ந்து எழுத எழுதவே நம் எழுத்தும் கூர்மையாகிறது. (எனது வலைப்பூவில் முதல் 20 பகுதிகளை படித்தால் உங்களுக்கு புரியும்.ஒரு சிலருக்கு கடைசி இருபது படித்தாலும் வித்யாசமில்லை என்பது போலவே தோன்றலாம். நானும் பழகி கொண்டு தானே இருக்கிறேன்)

வலைப்பூ (Blog) எழுத விருப்பமிருந்தால் தயங்காமல் ஆரம்பியுங்கள். உங்கள் மனதிற்கு பிடித்ததை எழுதுங்கள் (அடுத்தவரை காயப்படுத்தாமல்). உதவி தேவைப்பட்டால் தமிழ்மணத்தில் இருக்கும் பதிவர் யாரை வேண்டுமென்றாலும் அணுகவும். நிச்சயமாக சொல்கிறேன் அவர்கள் தங்களால் முடிந்த வரை உதவுவார்கள். தமிழ்மணத்தில் உள்ள அனைத்து வலைப்பதிவரிடமும் நான் கண்ட ஒற்றுமை இதுவே. சண்டை சச்சரவுகள் ஆயிரமிருந்தாலும் புதிதாக வருபவர்களுக்கு உதவ யாரும் தயங்குவதில்லை. எவ்வளவு கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருந்தாலும் உங்களுக்கு சரியான வழியை காட்டுவார்கள்.

என்னடா இவன் நம்ம பேர சொல்லலையேனு யாரும் தப்பா நினைக்காதீங்க. நான் எழுதறதுக்கு நீங்க எல்லாரும் ஒரு காரணம்னு உங்களுக்கே தெரியும். எல்லார் பேரும் போட்டா பதிவு தாங்காது.

சரி புதுசா வரவங்களுக்கு சொல்லிட்ட, எங்களுக்கு இந்த வாரம் என்ன தர போறன்னு கேக்கறவங்களுக்கு…

முடிஞ்ச வரைக்கும் உங்களை ஏமாத்த மாட்டேனு மட்டும் இப்போழுதிக்கு சொல்லி ஜுட் விட்டுக்கிறேன் 😉

நெல்லிக்காய் 10

கார்த்திக் அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் அருணிற்கு எதுவும் புரியவில்லை. கார்த்திக்கிடம் நேராக சென்றான்.

“கார்த்திக் என்னாச்சு? ஏன் அழுவற?” அருண் குரலை கேட்டதும் கார்த்திக் தலையை நிமிர்ந்து பார்த்தான்.

“சொல்லுடா ஏன் அழுவற என்னாச்சு? வீட்ல எதாவது ப்ராபளமா?”

“ப்ளீஸ் என்கிட்ட எதுவும் கேக்காத. என்னை கொஞ்ச நேரம் தனியா இருக்கு விடு. ப்ளீஸ்”

கார்த்திக் சொன்னதை கேட்டதும் அருண் வெளியே ஹாலிற்கு சென்று பழைய புத்தகம் ஒன்றை எடுத்து புரட்டி கொண்டே சன் மியூசிக் பார்க்க ஆரம்பித்தான்.

சுமார் ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு கார்த்திக் வெளியே வந்து அருண் அருகில் அமர்ந்தான்.

“ராஜி ஏதாவது சொன்னாளா?” அருண் சொல்லியதை கேட்டதும் கார்த்திக்கிற்கு ஆச்சரியமாக இருந்தது.

“ஆமாம்டா. அவ வீட்ல அவளுக்கு போன வாரமே மாப்பிளை பாத்திருக்காங்க”

“ஹும்”

“சும்மா வந்துதானே பாத்திருக்காங்கனு அவ லேசா விட்டுட்டா. அவங்க வீட்ல மூணு நாள் கழிச்சி ஓ.கேனு சொல்லிட்டாங்களாம்”

“ஹோ”

“உடனே அவ அவுங்க அம்மாக்கிட்ட எங்க விஷயத்தை சொல்லிருக்கா. அவுங்க அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டாங்க”

“ஹும்”

“அவுங்க அப்பாக்கு தெரிஞ்சி அவளை அடிச்சிருக்காரு.வீட்லயே ரெண்டு நாள் பூட்டி வெச்சிருக்காரு”

“என்னடா இந்த காலத்துலையும் இப்படியெல்லாம் நடக்குதா?”

“நம்ம தான் கம்ப்யூட்டர் படிச்சவுடனே உலகமே மாறிடுச்சினு நினைக்கிறோம். மத்தவங்க எல்லாம் அப்படியேதான் இருக்காங்க”

“அவுங்களுக்கு என்ன பிரச்சனையாம்? உனக்கு என்ன குறைச்சல்?”

“காதலிக்கறது தப்பாம். அது ஒழுக்கமில்லாதவங்கதான் செய்வாங்கனு அவுங்க அம்மா சொல்றாங்களாம்”

“என்னது? ஒழுக்கமில்லாதவங்கதான் காதலிப்பாங்களா? அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?
சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்கெட்ட செயலா? இல்லை நீங்க தான் ஏதாவது தப்பு தண்டா பண்ணீங்களா? அவுங்க அப்பா என்ன சொன்னாரு?”

“நான் அவுங்க கேஸ்ட் இல்லையாம். அவருக்கு அதே கேஸ்ட்ல லவ் பண்ணியிருந்தாலும் போனா போகுதுனு கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாராம்”

“என்னடா இது லூசுத்தனமா இருக்கு? யார்டா ஜாதிய பாத்து காதலிப்பா? நம்ம யாருக்கும் யார் என்ன கேஸ்ட்னே தெரியாது. அப்படி இருக்கும் போது என்னடா பேச்சி இது?”

“அவர் அவுங்க ஜாதி சங்கத்துல முக்கியமான ஆளாம். அவர் பொண்ணை வேற ஆளுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாதாம். ரொம்ப கண்டிப்பா சொல்றார்”

“அவருக்கு அவர் பொண்ணு சந்தோஷத்தைவிட ஜாதி தான் முக்கியமா போச்சா?”

“அப்படித்தான் சொல்றார். இந்த காதல் கத்திரிக்காயெல்லம் சின்ன வயசுல எல்லாருக்கும் வரது தான். எல்லாம் கல்யாணமான சரியா போயிடும்னு சொல்றார். என்னை பேசவேவிடலை”

“நீ அவங்க வீட்டுக்கு போறேனு ஏன் எங்கிட்ட சொல்லல. இல்லைனா நானும் வந்து பேசிருப்பேன் இல்லை”

“அவ போன் பண்ணி யாரும் வேணாம் நீ மட்டும் வானு சொன்னா. சரி என்ன பண்ணிட போறாங்கனு நானும் போனேன்”

“வேற யாராவது இருந்தாங்களா?”

“அவுங்க பெரியப்பாவாம். ஏதோ போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல இருக்காராம். ரொம்ப திமிரா உக்கார்ந்திருந்தார். என்னைய எதுவும் பேசவேவிடலை. இதுக்கு மேல நான் ஏதாவது பிரச்சனை பண்ணா என்னை ஏதாவது கேஸ்ல உள்ள தூக்கி போட்டுடுவாங்களாம்”

“என்ன அவுங்களுக்கு தான் ஆள் தெரியுமா? என் க்ளாஸ் மேட் விநோத் அவுங்க மாமா ஆளுங்ககட்சில MLAவா இருக்காரு. நீ சொல்லு நான் இப்பவே விநோத்ட பேசறேன்”

“டேய் அதெல்லாம் வேண்டாம். ராஜியே என்கிட்ட கடைசியா பேசினா, அவுங்க அப்பா, அம்மாதான் அவளுக்கு முக்கியமாம் என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்னு சொன்னா”

“அப்பறம் என்ன……. உன்னைய லவ் பண்றேன்னு சொல்லனும்”

“சரி விடுடா. எனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்னு நினைச்சிக்கறேன். என்ன எப்பவும் அவ நினைப்பாவே கொஞ்ச நாள் இருக்கும். அப்பறம் மறந்துடும்”

“என்னடா சாமியார் மாதிரி பேசற?”

“இல்லைடா நான் உண்மைய தான் பேசறேன். அவளுக்கு அந்த மாப்பிளைனு கண்டிப்பா ஃபிக்ஸ் ஆயிடுச்சி. நம்ம எதுவும் பண்ண முடியாது” சொல்லிவிட்டு ரூமிற்குள் சென்று மீண்டும் படுக்கையில் விழுந்தான்.

அருணுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சரியாக அந்த நேரம் பார்த்து அருணின் செல்போன் சிணுங்கியது… எடுத்து பார்த்தான்

Deepa Calling…

அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படியே எடுக்காமல் விட்டுவிட்டான்.
தொடர்ந்து அவள் கூப்பிடவே நான்காவது முறையாக அடிக்கும் பொழுது எடுத்தான்.

“ஏய் ஏன் இவ்வளவு நேரம் எடுக்கலை?”

“ஒண்ணுமில்லை… விஷயத்தை சொல்லு”

“நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு இப்ப உடம்புக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு இங்க டாக்டர் சொல்லிட்டாரு”

“சரி”

“நான் இன்னைக்கு நைட்டே புறப்பட்டு ஊருக்கு வரேன். நீ காலைல பஸ் ஸ்டாப் வரீயா”

“நான் என்ன உன் டிரைவரா? ஆட்டோ பிடிச்சி ஹாஸ்டலுக்கு போயி சேரு”

“இல்லை உன் கூட வந்தா தானே அடிப்படும்” சொல்லிவிட்டு சிரித்தாள் தீபா.

“நீ என்ன சொல்றனு எனக்கு புரியலை. நான் நாளைக்கு வர மாட்டேன். இப்ப போனை வைக்கிறேன்” சொல்லிவிட்டு போனை அணைத்தான்.

ஒரு நிமிடத்திற்குள் அவள் திரும்ப அழைக்க, என்ன செய்வதென்று தெரியாமல் போனை ஆஃப் செய்து வைத்தான்…

என்ன திடீர்னு புதுசா நம்மல பஸ் ஸ்டாண்டிற்கு வர சொல்றா? புரியாமல் தவித்தான் அருண்…

(தொடரும்…)

அடுத்த பகுதி

வலைப்பதிவர் சந்திப்பு – பாஸ்டன்

நண்பர்களே,
ஏற்கனவே நம்ம பாபா சொன்ன மேட்டர்தான்… வர சனிக்கிழமை நம்ம பாஸ்டன் ஏரியாவுல வலைப்பதிவர் சந்திப்பு நடக்க போகுது. வலைப்பதிவர் சந்திப்புனா வலைப்பதிபவர்கள் மட்டும் இல்லை. படிக்கறவங்களும் தாராளமா வரலாம்.

உங்களை கேள்வி எல்லாம் கேட்டு யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. சும்மா என்ன பேசறாங்கனு நம்ம கேட்டுட்டு அப்பப்ப ஏதாவது கருத்து சொல்லிட்டு வரலாம். கருத்து இல்லைனாலும் பரவால தாராளமா வாங்க. நல்ல சாப்பாடு கிடைக்கும். இதையெல்லாம் நம்பி தான் நானும் போறேன் 🙂

சரி யார் யார் வராங்கனு பார்க்கலாம்…

தேன் துளி பத்மா அரவிந்த்
நவன்’ஸ் வெப்லாக
பார்வை
மெய்யப்பன்
வேல் முருகன்
பாஸ்டன் பாலா
கண்ணபிரான ரவி சங்கர்
பாடும் நிலா பாலு சுந்தர்
வெயிலில் மழை ஜி

இடம்: பாஸ்டன்
நாள்: டிசம்பர் 16, சனிக்கிழமை
நேரம்: மதியம் 2 மணியிலிருந்து…

தொடர்புக்கு: bsubra@yahoo.com அல்லது bsubra@gmail.com

ஏற்கனவே பாபா நிறைய வாக்குறுதி கொடுத்திருக்காரு… நானும் என் பங்குக்கு ஒண்ணு கொடுக்கறேன்…

1. அடுத்து வரும் உங்கள் பதிவுக்கு நீங்கள் விரும்பும் பட்சத்தில் 10 – 100 வரை பின்னூட்டங்கள் அளிக்கப்படும்.

we will meet… will meet… meet