• Top Clicks

    • எதுவுமில்லை
  • அதிகம் பார்வையிடப்பட்டவை

  • Blog Stats

    • 34,066 hits

டான்!!!

ஹிந்தி புரியாது என்ற காரணத்தால் பல முறை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தும் பல நல்ல திரைப்படங்களை தவறவிட்டதுண்டு. ஆனால் இங்கே திரையிடப்படும் படங்கள் சப்-டைட்டிலுடன் இருப்பதால் துணிந்து சென்றேன்.

அமித்தாபின் டான் பார்த்ததில்லை என்றாலும் தலைவரின் பில்லா பார்த்திருந்ததால் கதை ஏற்கனவே தெரிந்திருந்தது.

படம் முழுதும் மலேசியாவில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக படம் படு ஸ்டைலாக இருக்கிறது. பாடல்களும் அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. ஷாருக்கின் ஸ்டையிலும் அருமை. (அமிதாப்போடு தயவு செய்து ஒப்பிட்டு பார்க்காதீர்கள்)

டானாக வரும் ஷாருக் அந்த பாத்திரத்தின் பெயரை ஓரளவு காப்பாற்றும் விதமாகவே நடித்திருக்கிறார் (கொஞ்சம் வயசான மாதிரி தெரிகிறார்). விஜயாக நடித்திருக்கும் ஷாருக் ஆள் மாறட்டத்திற்கு சுலபமாக ஒத்துக் கொள்வதைப் போல தெரிகிறது. பிறகு வழக்கம் போல் அவர் டானாக மாறி பட்டையை கிளப்புவது மசாலா பட ரசிகர்களுக்கு சாதாரண விஷயம்.

ப்ரியங்க சோப்ரா அந்த பாத்திரத்திற்கு அமர்க்களமாக பொருந்துகிறார். அவருக்கு ஒரு சில ஸ்டண்ட் காட்சிகளே வடிவமைத்திருக்கிறார்கள் என்றாலும் அந்த காட்சியில் அசர வைக்கிறார். டிசிபி டிசில்வா பாத்திரத்தில் நடித்திருக்கும் பொம்மன் இரானிக்கு பதில் அமிதாப்பை போட்டு சில மாற்றங்களை செய்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்குமென்றே தொன்றியது.

பழைய படத்திற்கு அருமையாக பாலிஷ் போட்டிருக்கிறார்கள். பழைய படத்தை ரீ-மேக் செய்யும் போது அப்படியே காப்பி அடிப்பது தவறு… காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றி இருக்க வேண்டும் என்று சொல்லலாமென காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். படத்தில் சில மாற்றங்கள் நம்மை அசர வைக்கிறது.

படத்தின் வசனங்கள் கூர்மை. அதில் முக்கியமாக “டானை பிடிப்பது கஷ்டமல்ல… இயலாத காரியம்

கண்டிப்பாக பார்க்கலாம். பக்கா மசாலா!!!

சுக்கல்லோ சந்திருடு

மக்களே!!! உங்களுக்காக மீண்டும் ஒரு தெலுகு படம்…

படம் வந்து பல நாட்களானாலும் சமீபத்தில்தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
சரி உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த பதிவு.

படத்தின் நாயகன் சித்தார்த். நாயகிகள் சதா, சார்மி, சலோனி (இந்த ஒரு காரணத்திற்காகத்தான் DVD எடுத்தோம் ;))

வெளிநாட்டில் சந்தோஷமாக வாழும் கதாநாயகன், தன் தாத்தா(ANR) வின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஆனால் தனக்கு பிடித்த பெண்ணைதான் திருமணம் செய்வேன் என்று முடிவெடுக்கிறார்.

சிறுவயதில் தன்னுடன் பழகிய பெண்களில் யாராவது ஒருவரை காதலித்து திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் நாயகன். ஆனால் அவர்களுக்கு தான் யாரென்று சொல்லாமல் அவர்களும் தன்னை விரும்பும் பட்சத்தில் அதில் ஒருவரை மணக்க திட்டமிடுகிறார். அவருக்கு துணைக்க்கு நண்பனாக சுனில் (நம்ம விவேக் மாதிரி)


முதல் நாயகி சலோனி, டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை (சானியா மிர்சா மாதிரி). அவளை நாயகன் கவரும் விதம் அருமை. சித்தார்த்ட்துடன் ஊர் சுற்றுவதற்காக முக்கியமான ஆட்டத்தில் தோற்கிறார் சலோனி. அதற்காக சித்தார்த் மிக்க மகிழ்ச்சியடைகிறார். (இந்த இடத்தில் எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு வாக்குவாதமே நடைப்பெற்றது. இந்தியாவை ரெப்ரசண்ட் செய்யும் நாயகி காதலுக்காக வேண்டுமென்றே தோற்பது தவறான ஒரு செயலென்று அவன் சொல்ல. காதலுக்கு முன் எதுவுமே பெரிதல்ல… அதுவும் போக டென்னிஸ் நாடுகளுக்கிடையே நடுக்கும் போட்டியுமல்ல என்று நான் சொல்ல… இறுதியில் இருவருமே அவரவர் எண்ணமே சரியென்று முடித்து கொண்டோம்). ஆனால் இதனால் மனமுடையும் நாயகியின் தந்தை பிரதாப் போத்தனுக்காக காதலை தியாகம் செய்கிறார் சித்தார்த்.


இரண்டாவது நாயகி சார்மி (இவரை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டோம்). இவருக்கு அட்டகாசமான பாத்திரம், சமுதாயத்திற்காக உழைக்கும் பாத்திரம் (சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்). அடிக்கடி உணர்ச்சிவசப்படும் பாத்திரம். அருமையாக செய்திருக்கிறார். இவரிடம் மாட்டிக்கொண்டி சித்தார்த்தும், சுனிலும் தவிக்கும் காட்சிகள் அருமை. இவருக்கும் சித்தார்த்திற்கும் திருமணம் வரை கொண்டு சென்று இறுதியில் அவரை அவர் காதலன் பிரபுதேவாவுடன் இணைக்கிறார் சித்தார்த்.


மூன்றாவது நாயகி சதா, டாக்டருக்கு படிக்கும் சராசரி நடுத்தர வர்க்கத்து பெண். தன்னம்பிக்கையிழந்து ஓரளவு பயந்த சுபாவம் உள்ள இவரை மாற்றுகிறார் நாயகன். இறுதியில் சதா இவரை தவறாக புரிந்து கொண்டு வேறொருவரை மணக்க சம்மதித்து, திருமணம் வரை சென்று இறுதியில் சித்தார்த்தை கை பிடிக்கிறார்.

படத்தின் பாடல்கள் மனதை கவரும் விதமாக அமையாதது ஒரு பெரிய குறை. மேலும் நாயகனுக்கு நாயகி மேல் காதல் வரும் இடமும் அழுத்தமாக இல்லை. மூன்று நாயகிகளை வைத்து இன்னும் இளமையாக எடுத்திருக்கலாம். ஆனால் படத்தை தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

இது இயக்குனருக்கு முதல் படமென்று நினைக்கிறேன். அடுத்த படம் இன்னும் சிறப்பாக எடுப்பார் என்று நம்புவோம்.

பொம்மரில்லு

தெலுகு படம்னா வெறும் மசாலா(மாஸ்) படம்னு ரொம்ப நாளா நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அது தவறு என்று ஒரு சில படங்கள் எனக்கு புரிய வைத்தன.

அதில் குறிப்பிடத்தக்கவை “ஆ நலுகுறு” , “அனுகோக்குண்ட ஒக ரோஜு” மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் “பொம்மரில்லு”.


“பொம்மரில்லு” என்றால் “பொம்மை வீடு” என்று பொருள். அதாவது வீட்டில் உள்ள அனைவருக்கும் சாவி கொடுப்பது ஒருவர் மற்றவர்கள் எல்லோரும் இயங்கும் பொம்மைகளே என்பது தான் அதன் கதை.

முதல் காட்சியிலே படத்தின் கருவை சொல்லிவிடுகிறார் இயக்குனர். கடற்கரையில் குழந்தையின் கைப்பிடித்து அந்த குழந்தைக்கு நடை பழக சொல்லி கொடுக்கிறார் தந்தை. இதுவே அந்த தந்தை குழந்தை பெரியவனாகியும் அவன் கையை விடாமல் பிடித்து நடக்க சொல்லி கொடுத்து கொண்டிருந்தால் என்ன ஆகும்? இது தான் படத்தின் மையக்கரு.

கண்டிப்பான தந்தை என்று சொல்வதைவிட, எங்கே தனியாகவிட்டால் மகன் தடுக்கி விழுந்திடுவானோ என்று அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்கும் தந்தையாக பிரகாஷ்ராஜ். வழக்கம் போல் அருமையாக நடித்திருக்கிறார். சராசரி அம்மாவாக ஜெயசுதா.

அப்பாவிடமிருந்து விடுதலை பெற்று தன் சொந்த காலில் நிற்க துடிக்கும் துடிப்புள்ள இளைஞனாக நடித்திருக்கிறார் சித்தார்த். ஆனால் தந்தை முன் அதை வெளிப்படுத்த முடியாமல் திணறுகின்ற பாத்திரம். தன் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் சித்தார்த்.

இதற்கு நேரெதிராக பட்டாம்பூச்சி போல் சுதந்திரமாக சுற்றி திரியும் பாத்திரத்தில் ஜெனிலியா. படத்தில் அனைவரையும் கவரும் கதாப்பாத்திரம். காபி சப்ளை செய்யும் சிறுவன், பானி பூரி கடை வைத்திருப்பவர், ஐஸ் விற்பவர் என்று சகலமானவர்களும் இவருக்கு பேர் சொல்லி கூப்பிடுமளவுக்கு பழக்கம்.

இயற்கையின் நீதியான எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்பது இங்கேயும் உண்மையாகிறது. முதலில் அவர்கள் இருவரும் நண்பர்களாகி வழக்கம் போல் காதலர்களாகிறார்கள். இறுதியில் காதலர்கள் எவ்வாறு இணைகிறார்கள். பிரகாஷ்ராஜ் எவ்வாறு தன் தவறை உணர்கிறார் என்பதே கதை.


யாராவது தலையில் ஒரு முறை முட்டினால் கொம்பு வரும் என்று நம்பும் அளவுக்கு குழந்தைத்தனம் மற்றும் ரசிக்கக்கூடிய பாத்திரம் ஜெனிக்கு. இறுதியில் பிரகாஷ்ராஜ் தலையில் ஒரு முறை தெரியாமல் முட்டிவிட, கொம்பு வருவதை தவிர்க்க இரண்டாவது முறை முட்ட ஜெனிலியா முயல்வதும் அதை தடுக்க சித்தார்த் தவிப்பதும் அருமையான காட்சி.

இது டைரக்டர் பாஸ்கருக்கு முதல் படம். முதல் படத்திலே அசத்தியிருக்கிறார் மனிதர். வழக்கமாக தெலுகு படத்தில் பாடல்களுக்கு குடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த படத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. பாட்டு சுமார் ரகம்தான்.

பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும். முடியாதவர்கள் காத்திருக்கவும். தமிழில் இந்த படத்தை எடுக்க கடும் போட்டி நிலவுகிறது. விஜய், ஜெயம் ரவி, பரத், ரவி கிருஷ்ணா முதலானோர் இந்த படத்தின் தமிழாக்கத்தில் நடிக்க முயற்சி செய்வதாக தெரிகிறது.

ஏமாத்திட்டாங்களாம்!!!

தமிழகத்தில் வசிக்கும் என் அருமை வலையுலக நண்பர்களே!!!
உங்களிடம் ஒரு உதவி வேண்டியே இந்த பதிவு.

நேற்று என் நண்பன் ஒருவன் அவசரமாக போன் செய்து சொன்ன செய்தி.
“தமிழகம் எங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் புரட்சி கலைஞரின் “பேரரசு” படத்தில் கேப்டனுக்கு பன்ச் டயலாக் இல்லையாம். அதைப்போலவே அவருடைய மிரள வைக்கும் நடன காட்சிகளும் படத்தில் இல்லையாம். இது வாசிம் கானின் சதியாக இருந்தாலும் இருக்கலாம் என்று முன்னனி நாளிதழில் வெளிவரும் “சிட்டு குருவியார்” கேள்வி பதிலில் இருந்ததாம்”

இது என் நண்பன் என்னை ஏமாற்ற சொன்ன செய்தியோ என்று சந்தேகமாக உள்ளது. இந்த சந்தேகத்தை தயவு செய்து யாராவது தீர்த்து வையுங்களேன்.

“வேட்டையாடு விளையாடு”, “சில்லென்று ஒரு காதல்” போன்ற படத்திற்கு விமர்சனம் போட்ட வலைப்பதிவாளர்களே, உங்களிடமிருந்து தலைவரின் “பேரரசு” படத்திற்கும் விமர்சனத்தை எதிர்பார்த்து தூங்காமல் கண்விழித்திருக்கிறேன்…

கிசுகிசு:
படத்தில் இரண்டு சூரியனாம் 😉

(யாருப்பா அது, ஒண்ணுக்கே இங்க கண்ண கட்டுதுனு சொல்றது 😀 )

கேப்டன் டாக்டராகிறார்

கேப்டன் டாக்டராகிறார்.

என்ன அதுக்குள்ள அதிர்ச்சியடஞ்சா எப்படி??? நான் சொல்ல வந்தது அவரோட அடுத்த படம் சபரியில் அவர் டாக்டராக நடிக்கிறார்னு.

அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் “தர்மபுரி” தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில் “சபரி”யும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரி கேப்டனின் 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரியில் இடம்பெற போகும் பன்ச் டயலாக்
(கேப்டன் ஸ்டைலில் படிக்கவும்)
இங்க பாரு,
நான் நெனச்சா ஈஸியா டாக்டராக முடியும்,
உன்னால Gaptainஆக முடியுமா???
aanghhhh”

We will meet…. will meet…. meet

(இத படிச்சு யாரும் “என்ன கொடுமை சரவணன் இது”னு பின்னூட்டமிடக்குடாது…
ஆமாம் சொல்லிட்டேன் ;))

லொள்ளு

நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்…

சிட்டிசன்:
கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???
நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???
அ: தெரியாதே…
நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு…

காக்க காக்க:
ஜீவன்: அவளை தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…
சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா அவ 120 கிலோ

சந்திரமுகி:
பிரபு: என்ன கொடுமை சரவணன்…
தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?

ரமணா:
வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு
மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்
வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை “தமிழ்”

கௌரவம்:
சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி… அதனால பறந்து போயிடுச்சு…
பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா… பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

இப்பொழுதுக்கு இவ்வளவுதான் தோணுது… பிடித்திருந்தால் சொல்லுங்க அடுத்து யோசிக்கலாம் 😉