குட்டிப் பாப்பா

அலாரம் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்தோம். மணி ஐந்து நாற்பது. நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்து விட வேண்டுமென்பது எனது எண்ணம். அறையில் நன்றாக வெளிச்சம் வந்துவிட்டது. ஏற்கனவே கவரிலிருந்து பிரித்து வைத்திருந்த அந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் குச்சியை தீபாவிடம் கொடுத்தேன். எதுவும் பேசாமல் ஒருவித கலக்கத்துடன் பாத்ரூமிற்கு சென்றாள்.

இரண்டு நிமிடத்திற்கு பின் வெளியே வந்தாள். கையில் எதுவும் இல்லை. என் பார்வையாலே அது எங்கே என்று நான் கேட்டதை புரிந்து கொண்டாள்.

“உள்ள இருக்கு. நீங்களே போய் பாருங்களேன். ப்ளீஸ்”

உள்ளே சென்று பார்த்தேன். வாஷ் பேசின் மேல் இருந்தது. அதை பத்திரமாக எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்தேன். என் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள். நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாக ஒரு கோடு தெரிந்தது. இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இருவருக்கும் இதயத்துடிப்பு அதிகமாகி இருந்தது. இரண்டு நிமிடங்களுக்குப் பின் லேசாக இரண்டாவது கோடு தெரிய ஆரம்பித்தது. நன்றாக உத்துப்பார்த்தேன். அடுத்த இரு நிமிடங்களில் தெளிவாகவே தெரிந்தது.

தீபாவை என் மடியிலிருந்து தூக்கினேன். என்ன ரிசல்ட்? அவள் கண்களில் அந்த கேள்வி தெரிந்தது. இறுக்கமாக அணைத்து நெத்தியில் முத்தமிட்டேன். புரிந்து கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. ரொம்ப சந்தோஷப்பட்டா தீபா உடனே அழுதுவிடுவாள்.

“லூசு. அழாத” சொல்லிவிட்டு கண்ணை துடைத்தேன். மீண்டும் மடியில் சாய்ந்து கொண்டாள்.

அறை முழுக்க மௌனமே நிரம்பி வழிந்தது.

“என்னடா குட்டி உங்கம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லலாமா?”

“வேணாம். அவுங்க பேச மாட்டாங்க” லேசாக விசும்ப துவங்கினாள்.

அவளை தூக்கி நேராக என் முகத்தைப் பார்க்க வைத்தேன். விசும்பல் சத்தம் குறைந்தது.

”அழாதடா குட்டிப்பையா. இனிமே எல்லாம் சரி ஆகிடும். பாப்பா வர நேரத்துக்குள்ள எனக்கு மறுபடியும் வேலை கிடைச்சிடும். நம்ம ரெண்டு பேர் வீட்லயும் சரி ஆகிடுவாங்க. சரியா?”

“பாப்பானு எப்படி சொல்றீங்க?”

“எனக்கு ஜோசியம் தெரியும்”

“சொல்லுங்க. எப்படி சொல்றீங்க?”

“பெண் குழந்தை பிறந்தா தான் அம்மா அழகா மாறுவாங்களாம். பையன்னா குரங்கு மூஞ்சி மாதிரி மாறிடுமாம். நீ தான் இன்னும் அழகாயிட்டயே. அதான்”

“கதை விடாதிங்க. அதெல்லாம் ஏழு மாசத்துக்கு அப்பறம் தான் தெரியுமாம்”

“நீ வேணா பாரு. நிச்சயம் பாப்பா தான் பொறக்கும்”

”ஏன் உங்க அக்கா பையனுக்கு கொடுக்கணும்னு பாக்கறீங்களா? அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்”

“அதெல்லாம் அப்ப பாத்துக்கலாம்டா. நான் போய் இப்பவே இண்டர்நெட்ல பேர் பாக்கறேன். R இல்லைனா Sல தன் வைக்கணும்”

“நீங்க முதல்ல நௌக்ரில இருந்தோ மான்ஸ்டர்ல இருந்தோ ஏதாவது மெயில் வந்திருக்கானு பாருங்க”

“ஒரு வாரத்துல என்ன பெருசா மாறிடும்னு நினைக்கிற. எங்கயும் மேனஜர் போஸ்டிங்கு ஆள் எடுக்குற மாதிரி தெரியலை. ஃப்ரெஷர்னா கொஞ்சம் கஷ்டப்பட்டாவாது கிடைக்கும் போல. எலக்‌ஷன் வரைக்கும் அமைதியா இருந்துட்டு இப்ப கொத்து கொத்தா தூக்கறானுங்க.”

“அதுக்கு என்னங்க பண்ண? இப்ப பாப்பா வேற வர போகுதே சமாளிக்க முடியுமா?”

“ஏய்… ஏன் இப்படி ஃபீல் பண்ணற? வீட்டு லோன் இருபத்தி ரெண்டாயிரம் போக மீதி எட்டாயிரத்துல குடும்பத்தை நடத்திக்கலாம். ஆடம்பர சொலவெல்லாம் குறைச்சிட்டு அத்தியாவசிய தேவைகளை மட்டும் கவனிச்சிக்கலாம்”

“நம்ம ஆடம்பர செலவு எதுவுமே செய்யறதில்லையே”

“நம்ம ரெண்டு பேர் செல்ஃபோன் பில் நாலாயிரம் வருது. நான் என்னோடதை தூக்கப் போறேன். ஏதாவது இண்டர்வியூ கால்னாலும் லேண்ட்லைன்லயே பேசிக்கலாம். நீயும் அதை குறைக்க பாரு. இனிமே நோ சினிமா, ஹோட்டல். அப்பறம் கரெண்ட் பில் ரெண்டாயிரம் வருது. எங்கம்மா நூறு ரூபாய்க்கு மேல கட்டணதே இல்லை. அதையும் குறைக்கணும். இப்படி நிறைய குறைக்க வேண்டியது இருக்கு”

“சமாளிச்சிக்கலாம்னு சொல்றீங்களா? நான் வேணா ஏதாவது பர்சனல் லோன் எடுக்கவா?”

“அதெல்லாம் வேண்டாம்டா. வீட்டு லோனே நிறைய இருக்கு. எப்படியும் மூணு நாலு மாசத்துல சரி ஆகிடும். அப்ப நீயும் லீவு போட வசதியா இருக்கும். எப்படியும் வாங்கிடலாம்டா”

“உங்களை வேலையை விட்டு தூக்கினதுக்கு பதிலா என்னைய தூக்கிருந்தா கூட ஓரளவு சுலபமா சமாளிச்சிருக்கலாம். இன்னும் ஒரு பத்தாயிரம் அதிகமா வரும்”

“ஆமாம். நீயும் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருந்திருக்கும். உன்னை இப்ப வேலைக்கு அனுப்பவே எனக்கு கஷ்டமா இருக்கு”

“ஏன் அப்படி சொல்றீங்க? எல்லாம் நம்ம தேவைக்குத் தானே.”

“ஹ்ம்ம்ம். எப்படியும் நான் சீக்கிரம் வாங்கிடறேன்”

“சீக்கிரம் வாங்கிடுவீங்கனு எனக்கும் நம்பிக்கை இருக்கு. நீங்க எதுக்கும் கஷ்டப்படாதீங்க” என்னை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு முகம் கழுவ பாத்ரூம் சென்றாள்.

நான் எழுந்து போய் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். கடைசியாக எப்பொழுது ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வேலையை ஆரம்பித்தேன் என்று நினைவில்லை.

நௌக்ரியிலிருந்து சம்பந்தமே இல்லாத சில வேலை வாய்ப்பு மெயில்கள் வந்திருந்தன. எனக்கு வேலை போய் சரியாக இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. பத்து தூக்கம் இல்லாத இரவுகள். வீட்டில் பகைத்து கொண்டு செய்த காதல் திருமணம் என்பதால் இருவர் வீட்டிலும் தள்ளி வைத்து விட்டார்கள். அந்த வீராப்பிலே முப்பது லட்ச ரூபாய் செலவு செய்து இந்த அப்பார்ட்மெண்ட் வாங்கியிருந்தோம். ஃபர்னிச்சர் மத்த சாமான்கள் எல்லாம் சேர்ந்து முப்பத்தைந்து ஆகியிருந்தது. கையிலிருந்த அனைத்து சேமிப்புகளும் இதில் கரைந்து விட்டது.

இது வரை என்னுடைய  நிறுவனம் எப்பொழுதும் லே ஆஃப் செய்யாத தைரியம் இதையெல்லாம் என்னை செய்ய வைத்திருந்தது. எப்படியும் சமாளித்துவிடலாம் என்றும் நினைத்திருந்தேன். இப்பொழுது தான் பயம் வந்துள்ளது. எப்படியும் சிட்டியில் உள்ள சிறந்த மருத்துவமனையில் தான் தீபாவிற்கு காட்ட வேண்டும். அதை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை. அவசரத்திற்கு நண்பர்களிடமிருந்து கடன் வாங்கலாம். வேலை தேடும் போது நண்பர்களுக்கு நான் கணக்குப் பார்க்காமல் செலவு செய்திருக்கிறேன். ஒருத்தராவது உதவாமலா போய்விடுவார்கள். என் மனதில் உள்ள பயம் தீபாவிற்கு தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

காலை டிபனை தீபா தயார் செய்ய, முதன் முதலாக நான் கீழறங்கி குடிநீரை குடத்தில் பிடித்து தூக்கி வந்தேன். இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். கடந்த ஒரு வாரமாக அவளை என் வண்டியில் தான் அழைத்து சென்று கொண்டிருந்தேன்.

“குட்டி, இந்த நிலைமைல நீ டூவீலர்ல வரலாமா? பஸ்லயும் தூக்கி தூக்கி போடும் இல்லை? கால் டேக்சி ஏதாவது சொல்லவா?”

“அதெல்லாம் எதுவும் வேண்டாங்க. டூவீலர்லயே போகலாம்”

“ஹ்ம்ம்ம். மதியம் நான் ஏதாவது சமைச்சி கொண்டு வந்து கொடுக்கவா?”

”ஐயா சாமி. அன்னைக்கு நீங்க முட்டையை வேக வெச்சி கொடுத்ததே போதும். ஆஃப் பாயிலா முட்டையை வேக வெச்ச முதல் ஆள் நீங்க தான். எங்களை விட்டுடுங்க” வயிற்றில் கை வைத்து காட்டினாள்.

ஒவ்வொரு ஸ்பீட் ப்ரேக்கிலும் பார்த்து நிதானித்து ஓட்டினேன். வழக்கத்தை விட முப்பது நிமிடம் அதிகமாக எடுத்திருந்தேன். அவளை விட்டுவிட்டு எங்கும் போக மனமில்லாததால் வீட்டிற்கு வந்தேன். ஸ்டாக் மார்க்கெட் பார்க்கவும் மனமில்லை. இரண்டு லட்சம் இன்று முப்பதாயிரமாக மாறி இருப்பதை பார்த்து எரிச்சலடைவதை விட பார்க்காமலிருப்பதே மேல். அம்மாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லலாமா? ஓரளவு கோபம் குறையவும் வாய்ப்பிருக்கிறது. எதற்கும் டாக்டரிடம் ஒரு முறை சோதித்துவிட்டு இருவர் வீட்டிலும் சொல்லிவிடலாம். சனிக்கிழமை செக் அப் செய்துவிட்டு சொல்லிவிடலாம் என்று திட்டம். இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது.

ஒரு வழியாக இன்று வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. சமையலில் உதவவில்லை என்றாலும் பாத்திரத்தை கழுவி வைத்தேன். அவளை கனமான பொருட்களை தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டேன். என்னை நம்பி வந்தவளை மகாராணி போல பார்த்து கொள்வது என் கடமை. இரண்டு நாட்களாக தீபா டென்ஷனாகவே இருக்கிறாள். செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம் வந்துவிட்டது. வசதியாக வாழ்ந்தவள். எப்படியும் சமாளித்து கொள்ளலாம் என்று அவளுக்கு ஆறுதல் கூறி வந்தேன். சனிக்கிழமை வீட்டில் சொல்லலாம் என்று சொன்னதற்கு அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை. மௌனம் சம்மதம். வீட்டிலிருந்து உதவி கிடைத்தாலும் அதை ஏற்பதாக இல்லை. சமாளிக்க முடியாத பட்சத்தில் வண்டியை வித்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். எப்படியும் முப்பதாயிரம் கிடைக்கும். அதை வைத்து மூன்று மாதத்தை ஓட்டிவிட்டால் போதும். வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்திலே புது வண்டி வாங்கி விடலாம். இதை தீபாவிடம் சொல்லவில்லை.

”இந்த காலாண்டில் XXXXX நிறுவனம் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது சென்ற வருடத்தின் இதே காலாண்டை காட்டிலும் ஒரு சதவிகிதமே குறைவு. உலக பொருளாதார தேக்க நிலையிலும் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்தது பிரமிக்கத்தக்கது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்” டீவியில் ஓடிக்கொண்டிருந்தது

தீபா கம்பெனிதான். ஷேர் நஷ்டக்கணக்கு ஓரளவு குறைந்திருக்கும்.

மாலை ஆறு மணி. தீபாவிற்காக காத்திருந்தேன். தேவையில்லாமல் அழைப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தோம்.

வீடு திறக்கும் சத்தம் கேட்டது. கம்ப்யூட்டரை விட்டு ஹாலிற்கு வந்தேன்.

தீபாவுடன் வினோ வந்திருந்தாள். அவளைக் கைத்தாங்களாக பிடித்து உள்ளே அழைத்து வந்தாள். எழுந்து போய் தீபாவைப் பிடித்து கொண்டேன். தீபா மிகவும் களைத்துப் போயிருந்தாள்

“என்ன வினோ, தீபாக்கு என்ன ஆச்சு? ஏதாவது மயக்கமா?”

”ஒண்ணுமில்லை. அவளை படுக்க வை”

வைத்தேன்.

“சிவா, ஆபிஸ்ல கொஞ்சம் பிரச்சனை”

“”

“உனக்கே தெரியும் இப்ப சிச்சுவேஷன் சரியில்லை. அதனால பிரக்னண்ட் லேடீஸ் எல்லாத்துக்கும் மூணு மாசம் மேட்டர்னிட்டி லீவ் கொடுத்தா ஆப்பரேட்டிங் மார்ஜின் அஃபக்ட் ஆகும்னு”

“ஆகும்னு”

“தூக்கறாங்களாம். அதான்…”

“திஸ் இஸ் அன்ஃபேர். இவ்வளவு எத்திக்ஸ் பேசிட்டு எப்படி பெண்களுக்கு எதிரா இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணறாங்க?”

“பிராஃபிட் கணக்கு காட்டணுமில்லையா?”

“சரி, இப்ப தீபாவை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அதானே?”

“இல்லை அவ ப்ரெக்னண்ட்னு ஆபிஸ்ல யாருக்கும் தெரியாது”

“அப்பறம் என்ன பிரச்சனை?”

“உனக்கும் இப்ப வேலை இல்லை. வீட்டு லோன் வேற ஹெவியா இருக்காம்.”

“வினோ. டோண்ட் கில் மி. தீபாக்கு என்ன ஆச்சு?”

”அதுக்கு பயந்து அவ அபார்ஷன் பண்ணிட்டா”

இருதயத் துடிப்பே ஒரு நிமிடம் நின்றது போல் இருந்தது.  என்னால் இதை முழுதாக ஜீரணிக்க முடியவில்லை. எதையாவது பிடித்து கொள்ள வேண்டும். வேலையிலிருந்து நீக்கும் போது இருந்ததை விட ஆயிரம், லட்சம் மடங்கு உடைந்துவிட்டது போல் தோன்றியது. உள்ளே தீபாவின் விசும்பல் சத்தம் கேட்டது.

மெதுவாக உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்தேன்.

“ஏன்டா செல்லம் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே. இந்த வீட்டைக் கூட வித்திருக்கலாமேடா. இதுக்காக நீ இவ்வளவு வலியைத் தாங்கணுமாடா?”

“குட்டிப் பாப்பா ரெசஷன்ல கஷ்டப்பட வேண்டாம்னுதாங்க”

……………………..

இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

தூறல்!!!

டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது…

வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அருகே நின்று கொண்டிருந்தேன். எலக்ட்ரானிக் சிட்டி போய் சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். நல்ல வேளை இந்த i-pod இருப்பதால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது.

இந்த மழை ஏன் இங்க பெஞ்சி உயிர வாங்குதுனு தெரியல… மழை வரலைனு யாகமெல்லாம் நடத்தறானுங்க… அங்க வராம இங்க வந்து நம்ம உயிர வாங்குது. அதுவும் ஆபிஸ் போற நேரத்துல.

அருகே கம்பெனி ஐடி கார்டை மாட்டிக் கொண்டு நான்கு, ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர். இவனுங்களுக்கு எல்லாம் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியர்னு பெருமை. இந்த ஐடி கார்டை கம்பெனிக்குள்ள மாட்டினா போதாதா? லைசன்ஸ் வாங்குன நாய் மாதிரி எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு திரியறானுங்க.

கடைசியாக சுரிதார் அணிந்து கொண்டு புதிதாக ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். நான் பார்ப்பதை பார்த்து சிரித்தாள்.

ச்சீ என்ன பொண்ணு இவ… யாராவது பார்த்தா… உடனே சிரிக்கணுமா???

பஸ் வந்தவுடன் வேகமாக சென்று ஒரு நல்ல இடம் பார்த்து ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்தேன்… i-podல் நேற்று டவுன்லோட் செய்த பெயர் தெரியாத படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

சரியாக எட்டு மணிக்கு என் சீட்டிலிருந்தேன்… வழக்கம் போல் யாரும் இன்னும் வரவில்லை. இன்று அப்ரைசல் வேறு இருக்கிறது. இந்த முறை ஆன் சைட்டிலிருந்து அப்ரிஸியேஷன் மெயில் வந்திருக்கிறது. அதனால் எப்படியும் இந்த முறை நல்ல ரேட்டிங் கிடைக்கும்.

மேனேஜர் சரியாக பத்து மணிக்கு வந்தார். மற்றவர்கள் அவர் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன் வந்தனர். அவரை பொருத்த வரை அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததாகத்தான் கணக்கு. மற்றவர்களை கேட்டால் டிராபிக் ஜாம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி தப்பிவிடுவார்கள். 7 மணிக்கு புறப்பட்டால் எப்படியும் 8 மணிக்குள் வர முடியும். 8 மணிக்கு புறப்பட்டு 2 மணி நேரம் டிராபிக்கில் சிக்கி வரவே அனைவரும் விரும்புகின்றனர். தலை சரியில்லாத இடத்தில் மற்றவர்களை சொல்லி பயனில்லை.

சரியாக 11 மணிக்கு அப்ரைசல் மீட்டிங். தேவையானவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு மீட்டிங்கிற்கு சென்றேன். உள்ளே மேனஜர் தயாராக இருந்தார். இந்த முறையும் அப்ரைசலில் எல்லா டாஸ்கிற்கும் “C” போட்டிருந்தார்கள். அதற்கு அவர் சொன்ன காரணம் டீம் மக்களோடு சரியாக கலக்காமலிருக்கிறேனாம்.

சரியாக வேலை செய்யவில்லை என்றால் சரி. ஆனால் மக்களோடு பழகவில்லை என்று அவர் சொல்வது சும்மா ஒரு சப்பைக்கட்டு!!! இவர்கள் வேலை செய்வது போல் நடிப்பவர்களைத்தான் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் உண்மையாக வேலை செய்பவர்களை என்றும் மதிக்கமாட்டார்கள்.

மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பிட கிளம்பினேன்.

“கார்த்திக்… இன்னைக்கு பிராஜக்ட் பார்ட்டி. பஸ் 12:30க்கு வரும். இப்ப எங்க போற?” அக்கரையாக விசாரித்தாள் ஹாசினி.

“சாரி… நான் வரலை. நான் தான் மெயில்லையே சொல்லிட்டனே… எனக்கு இந்த பார்ட்டி எல்லாம் பிடிக்காதுனு” சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட சென்றேன்.

சாப்பிட்டுவிட்டு என் சீட்டிற்கு வந்த போழுது என் ப்ளோர் முழுதும் விரிச்சோடி கிடந்தது. 2 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினேன். வீட்டில் தனியாக என்ன செய்வதென்று தெரியாமல் கிடைத்த ஒரு ஆங்கில நாவல் படிக்க ஆரம்பித்தேன். எப்போழுது தூங்கினேனென்றே தெரியவில்லை. தூங்கி எழுந்திரிக்கும் பொழுது மணி 8 ஆகியிருந்தது.

அருகே இருக்கும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். டிவியை ஆன் செய்து ஒரு மணி நேரத்தில் 120 சேனல்களையும் 40 முறை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். 6 மணிக்கு அலாரம் அதன் வேலையை சரியாக செய்ய 7 மணிக்கு பஸ் ஸ்டாப்பில் இருந்தேன்.

வழக்கம் போல் பஸ்ஸிற்காக காத்திருப்பவர்கள் இருந்தார்கள். நேற்று புதிதாக வந்திருந்தவளும் அங்கே நின்று கொண்டிருந்தாள். நேற்றை போலவே இன்றும் பார்த்து சிரித்தாள்.

பஸ் வந்ததும் வழக்கம் போல் ஜன்னலோர சீட்டருகே சென்று அமர்ந்தேன்.

“ஹாய்… நான் இங்க உக்காரலாமா?” ஒரு பெண்ணின் குரல்.
திரும்பி பார்த்தேன். அவள் என் பதிலை எதிர்பார்க்காமல் அருகில் அமர்ந்தாள்.

வழக்கத்தைவிட i-podல் சத்தத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினேன். அதை புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் ஒரு ஆங்கில நாவலை கையில் வைத்து படிக்க ஆரம்பித்தாள். வண்டி வழக்கத்தைவிட சீக்கிரம் சென்றாலும் ஏதோ ஒரு யுகம் போனது போலிருந்தது.

தினம் செய்யும் வேலையையே செக்குமாடு போல் செய்துவிட்டு 8 மணிக்கு ஆபிஸிலிருந்து வீட்டிற்கு கிளம்பினேன். அடுத்த நாளும் அதை போலவே என் அருகில் அமர்ந்து பயணம் செய்தாள். இதுவே ஒரு வாரம் தொடர்ந்தது.

அன்றும் லேசான தூறல் போட்டுக்கொண்டிருந்தது. நடைபாதையிலிருந்து கீழிறங்கி பஸ்ஸிற்காக காத்துக்கொண்டிருந்தேன். வலதுபக்கம் நின்றிருந்த ஒரு ஜோடி ரோட்டில் நிற்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ஒருவர் கையை ஒருவர் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். என் கோபம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே வந்தது.

இதுங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா? சாப்ட்வேர் இஞ்சினியர்னா பெருசா அமெரிக்கால இருக்கற நினைப்பு. இதுங்களாலதான் எல்லாருக்கும் கெட்டப்பேரு!!! திடிரென்று யாரோ என் கையை பிடித்து பின்னால் இழுத்தார்கள். திரும்பி பார்ப்பதற்குள் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. கொஞ்சமிருந்தால் மேலே ஏத்தியிருப்பான். இந்த பெங்களூர்ல ஆட்டோக்காரங்களுக்கு அறிவே இருக்காது.

சரி, பின்னால் இழுத்தது யாரென்று பார்த்தால் அவள் நின்று கொண்டிருந்தாள். சைட்ல இருந்த அந்த ஜோடியப் பாத்துட்டிருந்த நேரத்துல இந்த மாதிரி ஆயிடுச்சு. அவளுக்கு நன்றி சொல்லலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பஸ் வந்து சேர்ந்தது.

எப்போழுதும் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தேன். அவளும் வந்து அமர்ந்து கையில் நாவலை எடுத்தாள்.

“ரொம்ப தேங்கஸ்ங்க…” தயங்கியவாறே சொன்னேன்.

“ஓ!!! உங்களுக்கு பேச வருமா??? நீங்க ஊமைனு இல்ல நினைச்சேன்” புத்தகத்தை பையில் வைத்து கொண்டே சொன்னாள்.

“இல்லைங்க…சாரி. நான் உங்களை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டேனு நினைக்கிறேன்”

“ஐயய்யோ அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க…
பை த வே, ஐ அம் ஆர்த்தி”

“ஐ அம் கார்த்திக்”

இன்று பஸ் பயணத்தின் 60 நிமிடங்களும் 60 நொடிகளைவிட குறைவாக தெரிந்தது. 60 நிமிடத்தில் வாழ்க்கை வரலாறையே சொல்ல முடியும் என்று இன்று தான் உணர்ந்தேன்.

பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன்…

“கார்த்திக்… உன் கூட நான் சாப்பிட வரலாமா? தனியா சாப்பிட போர் அடிக்குது. என் டீமெட்ஸ் எல்லாம் பத்து மணிக்குதான் வருவாங்க”

“உங்களுக்கு எதுவும் பிராபளம் இல்லைனா வாங்க”

“ஏன் ரொம்ப ஃபார்மலா பேசறீங்க??? நீ, வா, போனே பேசலாம்”

“சரிங்க”

“பாத்திங்களா??? திரும்பவும் வாங்க போங்கனு சொல்றீங்க”

“சரி… போலாமா?”

சாப்பிட்டு விட்டு சீட்டிற்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இன்று நாள் போனதே தெரியவில்லை.

அடுத்த நாள் மீண்டும் பஸ் பயணம்…

“ஏய்!!! நேத்து மதியம் உன்ன கேண்டின்ல பாத்தேன்… தனியா சாப்பிட்டு இருந்த… உன் பிராஜக்ட் மேட்ஸ் யாரும் வரலையா?”

“நான் எப்பவும் தனியாதான் சாப்பிடுவேன்”

“ஏன்?”

“யாருக்கும் தொந்தரவு வேண்டாம்னுதான். எனக்கு உங்களை மாதிரி எல்லாம் பேச வராது”

“யார் சொன்னா அப்படியெல்லாம். என் கூட வேணா வரியா?”

“வேணாம். உங்கூட உன் பிரண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க. எனக்கு அன்கம்ஃபர்டபுலா இருக்கும்”

“இல்ல… யாரும் வர மாட்டாங்க. உன் செல் நம்பர் தா. நான் மதியம் கூப்பிடறேன்”

“ஏன்கிட்ட செல் போன் இல்ல”

“என்னது செல் போன் இல்லையா??? எத்தனை வருஷம் சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க?”

“3 வருஷம். ஏன் செல் போன் இல்லனா வாழ முடியாதா? எனக்கு தான் எக்ஸ்டென்ஷன் இருக்கு இல்ல. அதுக்கே எவனும் கூப்பிட மாட்டான். எனக்கு எதுக்கு செல் போன்? எப்பவாவது ஊர்ல இருந்து கூப்பிடுவாங்க. அவ்வளவுதான்”

“சரி உன் எக்ஸ்டென்ஷன் சொல்லு… ” குறித்து கொண்டாள்

காலையும், மதியமும் அவளுடன் சாப்பிட்டேன்… இன்றும் நாள் பொனதே தெரியவில்லை.

அடுத்த நாள்…

“ஏன் இப்படி வயசானவன் மாதிரி டல் கலர்ல சட்டை போடற??? ஒழுங்கா ப்ரைட்டா சட்டை போட்டா என்ன?”

“ஏன் இந்த கலர்க்கு என்ன குறைச்சல். நான் பொதுவா கலரே பாக்க மாட்டேன். போய் எது பிடிச்சியிருந்தாலும் எடுத்துக்குவேன்”

“சரி… இந்த வாரம் நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போகலாம். உனக்கு செல் போன் வாங்கனும்.. அப்பறம் நல்லதா ஒரு நாலு அஞ்சு சட்டை வாங்கனும்”

“எனக்கு எதுக்கு செல் போனெல்லாம்?”

“நேத்து நைட் உங்கிட்ட பேசலாம்னு பாத்தேன்… ஆனால் உங்கிட்ட போன் இல்லாததால பேச முடியல”

“நிஜமாவா?”

“ஆமாம்… சத்தியமா!!! இந்த வாரம் கண்டிப்பா போய் வாங்கறோம்”

“சரி…”

வார இறுதியன்று கடைக்கு சென்றோம்…

“லேட்டஸ்ட் மாடலா பாத்து வாங்கிக்கோ… இல்லைனா பின்னாடி மாத்த வெண்டியிருக்கும்”

“எனக்கு சாதரண மாடலே போதும்… காஸ்ட்லியா எல்லாம் வேண்டாம்”

“நீ சும்மா இரு…நான் செலக்ட் பண்றேன்… உனக்கு ஒன்னும் தெரியாது”

“சரிங்க… நீங்களே எடுங்க”

கடைசியாக பத்தாயிரத்தி சொச்சத்திற்கு ஒரு செல் பொன் வாங்கி ஏர்டெல் கனெக்ஷனும் வாங்கினேன். அதிலிருந்து அவள் நம்பருக்கு போன் செய்து அவள் போனை என்னிடம் குடுத்து பேச சொன்னாள். பக்கத்து பக்கத்துல இருந்து செல் பொனில் பேசுவது அசிங்கமாக இருந்தது… ஆனாலும் அவள் அதை பற்றி கவலைப்படவில்லை.

“பாத்தியா… உன் போன்ல ஃபர்ஸ்ட் பேசனது நான் தான், ஃப்ர்ஸ்ட் பண்ணது என் நம்பருக்குத்தான்”

“சரி சரி… எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க… வா போகலாம்”

அன்றே 5 புது சட்டைகள் வாங்கினோம். ஒவ்வொன்றும் 1500க்கு மேல்.

வீட்டிற்கு சென்றவுடன் போன் செய்து பேசினாள்…

திங்கள் காலை அலுவலகத்தில்

“கார்த்திக்… புது சட்டையெல்லாம் சூப்பரா இருக்கு…கைல ஏதோ செல் போன் மாதிரி இருக்கு” ஹாசினி

“ஆமாம்… நேத்துதான் வாங்கினேன்”

“எங்களுக்கு எல்லாம் நம்பர் தர மாட்டீங்களா?” ராஜிவ்

“உங்களுக்கு இல்லாமலா… இந்தாங்க நோட் பண்ணிக்கோங்க…”
அனைவரும் அவர்கள் நம்பரிலிருந்து மிஸ்ஸிடு கால் குடுக்க அனைவரின் நம்பரையும் சேவ் செய்தேன்.

ஆர்த்தியிடமிருந்து 11 மணிக்கு போன் வந்தது.

“கார்த்திக்… இன்னைக்கு எனக்கு பிராஜக்ட் பார்ட்டி…
நான் மதியம் உங்கூட லஞ்ச்க்கு வர முடியாது. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”

“ஓகே… நான் பாத்துக்கறேன்”

“கார்த்திக்… புது போனெல்லாம் வாங்கியிருக்கீங்க… ஏதாவது விசேஷமா?” மேனஜர் குரல் பின்னாலிருந்து வந்தது.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க… சும்மா வாங்கனும்னு தோனுச்சு… வாங்கிட்டேன்”

“சரி… இன்னைக்கு டீம் லஞ்ச்… எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்னு பிளான். நீயும் கண்டிப்பா வரணும்”

“ஷுர்… கண்டிப்பா வரேன்”

மதியம் அனைவரிடமும் நன்றாக பேசினேன்… எல்லாரும் எவ்வளவு ஜாலியா பேசறாங்க… நான் ஏன் இத்தனை நாள் இப்படி பேசாம போனேன். ரொம்ப தப்பு பண்ணிட்டு இருந்தனோனு தோனுச்சு…

வாழ்க்கையில் ஏதோ பெரிய மாற்றம் நடந்த மாதிரி இருந்தது.

ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. டீமில் அனைவரும் இப்போது நல்ல நண்பர்களாகி விட்டனர். 5 நிமிடம்கூட பேசாமல் இருக்க முடியாது போல் தோன்றியது. அனைத்து மாற்றத்திற்கும் காரணம் ஆர்த்திதான்.

“கார்த்திக் நான் இந்த வீக் எண்ட் சென்னை போறேன்… எப்ப வருவேன்னு தெரியாது. கொஞ்சம் லேட்டானாலும் ஆகலாம். நீ இதே மாதிரி இருக்கணும். ஓகேவா?”

“ஏன் இப்படி சொல்ற? ஏதாவது பிரச்சனையா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல… அதனால சொன்னேன்”

“சரி… அப்ப அப்ப போன் பண்ணு”

“கண்டிப்பா பண்றேன்”

அவள் சென்றதிலிருந்து முதல் இரண்டு, மூன்று நாட்கள் வேலை செய்யவே முடியவில்லை. பிறகு ஓரளவு சமாளித்தேன். ஒரு வாரம் ஓடியது.
அவளிடமிருந்து போனும் வரவில்லை. அவளும் வரவில்லை. ஒரு மாதமாகிய நிலையில் போன் வந்தது.

“ஹலோ கார்த்திக்கா???”

“ஆமாம். நீங்க யார் பேசறது?”

“நான் ஆர்த்தியோட அண்ணன் பேசறேன்… நீங்க சென்னை அப்போலோ வர முடியுமா? ஆர்த்தி கடைசியா உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்” அவர் குரலில் நடுக்கம் தெரிந்தது

கடைசியா???” இந்த வார்த்தையை கேட்டவுடன் இதயம் நின்றுவிடும் போலிருந்தது.
“ஆர்த்திக்கு என்னாச்சு???”

“நீங்க இங்க வாங்க… அத சொல்ற நிலைமைல நாங்க இல்ல… சென்னை வந்தவுடனே இந்த நம்பருக்கு கூப்பிடுங்க… நான் வந்து உங்களை பிக்-அப் பண்ணிக்கிறேன்”

அந்த நம்பர் மனதில் பதிந்தது…

சென்னைக்கு அப்போழுதே நேராக புறப்பட்டேன்…

ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார் ஆர்த்தியின் அண்ணன். அவளுக்கு ஸ்பைனல் கார்டில் ஏதோ பிரச்சனையாம். ஒரு வருடமாக ட்ரீட்மெண்ட் செய்து வந்தார்களாம். சரியாகிவிடும் என்று அனைத்து டாக்டர்களும் நம்பிக்கையூட்டிய நிலையில் திடீரென்று அவள் மூளையை பாதித்துவிட்டதாம். எனக்கு எதுவும் விளங்கவில்லை. புதுப்புது வார்த்தைகள். புது உலகம்.

ஹாஸ்பிட்டலில் காய்ந்து போனா பூச்சரமாக இருந்தாள் ஆர்த்தி. ஆனாலும் வாசம் மறையவில்லை. ஓரளவு பேசும் நிலைதான்… என்னை விட்டுவிட்டு அவள் அண்ணன் டாக்டரை பார்க்க சென்றார்.

எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.

“கார்த்தி… அழுவாத!!! எனக்கு கஷ்டமா இருக்கு”

“ஏன் ஆர்த்தி? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல”

“நான் எப்படியும் பொழைக்க மாட்டேனு தெரியும். ஆனா எங்க வீட்லதான் ரொம்ப நம்பிட்டு இருந்தாங்க. இங்க எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்கனுதான் நான் பெங்களுருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன்”
ஒரு நிமிட அமைதிக்கு பிறகு தொடர்ந்தாள்

“அன்னைக்கு உன்ன முதல் தடவை பார்க்கும் போதே… உன் கண்ல ஒரு விரக்தி தெரிஞ்சிது. வாழ்க்கையோட அருமை உனக்கு தெரியலனு என் மனசுல பட்டுச்சு. சரி நான் சாவறத்துக்குள்ள உனக்கு ஏதாவது உதவி செய்யனும்னுதான் உன்கூட பேச ஆரம்பிச்சேன். போக போக உன்கூட பேசறதே எனக்கு ரொம்ப சந்தோஷத்த குடுக்க ஆரம்பிச்சிடுச்சு. உங்கிட்ட சொல்லி உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான் சொல்லல.”

“ஆர்த்தி… உனக்கு ஒன்னும் ஆகாது. நீ என்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்ட”

“ஆமாம். நான் எங்கயும் போக மாட்டேன் கார்த்திக்…
நீ பாக்கற ஒவ்வொரு புது மனிதர்களிளும் நான் இருப்பேன். நீ அவுங்ககிட்ட பேசும் போது அது என்கிட்ட பேசற மாதிரி… என்ன சரியா???”

ஒரு வாரம் சென்னையில் தங்கிவிட்டு வந்தேன்…

காலை 7 மணி…

வழக்கம் போல் லேசாக தூறல் போட்டு கொண்டிருந்தது. பஸ் வந்தவுடன் ஏறினேன்.

“ஹாய்… நான் இங்க உக்காரலாமா?”

“தாராளமா”

“என் பேர் கார்த்திக்…”

“நான் பாலாஜி…”

(ஆர்த்தியுடன் பேசி கொண்டிருந்தேன்…)

தீயினால் சுட்ட புண்!!!

“டேய் கிருஷ்ணா! மணி 5:30 ஆச்சு… எழுந்திரி!” வழக்கம் போல் அம்மாவின் குரல்

“ஏம்மா! இப்படி உயிர வாங்கற!!! 7 மணிக்கு தான முகூர்த்தம்… பொறுமையா போயிக்கலாம்”

“ஏன்டா நேத்து நைட்டே நீ படுக்கறதுக்கு முன்னாடி சொன்னேன் இல்ல. காலைல சீக்கிரம் போகனும்னு”

“நம்ம கரெக்ட் டைமுக்கு போகலன்னா அங்க என்ன மாப்பிள தாலி கட்டறதையா நிறுத்த போறாரு”

“இப்படியெல்லாம் அதிக பிரசங்கித்தனமா பேசாத. உங்க அக்கா மாமனாரோட தம்பி பொண்ணு கல்யாணம். ஏற்கனவே அவ மாமனார் வேற உங்க அப்பா வராததுக்கே கோச்சுக்குவாரானு பயமா இருக்கு. நம்ம லேட்டா போனா அவ்வளவுதான்”

“அந்த ஆள எங்கயாவது போ சொல்லு. அப்பா என்ன ஓடி விளையாடவா போயிருக்காரு. வேலை விஷயமாத்தானே போயிருக்காரு. இவர் தப்பா நெனச்சா நாம ஒண்ணும் பண்ண முடியாது”

“இந்த பேச்சு பேசறதுக்கு நீ எழுந்திரிச்சு குளிச்சி, கெளம்பியிருக்கலாம்”

“சரி. நான் குளிச்சிட்டு வரேன்… காபி போட்டு வைங்க”

“அதெல்லாம் கல்யாண மண்டபத்துல போய் குடிச்சுக்கலாம்… நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா”

கல்யாண மண்டபத்திற்குள் போய் சேரும் போது மணி சரியாக 6:45.

“ஏம்மா… கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?” அக்காவின் குரலில் வழக்கம் போல் அதிகாரம் தெரிந்தது.

“எல்லாம் இவன் பண்ண வேல… இவன எழுப்பறதுக்குள்ள என் உயிரே போகுது”

“ஏன்டா ஒரு நாள் கூட உன்னால சீக்கிரம் எழுந்திரிக்க முடியாதா?”

“ஏன் இப்படி டென்ஷன் ஆகற??? நாங்க தான் முகூர்த்த நேரத்துக்கு முன்னாடி வந்துட்டோம் இல்ல”

“ஆமாம். எங்க உங்க வீட்ல இருந்து யாரையும் காணோம்னு இப்பதான் எங்க மாமியார் கேட்டாங்க”

“ஏன் ஆரத்தி எடுத்து வரவேற்கவா???”

“உனக்கு திமிருதான். அவுங்க முன்னாடி இப்படியெல்லாம் பேசி வைக்காத. அப்பறம் எனக்குத்தான் பிரச்சனை”

“சரி சரி நான் எதுவும் பேசல. அதுவும் இல்லாம நான் முகூர்த்தம் முடிஞ்சவுடனே கிளம்பறேன். எனக்கு கம்பெனில நிறைய வேலை இருக்கு”

“சரி முகூர்த்தம் முடிஞ்சவுடனே ஏழரைக்கு எல்லாம் பந்தி போட்டுடுவாங்க… சாப்பிட்டு போயிடு” அம்மாவின் குரல்

“என்னது பந்தியா??? ஏம்மா உயிர வாங்கற. காலங்காத்தால இவனுங்க கேசரி, இட்லி, வடை, பூரி, பொங்கல்னு தூக்கம் வர ஐட்டமா போட்டு உசுர வாங்குவாங்க. நான் கம்பெனில போய் ஏதாவது சாப்பிட்டுக்கறேன்”

“ஏன்டா ஐநூறு ரூபா மொய் வெக்கறோம். ரெண்டு பேர் கூட சாப்பிடலனா எப்படி?”

“ஏன். தெருல இருக்கறவங்க எல்லாத்தயும் கூப்பிட்டு வர வேண்டியதுதான? போம்மா நீ மொய் வெக்கறதால எல்லாம் என்னால சாப்பிட முடியாது”

எங்க அக்காவோட மாமியார் அவளை பார்த்து ஏதோ ஜாடை செய்து கூப்பிட அவள் இடத்தை காலி செய்தாள். அப்போது எங்களை பார்த்து நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தார்.

“நீங்க சாந்தி அம்மாதானே” எங்க அம்மாவை பார்த்து கேட்டார் அவர்.
ஏன் எல்லாம் இப்படி இருக்காங்க? கிருஷ்ணா அம்மானு சொன்னா குறைஞ்சிடுவாங்களா? வீட்ல இருக்குற பொண்ணு பேற சொல்லிதான் எல்லாம் சொல்லுவாங்க. அவளுக்கு தான் கல்யாணமாகி மாமியார் விட்டுக்கு போயிட்டா இல்ல. இனியாவது கிருஷ்ணா அம்மானு சொன்னா என்ன?
இந்த மாதிரி யார் சொன்னாலும் எனக்கு அவர்கள் மேல் வெறுப்புத்தான் வரும். இவர் மேலும் வெறுப்பு வர தவறவில்லை.

“ஆமாம். நீங்க அருண் அம்மாதான?”
எங்க அம்மா நல்லவங்களா இருக்காங்க. பரவாயில்லை!!!

“ஆமாம். பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. அருண் நாலு வயிசு இருக்கும் போது கொயம்பத்தூர்ல இருந்து கெளம்பனது”

“ஆமாம். பதினஞ்சு பதினாறு வருஷம் ஆகிடுச்சு. அதான் பாத்தவுடனே கொஞ்சம் சந்தேகமா இருந்துச்சு”

“ஆமாம் சாந்தி, கிருஷ்ணா எல்லாம் எப்படி இருக்காங்க. என்ன பண்றாங்க?”

“சாந்திக்கு கல்யாணமாயிடுச்சு. 1 பையன் இருக்கான் 2 வயசு ஆகுது. இதுதான் கிருஷ்ணா. இஞ்சினியரிங் படிச்சுட்டு இங்க ப்ரிக்கால்ல வேலை செய்யறான்”

“ஓ! இவ்வளவு பெரிய பையானா வளந்துட்டான்”

ஆமாம் பதினஞ்சு வருஷமா வளராம அப்பு கமல் மாதிரியா இருப்பாங்க? லேசாக சிரித்து வைத்தேன்.

“சின்ன வயசுல எப்பவும் நீ அவுங்க வீட்லதான் இருப்ப” அம்மா ஒத்து ஊதினார்கள்.

“இப்ப உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்காது. அருண்ட கிள்ளு வாங்கிட்டு அழுதுட்டே உங்க வீட்டுக்கு ஓடிடுவ”

ஓ! இது வேற நடந்துருக்கா… அவனுக்கு இருக்கு.

“ஆமாம் அதுக்குத்தான் இவன் சூடு வெச்சிட்டானே!” அம்மா என்னை பார்த்து முறைத்து கொண்டே சொன்னார்கள்.
ஓ!!! பரவாயில்ல… அப்பவே நம்ம வெயிட்டு காமிச்சிட்டோம். மனதிற்குள் ஒரு சந்தோஷம்.

“ஆமாம் அருண் இப்ப என்ன பண்றா?”

“அருண் இங்க தான் காலேஜ்ல படிக்கறா”

“ஓ!!! காலேஜ் படிக்கிறாளா??? எந்த காலேஜ்”

“இங்கதான் அவினாஸிலிங்கம்ல ஹோம் சயின்ஸ் படிக்கிறா. இங்கதான நின்னுட்டு இருந்தா. எங்க காணோம்???
அங்க நின்னுட்டு இருக்கா. இருங்க கூப்பிட்டு வரேன்”

ஓ!!! அருண் பையன் இல்லயா? மனசன கொழப்பறதுலயே இருங்க…
மம்மி வீட்டுக்கு வா உனக்கு இருக்கு

அந்த ஆண்ட்டி சென்று 2 நிமிடத்திற்குள் வந்தார்கள். இந்த முறை அவருடன் ஒரு அழகான தேவதை இருந்தாள். பிங் சுடிதாரில் அழகாக இருந்தாள்.
பொதுவா சொந்தகாரர்கள் இருக்கும் இடத்தில் நான் நல்ல பிள்ளை. ஆனா இந்த முறை அம்மா பக்கத்துல இருந்ததையும் மறந்துவிட்டேன்.

2 நிமிடத்திற்குள் அறிமுகப்படலம் முடிந்து திரும்பிவிட்டாள். நானோ கனவுலகிலே சஞ்சரித்து இருந்தேன். அக்கா வந்து பேசியவுடன் தான் நினைவு திரும்பியது.

ஒருவழியாக சாப்பாடு பந்தியிலிருந்தும் தப்பித்து வெளியே வந்தேன்.

“ஏன் தம்பூல பையை வாங்காம வந்துட்ட? தேங்கா போட்ருக்காங்க”
அம்மா அக்கறையாக வழியனுப்ப வந்தாங்கனு பாத்தேன்… இல்ல மொய்கணக்க எப்படியாவது சரி பண்ணனும் வந்துருக்காங்க

“அம்மா அசிங்கமா தாம்பூலம் எல்லாம் என்னால வாங்க முடியாது. நீ பொறுமையா வரும் போது வாங்கிட்டு வா”

“சரி. நீ என்ன சொன்னாலும் கேக்கவே மாட்ட”

வெளியே வந்து திரும்பும் போது மண்டபத்திற்கு வெளியில் அவள் நின்று கொண்டிருந்தாள்.

“என்னங்க இங்க நின்னூட்டு இருக்கீங்க?” கூச்சப்படாமல் பேசினேன். அவளை தவிர வேறு யார் நின்றிருந்தாலும் பேசியிருக்க மாட்டேன் என்றே தோன்றியது.

“இல்ல காலேஜ்க்கு நேரமாச்சு. ஆட்டோ கிடைக்குமானு பாத்துட்டு இருக்கேன்”

“நானும் அந்த வழியாத்தான் போறேன். வேணும்னா வாங்க ட்ராப் பண்ணிடறேன்”

“இல்லைங்க உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்”

“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க… நான் அந்த வழியாத்தான் போறேன்”

“சரி எனக்கும் நேரமாச்சு. நீங்க அந்த டர்னிங்ல நிக்கறீங்களா? நான் வந்து ஏறிக்கிறேன். இங்க யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க”

“யாருங்க தப்பா நினைக்கப் போறா. நீங்க வாங்க”

“இல்லைங்க வேணாம்” தயங்கினாள்.

“சரி நான் டர்னிங்ல வெயிட் பண்றேன்”
எல்லாமே இப்படித்தான் ஊர ஏமாத்தறாங்களா?

சரியாக மூன்று நிமிடத்திற்குள் வந்து வண்டியில் என் பின்னால் அமர்ந்தாள்.
இன்னைக்கு நல்ல நாள்தான்.

“ஆமாம்… உங்க பேர் கிருஷ்ணாதான?”

“ஆமாம்” இது தெரியாமத்தான் என் பின்னாடி வந்து உட்கார்ந்தாளா? கலிகாலம்.
“உங்க பேர் அருணாங்க?”

“அருண் இல்லைங்க… அருணா. வீட்ல பையன் யாரும் இல்லாததால என்ன அருண்னு கூப்பிட்டு சந்தோஷப்பட்டுக்கறாங்க. சரி நீங்க சாப்பிட்டீங்களா?”

“இல்லை. நீங்க?”

“நானும் சாப்பிடல. முதல் பந்தில உக்காந்தா அசிங்கமா இருக்குமேனு சாப்பிடாமலே வந்துட்டேன். எங்க காலேஜ் முன்னாடி ஒரு அண்ணபூர்ணா இருக்கு அங்க வேணும்னா ரெண்டு பேரும் சாப்பிடலாமா?”

“சாப்பிடலாமே” இன்னைக்கு உண்மையாலுமே அதிர்ஷ்ட நாள்தான்.

இருவரும் ஆளுக்கு ஒரு ரோஸ்ட் ஆர்டர் செய்தோம்.

“உங்களத்தான் நான் நினைவு தெரிஞ்ச நாளா தேடிக்கிட்டு இருக்கேன்”

என்னடா இப்படி சொல்றா? இவ எதுக்கு என்ன தேடனும். ஒரு வேளை “தித்திக்குதே”வா இருக்குமா? ச்ச இத கூட ஞாபகம் வெச்சிக்காம இருந்துட்டேனே. என்னை நானே நொந்து கொண்டேன்.

“என்னையா? ஏன்?”

“இங்க பாருங்க”
அவள் கையை நீட்டினால், அதில் நீட்டமாக ஒரு தழும்பு தெரிந்தது.

“என்னங்க எதோ தழும்பு மாதிரி இருக்கு”

“நல்லா கேளுங்க! நீங்க வெச்சது தான். நான் ஏதோ தெரியாம கிள்ளிட்டன்னு அடுப்புல இருந்து கொள்ளிக்கட்டை எடுத்து என் கைல வெச்சிட்டீங்களாம். எங்க அம்மா சொன்னாங்க”

இது கேக்கத்தான் என் கூட வண்டீல வந்தாளா? அக்கறையா சாப்பிட போகலாம்னு சொன்னது கூட இதுக்குத்தானா? நான் தான் அவசரப்பட்டுட்டனா?

“என்னங்க நான் என்ன தெரிஞ்சா பண்ணேன். ஏதோ தெரியாம கோபத்துல பண்ணது. எனக்கு சத்தியமா ஞாபகம் கூட இல்ல. அப்ப எனக்கு வயசு என்னா ஒரு ஆறு இல்லனா ஏழு இருக்குமாங்க? அப்ப பண்ண தப்புக்கு இப்ப வந்து கேட்டீங்கனா நான் என்ன பண்ண முடியும்? வேணும்னா சொல்லுங்க ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம்”
அதிகமா பேசின மாதிரி தோன்றியது.

“ஆமாம். இதுக்கு போய் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணுவாங்களா? தெரியாம ஏதாவது சின்னதா பண்ணியிருந்தா பரவாயில்ல. தண்ணி காயறதுக்கு அடுப்பாங்கறைல வெச்சிருந்த விறகு கட்டய எடுத்துட்டு வந்து வெச்சிருக்கீங்க” கோபமாக பேசினாள். ஆனால் சமாதானமாகிவிடுவாள் என்று தோன்றியது.

“சரி அந்த சம்பவம்(?) உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

“இல்ல. எங்க அம்மாதான் சொன்னாங்க”

“பாருங்க உங்களுக்கும் ஞாபகமில்ல. எனக்கும் ஞாபகமில்ல. அப்பறம் எதுக்கு நீங்க இவ்வளவு டென்ஷம் ஆகறிங்க?”

“ஆமாம். உங்களுக்கு என்ன? சின்ன வயசுல எல்லாம் என்ன கரிகால சோழன் மாதிரி இவ கரிக்கை சோழினு ஓட்டுவாங்க. அப்ப இருந்தே உங்க மேல எனக்கு கோபம்”

“கரிக்கை சோழி ரொம்ப நல்லா இருக்கே!”

“என்னது?” முறைத்தாள். ஆனால் செல்லமாக முறைப்பது போல்தான் எனக்கு தோன்றியது.

“இப்ப என்ன பண்ண சொல்றீங்க? வேணும்னா நீங்களும் என் கைய சுட்டுக்கோங்க. தெரிஞ்சே யாராவது இந்த மாதிரி பண்ணுவாங்களா? அதுவும் அழகான பொண்ணு கைய சுடறதுக்கு யாருக்காவது மனசு வருமா?” ஓரளவு வழியாமல் சொன்னேன்.

“ரொம்ப ஐஸ் வெக்காதீங்க. நான் உங்களுக்கு சூடு எல்லாம் வெக்க போறதில்ல. இந்த பில்ல பே பண்ணிட்டு, என்ன காலேஜ்ல இறக்கி விட்டுடுங்க”
சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“நான் தெரியாம பண்ணிருந்தாலும், ஐ ரியலி ஃபீல் சாரி. மன்னிச்சுடுங்க”

“பரவாயில்ல. உங்க மேல ரொம்ப கோவமா இருந்தேன். இப்ப எல்லாமே போயிடுச்சு”

ஒரு வழியாக அவளை காலேஜில் இறக்கிவிட்டு, வேலைக்கு சென்றேன். நாள் முழுதும் அவள் நியாபகமாகவே இருந்தது. வீட்டிற்கு வந்து சேரும் போது மணி 7 ஆகியிருந்தது.

“இவ எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்தா? அவ மாமியார் வீட்ல இருந்து துரத்திவிட்டுட்டாங்களா?”

“டேய்! என்ன யாரும் தொரத்தல.. உன்னத்தான் நம்ம வீட்ல இருந்து துரத்திடுவாங்கனு நினைக்கிறேன்” அக்கா சிரித்து கொண்டே சொன்னாள்.

“என்ன யாரும் துரத்த முடியாது. அம்மா சூடா ஒரு கப் காபி கொடேன்”

“ஒரு அஞ்சு நிமிஷம் இரு. கொண்டு வரேன்”

“ஆமாம். அக்கா இன்னைக்கு காலைல ஒரு ஆண்ட்டி நம்ம அம்மாட்ட பேசிக்கிட்டு இருந்தாங்களே, அவுங்கள உனக்கு ஞாபகம் இருக்கா?”

“இருக்கே! நம்ம அருண் அம்மா. ஏன் உனக்கு ஞாபகமில்லையா?”

“இல்ல. அவுங்க நமக்கு என்ன வேணும்?”

“நம்ம பக்கத்து வீட்ல இருந்தாங்க. இப்ப சொந்தக்காரவங்க ஆகிட்டாங்க!” நக்கலாக சிரித்து கொண்டே சொன்னாள். மனசுல பெரிய புத்திசாலினு நினைப்பு.

“கொஞ்சம் தெளிவா சொல்லு” கோபமாக கேட்டேன்

“எங்க மாமனாரோட தங்கச்சி விட்டுக்காரோரோட தம்பியோட சகல விட்டுக்காரரோட தங்கச்சியோட பொண்ணுட பையனைத்தான் அவுங்க கல்யாணம் பண்ணியிருக்காங்க” மறுபடியும் அதே நக்கல் சிரிப்பு.

“அவுங்க நமக்கு என்ன வேணும்” கோபத்தை அடக்கி கொண்டு கேட்டேன்

“அவங்க வீட்டுக்காரர் உனக்கு அண்ணன் முறை ஆகறாரு”

“என்னது? அண்ணனா? அவர் வயசு என்ன? என் வயசு என்ன? இப்ப உண்மைய சொல்லல உன் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது தலைல ப்ளேடு பொட்டுடுவன். ஆமாம்”

“ஏன்டீ அவனோட விளையாடற? அண்ணனும் இல்ல தம்பியுமில்ல. கொஞ்சம் தூரத்து சொந்தம்தான். அந்த பொண்ணு அருண பாத்தவுடனே எனக்கு புடிச்சு போச்சுடா. சரின்னு அவ அம்மாட்ட பேசி பாத்தேன் அவளும் சரி ஜாதகம் அனுப்பறேன் ஒத்து வந்துச்சுனா முடிச்சிக்கலாம்னு சொன்னா. உனக்கு புடிச்சியிருக்கா?”

அம்மா நீயே என் தெய்வம். உனக்கு கண்டிப்பாக கோவில் கட்டணும்.

“ஆமாம். அந்த பொண்ண இவன் “பே”னு பாத்தததான் கல்யாண மண்டபத்துல எல்லாரும் பாத்தாங்களே” அக்கா நக்கலாக சிரித்து கொண்டே சொன்னாள்.
இதுக்குத்தான் அப்ப இருந்து இப்படி நக்கலா சிரிச்சிக்கிட்டே இருந்தாளா?

“என்ன கேக்காம எப்படி நீங்க ஜாதகம் பத்தியெல்லாம் பேசலாம்” கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தேன்.

“சரி. அவனுக்கு பிடிக்கலயாம். வேணாம்னு சொல்லிடுங்கம்மா” அக்கா ரொம்ப அக்கறையாக பேசினாள்.

“அதில்லமா… ஜாதகம் எல்லாம் மூட நம்பிக்கை. அது பாக்க வேணாம்னு சொன்னேன்” நான் வழிந்து கொண்டே சொன்னதை பார்த்து அம்மாவும், அக்காவும் சிரித்தனர்.

லிப்ட் ப்ளீஸ்-3

பாகம்-1 பாகம்-2

————————————–7————————————–

“என்னங்க சகல… இன்னைக்கு உங்க ஃபிரெண்ட்ஸ் யாரும் லன்ச்க்கு கூப்பிடலயா???”

“அன்னைக்கு சாப்பிட்ட லன்ச்சே இன்னும் செரிக்காம இருக்கு”

“உங்களுக்கு மட்டுமா??? எனக்கும்தான்… நீங்க ஏன் வண்டி சாவிய குடுத்திங்கனு என்ன புடிச்சி திட்டிக்கிட்டே இருந்தா”

“பின்ன… இவரே யூஸ் பண்ணாத வண்டிய குடுத்தா திட்டாம என்ன செய்வாங்க??”

“பரவால விடுக்கா… எல்லாம் இவர சொல்லனும்.
இப்ப நெனச்சாலும் எனக்கு கொல நடுங்குது.
நல்ல வேள புண்ணியவான் ஒருத்தன் கார நிறுத்தி ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போனான்… இல்லனா… நெனிச்சுப்பாக்கவே பயமா இருக்கு”

————————————–8————————————–

“என்ன சரவணன்… ஏதோ ரொம்ப சிக்கலான கேஸ்னு சொன்னீங்க!!! பாத்தா அப்படி ஒண்ணும் தெரியலையே”

“சார்… நீங்க இது என்னவா இருக்கும்னு ஃபீல் பண்றீங்க???”

“உங்க குழப்பம் என்னனு சொல்லுங்க… நான் அப்பறம் சொல்றேன்”

“நான் டெஸ்ட் பண்ணத வெச்சி பாக்கும் பொது அவருக்கு Schizophreniaவா இருக்குமோனு சந்தேகப்படறேன்”

“எத வெச்சி அப்படி சொல்றீங்க???”

“முதல் காரணம்… அவர் பேச்சு சில சமயம் சம்பந்தமே இல்லாம இருந்துச்சு”

“அடுத்து…”

“அவர ஹிப்னாடிக் ட்ரிட்மெண்ட் பண்ணும் போது அவர் ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஏதோ ஆக்ஸிடெண்ட் பண்ணியிருக்கார். அதுல வண்டி ஓட்னவர் இறந்துட்டார். அவர் மனைவி விதவையாகிட்டாங்கனு தீர்க்கமா நம்பறார். அதுவும் இல்லாம அவுங்க இவர பழிவாங்க தேடறாங்கனு பரிபூர்ணமா நம்பறார்”

“வேற…”

“அவருக்கு நிறைய உருவங்கள் நகரமாதிரி தெரிஞ்சிருக்கு… ஆனா அதெல்லாம் போட்டோல இருக்குற உருவங்கள்… இந்த மாதிரி இன்னும் நிறைய இருக்கு”

“சரி… இப்ப உங்க சந்தேகம் என்ன??? சொல்லுங்க”

“போதுவா Schizophrenia பேஷண்ட்டுக்கு ஆடியோ ஹாலோஸினேஷன் தான இருக்கும்… இவருக்கு எப்படி விஷ்வல் ஹாலோஸினேஷன் இருக்குன்றதுதான்”

“சரவணன்!!! யு ஹேவ் ப்ருவ்ட் யுவர் பிரில்லியன்ஸி. பட் நீங்க பண்ண தப்பு நீங்க முதல்ல ஒரு விஷயத்தை திர்மானிச்சிட்டு அப்பறம் ஆராய ஆரம்பிச்சிருக்கிங்க. சரி Schizophreniaனா என்ன சொல்லுங்க?”

“அது ஒருவகையான மன நோய். அது இதனாலதான் வருதுனு சொல்ல முடியாது. ஆனால் அதனுடைய அறிகுறிகள் ஒரு விஷயத்தில் தீவிர நம்பிக்கை, மாய ஒலிகள், நேர்த்தியற்ற பேச்சு, தீவிரமடையும் நிலையில் செயல்பட முடியாத நிலை”

“சரியா சொன்னீங்க… ஆனா அவரோட மிட் பிரைனும் பான்ஸ்ம் இருக்குற ஏரியா அஃபக்ட் ஆகியிருக்கு.. அத கவனிச்சீங்களா???”

“சார்… யூ மீன் டு சே… இட்ஸ் பெண்டங்குலார் ஹாலோஸினோஸிஸ்” (Peduncular Hallucinosis)

“யு ஆர் அப்சல்யூட்லி ரைட்… பொதுவா இந்த டிஸிஸால பாதிக்கப்பட்டவங்க கண்ணுக்கு இந்த மாதிரி பல மாய தோற்றங்கள் தெரியும். முதல்ல சொன்னதுக்கும் இதுக்கும் வித்தியாசம்… இதுல மாய உருவங்கள் தெரியும் ஆனா Schizophreniaல மாய ஒலிகள் மட்டும் கேக்கும்.”

“ஆனா பெண்டங்குலார் ஹாலோஸினோஸிஸ் மாய குரல் எதுவும் கேக்காதே… ”

“அங்க தான் நீங்க தப்பு பண்ணறீங்க… Caplan 1980ல பண்ண முக்கியமான தீஸிஸ்ல இது இருக்கு… இந்த நோயால பாதிக்கப்பட்டங்களுக்கு சில சமயம் உருவங்களுடன் சத்தங்களும் கேட்கும்னு சொல்லி ப்ரூஃப் கொடுத்துருக்காரு”

“சார்… ஆனா அவர் பண்ண அந்த ஆக்ஸிடெண்ட் பயம்… அந்த பொண்ணு பழி வாங்குவானு அவர் கொண்டிருந்த தீவிர நம்பிக்கை”

“அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே பயம்னு… அவ்வளவுதான்.
அதுக்குத்தான் மனசாட்சினு பேர்”

“எனக்கு என்னுமோ அவர் Schizophreniaவாலயும் அஃபக்ட் ஆகியிருப்பார்னு இன்னமும் தோனுது சார்…
எனக்கு இருந்த அந்த ஒரு சின்ன சந்தேகத்தால தான் நான் அவர்ட எதையும் சொல்லல…”

“குட்… டெஸ்ட்க்கு எப்ப வருவார்னு சொன்னீங்க???”

“நாளைக்கு சாயந்திரம் 7 மணிக்கு அப்பாயின்மெண்ட்”

“அப்ப நாளைக்கு தெரிஞ்சிடும்…”

—————————————9—————————————

“என்னது!!! ஹார்ட் பீட் முதல்ல நின்னதுக்கப்பறம்தான் ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கா???”

“ஆமாம் சார்… டாக்டர் அப்படிதான் சொன்னாரு. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்லயும் ஹார்ட் அட்டாக்னு தான் எழுதியிருக்காறாம். எதுக்கும் உங்கள ஒரு தடவ போன் பண்ண சொன்னாரு”

“இந்த போனை கண்டுபிடிச்சவன முதல்ல உள்ள தூக்கி போடனும்யா. எதுக்கு எடுத்தாலும் போன் பண்ண சொல்லிடுவானுங்க… அதுதான் ஹார்ட் அட்டாக்னு ரிப்போர்ட் கொடுத்துட்டாரில்ல. கேஸ க்ளோஸ் பண்ண வேண்டியதுதான்”

(முற்றும்)

லிப்ட் ப்ளீஸ் -2

பாகம்-1
———————————————-4——————————————–

“இப்பவே மணி 5 ஆச்சு… சீக்கிரம் போங்க. வீட்டுக்கு போய் சேரதுக்குள்ள எப்படியும் 8 ஆயிடும்”

“ஏய்!!! ஐயா டிரைவிங் பத்தி என்ன நினைச்ச!!! 6:30க்கு எல்லாம் வீட்ல இருக்கலாம்”

“ஐயோ சாமி !!! நீங்க பொறுமையாவே போங்க… லேட்டா போனாலும் பிரச்சனையில்லை”

“என்ன சீக்கிரம் போன்னு சொல்லற… பொறுமையா போனு சொல்லற… மனஷன பைத்தியமாக்கறதுன்னு முடிவு பண்ணிட்ட”

“உங்க இஷ்டத்துக்கு ஓட்டுங்க!!! நான் எதுவும் சொல்லல”

…..

“என்னங்க இப்படி தூறல் போட ஆரம்பிச்சிடுச்சு… மழை பெய்யறதுக்குள்ள சீக்கிரம் போங்க”

“கவலைப்படாத சீக்கிரம் போய் சேந்துடலாம்…”

பத்தாவது ஹேர் பின் வளைவில் வண்டி அதன் கட்டுப்பாட்டை இழந்தது. மழையில் நனைந்து வழுவழுப்பாக இருந்த ரோட்டை பிரேக்கால் வெற்றி கொள்ள முடியவில்லை. வண்டி எதிரில் வந்த காரில் மோதியது.

———————————————-5——————————————–

“என்னங்க இரத்தம்னா பிடிக்குமா??? ”

“ஆமாங்க… அதுவும் பாவம் செய்றவங்க இரத்தம்னா ரொம்ப பிடிக்கும்”

அவள் கையில் மின்னிய கத்தி அந்த இருளிலும் அவன் கண்களில் பயத்தை உண்டாக்கி அதன் கடமையை செய்தது.

“ஏ…என்ன செய்யப்போற நீ… நான் எந்த தப்பும் பண்ணல”

“என்ன நீ எதுவும் தப்பு பண்ணலையா??? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஊட்டில நடந்தது உனக்கு நியாபகமில்ல” அவள் வார்த்தைகள் மிக கடுமையாக இருந்தன.

“ஊட்டிலயா??? நான் எந்த தப்பும் செய்யலையே”

“ஊட்டில இருந்து இறங்கற ஒரு வண்டில மோதிட்டு வந்தியே நியாபகமில்ல???” அவள் கண்கள் சிவந்திருந்தன.

“அது என் தப்பு இல்ல.. அந்த டூ-வீலர்தான் ராங் சைட்ல வந்தான்”

“இருக்கட்டும்… ரெண்டு உயிர் அடிப்பட்டு துடிச்சிட்டு இருக்கும் போது… உனக்கு வண்டிய நிறுத்தி காப்பாத்தனும்னு தோனல… இல்ல”

“போலிஸ் கேஸாகிடும்னு பயந்து நிறுத்தாம வந்துட்டேன்… என்ன மன்னிச்சிடு” அவன் வார்த்தைகள் பயத்தில் குழறின.

“அன்னைக்கு நீ மட்டும் நிறுத்தியிருந்தா நான் என் புருஷன இழந்திருக்கமாட்டேன்…”

“வேணாம் என்ன எதுவும் பண்ணிடாத… ப்ளீஸ்…. என்ன எதுவும் பண்ணிடாத ஆஆஆஆஆஆஆஆஆ……….”

———————————————-6——————————————–

“என்ன எஸ்.ஐ சார்… காலைலே ஆக்ஸிடெண்ட் கேஸா”

“ஆமாம்… நம்ம தாலி அறுக்கறத்துக்குனே வரானுங்க.
நானும் இந்த ஏரியா வேணாம்… மாத்திக்குடுங்கனா அந்த டி.எஸ்.பி வேற விடமாட்றான்… வாரத்துக்கு ஒரு பொணம் பாக்க வேண்டியதா இருக்கு”

“இன்னைக்கு எத்தன???”

“ஒன்னுதான்… தண்ணியடிச்சிட்டு ஓட்டிருப்பான்னு நினைக்கறேன். மரத்துல போய் மோதியிருக்கான்…
சரி… டாக்டர் எப்ப வருவாரு???”

“போன் பண்ணிட்டன் சார்… வந்துடுவாரு. ஷிப்ட் முடிஞ்சி அஞ்சி நிமிஷத்துக்கு முந்திதான் மூர்த்தி சார் போனாரு”

“சரி… நான் ஒரு கான்ஸ்டெபுல இங்க போட்டுட்டு போறேன். போஸ்ட்மார்டம் முடிஞ்சவுடனே ரிப்போர்ட்ட அவர்ட குடுத்துடுங்க. இன்னைக்கு வேற என் மச்சான் ஊர்ல இருந்து வரான். நான் 7 மணிக்குள்ள கறி வாங்காம போனா என் வூட்டுக்காரி என்ன வீட்லயே சேத்துக்க மாட்டா… நான் ரொம்ப நேரம் இங்க வெயிட் பண்ண முடியாது”

“சரி சார்…”

“மாரிமுத்து… நான் எஸ்.ஐதான் பேசறன். உடனே புறப்பட்டு ஜி.எச் வந்துடுங்க. ஒரு ஆக்ஸிடெண்ட் கேஸ். நீங்க பக்கத்துல இருந்து போஸ்ட் மார்ட்டம் ரிப்போட்ட வாங்கிட்டு வந்துடுங்க.. நீங்க வர வரைக்கும் நான் இங்க வெயிட் பண்றேன்”

(தொடரும்…)

பாகம்-3

லிப்ட் ப்ளீஸ் – 1!!!

————————————–1——————————————-

ஈஸிஆர் ரோட்டின் இருளை கிழித்துக் கொண்டு சென்னையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த சிகப்பு நிற மாருதி எஸ்டீம்.

வழக்கத்தைவிட வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பாண்டியிலிருந்து சென்னை வரும் சொகுசு பேருந்துகளே பெரும்பாலும் அந்நேரத்தில் பார்க்க முடிந்தது.

வேகமாக சென்று கொண்டிருந்த அந்த எஸ்டீம், தன் வேகத்தை குறைத்து சாலையின் ஓரத்தில் நின்றது. காரின் ஜன்னல் திறந்தது…

“என்னங்க இந்த நேரத்திலும் லிஃப்டா???” காரிலிருந்து கேட்டவருக்கு சுமார் முப்பத்தி ஐந்து வயதிருக்கும் போல் தோன்றியது.

“ஆமாங்க… கொஞ்சம் அவசரமா கோயம்பேடு போகனும். நீங்க சிட்டிக்குள்ள இறக்கிவிட்டுட்டீங்கனா நான் டேக்ஸி பிடிச்சி போயிக்கறேன்”

“நான் அண்ணா நகர்தான் போறேன்… அப்படியே உங்கள கோயம்பேடுல இறக்கி விட்டுடறன். ஏறுங்க!!!”

காருக்குள் ஏறிய பெண்ணிற்கு சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும் போல் தோன்றியது. அந்த காலத்து காஞ்சனாவை நியாபகப்படுத்தினாள்.

“என்னங்க இந்த நேரத்துல இப்படி தனியா இந்த மாதிரி இடத்துல நின்னுக்கிட்டு இருக்கீங்களே.. அப்படி என்ன அவசரம். காலைல போகக்கூடாதா?”

“இல்லைங்க சேலத்துல இருக்கிற அப்பாக்கு உடம்பு சரியில்ல. நெஞ்சுவலினு போன் வந்துச்சு… சரி எப்படியும் ஏதாவது பஸ் பிடிச்சி போயிடலாம்னு புறப்பட்டுட்டேன்”

“பரவாயில்லைங்க இந்த காலத்துல பொண்ணுங்க எல்லாம் தைரியமா இருக்கீங்க”

“இல்லைனா பொழைக்க முடியாதுங்களே”

“அதுவும் சரிதான்… நீங்க என்ன பண்றீங்க?”

“நான் எம்.எஸ்.ஸி மைக்ரோபயலஜி படிச்சிருக்கேன். இங்க திருவான்மியூர்ல இருக்குற அன்னை ஹாஸ்பிட்டல்ல லேப் டெக்னீஷியனா இருக்கிறேன்”

“ஓ!!! அப்ப நிறைய இரத்தம் பாப்பீங்க போல இருக்கே!!!”

“ஹிம்… இரத்தம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்…”

….

காரில் ஒரு இனம் புரியாத நிசப்தம் நிலவியது.

————————————–2——————————————-

“என்னங்க இப்படி பக்கத்துல இருக்குற பிரெண்ட் வீட்டுக்கு போறன்னு அக்காட்ட சொல்லிட்டு இப்ப எங்கயோ போயிட்டு இருக்கீங்க???”

“கொஞ்சம் பேசாம அமைதியா வா”

“சரி. நம்ம இப்ப எங்க போறோம்???”

“ஊட்டி”

“என்ன ஊட்டியா??? என்னங்க இப்படி பண்றீங்க”

“பின்ன டூ-வீலர்ல ஊட்டி போறோம்னு சொன்னா உங்க வீட்ல ஒத்துக்குவாங்களா??? அதனாலதான் பிரெண்ட் வீட்ல லன்ச்க்குன்னு சொல்லி கூப்பிட்டு வந்துருக்கேன். சாயந்திரம் 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு போயிடலாம்… அமைதியா வா”

“இருந்தாலும் நீங்க பண்றது தப்பு.. ஃபிரெண்ட் வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்டு எங்க மாமாகிட்ட வண்டி வாங்கிட்டு வந்து இப்படி ஊட்டி போனாம்னு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க”

“இங்க பாரு… நான் காலேஜ் படிக்கும் போதே பிரெண்ட்ஸ் கூட நிறைய தடவை டூ-வீலர்ல ஊட்டி போயிருக்கேன். அப்பவே அவன் அவன் கேர்ள் பிரெண்ட்ஸோட வருவாங்க. நான் மட்டும் எந்த பொண்ணையும் ஏத்தாம தனியா வருவேன். அப்பவே மனசுல தீர்மானிச்சுக்கிட்டேன். கால்யாணம் ஆனவுடனே கண்டிப்பா என் பொண்டாட்டிய வண்டில கூப்பிட்டு வருவேன்னு. இப்பவே 6 மாசம் லேட். நல்ல வேளை உங்க அக்கா வீடு கோயம்பத்தூர்ல இருக்கு”

“இருந்தாலும் யாராவது பாத்து மாமாகிட்ட சொல்லிட்டா”

“அதெல்லாம் யாரும் பாக்க மாட்டாங்க. தெரிஞ்சாலும் உங்க மாமா எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டாரு. நான் என் பொண்டாட்டிய தான கூப்பிட்டு போறேன். இந்த மாதிரி பேசாம சந்தோஷமா எதாவது பேசிட்டு வா”

“நீங்க நிஜமாலுமே எந்த பொண்ணையும் கூப்பிட்டு போகலையா???”

“பார்த்தியா!!! இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் சந்தேக புத்தி போகவே போகாது”

————————————–3——————————————-

“உங்க ரெக்கார்ட பாத்தா நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கு”

“டாக்டர்… நீங்க சரியா புரிஞ்சிக்க மாட்றீங்க”

“இல்ல. நீங்க சொல்றது எனக்கு புரியுது. எனக்கு என்னுமோ நீங்க நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கு.எதுக்கும் நான் என் சீனியர் டாக்டர்கிட்ட கன்ஸெல்ட் பண்ணி சொல்றன். அவர் ஒரு கான்ஃபரன்ஸ்க்கு டெல்லி போயிருக்கார். நீங்க எதுக்கும் அடுத்த வாரம் வாங்க… நான் அப்பாயின்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிடறேன். அவர் டெஸ்ட் பண்ணா கரெக்டா இருக்கும்னு நான் ஃபீல் பண்றேன்”

“ஓகே டாக்டர். தேங்க்ஸ்”

“ஓகே. அடுத்த வாரம் பாக்கலாம்”

(தொடரும்…)

பாகம்-2 பாகம்-3

பிரிவு – 4

பிரிவு-1 பிரிவு-2 பிரிவு-3

“திவ்யா, நான் வர வாரம் இல்லாம அடுத்த வாரம் சனிக்கிழமை சிக்காகோ கிளம்பறன்”

“ஹிம்… இப்பதான் ஐஸ் சொன்னா”

“இப்ப சந்தோஷமா???”

“என் ஃபிரெண்ட் ஆன் சைட் போனா எனக்கு சந்தோஷம்தான். ஏன் உனக்கு இல்லையா???”

“ஹிம்… அதெல்லாம் எதுக்கு. இந்த வாரம் ஷாப்பிங் போகனும்”

“ஆமாம் நிறைய வாங்க வேண்டியதிருக்கும். என் பிராஜக்ட் மேட் சவ்ரவ் இந்த வீக் என்ட் கிளம்பறான். அவன் ஒரு செக் லிஸ்ட் வெச்சிருந்தான். நான் அதை நாளைக்கு உனக்கு மெயில்ல அனுப்பறேன். இந்த சனிக்கிழமை போய் எல்லாம் வாங்கலாம்”

“சரி… ”

………………

அடுத்த நாள் செக் லிஸ்ட் அனுப்பி 10 நிமிடத்திற்குள் போன் செய்தாள்.

“செக் லிஸ்ட் பாத்தியா???”

“ஹிம்.. பாத்துட்டே இருக்கேன்”

“நீ இன்னும் அதை பாத்திருக்க மாட்டன்னு எனக்கு தெரியும்… கதை விடாத”

“சரி… அனுப்பிட்ட இல்ல! அப்பறம் என்ன???”

“இரு… நாளைக்கு என்ன என்ன வாங்கலாம்னு முடிவு பண்னிக்கலாம். மீதியெல்லாம் நீ உன் ஃபிரெண்ட்ஸோட போய் சன்டே வாங்கிக்கோ”

“ஏன் சன்டே உன் பிளான் என்ன???”

“நான் உன்கிட்ட சொல்லலையா எங்க கிளாஸ் கெட்-டுகெதர் இருக்கு”

“சன்டே முழுசா ஒன்னா இருக்க போறீங்களா???”

“மதியம் லன்ச் சாப்பிட்டு, படத்துக்கு போயிட்டு அப்படியே சுத்திட்டு நைட் டின்னர் சாப்பிட்டு வரலாம்னு இருக்கோம்”

“நீ அவசியம் போகனுமா?”

“ஏய்!!! நாந்தான் பொண்ணுங்க சைட் ஆர்கனைசர்… நான் கண்டிப்பா போயாகனும்… ஏன் கேக்கற???”

“ஒன்னுமில்லை… அப்பறம் நாளைக்கு நீ வர தேவையில்லை. ஏற்கனவே என் ஃபிரண்ட்ஸ் ஷாப்பிங் வரன்னு சொல்லியிருக்காங்க”

“ஏன் வீணா டென்ஷன் ஆகற”

“அதெல்லாம் ஒன்னுமில்லை. நாங்க 4 பேர் ஏற்கனவே பிளான் பண்ணி வெச்சிட்டோம். எப்படியும் நீ வந்தா பெட்டியெல்லாம் வாங்க வசதியா இருக்காது. நிறையா வாங்க வேண்டியிருக்கும். நீ தான் லிஸ்ட் அனுப்பனியே அதுவே போதும். தேங்ஸ்”

“ஏன் இப்படியெல்லாம் பேசற”

“அதெல்லாம் ஒன்னுமில்லை. இப்ப எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் நைட் கூப்பிடறேன்”

“சரி”

……………………….

“சொல்லு”

“நைட் கூப்பிடறன்னு சொன்ன… ஏன் கூப்பிடல???”

“இன்னும் நைட் முடியலைனு நினைக்கிறேன்”

“மணி 10. எப்பவும் நீ 9 மணிக்கெல்லாம் கூப்பிடுவ இல்ல???”

“திவ்யா, வேலை அதிகமா இருக்கு. ஆன் சைட் போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் முடிச்சிட்டு போக சொல்லியிருக்காங்க. அடுத்த வாரம் எப்படியும் 2 நாள் தான் வேலை செய்ய முடியும். மீதி நேரமெல்லாம் knowledge Transferலையும், லேப் டாப், செக்யுர் ஐடி வாங்கறதலையும் போயிடும். இதுக்கு நடுவுல நிறைய ட்ரெயினிங் வேற இருக்கும். எப்படி டிரெஸ் போடனும், எப்படி சாப்பிடனும்னு வேற சொல்லி கொடுப்பானுங்க… முன்ன பின்ன நம்ம இதெல்லாம் பண்ணாத மாதிரி. அப்பறம் எக்கசக்க ட்ரீட் வேற கொடுக்க வேண்டியதிருக்கும்… போதுமா?”

“இப்ப எங்க இருக்க?”

“ஆபிஸ்லதான்”

“சரி நீ வேலை பாரு… அப்பறமா கூப்பிடு…”

“சரி… நான் உனக்கு வீட்டுக்கு போய் போன் பண்றேன்”

“ஓ.கே…. பை”

……………………………………

“தனா, ஏன் வீக் என்ட் போன் பண்ணல???”

“சனிக்கிழமை ஷாப்பிங் போயிட்டு வரத்துக்கு டைம் ஆகிடுச்சு. ஞாத்திக் கிழமை நீ உன் ஃபிரண்ட்ஸ் கூட இருப்பன்னு கூப்பிடல”

“நைட்டாவது கூப்பிட்டிருக்கலாம் இல்ல”

“நீ எப்ப வருவன்னு யாருக்கு தெரியும்… ஏன் நீ கூப்பிட்டு இருக்கலாம் இல்ல”

“நீ கூப்பிட்றயா இல்லையானு பாத்துட்டு இருந்தேன்”

“நீங்களா கூப்பிட மாட்டீங்க நாங்க தான் கூப்பிடனும்… இல்ல”

“சரி திட்டாத… இப்ப நாந்தானே கூப்பிட்டேன்… நீ ஒன்னும் கூப்பிடல இல்ல”

“சரி விடு… அப்பறம் நான் இந்த வாரம் லன்ச்க்கு வர முடியாது. வேலை அதிகமா இருக்கு… உள்ளையே சாப்பிட்டுக்கறேன்”

“சரி… நீ ஃபிரியா இருக்கும் போது கூப்பிடு”

“ஓகே… பை”

“பை”

………………………….

வெள்ளி இரவு 11 மணி

“நான் தனா பேசறேன்”

“தெரியுது சொல்லு”

“நான் நாளைக்கு கிளம்பறேன். அதான் உன்கிட்ட சொல்லலாம்னு போன் பண்ணேன்”

“சரி. எல்லாம் வாங்கிட்டயா”

“எல்லாம் பேக் பண்ணியாச்சு. கிளம்ப வேண்டியதுதான் மிச்சம்”

“எப்ப திரும்ப வருவ???”

“தெரியல… இது வரைக்கும் போன எவனும் திரும்ப வரல… நான் மட்டும் என்ன லூசா???”

“அப்ப எங்களை எல்லாம் மறந்துடுவ இல்ல”

“உங்களை எல்லாம் மறப்பனா???”

“இந்த ஒரு வாரத்தில எனக்கு ஒரு தடவை கூட போன் பண்ணல… நீ தான் அமெரிக்கா போய் எனக்கு போன் பண்ணுவயா???”

“உனக்கு நானா முக்கியம். உன் ஃபிரெண்ட்ஸ்தான் முக்கியம்… ”

“ஏன் இப்படி பேசற??? எனக்கு நீ முக்கியம் இல்லனு யார் சொன்னா???”

“இங்க இருக்கற ஃபிரெண்ட்ஸ அடுத்த வாரம் கூட நீ பாத்துக்கலாம். ஆனால் எனக்காக நீ அதை கூட விட்டுக்கொடுக்கல இல்ல?”

“நான் கெட் டூகெதர் போனனானு உனக்கு தெரியுமா???”

“நீ போகலயா???””

“”அதை கேக்க கூட உனக்கு பொறுமையில்லை”

“அத நீ தான் சொல்லியிருக்கனும்”

“எப்ப தனா என்ன சொல்லவிட்ட??? உனக்கு போன வெள்ளி கிழமை நைட் நான் போன் பண்ணப்ப திரும்ப பண்றனு சொன்ன… ஆனால் பண்ணவே இல்லை. நீ போன் பண்ணுவனு நான் ரெண்டு நாளா வெளியவே போகலை. ஆனால் கடைசி வரைக்கும் நீ எனக்கு போன் பண்ணவே இல்ல”

“திவ்யா… இந்த ஒரு வாரம் எப்படி இருந்துச்சு திவ்யா????”

“ஏன் கேக்கற???”

“சொல்லு”

“எனக்கு தெரியல…”

“இந்த ஒரு வாரம் முழுசா நீ மதியம் சாப்பிடல. எனக்கு தெரியும். ஐஸ் என்கிட்ட சொன்னா… அது ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா???”

“எனக்கு சாப்பிட பிடிக்கல”

“ஏன் திவ்யா பொய் சொல்ற? ரெண்டு நாளா நீ அழுதுட்டு இருக்கறதும் எனக்கு தெரியும்.”

“தெரிஞ்சும் நீ எனக்கு போன் பண்ணல…. என்ன விட்டுட்டு நீ போற… எப்படி உன்னால முடியுது தனா??? என்ன விட்டுட்டு நீ இருந்துடுவ இல்ல??? ”

“எனக்கு தெரியல திவ்யா!!! உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியுமானு எனக்கு தெரியல. அதுக்காக நானா ஏற்படுத்திக்கிட்ட ஒரு பிரிவுதான் இது. ஆனால் இந்த ஒரு வாரம் எனக்கு ஒரு யுகமா இருந்துச்சு… நீ வாழ்க்கை முழுசா என் கூடவே இருக்கனும் போல இருக்கு திவ்யா! இருப்பியா?”

“தனா என்ன சொல்ற???”

“எனக்கு உன்ன பிடிச்ச்சிருக்குனு சொல்றன். நீ வாழ்க்க முழுசா என் கூடவே இருக்கனும்னு சொல்றன். என்ன கல்யாணம் பண்ணிக்குவியானு கேக்கறன்”

“நல்ல நேரம் பாத்து கேக்கற தனா… இவ்வளவு நாள் ஆச்சா இத கேக்கறதுக்கு?”

“அப்படினா… என்னை உனக்கு புடிச்சிருக்கா திவ்யா???”

“நான் எந்த பசங்க கூடயாவது இந்த அளவுக்கு பேசி பாத்திருக்கயா??? யார் கூடவாவது நான் வண்டில போய் பாத்திருக்கயா??? வேற எந்த பிரண்ட்ஸ்கிட்டயாவது ஐஸ்வர்யா பேசும் போது அவளை சீக்கிரம் பேச சொல்ல்லிருக்கனா???
உன் கூட இருக்கும் போதுதான் நான் சேஃபா இருக்கற மாதிரி ஃபீல் பண்றன். ஏன்னு எனக்கே தெரியல”

“திவ்யா நான் இப்ப உன்ன பாக்கனும்… நான் புறப்பட்டு வரன்”

“ஏய் லூசு… மணி 11:30… நான் வெளில வர முடியாது. நாளைக்கு பாக்கலாம்”

“சரி காலைல 6 மணிக்கு மீட் பண்ணலாம். போனை வைக்காத… நைட் ஃபுல்லா நான் உன்ட பேசிக்கிட்டே இருக்கனும் போல இருக்கு”

“முதல்ல நீ போய் தூங்கு. நம்ம காலைல மீட் பண்ணலாம். நான் ஏர்போர்ட்க்கு வர முடியாது”

“ஏன்???”

“உங்க அப்பா, அம்மா வருவாங்க இல்ல”

“யாரு உங்க மாமா, அத்தையா???
நீ வா… நான் இன் ட்ரடியூஸ் பண்ணி வெக்கறேன். உங்க மருமகளை பாருங்கனு சொல்றன்”

“ஏன் இவ்வளவு எக்ஸைட் ஆகற???
நான் கண்டிப்பா வர முடியாது. எனக்கு பயமா இருக்கு”

“லூசு… பயப்படாம வா. எங்க அப்பா, அம்மா இங்க வரலை. எல்லாம் சென்னை வராங்க. இங்க ஃபிரெண்ட்ஸ் மட்டும் தான்”

“அப்ப சரி… நான் ஐஸ்வர்யாவையும் கூப்பிட்டு வரேன். யாருக்கும் சந்தேகம் வராது”

“சரி. நீ போயிட்டு எப்ப வருவ???”

“நான் போறது பைலட் பிராஜக்ட். சரியா பண்ணலைனா 1 மாசத்துல தொறத்தி விட்டுடுவாங்க… ”

“அப்படினா???”

“1 மாசத்துல நான் இங்க இருப்பனு அர்த்தம் ;)”

………………………..

ஒரு வழியாக யு.எஸ் வந்து சேர்ந்து 6 மாசமாகிவிட்டது. 1 மாசத்துல ஊத்திக்கும்னு நினச்ச பிராஜக்ட் நல்ல படியா போயிடுச்சு. சிக்காகோவி்லிருந்து பாஸ்டன் வந்து சேர்ந்து 5 மாசமாகிவிட்டது. GTalk ஆல் மாத சம்பளம் ஓரளவிற்கு சேமிக்க முடிகிறது.

“சாப்பிட்டயா???”

” ”

“திட்டாத… அடுத்த மாசம் கண்டிப்பா வந்துடுவன்… பாலாஜிக்கு எல்லா Trainingம் முடிஞ்சிது.. .”

” ”

“நிஜமாதான் சொல்றேன்…
நாயி வேணும்னே பொறுமையா கத்துக்கிறான்”

” ”

“‘சும்மா சொன்னேன்… அவன் நல்ல பையன் தான்…
அப்பறம் ஓரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்…. அவன் நம்ம கதையை அவன் பிளாக்ல பிரிவுனு ஒரு தலைப்புல எழுதறான்… இது தான் அவன் பிளாக் URL : http://vettipaiyal.blogspot.com/

” ”

“ஏய் திட்டாத!!! நான் தான் சும்மா விளையாட்டுக்கு எழுத சொன்னேன். இது அப்படியே பிரிண்ட் அவுட் எடுத்து எங்க மாமா, அத்தைக்கிட்ட கொடுத்துடு”

” ”

(முற்றும்…)

பி.கு:
இது நிஜமா, கதையானு கேக்கறவங்களுக்கு என் பதில் “No Comments”…

பிரிவு – 3

பிரிவு -1 பிரிவு-2 பிரிவு-4

ஞாயிறு இரவு 9 மணி.
செல்போன் சிணுங்கியது

“ஏய் சொல்லு. எங்க இருக்க? ஊருல இருந்து வந்துட்டியா?”

“ஒரு சின்ன பிரச்சனை”

“என்னாச்சு. எங்க இருக்க?”

“நான் கிருஷ்ணகிரியில இருந்து வந்துட்டு இருக்கேன்”

“என்ன கிருஷ்னகிரில இருக்கியா? மணி என்னாச்சு”

“நீ டென்ஷன் ஆகாத. நான் வந்த பஸ் பிரேக் டவுன் ஆகிடுச்சு. ஒரு மணி நேரம் லேட். அதுவும் இந்த டிரைவர் இதுக்கு முன்னாடி கட்ட வண்டி ஓட்டிருப்பான் போல இருக்கு”

“எத்தனை மணிக்கு புறப்பட்ட??”

“4 மணிக்கு”

“ஏன் மேடமால கொஞ்சம் சீக்கிரம் புறப்ப்பட்டிருக்க முடியாதா?”

“சேலத்துல இருந்து வரதுக்கு எதுக்கு சீக்கிரம்ம் புறப்படணும்”

“சேலத்துல இருந்து நீ பெங்களூர் வரதுக்கே 9-10 ஆயிடும். அதுக்கு அப்பறம் நீ உன் PGக்கு எப்படி போவ? என்ன சாப்பிடுவ?”

“எங்க அம்மா பார்சல் பண்ணி கொடூத்திருக்காங்க. மடிவாளாலா எறங்கி நான் PGக்கு ஆட்டோல போயிடுவேன்”

“பெங்களூர் இருக்கற நிலைமைக்கு நீ தனியா 10 மணிக்கு ஆட்டோல போவ? சரி நீ ஓசூர் வந்தவுடனே எனக்கு போன் பண்ணு”

“சரி”

……………………

ஓசூர், இரவு 10::30

“தனா நான் ஓசூர் வந்துட்டேன்”

“இப்ப எங்க இருக்கற???”

“ஓசூர்ல தான்”

“லூசு, ஓசூர்ல எங்க இருக்கற??”

“நீ எங்க இருக்கற???”

“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”

“இப்ப தான் பஸ் ஸ்டாண்டுக்குள்ள பஸ் வருது. நான் இனிமே தான் இறங்கனும்”

செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

“ஏய் நீ எதுக்கு இங்க வந்த???”

“எதுவும் பேசாத அடிச்சிட போறேன்”

“ஏன் இப்படி கோவப்படற???”

“மணி இப்பவே 10:30 நீ பஸ் பிடிச்சி மடிவாளா போய் சேரத்துக்குள்ள 11:30 ஆயீடும்.. அப்பறம் ஆட்டோ பிடிப்பயா???”

“பஸ் பிரேக் டவுன் ஆனதுக்கு நான் என்ன பண்ண முடியும்”

“மனுசனை டென்சன் ஆக்காத! வந்து வண்டில உக்காரு”

“எதுக்கு இப்படி டென்ஷன் ஆகறன்னு எனக்கு புரியல”

“இப்ப வரியா! இல்ல நான் கிளம்பட்டுமா???”

“இரு வரன்”

…………………………

பெங்களூரை நோக்கி இரு சக்கர வண்டியில்…

“ஏன் இப்படி டென்ஷன் ஆகற??? உனக்கு பொண்டாட்டியா வரவ பாவம்”

“சரிங்க… உங்களுக்கு புருஷனா வரவன் புண்ணியம் பண்ணியிருப்பான் போதுமா???”

“உனக்கு என்னுமோ ஆயிடுச்சி”

“பேசாம வா”

…………………………………..

BTM, PG

“ஏய் திவ்யா, என்ன இவ்வளவு லேட்”

“பஸ் பிரேக் டவுன்”

“இனிமே இந்த மாதிரி லேட்டா தனியா வராத”

“ஏன்???”

“வெள்ளிக்கிழுமை நைட், தனியா Cabல வந்த பொண்ணை டிரைவரே கடத்திட்டு போயி ரேப் பண்ணி கொன்னுட்டான். பெங்களூர் முழுக்க இதுதான் பேச்சு. அதுவும் இல்லாம இந்த மாதிரி ஏற்கனவே நிறைய நடந்திருக்காம். யாரும் வெளில சொல்லாம இருந்த்திருக்காங்க… இப்ப தான் எல்லாம் வெளிய வருது”

“ஓ இதனால தான் அவன் அவ்வளவு ட்டென்ஷனா திட்டிக்கிட்டே இருந்தானா???”

“யாரு”

“தனாதான். நான் தனியா வரன்னு ஓசூர்க்கே வந்துட்டான். இங்க வந்து அவன் தான் விட்டுட்டு போனான்”

“நல்லதா போச்சு”

“நான் வேற அவனை இது தெரியாம திட்டீக்கிட்டே வந்தேன்”

“அடிப்பாவி!!! வேலையத்து அவன் ஓசூர் வந்து உன்னைக் கூப்பிட்டு வந்தா… அவனை நீ திட்டியிருக்க!!!”

“எனக்கும் கஷ்டமா இருக்கு. இரு நான் அவனுக்கு போன் பண்ணிட்டு வந்துடறேன்”

“மணி 1 ஆச்சி. தூங்கு நாளைக்கு பேசிக்கலாம்”

“சரி”

ஐந்து நிமிடம் கழித்து…

“அவன் பத்தரமா வீட்டுக்கு போயிருப்பானா???”

“அவனுக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் போயி தூங்கிருக்கும்”

“இரு நான் எதுக்கும் போன் பண்ணிட்டு வந்திடறேன்”

………………

மணி 1:30. செல்போன் சிணுங்கியது.

“என்ன தூங்கலையா???”

“நீ எங்க இருக்க???”

“ஹிம்… சுடுகாட்டுல”

“ஏய் சொல்லு”

“நைட் ஒன்ற மணிக்கு எங்க இருப்பாங்க??? வீட்லதான்”

“சரி. சாரி”

“எதுக்கு”

“நான் உன்னை திட்டினதுக்கு”

“சாரியும் வேணாம் பூரியும் வேணாம். இனிமே ஊர்ல இருந்து சீக்கிரம் வா. அதுவே போதும். இப்ப எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு பேசலாம். நீயும் போய் தூங்கு”

“சரி… குட் நைட்”

“குட் நைட்”

………………..

2 நாட்களுக்கு பிறகு. PGயில்

“ஏய் ஐஸு!!! யாருக்கிட்ட இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்க?”

“தனாட்ட”

“கொஞ்சம் சீக்கிரம் பேசிட்டு வெக்கறியா? நான் அவன்ட கொஞ்சம் அவசரமா பேசனும்”

“டேய்! அவ ஏதோ உன்கிட்ட பேசனுமாம். நான் அவள்ட போனைக் கொடுக்கறன்”

“ஏய் வேண்டாம்!!! நீ பேசி முடி. நான் என் மொபைல்ல இருந்து குப்புட்டுக்கறேன்”

“சரி. நான் பேசி முடிச்சிட்டேன். கட் பண்றேன். நீங்க ஆரம்பிங்க :-x”

“இப்ப ஏன் கட் பண்ண… நான் உன்னை பேசி முடிச்சிட்டுதான வெக்க சொன்னேன்”

“எதுக்கு டென்ஷன் ஆகற???? நான் அவன்ட பேசி முடிச்சிட்டேன்”

“என்ன ஏதோ சீரியஸ்ஸா பேசிட்டு இருந்த???”

“அந்த நாயிக்கு ஆன் – சைட் ஆப்பர்சுனிட்டி வந்திருக்கு… போக மாட்டேனு மேனஜர்ட்ட சொல்லி இருக்கான். கேட்டா பர்சனல் பிராப்ளம்னு சொல்றான்.
6 மாசத்துக்கு முன்னாடி மேனஜர்கிட்ட ஆன் சைட் அனுப்ப சொல்லி பிரச்சனை பண்ணிட்டு இருந்தான். இப்ப என்னன்னா இப்படி பேசறான். மேனஜர் என்னை கூப்பிட்டு பேச சொன்னார்”

“நீ கேட்டயா???”

“கேட்டேன். என்கிட்டயும் அதுதான் சொல்றான். நீ வேணும்னா பேசி பாரேன்”

“எவ்வளவு நாள்???”

“லாங் டெர்ம் தான். மினிமம் 6 மாசம். H1 வெச்சிருக்கான். சும்மாவா?”

“”

“நீ என்டீ பேயறைஞ்ச மாதிரி உக்கார்ந்திருக்க???”

“ஒன்னுமில்லை நான் அவன்ட பேசறேன்”

…………………………

“தனா… நான் திவ்யா பேசறேன்”

“”சொல்லு”

“ஏன் ஆன் சைட் வேண்டாம்னு சொன்ன?”

“ஐஸ்வர்யா சொல்லிட்டாளா???”

“ஆமாம். சொல்லு”

“எனக்கு போக பிடிக்கல. எனக்கு இங்கதான்ன் பிடிச்சியிருக்கு”

“அப்பறம் எதுக்கு 6 மாசத்துக்கு முன்னாடி போகனும்னு சொன்ன???”

“இப்ப என்ன வேணும் உனக்கு???”

“நீ ஏன் போக மாட்டனு சொல்றனு எனக்கு தெரிஞ்சாகனும்???”

“காரணம் எதுவும் கிடையாது”

“நீ போகனும். அவ்வளவுதான்…… இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல முடியாது”

“நீ எதுவும் சொல்ல வேணாம்… எங்களுக்கு எல்லாம் தெரியும். நீ போய் தூங்கு”

“உன் இஷ்டம்… நான் சொன்னா நீ கேக்கவா போற????”

“சரி. நீ ஒன்னும் சொல்ல வேணாம்”

“பாக்கலாம். குட் நைட்”

“பை”

…………………………..

“ஏய் திவ்யா! தனா 2 வாரத்துல சிக்காகோ போறான். கன்பர்ம் ஆகிடுச்சி. உன்ட சொன்னானா???”

“இல்லை. இன்னும் 2 வாரத்துலயா???””

“ஆமாம்”

“என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றாங்க”

“அவனை இந்த வார காடைசிலதான் கிளம்ப சொன்னாங்க… அவன் தான் கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி ஒரு வாரம் தள்ளி போட்டிருக்கான்”

” ”

(தொடரும்…)

பிரிவு – 2

பிரிவு-1 பிரிவு-3 பிரிவு-4

பவித்ரா ஹோட்டல், எலக்ட்ரானிக் சிட்டி, பெங்களூர்

“ஐஸு ட்ரீட் எனக்குதான்… நீ சாப்பிடறதுக்கு நீ தான் பில் கட்டணும் புரியுதா???”

“டேய்! போனா போது, தனியா வரதுக்கு கூச்சப்பட்டயேனு வந்தா, ரொம்ப ஓவரா பேசற”

“யாரு நாங்க கூச்சப்பட்டமா???”

“வெக்கம், மானம் எதுவும் உனக்கு கிடையாதுனு எனக்கு தெரியும். திவ்யாவும் என்னை வர சொன்னா. அதனாலதான் நான் வந்தேன். பில் யாரு கட்றதுன்னு நாங்க முடிவு பண்ணிக்கறோம். நீங்க சாப்பிடுங்க சார்.”

“சரி… ஏங்க நீங்க எதுவும் பேசாம உக்காந்திருக்கீங்க??? சாப்பிடும் போது வேற எதுக்கும் வாய திறக்கக்கூட்டாதுனு யாராவது சொல்லியிருக்காங்களா?”

“எல்லாருக்கும் சேர்த்துதான் நீங்க பேசிகிட்டு இருக்கீங்களே!”

“இது கொஞ்சம் ஓவர். சரி நீங்களும், ஐஸ்வர்யாவும் ஒரே காலேஜா?”

“ஆமாம். ஆனால் வேற வேற டிப்பார்ட்மென்ட். ஹாஸ்ட்டல்ல ஒரே ரூம்”

“ஆச்சர்யமா இருக்குங்க”

“ஏன்???”

“ஐஸ்வர்யாகூட இத்தனை வருஷம் இருந்துட்டு இப்படி அமைதியா இருக்கீங்களே!!!”

“டேய்… ரொம்ப பேசற.. நீ நினைக்கிற மாதிரி இவ ஒண்ணும் அமைதி கிடையாது. என்னைவிட அதிகமா பேசுவா”

“உங்களை பத்தி ஐஸ் சொல்லி இருக்கா. ஆனால் அவ சொன்னதைவிட அதிகமாவே பேசறீங்க”

“தலைவரே பாட்ஷால சொல்லி இருக்காருங்க, “இந்தியாக்க்காரன் பேசலனா செத்து போயிடுவான்னு”. நான் உண்மையான இந்தியங்க.”

ஒரு வழியாக பேசி சாப்பிட்டுவிட்டு சீட்டுக்கு வருவதற்குள் மணி 2 ஆனது.

………………………

10 நாட்களுக்க்கு பிறகு

“தனா. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்”

“சொல்லு”

“திவ்யா VB புக் கேட்டிருந்தா. நேத்தே எடுத்துட்டேன். ரூமுக்கு எடுத்துட்டு போக மறந்துட்டேன். இன்னைக்கு மதியம் கொண்டு போய் கொடுக்கலாம்னு பாத்தா வேலை அதிகமாகிடுச்சி. நான் இன்னைக்கு ஊருக்கு போறேன். நேரா இங்க இருந்தே புறப்படறேன். அவள்ட இந்த புக்கை நீ கொடுத்துடறயா ப்ளீஸ்”

“சரி கொடுத்துட்டு போ. நான் அவள்ட எப்படியாவது கொடுத்தடறேன்”

…………………………………

“ஹலோ… திவ்யா???”

“ஆமாம். நீங்க யார் பேசறது?”

“நான் சஞ்சய் ராமசாமி பேசறன்”

“ஓ! தனாவா??? சொல்லுங்க நான் கல்பனாதான் பேசறன்”

“பரவாயில்லையே நியாபகம் வெச்சிருக்கீங்களே”

“உங்களை மறக்க முடியமா?”

“சரிங்க. ஐஸ் கிட்ட ஏதோ VB புக் கேட்டுருந்தீங்களாம். அதை உங்ககிட்ட கொடுக்க சொல்லி அவ என்கிட்ட கொடுத்துட்டு போயிட்டா. உங்களை எங்க மீட்ட் பண்ணலாம்னு சொன்னீங்கனா நான் வந்து கொடுத்துடுவேன்”

“நீங்க எங்க தங்கி இருக்கீங்க?”

“நான் இங்கதான் எலக்ட்ரானிக் சிட்டிலதான் தங்கி இருக்கேன்”

“சரிங்க. எனக்கு இப்ப பிராஜக்ட் பார்ட்டி. இன்னும் 5 நிமிஷத்துல கிளம்பிடுவேன். எப்படியும் நாளைக்கு வந்து வேலையை முடிக்க வேண்டியிருக்கும். நீங்க எனக்கு நாளைக்கு கொடுக்க முடியுமா?”

“சரிங்க. நாளைக்கு ஆபிஸ் வந்து போன் பண்ணுங்க. நான் வந்து கொடுக்கறேன்”

“சரிங்க ரொம்பா தேங்ஸ்ங்க”

“ஓகே… நாளைக்கு பாக்கலாம். நீங்க பார்ட்டிக்கு கிளம்புங்க”

“சரிங்க… பாக்கலாம். பை”

…………………………………….

சனி கிழமை காலை 10 மணி.
செல் போன் சிணுங்கியது.

“ஹலோ. தனா ஹியர்”

“நான் திவ்யா பேசறேன்”

“சொல்லுங்க. ஒரு 11 மணிக்கா புக் எடுத்துட்டு வந்து கொடுக்கறதா??”

“தூங்கிட்டு இருக்க்கீங்களா?”

“ஆமாங்க. இப்பதான் எழுந்திருக்கிறேன்…”

“நீங்க ஒரு 12 மணிக்கா பவித்ரா வரீங்களா? எனக்கு தனியா சாப்பிடறதுக்கு ஒரு மாதிரி இருக்கு. நீங்க அப்படியே புக்கையும் எடுத்துட்டு வந்துடுங்க!”

“சரிங்க. நீங்க புறப்படறதுக்கு முன்னாடி ஒரு கால் பண்ணுங்க”

………………………………….

12:15, பவித்ரா ஹோட்டல்

“நான் உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்கறேன்னு நினைக்கிறேன். சாரிங்க”

“எதுக்கு???”

“இல்லை… நான் ஜஸ்ட் உங்க ஃபிரண்டோடா ஃபிரண்டு. எனக்காக இவ்வளவு ஹெல்ப் பண்றீங்களேனு சொன்னேன். பொதுவா எனக்கு யாருக்கும் தொந்தரவு கொடுக்கறதுக்கு பிடிக்காது”

“ஏங்க இப்படி பேசறீங்க. நீங்க ஐஸ்வர்யா ஃபிரண்ட். அதுவும் இல்லாம இன்னைக்கு சனிக்கிழமை எனக்கு எதுவும் பிரோக்ராமும் இல்லை. சாப்பிடறதுக்கு ஒரு கம்பெனிக்காவது ஆள் இருக்கேனு நான் சந்தோஷமாத்தான்ன் இருக்கேன்”

“நான் இதுக்காக மட்டும் சொல்லல.. போன தடவை எனக்காக சனிக்கிழமை உக்காந்து அந்த வேலையை முடிச்சியிருக்கீங்க. நான் அதை அப்ப கவனிக்கல. நேத்துதான் நீங்க அதை எப்படி பண்ணியிருக்கீங்கனு பாக்கலாம்னு பாக்கும் போது உங்க மெயில்ல சென்ட் டேட் பாத்தேன்”

“ஏங்க இந்த மாதிரி பேசி என்னை பேசவிடாம பண்ணிடுவீங்க போல இருக்கு. நீங்க கொடுத்த அன்னைக்கு கஜினி ரிலீஸ். சூர்யா படம் ஃபர்ஸ்ட் டே பாக்கலைனா நமக்கு அவ்வளவுதான். அதனாலதான் சனிக்கிழமை வந்து பண்ண வேண்டியதா போச்சு. இந்த மாதிரி இனிமே பேசாதீங்க”

“சரிங்க”

தீடீர்னு நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது.

“ஐயய்யோ… என்னங்க இப்படி மழை பெய்யுது”

“இதுக்கு தாங்க… நான் இனிமே புண்ணியம் செய்யறதையே குறைச்சிக்கனும். நான் எங்க போனாலும் மழை பெய்யுது”

முறைத்தாள்.

“கண்டிப்பா இப்ப வெளிய போக முடியாது. மழை நின்ன உடனே கிளம்பலாம்”

“சரிங்க… இன்னைக்கு பாத்து இப்படியாயிடுச்சே. நான் வேற இதுக்கு அப்பறம் போய் வேலை செய்யனும்”

“VB கத்துக்கறீங்க போல இருக்கு”

“ஆமாங்க. உங்களை எவ்வளவு நாள்தான் தொந்தரவு பண்றது”

“சரி கத்துக்கோங்க…. அதுதான் உங்களுக்கும் நல்லது”

நாலு மணி வரை மழை பெய்தது. இருவரும் 4 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திவ்யா அதிகமாக பேசாதவள் என்று நான் நினைத்திருந்தது தவறு என்று எனக்கு புரிந்தது.

………………………………..

திங்கள் காலை 10 மணி.

“ஹாய் தனா” ஜிடாக் விண்டோ மாணிட்டரில் மின்னியது.

“ஹே திவ்யா. என் ஐடி எப்படி கிடைச்சுது உனக்கு???”

“ஐஸ்வர்யா கொடுத்தா”

“ஹிம்… அப்பறம் அன்னைக்கு ஆபிஸ்ல இருந்து எப்ப கிளம்பின???”

“நான் போய் ஒரு மணி நேரத்துல கிளம்பிட்டேன். வீட்ல போயி படிச்சேன்”

“ஹிம்”

இப்படியே தினமும் மெசஞ்சரிலும், போனிலும் பேசிக் கொண்டோம்.

அப்படியே ஒரு மாதத்திற்கு பிறகு தினமும் மதியம் மூவரும் ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தோம்.

…………………………..

“டேய் தனா! நீங்க பண்றது ஓவர்டா”

“என்ன பண்றோம்”

“அவ முன்னாடி எல்லாம் ஒழுங்கா இருந்தா… இப்ப ரூம்க்கு வந்து சாப்பிட்டு முடிச்சவுடனே உனக்கு போன் பண்ணிடறா… எனக்கு தனியா இருக்க போர் அடிக்குது”

“அதுக்கு நான் என்ன பண்றது? வேணும்னா நல்ல புக் வாங்கி தரன்… படி”

“டேய்! ஓவரா பேசாதடா”

“சரி இனிமே நான் அவள்ட பேசல போதுமா???”

“ஏய் டென்ஷன் ஆகாத!!! நான் சும்மா சொன்னேன்… நீங்க ஏதோ பண்ணிக்கோங்க எனக்கு என்ன???”

…………………..

இரவு 9 மணி. செல்போன் சிணுங்கியது. வழக்கம் போல் திவ்யா கூப்பிட்டிருந்தாள்.

“ஏய்! சொல்லு”

“சாப்பிட்டியா”

“இல்ல… ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு”

“ஒன்னுமில்லை”

“அழுதயா??? எனக்கு தெரியும்… உன் குரல் ஒரு மாதிரி இருக்கு”

” ”

“ஏன் அமைதியா இருக்க சொல்லு? என்னாச்சு???”

“என் கிளாஸ் மேட் ராஜேஷ் இன்னைக்கு என்கிட்ட ப்ரபோஸ் பண்ணான் ”

“என்னது??? உன்னை ஒருத்தன் லவ் பண்றானா??? என்னால நம்பவே முடியலையே!!!”

செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அவசரமாக கூப்பிட்டேன். 3 முறை கட் செய்து 4வது முறை வேறு வழியில்லாமல் எடுத்தாள்.

“ஏய் சாரி… ப்ளீஸ் நான் விளையாட்டுக்கு சொல்லிட்டேன். என்ன நடந்துச்சு சொல்லு”

“அவன் என்னை 5 வருஷமா லவ் பண்றானாம். என்னை லவ் பண்ணுனு கெஞ்சறான். இதுக்கு எங்க கிளாஸ்ல இருக்கற 4-5 பசங்க சப்போர்ட் வேற”

“உன் பிரச்சனை என்ன??? அவன் உனக்கு நல்ல ஃபிரண்டுன்னு சொல்லி இருக்க”

“நல்லா பேசனா லவ் பண்றன்னு அர்த்தமா? ஏன் இந்த பசங்க எல்லாம் இப்படி இருக்காங்க???”

” ”

“ஏன் அமைதியா இருக்க??? ஏதாவது சொல்லு”

“நீ என்ன சொன்ன?”

“இந்த மாதிரி பேசறதா இருந்தா இனிமே பேச வேண்டாம்னு சொல்லிட்டேன்”

“இப்ப நான் என்ன செய்யனும்”

” நீ எதுவும் செய்ய வேணாம். உன்கிட்ட சொல்லனும்னு தோனுச்சி அதனால சொன்னேன்”

“சரி எதுவும் கவலைப்படாம தூங்கு…குட் நைட்”

அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை….
“நல்லா பேசனா லவ் பண்றன்னு அர்த்தமா?” என் காதில் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது.

(தொடரும்…..)

பிரிவு

பிரிவு-2 பிரிவு-3 பிரிவு-4

“தனா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“சொல்லு… பாக்கலாம்”

“ஒண்ணும் இல்லை… என் ரூம் மேட் திவ்யாக்கு அவ பிராஜக்ட்ல எக்ஸெல்ல மேக்ரோ பண்ண சொல்லியிருக்காங்க. அவ எனக்கு போன் பண்ணி ஹெல்ப் பண்ண முடியுமானு கேட்டா. நீ தான் அதுல பெரிய ஆளேச்சே! கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் ப்ளீஸ்”

“திவ்யானா? அன்னைக்கு கமெர்ஷில் ஸ்ட்ரீட்ல உன்கூட லூசு மாதிரி ஒண்ணு இருந்துச்சே அதுவா?”

“ஏய், லூசு கீசுன்ன அவ்வளவுதான்”

“சரி சொல்லு என்ன பண்ணனும்”

“இரு நான் அவள்ட டீட்டெயிலா கேட்டு சொல்றேன்”

…………………….

“ஹலோ திவ்யா நான் ஐஸூ பேசறேன். அந்த எக்ஸல்ல ஏதோ பண்ணனும்னு சொன்னியே, கொஞ்சம் டீட்டயிலா சொல்லு, தனா பண்ணி தரன்னு சொல்லி இருக்கான்”

” ”

“இரு நீ என்ன சொல்றனே எனக்கு புரியல. நான் தனா எக்ஸ்டென்ஷனுக்கு கால் ஃபார்வேர்ட் பண்ணறேன். அவன்ட நீயே பேசிக்கோ”

………………….

“தனா உன் எக்ஸ்டென்ஷனுக்கு கால் ஃபார்வேர்ட பண்றேன். கொஞ்சம் அவள்ட என்ன செய்யனும்னு டீட்டெயிலா கேட்டுக்கோ”

“சரி”

“டேய்! அவளை எல்லாரையும் ஓட்டற மாதிரி ஓட்டாத”

“சரி…. சொல்லிட்ட இல்ல. ஃபிரியா விடு”

…………………

“ஹலோ! நான் தனா பேசறேன். சொல்லுங்க என்ன செய்யனும்”

என்ன வேணும்னு தெளிவாக சொன்னாள்.

“சரிங்க.. இது செய்யறதுக்கு ஒரு 5 மணி நேரமாகும். ஒரு மணி நேரத்துக்கு $60. மொத்தம் $300. எப்படி அனுப்பறீங்க?. இண்டர் நெட் டிரான்ஸ்பர் பண்ணிடறீங்களா?”

“என்னங்க இப்படி சொல்றிங்க? உங்களூக்கே இது அநியாயமா தெரியலையா?”

“சரி நீங்க ஐஸ்வர்யா ஃபிரண்ட்ன்றதால பாதி ரேட்ல பண்ணி தரேன். ஓகேவா?”

“ஐயய்யோ வேணாங்க… நான் வேற ஆளை பாக்கறேன்”

“கவலைப்படாதீங்க! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். எப்ப வேணும்னு சொல்லுங்க?”

“நாளைக்கு மதியத்துக்குள்ள பண்ணி தர முடியுமா?”

“சரிங்க நாளைக்கு மதியம் சாப்பிட போறதுக்கு முன்னாடி அனுப்பி வெச்சிடறேன்”

ஒரு மணி நேரத்துக்குள் முடித்துவிட்டு அனுப்பிவிட்டேன். நன்றி சொல்லி மெயில் அனுப்பினாள்.

……………………………..

ஒரு வாராத்திற்கு பிறகு…
எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது

“ஹலோ தனா ஹியர்”

“நான் ஐஸ்வர்யா ஃபிரெண்டு திவ்யா பேசறேன்”

“எந்த ஐஸ்வர்யா?””

“நீங்க தனபாலன் தான?”

“ஆமாம் அப்படிதான் என்னை எல்லோரும் கூப்பிடறாங்க”

“உங்க பிராஜக்ட் மேட் ஐஸ்வர்யா பிரண்ட் திவ்யா. அன்னைக்கு கூட எக்ஸேல்ல மேக்ரோ பண்ணி குடுத்தீங்களே”

“நியாபகம் இருக்குங்க. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். அப்பறம் ஐஸ்கிட்ட நான் இந்த மாதிரி கேட்டன்னு சொல்லிடாதிங்க”

“சரிங்க. அப்பறம் ஒரு சின்ன பிரச்சனை”

“சொல்லுங்க உங்க மேனஜரை போட்டு தள்ளனுமா?”

“ஐயய்யோ அதெல்லாம் இல்லை. அன்னைக்கு நீங்க பண்ண மேக்ரோவை நான் பண்ணன்னு சொல்லி குடுத்துட்டேன். அது எங்க மேனஜ்ருக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. இப்ப அதைவிட கொஞ்சம் அட்வான்சா ஒன்னு கொடுத்து பண்ண சொல்லி இருக்காரு. ப்ளீஸ் நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். ”

“இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? நான் பண்ணதை நீங்க பண்ணீங்கனு கதைய விட்ருக்கீங்க”

“ஸாரிங்க. நீங்க வேற கம்பனி. இதை சொன்னா பிரச்சனையாயிடும்”

“புரியுது. என்ன செய்யனும்னு சொல்லுங்க? எப்படி செய்யனும்னு உங்களுக்கு நான் சொல்லி தரேன்”

ஒரு வழியாக விளக்கினாள்.

“உங்களுக்கு VB தெரியுமா?”

“தெரியாதே! காலேஜ்ல நாலாவது செமஸ்டர்ல படிச்சேன். மறந்து போச்சு”

“ஃபிரியா விடுங்க… எனக்கு நாலாவது செமஸ்டர் படிச்சமானே நியாபகம் இல்லை. எப்ப வேணும்?”

“திங்க கிழமை காலைல. முடியுமா?

“என்னங்க மணி 4 ஆயிடுச்சி. நான் பொதுவா வெள்ளிக்கிழமை 1 மணிக்கு மேல எந்த வேலையும் பண்ணமாட்டேன்”

“சாரிங்க… இந்த ஒரு தடவை மட்டும்”

“இந்த தடவை நானே பண்ணி தரன். ஆனால் எனக்கு ட்ரீட் கொடுக்கனும். ஓகேவா???”

“ட்ரீட்டா??? ”

“பின்ன… போன தடவையே 300 டாலர் வாங்கியிருக்கனும். மிஸ் பண்ணிட்டேன். இந்த தடவை எப்படியும் ட்ரீடாவது கொடுக்கனும்”

” ”

“என்னங்க பேச்சையே கானோம்”

“சரிங்க. நீங்க பண்ணி குடுங்க. ட்ரீட் வெச்சிக்கலாம்…..
எங்கனு நீங்களே சொல்லுங்க”

“லீலா பேலஸ்”

“இதெல்லாம் கொஞ்சம் ஓவர்…”

“சரி ப்ரிகேட் ரோட்ல இருக்கற “Cafe Coffee Day”ல வெச்சிக்கலாம். அடுத்த வீக் என்ட். ஓகேவா???”

“சரிங்க”

“திங்க கிழமை காலைல உங்க மெயில் பாக்ஸ்ல எக்ஸல் இருக்கும்”

“ரொம்ப தேங்ஸ்ங்க”

……………………………….

“டேய்! மேக்ரோ பண்ணி குடுக்கறதுக்கு ட்ரீட் கேட்டயாமே… உண்மையா???”

“ஆமாம்… அப்ப தான் அடிக்கடி கேக்க மாட்டா. கத்துக்கனும்னு தோனும்”

“கிழிக்கும்… இனிமே ட்ரீட் கொடுத்தே உங்கிட்ட வேலை வாங்கிடலாம்னு அவ நேத்து கூட ரூம்ல சொல்லிட்டு இருந்தா!!!”

“ஓ!!! பாத்தா லூசு மாதிரி இருக்கா… இப்படியெல்லாம் வேற பேசறாளா??? அவளுக்கு இருக்கு.
நான் வேற அவளுக்கு முன்னாடியே அந்த எக்ஸெல அனுப்பி வெச்சிட்டேன்”

“சரி வீக் என்ட்தான் பாக்க போறியே அப்பறமென்ன??? அப்ப கேட்டுக்கோ”

“ஏய் டுபுக்கு.. நான் சும்மா பேச்சுக்கு சொன்னா, சீரியசா எடுத்துக்க்கிட்டயா? ட்ரீட் எல்லாம் எதுவும் வேணாம். அவள்ட சோல்லிடு”

“சரி”

…………………

அடுத்த நாள் எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது.

“ஹலோ! தனா ஹியர்”

“நான் திவ்யா பேசறேன்”

“சொல்லுங்க திவ்யா!!! அடுத்த எக்ஸல் ரெடியாயிடுச்சா???”

“ஐயய்யோ அதெல்லாம் இல்லைங்க. சும்மா தான் போன் பண்ணேன்””

“சொல்லுங்க”

“நேத்து ஐஸ்வர்யாட்ட ட்ரீட் வேணாம்னு சொன்னிங்களாமே? நிஜமாவா?”

“இல்லையே நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே”

“நீங்க வேணாம்னு சொன்னிங்கனு அவ சொன்னா”

“சும்மா சொன்னங்க. நான் தான் வேணாம்னு சொன்னேன்”

“நான் அவள்ட சும்மா ஓட்றத்துக்காக சொன்னதை அவ உங்ககிட்ட வந்து சொல்லிட்டா. சீரியஸா எடுத்துக்காதீங்க. நான் உங்களுக்கு கண்டிப்பா ட்ரீட் கொடுக்கறேன்”

“உங்க இஷ்டம். சரி நீங்க எந்த பிரான்ச்ல வேலை பாக்கறீங்க? உங்க கம்பனிதான் ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலையும் வெச்சிருக்கானே””

“நான் எலக்ட்ரானிக் சிட்டில இருக்கேன். போன வாரம் வரைக்கும் மடிவாளால இருந்தேன்”

“சரி அப்ப ஏதாவது ஓரு நாள் லன்ச்க்கு மீட் பண்ணுவோம்”

“வாவ்!!! இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே… இன்னைக்கு நான் என் பிரெண்ட்ஸ் கூட போகனும்.. நாளைக்கு மீட் பண்ணுவோமா?”

“சரிங்க……”

(தொடரும்)