சைனிக்குடு

சைனிக்குடு – போக்கிரியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபு நடித்து வெளியாகியிருக்கும் படம்.

சைனிக்குடு என்றால் போர்வீரன் என்று பொருள். மக்களுக்காக போராடும் கல்லூரி மாணவர்களை(?) பற்றியும் அதற்காக அவர்கள் படும் கஷ்டங்களையும் சொல்ல முயன்றிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன் (அறைகுறை தெலுகை வைத்து சொல்லவில்லை). படம் நன்றாக புரிந்தது ஆனால் என்ன சொல்ல வருகிறார்கள் என்றுதான் புரியவில்லை.

ஆரம்ப காட்சியில் வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகளும், கேமரா கொண்டு சென்ற விதமும் அசத்தலாக வந்திருக்கிறது. அதன் பிறகு பல காட்சிகள் ஆயுத எழுத்தை நினைவு படுத்தியது. வழக்கம் போல ‘குண்டா’ அரசியல்வாதியாக இர்ஃபான் கான் நடித்திருக்கிறார். அவருக்கு வலது கை போல பிரகாஷ்ராஜ்.

படத்தில் ஏதாவது வித்யாசம் காட்ட வேண்டுமென்று த்ரிஷாவை இர்ஃபான் கானை காதலிக்க வைத்திருக்கிறார்கள். நகைச்சுவைக்கு அதையே பயன்படுத்தியிருக்கிறார்கள். த்ரிஷா பார்க்க நன்றாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார்.

மகேஷ்பாபு அவருக்கு கொடுத்ததை அருமையாக செய்திருக்கிறார். ஆனால் ப்ரிவியூ பார்த்தாரா? என்றுதான் தெரியவில்லை. ஹாரிஸ் ஜெயராஜிற்கு அந்நியனும், தொட்டி ஜெயாவும் தெலுகில் டப்பிங்காகி விட்டது என்று யாராவது சொல்லியிருக்கலாம். ரீ-ரெக்கார்டிங்கிற்கு மனிதனுக்கு நேரமில்லை போலும் அப்படியே cntr-c, cntrl-v செய்துவிட்டார். இதில் முக்கியமான சண்டை காட்சிக்கு அந்நியனை அப்படியே போட்டுவிட்டார். அப்பரச்சித்துடு (அந்நியன்) தெலுகில் பயங்கர ஹிட்டென்று அவருக்கு யாரும் சொல்லாதது வருத்தமே…

ஒக்கடு (கில்லி) இயக்கிய குணசேகரிடமிருந்து இந்த படம் வந்தது பலத்த ஏமாற்றமே! படத்தில் திரைக்கதையும், எடிட்டிங்கும் பயங்கர மோசம்.

சரி யாரையாவது பாராட்டியே ஆகனுமே… கேமரா மேனையும், கிராபிக்ஸ்க்கான காட்சிகளுக்காக உழைத்த டீமையும் நிச்சயம் பாராட்டலாம். முதலமைச்சரிடம் மகேஷ் பாபு பேசும் இந்த குறிப்பிட்ட வசனங்கள் பிடித்திருந்தது.
“வானத்திலிருந்து பார்க்கும் போது எல்லாமே பச்சையாத்தான் தெரியும். கீழ இறங்கி பார்த்தாதான் உண்மை புரியும்”
“ஒரு கோடி எண்ண ஆரம்பிக்க வேண்டுமென்றாலும் ஒன்றிலிருந்துதான் எண்ண ஆரம்பிக்க வேண்டும்” (இது ஒரு மாணவர் MLA ஆனதற்கு க்ளைமாக்ஸில் பேசும் வசனம். ஆயுத எழுத்து வசனம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல.)

சரி கடைசியா நீ என்ன சொல்ல வரனு கேக்கறீங்களா? உங்களுக்கு மகேஷ் சுத்தமா பிடிக்காதா?. அவர் மேல பயங்கர வெறுப்பு அப்படினா நீங்க இந்த படம் பார்க்கலாம். அவர் கஷ்டப்பட்டு நடிச்சத எப்படி மோசமான திரைக்கதையால வீணாக்கியிருக்காங்கனு. யாம் பெற்ற துன்பம் யாரும் பட வேண்டாம் என்றே இந்த பதிவு!!!

ஏன் இந்த கொலை வெறி???

மக்கள்ஸ் கதை எழுதி போர் அடிச்சிடுச்சு… சரினு என்னோட முதல் தெலுகு பட அனுபவத்தை உங்களோட பகிர்ந்துக்கலாமனுதான் இந்த பதிவு… (எல்லா பதிவுக்கும் ஒரு விளக்கம் குடுக்க வேண்டியதா இருக்கே)

பெங்களூர்ல எலக்ட்ரானிக் சிட்டில தங்கி இருந்த சமயம். பக்கத்து ரூம்ல ஒரு பத்து ஆந்திர மக்கள்ஸ் ரூம் எடுத்து தங்கியிருந்தாங்க. ரொம்ப நல்ல பசங்க. நம்மகிட்டயும் ரொம்ப பாசமாவும் மரியாதையாவும் பேசுவாங்க.

ஒரு முக்கிய காரணம் நான் தினமும் எல்லாருக்கும் ஏதாவது சொல்லி கொடுத்துட்டு இருப்பேன். சொல்லி கொடுக்கறதுக்கு உனக்கு என்ன தெரியும்னு இங்க கேள்வி கேக்கப்படாது. அதே மாதிரி அவுங்களுக்கு தமிழ் படத்துல ஏதாவது டவுட்னாலும் நம்ம கிட்டதான் கேட்பாங்க. பாதி டிஸ்கஷன் ரீ-மேக் பத்திதான் இருக்கும்.

ஒரு நாள் ஞாயிற்று கிழமை மதியம், பாலாஜி இன்னைக்கு சிக்கன் செய்யறோம் நீயும் எங்க கூட வந்து சாப்பிடனும்னு ரொம்ப பாசமா கூப்பிட்டாங்க. சரி ஆந்திரா சாப்பாடும் காரமா நல்லாதான் இருக்கும்னு போனேன்.

அங்க போனவுடனே அவனுங்க என்னை கூப்பிட்டதுக்கான இன்னொரு காரணத்தை சொன்னாங்க. அவுங்க தலைவர் பாலக்கிருஷ்ணா நடிச்ச படத்தை நான் பார்க்கணும்தான் என்னைய கூப்பிட்டானுங்களாம். அந்த படம் ஆந்திரால பயங்கர ஹிட்டாம். படத்து பேரு “சமரசிம்மா ரெட்டி”.

சரி சிக்கனுக்காக அந்த கொடுமைய தாங்கிக்கலாம்னு நானும் உக்கார்ந்திட்டேன். படத்துல பார்த்தா நம்ம சிம்ரனும் அஞ்சலா ஜவேரியும் இருந்தாங்க. சரினு ரொம்ப சந்தோஷமா அட நம்ம பசங்கனு கூட்டத்துக்கு நடுவுல போய் உக்கார்ந்துட்டேன். அதுதான் நான் பண்ண பெரிய தப்பு.

வழக்கம் போல ஒரு மணி நேரம் வரைக்கும் ஒரு பெரிய மேட்டரும் இல்லாம சாதரணமா போயிட்டு இருந்தது. திடீர்னு ஒரு ஃப்ளாஷ் பேக் . பொதுவா தெலுகு மசாலா படத்துல எல்லாம் ஒரு பயங்கரமான ஃப்ளாஷ் பேக் இருக்கும். அது எனக்கு அப்ப தெரியலை.

பாலைய்யா ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்… ரெட்டிதான். வழக்கம் போல ஒருத்தர ஒருத்தர் மாத்தி மாத்தி கொன்னுக்கறானுங்க. அப்பறம் ஹை-பிட்ச்ல டயலாக் வேற அப்பப்ப…

பாலாஜி இப்ப வரப்போறதுதான் படத்துலயே சூப்பரானு சீனு. தொன தொனனு பேசாம படம் பாருனு ஒருத்தவன் சொன்னான். அவன் கண்ணில கொஞ்சம் லேசா கொலை வெறி தெரிஞ்சிது.

நானும் அப்படி என்னடா முக்கியமா சீன்னு பார்த்தா… வில்லனோட கைய பாலைய்யா தொரத்தி தொரத்தி வெட்டறார். அந்த வெட்டு பட்ட கையோட ரத்தம் ஒழுக ஒழுக அந்த வில்லன் தெரிச்சி ஓடறார். தெரு தெருவா ஓடறான். இவனுங்களா அங்க போறான் பிடி இங்க போறான் பிடினு சவுண்ட் விட்டுட்டு இருக்கானுங்க.

எனக்கா பீதி கிளம்புது. ஆஹா. இதுக்கு மேல இங்க உக்கார்ந்தா நம்மல போட்டு தள்ளிடுவானுங்களோனு பயந்து எழுந்திரிக்க முயற்சி செஞ்சேன். அப்ப பார்த்து பின்னாடி இருந்து ஒரு சவுண்ட்… டேய் எந்துக்குடா லேசாவு??? கூச்சோடானு.

ஆஹா!!! நடவுல உக்கார்ந்து இப்படி மாட்டிக்கிட்டேனே? அபிமன்யூ சக்கர வியூகத்துல மாட்ன மாதிரி சிம்ரன பார்த்து நடுவுல உக்கார்ந்து மாட்டிக்கிட்டேனே!!! ஓரமா உக்கார்ந்தாவாது அப்படியே எஸ்ஸாகிருக்கலாம். இப்ப அதுக்கும் வழியில்லாம போச்சே!!!

அதுக்கு அப்பறம் சும்மா ஒரு நூறு பேத்த மட்டும் வெட்டி கொன்னாருங்க… எங்க நடுவுல எழுந்திரிச்சா நம்மல போட்டு தள்ளுடுவானுங்களோனு ஒரு பயம். அப்படியே எதுவும் பேசாமல் அமைதியா உக்கார்ந்திருந்தேன். கடைசியா அந்த ஒத்த கைய வெட்னவற தலைய வெட்டி கொன்னுடறாரு… எல்லாரும் ஜோரா கை தட்னானுங்க…

அடப்பாவிகளா!!! இத்தன நாளா நல்லவங்கலாத்தானடா பழகனீங்க. உங்களுக்குள்ள இவ்வளவு கொல வெறியா??? நான் இத்தன நாளா கொல கார கும்பலோடவா சவகாசம் வெச்சிருந்தேன்???

சரி இதுக்கு மேலையும் எப்படி தெலுகு படம் பார்த்தனு கேக்கறீங்களா? அதுக்கு பேருதான் விதி 🙂

தோழர்களே அடுத்த பதிவு ஒரு ஸ்பெஷல் பதிவு… என்னனு கெஸ் பண்ணி வைங்க பார்க்கலாம் 😉

அந்த இரண்டு படங்கள்!!!

நான் முதன்முதலில் எழுதிய தெலுகு பட விமர்சனத்தில் இரண்டு படங்களை குறிப்பிட்டிருந்தேன் “ஆ நலுகுரு”, “அனுகோகுண்ட ஒக ரோஜு”. இந்த படங்களுக்கு விமர்சனம் எழுத சொல்லி ஒரு அனானி நண்பர் கேட்டிருந்தார். கொஞ்சம் நாளானதற்கு அவர் மன்னிப்பாராக.

ஆ-நலுகுரு
இதன் அர்த்தம் அந்த நால்வர். எந்த நான்கு பேர்? என்பதே படத்தின் கதை.
படத்தின் கதாநாயகன் ராஜேந்திர பிரசாத். பொதுவாக நகைச்சுவை படத்தில் நடிப்பவர். ஆனால் இதில் குணச்சித்திர பாத்திரம். (நம்ம சிவக்குமார் மாதிரினு வெச்சிக்கோங்க)

படத்தின் நாயகன் தன்னை சுற்றி உள்ள மனிதர்களுக்கு தன்னால் இயன்றவரை உதவுகிறான். யாருக்கு பண பிரச்சனையென்றாலும் இவரிடம் போனால் எப்படியாவது உதவுவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கமளவுக்கு உயர்ந்த குணத்தை உடையவர்.

இவர் வசிக்கும் அதே தெருவில் வசிக்கிறார் கோட்டா சீனிவாசராவ். இவர் உலகை ஆள்வது பணமே என்ற கொள்கை உடையவர். பணமில்லையென்றால் பிணமும் மதிக்காது என்று தீவிரமாக நம்புபவர். யாராக இருந்தாலும் பத்திரம் எதுவுமின்றி பணம் தரமாட்டார்.

கதாநாயகனுக்கு அவன் பிள்ளைகள், மற்றும் மருமகனால் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இவருக்கு இருக்கும் நல்ல பேரை பயன்படுத்தி ஃபைனன்ஸ் கம்பெனி ஆரம்பித்து மக்களை ஏமாற்றலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதை தடுக்க வேறு வழியில்லாமல் கோட்டாவிடம் கடன் வாங்குகிறார் நாயகன்.

ஏற்கனவே ஒரு ஏழைக்கு உதவ தன் வீட்டு பத்திரத்தை அடகு வைத்ததால், வேறு எதுவுமின்றி கடன் கேட்கிறார் நாயகன். ஏற்கனவே இருவருக்கும் இருந்த போட்டியில் தோற்பதாக ஒத்துக்கொள்கிறார் நாயகன் (உலகில் முக்கியம் மனித நேயமா அல்லது பணமா?). பணமே வெள்கிறது.

அன்று இரவே இறந்துவிடுகிறார் நாயகன். கடன்காரர்களுக்கு பயந்து தலைமறைவாகிறார்கள் நாயகனின் பிள்ளைகளும், மருமகனும். நடக்கும் காட்சிகளை நாயகனின் ஆவியும் எமதூதர்களும் பார்க்கிறார்கள். தன் பிள்ளைகளின் செயலையும், மருமகனின் செயலையும் கண்டு துடிக்கிறார் நாயகன். அவரால் வேறு எதுவும் செய்ய முடியாதே!!!

இறுதியில் அவர் மரணம் தற்கொலை என்று அவர் குடும்பத்தாருக்கு மட்டும் தெரியவருகிறது. பிள்ளைகளின் இழிசெயலால் தற்கொலை செய்து கொள்கிறார். இவரின் மரணத்திற்காக ஊரே மரியாதை செய்கிறது. ஊரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு அரசியல்வாதிகளும் வந்து மரியாதை செலுத்துகிறார்கள்.

கொள்ளி வைக்க பிள்ளைகள் வராததால் ஊர் மக்களே அவரை சுமந்து செல்கிறார்கள் (அந்த நால்வர்). அந்த நேரம் யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு போக பார்க்கிறார்கள் பிள்ளைகள். (அதுவரை அதே ஊரில் ஒரு ஹோட்டலில் மறைந்திருக்கிறார்கள்). அவர்கள் சவம் வரும் வழியில் தெரியாமல் சென்று ஊர் மக்களிடம் சிக்குகிறார்கள்.

மக்களும் இவர்கள் இதற்காகத்தான் வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று இவர்களை அழைத்து கொண்டு சுடுகாடு செல்கிறார்கள். அங்கே தன்னிடமிருந்து வாங்கிய பணத்தை கொடுத்தால்தான் எரிக்க விடுவேன் என்று கோட்டா சொல்ல, அவர் பிள்ளைகள் எங்களிடம் பணமில்லை, வேண்டுமென்றால் சவத்தை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று சொல்ல, ஊர் மொத்தமும் சேர்ந்து கோட்டாவிற்கு பணம் தருகிறார்கள்.

தான் பணம் கேட்டது நாயகனின் பெருமையை அவர் பிள்ளைகளுக்கு உணர்த்தவே என்று சொல்லி அவர்களை திருத்துகிறார். இறுதியில் அனைவரும் திருந்த மகிழ்கிறார் நாயகன். உடனே எமதூதர்கள் மறைந்து தேதூதர்கள் தோன்றுகிறார்காள்.

மக்களே நல்ல படத்தை கேவலமா சொல்லிட்டன்னு நினைக்கிறேன்… உண்மையாலுமே இது அருமையான படம்…

அனுகோகுண்ட ஒக ரோஜு த்ரில்லர் படம். காட்சிக்கு காட்சி நன்றாக இருக்கும். நான் கதை சொல்லி கெடுக்க விரும்பவில்லை… முடிந்தால் பார்க்கவும்… அனானி நண்பரே, நீங்கள் சொல்லி ஒரு மாதத்திற்கு மேலாகிறது என தெரியும். தாங்கள் இதை படித்து எனக்கு தெரியப்படுத்தினால் மகிழ்வேன்…

மதுர!!!

மதுரை மக்களே!!! இது உங்களை பத்தி இல்லை…
நம்ம இளைய தளபதி விஜய் நடிச்ச படம்… அப்ப பாக்காம விட்டுட்டேன். நேற்றுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பாத்துட்டு என்னால பதிவு போடாம இருக்க முடியலை.

இந்த படம் யார் யார் பார்க்கலாம்.
நம்ம முன்னால் பிரதம மந்திரி நரசிம்ம ராவ் மாதிரி சிரிப்பது எப்படினு தெரியாதா? கண்டிப்பா நீங்க இந்த படம் பாக்கனும். நம்ம வாழ்க்கையவிட இந்த உலகத்துல ஏதாவது கொடுமை இருக்கானு விரக்தில இருக்கீங்களா? இது உங்களுக்காகத்தான்.

படத்தோட கதை என்னனா? மன்னிச்சிடுங்க அப்படி எதுவும் இல்லை.

விஜய் மதுரைல கலக்டர். நான் கான்வெண்ட்ல படிச்சி கலெக்டராகல கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சி கலக்டரானவன்னு ஹை-பிட்ச்ல டயலாக் பேசிக்கிட்டே இருப்பாரு (இது எங்களை மாதிரி கவர்மெண்ட் பள்ளிகளில் படித்தவர்களை கேலி செய்வதற்காகத்தான்). சோனியா அகர்வாலை கொலை செய்துவிட்டார் என்ற குற்றத்திற்காக தலை மறைவாக மாறு வேடத்தில் வாழ்கிறார்.

எங்கனு கேக்கறிங்களா? சென்னைல கோயம்பேடு மார்க்கெட்ல. ஆனா 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட்டுட்டு சண்டை போட்டுட்டு இருப்பாரு. அதுவும் லாரி லாரியா ஆளுங்க வந்து அடி வாங்கிட்டு போறாங்க 🙂

அப்பறம் மாறு வேஷத்தப்பத்தி சொல்லியே ஆகனும். மீசைய ட்ரிம் பண்ணிட்டு (பேரையும் ட்ரிம் பண்ணிடுவாரு… மதுரைவேல் IASஅ மதுரனு ட்ரிம் பண்ணிடுவாரு.. அடையாளம் தெரியக்கூடாதுனு), கைல டேட்டூ குத்திருப்பாரு. அப்பறம் கட் பணியன் வேற போட்டுருப்பாரு. ஒரு சின்ன சூச்சூவைக் கேட்டக்கூட சொல்லிடும் அது விஜய்னு. ஆனா தமிழ்நாடு போலிஸால கண்டுபிடிக்க முடியாது.

அப்பறம் டாக்டருங்கெல்லாம் இந்த படம் பார்த்தே ஆகணும். ஊமை குழந்தையை எப்படி பேச வைக்கனும்னு ஒரு ஐடியா தராரு நம்ம தலைவர். அதாவது அந்த குழந்தைய நீங்க பீச்சுக்கு கூட்டிட்டு போகனும். அப்பறம் நீங்க கடல்ல குதிச்சு உங்களை கடல் இழுத்துட்டு போற மாதிரி பாவ்லா பண்ணனும் (அப்படியே உங்களை கடல் இழுத்துட்டு போனா அதுக்கு நான் பொறுப்பில்லை). அதை பார்த்து அந்த குழந்தை பயிந்து பேசிடும். இப்பவே கண்ண கட்டுதேனு பாக்கறீங்களா… இன்னும் இருக்கு!!!

ஹீரோயின்னு ஒருத்தவங்க (ரக்ஷிதா) வறுமையில வாடறவங்க (பாவம் துணிய பாத்தா அப்படித்தான் தெரியுது… ஆனா மினிஸ்டர் பொண்ணு) அந்த மார்க்கெட்ல ஏதோ ரிசர்ச் பண்றாங்க. என்ன ரிசர்ச்னு யாருக்கும் தெரியாது… ஆனா விஜய சுத்தி சுத்தி படம் எடுக்கறாங்க. ஒரு வேலை அதுதான் ரிசர்ச்சானு தெரியலை. ஸ்கிரின்ல நாலுல மூணு பகுதி இவுங்க எடுத்துக்கறாங்க.

வில்லன் பசுபதிதான் படத்தோட பெரிய ப்ளஸ் பாயிண்ட். அவருக்கு படத்தில் இரண்டு ரோல். ஒன்று வில்லன் அடுத்தது காமெடியன். அவர் செய்யும் காமெடிக்கு அளவே இல்லை. அவரோட இண்ட்ரொடக்ஷன் அருமை. கண்ணாடி டம்ப்ளர்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி கொண்டிருப்பார். அப்போழுது (விஜயிடம் போட்டு கொடுத்த) கூட்டாளி ஒருவன் அவர் காலில் விழும் போது தவறி அந்த டம்ப்ளர்களை தட்டிவிடுகிறார். உடனே பசுபதி “நான் இவ்வளவு கஷ்டப்பட்டு கட்டின கோட்டைய ஒரே நிமிஷத்துல கலச்சிட்டயேடா”னு (டபுள் மீனீங்காம்!!! ) சொல்லிட்டு அவரை சட்டத்திடம்(?) ஒப்படைக்கிறார். அங்கே அவரே நீதிபதி மாதிரி வந்து காமெடியா அவரை சுத்தியளால் அடித்து கொல்கிறார்.

சோனியா அகர்வால் மதுரைல இவர் கலக்டரா இருக்கும் போது இவருக்கு அசிஸ்டெண்டா இருக்காங்க. வில்லன் வீட்ல ஏதோ ரகசிய டாக்குமெண்ட் எடுக்கறன்னு போயி மசாலா அரைச்சி அங்க இருக்குற 2 தினத்தந்தி கட்டிங்க பாத்ரூம்ல இருந்து விஜய்க்கு ஃபேக்ஸ் பண்றாங்க. (அந்த கட்டிங் கலக்டர் ஆபிஸ்ல இருக்கும்னு பாவம் அவுங்களுக்கு தெரியல.)

அத நம்ம தலைவர் பசுபதி எப்படி கண்டுபிடிப்பார்னா அவருக்கு அந்நிய மூச்சுக்காத்து அடிக்குமாம் (எப்படிடா இப்படி எல்லாம் சிந்திக்கறீங்க?) அதை வெச்சி அவர் சோனியா அகர்வாலை கண்டுபிடித்துவிடுவாராம். பிறகு வழக்கம் போல் விஜயை மிரட்ட விஜய் அந்த தினத்தந்தி கட்டிங்கை அடை மழையில் நினைந்து கொண்டு எடுத்து வருகிறார். பிறகு அங்கு நடக்கும் சண்டையில் படத்தில் இருக்கும் ஒரே நல்ல ஃபிகரான சோனியா அகர்வாலையும் கொன்று விடுகிறார்கள்.

படத்துல முழுக்க குத்து பாட்டுதான்… “மச்சான் பேரு மதுரை”, “பம்பரக் கண்ணு”, “எலந்தை பழம் எலந்தை பழம் உனக்குத்தான்” (நியாயமா பலாப்பழம்னுதான் பாடியிருக்கனும்) …

படத்தின் க்ளைமாக்ஸ்தான் வெயிட்டான சீன். ஊருல இருக்குற எல்லாருக்கும் அஞ்சி ரூபா செல் போன் விற்கிறார் பசுபதி. அதில் பாம் வைத்து சரியாக பத்து நிமிடத்திற்கு முன் விஜயிடம் இதை தெரிவிக்கிறான். இதை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க!!!

(டைரக்டர் மாதேஷிக்கு தெலுகு ஃபீல்டில் நல்ல எதிர்காலம்ம் இருக்கிறது. ரவி தேஜாவை வைத்து இவர் படமெடுக்கலாம்)