நெல்லிக்காய் – 3

காய் 1
காய் 2

முதல் இரண்டு நாள் அந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்கள், எந்த பிரச்சனைக்கு யாரை அணுக வேண்டும் என்ற தகவல்கள், சம்பளத்திற்கான வங்கி கணக்கு துவங்குதல், பி.எஃப் கணக்கு துவங்குதல், மதிப்பெண் பட்டியல் சரி பார்த்தல் போன்றவைகள் நடைபெற்றன.

மூன்றாவது நாள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட லேபில் அனைவரும் ஆளுக்கொரு கணினி முன்பு அமர்ந்திருந்தனர். அவர்களுக்கென்று ஒரு மேய்ப்பாளர் (இன்ஸ்ட்ரெக்டர்) இருந்தார்.

“நண்பர்களே, இங்கு ஆளுக்கு ஒரு கணினி கொடுக்க முடியாத நிலையால் ஒரு கணினியை இருவர் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் அருகிலிருப்பவரோடோ அல்லது உங்கள் நண்பர்களுடனோ நீங்கள் சேர்ந்து அமர்ந்து கொள்ளலாம். நான் இதற்கு 10 நிமிடம் அவகாசம் தருகிறேன்” என்று சொல்லிவிட்டு இன்ஸ்ட்ரெக்டர் சென்று விட்டார்.

அனைவரும் அவரவர் நண்பர்களுடன் அமர அருணுக்கு யாரும் கிடைக்காமல் தனியே அமர்ந்தான். அனைவருக்கும் PC பார்ட்னர் கிடைத்துவிட அருணுக்கு மட்டும் யாரும் கிடைக்காதது அவனுக்கு வருத்தத்தை தந்தது.

அன்று ஒரு வழியாக வகுப்புகள் முடிய அவன் மட்டும் தனியாக கணினியில் சொல்லி கொடுத்ததை கற்று கொண்டிருந்தான். அவனுக்கு அந்த தனிமையும் ஒரு விதத்தில் நல்லதாகவே பட்டது. யாருடனும் நேரத்தை பங்கு போடாமல் நன்றாக படிக்கலாம் என்று தோன்றியது.

அடுத்த நாள் வழக்கம் போல் அவன் அவனது கணினியில் படித்து கொண்டிருக்க, தீபா இண்ஸ்ட்ரெக்டருடன் ஏதோ பேசி கொண்டிருந்தாள். அது அவனுக்கு நன்றாகவே கேட்டது.

“சார், நேத்து நான் வரலை. இன்னைக்கு வந்து பார்த்தால் எல்லா கம்ப்யூட்டர்ஸும் ஃபுல்லா இருக்கு. நான் எங்க உட்காறதுனு சொன்னீங்கனா நல்லா இருக்கும்”

“இங்க பாரும்மா, இது காலேஜ் இல்லை. இங்க சார்னு கூப்பிடக்கூடாது. என்ன ராஜிவ்னு கூப்பிடு”

“சரிங்க. எனக்கு ஒரு கம்ப்யூட்டர் கொடுங்களேன் ராஜிவ்”

“எல்லா கம்ப்யூட்டர்லயும் ரெண்டு ரெண்டு பேர் இருக்கணும்… ஏதுலயாவது ஒரு ஆள் உக்கார்ந்திருந்தால் நீ அவரோட ஷேர் பண்ணிக்கோ. ஓகேவா? எதாவது பிரச்சனைனா எங்கிட்ட சொல்லு”

“ஓகே”

சொல்லி விட்டு ஒரு ஒரு வரிசையாக பார்த்து கொண்டே வந்தாள்.

அருண் மட்டும் தனியே இருப்பதை பார்த்துவிட்டு மீண்டும் ஒரு முறை லேப்பை சுற்றி வந்தாள். வேறு வழியில்லாததால் மீண்டும் அருணிடம் வந்தாள்.

“உங்ககூட யாராவது கம்ப்யூட்டர் ஷேர் பண்றாங்களா?”

“இல்லையே”

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா நான் உங்க கூட ஷேர் பண்ணிக்கலாமா?”

“இது என்ன என் சொந்த கம்ப்யூட்டரா நான் ஆட்சேபம் தெரிவிக்க. நீங்க தாராளமா ஷேர் பண்ணிக்கலாம்”

சொந்த கம்ப்யூட்டராக இருந்தால் நிச்சயமாக ஆட்சேபம் தெரிவித்திருப்பான் என்றே அவளுக்கு தோன்றியது.

“நேத்து க்ளாஸ்ல சொல்லி கொடுத்த ஸ்லைட்ஸ் இங்க இருக்கு. நீங்க வேணும்னா படிச்சிட்டு இருங்க. நான் வரேன்”

சொல்லிவிட்டு பக்கத்து கம்ப்யூட்டரிலிருந்த கார்த்திக்கிடம் ஏதோ பேசி அவனை வெளியே கூப்பிட்டு சென்றான்.

காபி குடிக்குமிடத்திற்கு கார்த்திக்கை அழைத்து சென்றான் அருண்.

“கார்த்திக், நீ தப்பா எடுத்துக்கலனா நீயும் நானும் ஒரு கம்ப்யூட்டர்ல உக்கார்ந்துக்கலாம். ராஜியும், தீபாவும் ஒரு கம்ப்யூட்டர்ல உக்கார்ந்துக்கட்டுமே. ப்ளீஸ்”

“டேய், லூசாடா நீ? அவனவன் பொண்ணுங்க பக்கத்துல உக்காரத்துக்கு அலையறானுங்க. நல்ல வேளை அவள் என் க்ளாஸ் மேட்டுங்கறதால எனக்கு எப்படியோ சான்ஸ் கிடைச்சது.நீ என்னடானா அதை கெடுத்துக்க சொல்றீயே”

“எப்படியும் பக்கத்து கம்ப்யூட்டர்லதான அவ உக்கார்ந்திருப்பா. நீ ஈஸியா பேசலாம். எனக்கு அந்த பொண்ணு பக்கத்துல உக்கார்ந்து வேலை செய்ய முடியாது.. ப்ளீஸ்”

“ஏன்டா ஏதோ கவர்ன்மெண்ட் பஸ்ல சீட் மாத்தர மாதிரி மாத்த சொல்ற. போனா போகுது, நான் ராஜிக்கிட்ட பேசி பாக்கறேன்.”

கார்த்திக் உள்ளே சென்று ராஜியிடம் ஏதோ சொல்ல ராஜி தீபாவின் கம்ப்யூட்டருக்கு சென்றாள். இதை பார்த்தவுடன் சந்தோஷமாக உள்ளே வந்து கார்த்திக் பக்கத்தில் அமர்ந்தான் அருண்.

நடந்ததை யாரும் சொல்லாமலே புரிந்து கொண்டாள் தீபா.

சில நாட்களிலே கார்த்திக்கும், அருணும் நல்ல நண்பர்களாகினர். ராஜியும் தீபாவும்தான். ஒருவருக்கொருவர் தெரியாததை சொல்லி கொடுத்து உதவி கொண்டனர். அனைத்து தேர்விலும் கார்த்திக்தான் முதல் மதிப்பெண் எடுத்தான். அருணும் ஓரளவு நல்ல மதிப்பெண்ணே பெற்றான்.

நால்வரும் ஒன்றாகவே சுற்ற ஆரம்பித்தனர். சாப்பிட சென்றாலும், காபி, டீ இடைவேளைகளிலும் ஒன்றாகவே இருந்தனர். அருணும் தீபாவும் மட்டும் அவ்வளவாக பேசிக்கொள்ளாததை கார்த்திக்கும் ராஜியும் நன்கு அறிந்திருந்தனர்.

பெரும்பாலான நாட்களில் அருணும் கார்த்திக்கும் அசைவ உணவையே சாப்பிட தீபா ஒரு நாள் கேட்டே விட்டாள்.

“எப்படி நீங்க ஆடு, கோழி எல்லாம் சாப்பிடறீங்க? உங்களுக்கு அத பார்த்தா பாவமா தெரியலையா?”

கார்த்திக் அமைதி காத்தான். அருண் பேச ஆரம்பித்தான்.

“நீங்க மட்டும் கீரையெல்லாம் சாப்பிடல. அதுக்கும் தான் உயிர் இருக்கு. வேரோட பிடிங்கி தானே சாப்பிடறீங்க? இதுவாவது பரவாயில்லை. இலை, காய், பழம் எல்லாம் சாப்பிடறது எப்படி தெரியுமா? கைய கால பிக்கிற மாதிரி. அதுக்கு எப்படி வலிக்கும். அதையே தான் இந்த ஆடும் செய்யுது. செடிய கடிச்சி சாப்பிடுது. அந்த செடியெல்லாம் எப்படி அழுதுச்சினு உங்களுக்கு தெரியுமா? செடி கொடிகளை காப்பாத்த வேற வழியே இல்லாம நாங்க ஆடு, கோழினு சாப்பிட வேண்டியதா போச்சு”

“பழமெல்லாம் மத்தவங்க சாப்பிடத்தான் செடியே தருது. அதுல இருக்கற விதைதான் அதோட குழந்தை. பழத்தை சாப்பிடறது தப்பில்லை” என்று மீண்டும் வாதாடினாள் தீபா.

“சரி நீங்க இதுவரைக்கும் சாப்பிட்ட பழத்துல இருந்து ஒரு சதவிகிதமாவது விதைய எடுத்து நட்டிருக்கீங்களா?
சாப்பிட்டு குப்பைல போட வேண்டிய்து. இல்லைனா பாலித்தீன் பேப்பர்ல பத்திரமா போட்டு குப்பை தொட்டில போட வேண்டியது. இதுல விதைக்காத்தான் பழத்தை சாப்பிட்டோம்னு கதை விட வேண்டியது. அதுக்கு எங்களை மாதிரி கொன்றால் பாவம் தின்றால் தீரும்னு சொல்லிட்டு போகலாம்” மீண்டும் விதாண்டாவாதம் பேசினான் அருண்.

ஒருவழியாக பேச்சை திசைத்திருப்பினான் கார்த்திக்.

“தீபா அந்த ராஜிவ்க்கு உன் மேல ஒரு கண்ணுனு நினைக்கிறேன். எப்பவுமே உன்னய சைட் அடிச்சிக்கிட்டே இருக்கறான்”

“அப்படியெல்லாம் இல்லை. நீ எதாவது கதை கட்டிவிடாதப்பா சாமி” சமாளித்தாள் தீபா…

“அருண், நான் சொல்றது உண்மைதான?” அருணையும் துணைக்கு அழைத்தான் கார்த்திக்.

“ஆமாம்.. அப்படித்தான்னு நினைக்கிறேன்” சொல்லிவிட்டு தீபாவை பார்த்தான் அருண்.

அவள் அவனை முறைத்து கொண்டிருந்தாள். அந்த முறைப்பிலும் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்று அவன் உள்ளுணர்வு அவனுக்கு சொல்லியது…

(தொடரும்…)

அடுத்த பகுதி