என்னாது… இலவசம்.. இல்லையா???

வழக்கம் போல் அலுவகத்திலிருந்து வீட்டிற்கு சென்றவுடன் என் சொந்த உபயோகத்திற்கான மின்னஞ்சலை பார்க்கலாம் என்று என் மடிக்கணினியை
திறந்து பார்த்தேன்.

யாரென்று தெரியாத ஒருவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல். அதை திறந்தவுடனே அமெரிக்க அரசிடமிருந்து வந்திருப்பது புரிந்தது. அவசரமாக படிக்க ஆரம்பித்தேன்.

அதன் தமிழாக்கமிங்கே (அப்பப்ப ஆங்கிலமுன் வரும் கண்டுக்காதீங்க, அப்படியே பிராக்கெட்ல இருக்கறது நம்ம கமெண்ட்)

திரு.பாலாஜி மனோகரன், (மரியாத தெரிஞ்ச பசங்க)
இது முனைவர். ஜோனதன் பி போஸ்டல் அவர்களின் வழக்கின் வெற்றியை முன்னிறுத்தி அனுப்பப்பட்டுள்ளது. (எவனோ ஜெயிச்சதுக்கு எனக்கு எதுக்குடா மெயில் அனுப்பறீங்க)

முனைவர். ஜோனதன் பி போஸ்டல் அவர்கள் வலையுலகின் தந்தை என்பது தாங்களறிந்ததே (அட நாயிங்களா? இது எனக்கு எப்படா தெரியும்?).
பல ஆண்டுகளாக அவர் ஆராய்ந்து கண்டுபிடித்த வலையுலகை மக்கள் இலவசமாக பயன்படுத்துவதால் பொறுப்பற்ற தன்மையுடன்
பயன்படுத்துவதாகவும், ஆகவே அவர்கள் பயன்படுத்துவதற்கு அரசிற்கு பணம் செலுத்த வேண்டுமென்றும் அதில் ஒரு சிறு பகுதியை தங்களுக்கு வழங்க வேண்டுமென்றும் அவர் வாரிசுகள் இட்ட வழக்கின் நியாயத்தை உணர்ந்து நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமான வழக்கை வழங்கியதும் தாங்களறிந்ததே. (உங்களுக்கு காசு வருதுன்னவுடனே அதுல நியாயம் இருக்குனு சொல்லிட்டேங்களேடா… சரி அதுக்கு எதுக்குடா எனக்கு மெயில் அனுப்பறீங்க?)

இதுவரை நீங்கள் வலையுலகை எவ்வாறு உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள் என்று 6 மாதங்களாக நாங்கள் செய்த ஆராய்ச்சியின் மூலம் நீங்கள்
எங்களுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்ற கணக்கு தயாராகி வரும் நிலையில் அதை பற்றிய ஒரு முன்னோட்டத்திற்காகவே இந்த
மின்னஞ்சல்.(டேய் வெளக்கெண்ணெய்ங்களா… இத முன்னாடியே சொல்லியிருக்கலாமே. இப்ப வந்து சொன்னா நான் என்ன பண்ணுவேன்)

நீங்கள் அனுப்பிய ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் 10 ரூபாய்.(இது தெரியாம கண்ட கண்ட நாயிக்கெல்லாம் மெயில் அனுப்பிட்டனே… ஆண்டவா நான் என்ன பண்ணுவேன்)

உங்களுக்கு வந்த மின்னஞ்சலுக்கு 5 ரூபாய். (டேய் எவனோ எனக்கு மெயில் அனுப்பனதுக்கு நான் என்னடா பண்ணுவேன்… இதுல வேற அப்பப்ப லேப்-டாப் ஃபிரியா வாங்கிக்கோங்க, $500க்கு கிஃப்ட் வவுச்சர் வாங்கிக்கோங்க, I-Pod still Pending இப்படி வந்த மெயிலுக்கு எல்லாம் நான் என்னடா பண்ணுவேன்)

ஆர்குட்டில் நீங்கள் செய்த ஒவ்வொரு ஸ்க்ரேப்புக்கும் 5 ரூபாய். (சரி… இது வரைக்கும் வாங்கன சம்பளம் அவுட்)

உங்களுக்கு வந்த ஸ்க்ரேப்புக்கு 3 ரூபாய்… (சரி ICICIல பர்சனல் லோன் எப்படியும் 8% கொடுப்பானுங்க. பாத்துக்கலாம்)

நீங்கள் ப்ளாகரில் அக்கவுண்ட் வைத்திருப்பவர் என தெரியவந்துள்ளது. (அடப்பாவிகளா அது ஒரு தப்பா?)

நீங்கள் போட்ட பதிவொன்றுக்கு 10 ரூபாய். (ஆஹா நல்ல வேலை நம்ம இன்னும் 100 கூட போடலை… )

அதுவே இவர் பார்வைக்கு, அவர் பார்வைக்கு என்று இட்டிருந்தால் 20 ரூபாய் (என்னடா சொல்றீங்க. நீங்களும் தமிழ்மணம் படிச்சிருக்கீங்களா?)

உங்களுக்கு மற்றவர்கள் இட்ட பின்னூட்டம் ஒவ்வொன்றுக்கும் 3 ரூபாய் (ஆஹா… சந்தோஷப்பட்டதெல்லாம் வீணா போச்சே. அடப்பாவமே இது
தெரிஞ்சிருந்தா எல்லாத்தையும் ரிஜக்ட் பண்ணிருப்பேனே)

நீங்கள் உங்கள் பதிவில் நன்றி சொல்லி இட்ட பின்னூட்டங்களுக்கும், பதில் பின்னூட்டங்கள் ஒவ்வோன்றுக்கும் 2 ரூபாய். (நன்றி சொல்றது தப்பா?
இறைவா இது என்ன சோதனை. எல்லாரும் செஞ்சதையே தானே நானும் செஞ்சேன். இது ஒரு பாவமா?)

மற்றவர் பதிவில் உங்கள் பெயரில் நீங்கள் இட்ட பின்னூட்டங்களுக்கு 1 ரூபாய். (பரவாயில்லைப்பா. ஓரளவுக்கு நல்லவனாத்தான் இருக்கானுங்க)

மற்றவர் பதிவில் அனானியாக அவரை புகழ்ந்து இட்ட பின்னூட்டங்களுக்கு 3 ரூபாய் (டேய் நீங்களும் விவரமாத்தான் இருக்கீங்க)

மற்றவர் பதிவில் அனானியாக அவரை திட்டி இட்ட பின்னூட்டங்களுக்கு 10 ரூபாய் (இப்பதாண்டா உங்களை நல்லவன்னு சொன்னேன் அது தப்பா?)

உங்கள் பதிவிலே உங்களை புகழ்ந்து அனானியாக பின்னூட்டமிட்டிருந்தால் 20 ரூபாய் (ஆஹா… நம்மல புகழ்ந்து நாலு வார்த்தை போட்டா தப்பா?
இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்டா)

தமிழ்மணத்தில் வருவதற்காக சும்மா ஒரு பின்னூட்டம் போட்டிருந்தால் 5 ரூபாய்(டேய் இதெல்லாம் அநியாயம்டா. உங்களை எதிர்த்து கேக்க ஆளே
இல்லையா?)

100 பின்னூட்டத்திற்கு மேல் வருவதற்கு கயமைத்தனம் செய்திருந்தால் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் 10 ரூபாய்… (ஆடிய ஆட்டமென்ன
பாடல் கண்முன்னே வந்தது… தலைவா கொத்ஸ் நீ எங்கிருக்கிறாய்? உன்னிடம் பாடம் பயின்ற எனக்கா இந்த சோதனை?)

அக்கவுண்ட் இல்லாதவர்கள் அனானியாக இட்ட பின்னூட்டங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 1 ரூபாய். (எனக்கு ஏன்டா இதெல்லாம்)

மற்றவர் பெயரில் பின்னூட்டமிட்டிருந்தால் (அதர் ஆப்ஷனில்) 50 ரூபாய். (50 ரொம்ப கம்மி. 100 ரூபாயாக்க சொல்லி ஒரு மெயில் அனுப்பனும். நமக்கு கவலையில்லை :-))

ஒரு முக்கியமான விஷயம் நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் இந்த எண்களை அப்படியே அமெரிக்க டாலருக்கு மாற்றி கொள்ளவும். (என்னது
இதயத்துடிப்பு குறைஞ்சிக்கிட்டே வர மாதிரி இருக்கு… ஏண்டா ஒரு பிளாக் ஆரம்பிச்சது தப்பாடா. எல்லாரும் பண்ணதையே தான்டா நானும் பண்ணேன். இது தெரிஞ்சா ஊரே கை கொட்டி சிரிக்குமே.

நாதாரிங்களா… ஆறு மாசத்துக்கு முன்னாடி அடக்கமாத்தாண்டா இருந்தேன் அப்பவே சொல்லியிருக்க கூடாதா? இப்படி நாடு விட்டு நாடு வந்து
சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிட்டேனே!!!

நல்ல வேலை அனானியா ஆட்டம் போடலை. இருந்தாலும் யார் யார் சொத்தெல்லாம் பறிமுதல் ஆகப்போகுதோ தெரியலையே! அதையும் எவனாவது பதிவுல போடுவான். தப்பி தவறி கூட பின்னூட்டம் போட்ற கூடாது. முடியுமானு தெரியலையே)

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். (எப்படிடா உங்களால மட்டும் ஆப்படிச்சிட்டு அருள் வாக்கு சொல்ல முடியுது?)

– அமெரிக்கன் கவர்ன்மெண்ட்

மக்களே! நீங்களே இது நியாயமானு சொல்லுங்க. ஊரவிட்டு வந்து தனியா இருக்கற ஒரு அப்பாவி பையன் பொழுத போக்கறதுக்காக
விளையாட்டுத்தனமா எழுதறது தப்பா? இவனுங்க கேக்கற காசுக்கு நான் வாழ்க்கை முழுசா சம்பாதிச்சாலும் பத்தாதே! பேசாம யாருக்கும்
சொல்லிக்காம ஊரு பக்கம் வந்து விவசாயம் பாக்கலாம்னு யோசிக்கிறேன்!

ஒரு பத்து மணிக்கா இந்தியால இருந்து போன் வந்துது.

“ஹலோ பாலாஜி ஹியர்”

“டேய் பாலாஜி, நான் கோழி பேசறேன்டா”

“டேய் கோழி எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன்டா… அப்பறம் ஊருக்கு வர போறனு மச்சான் சொல்லிட்டு இருந்தான்”

“ஆமாண்டா கோழி… நம்ம எழுதின அந்த ப்ளாகால சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிட்டேண்டா. சரி அதெல்லாம் உனக்கு புரியாது. ரூம்ல
எல்லாம் எப்படி இருக்கீங்க?”

“நாங்க எல்லாம் நல்லா இருக்கோம். அப்பறம் அந்த லிஸ்ட்ல நன்றி சொல்லி போட்ட பதிவுக்கு 5 ரூபாய்னு ஒரு கேட்டகிரிய சேர்த்துக்கோ”

“டேய் கோழி என்னடா சொல்ற? உனக்கு எப்படி அதெல்லாம் தெரியும்”

“ஏன்டா அனுப்புனவுக்கு தெரியாதா உள்ள என்ன இருக்குதுனு”

“அடப்பாவி உன் வேலை தானா அது?”

“ஆமாம் மெயில்ல IP addressஐ வெச்சி இந்தியால இருந்து வந்திருக்குனு நீ கண்டுபிடிக்க கூடாதுனுதான் யூ.எஸ் சர்வருக்கு கனெக்ட் பண்ணி
மெயில் அனுப்பினேன்”

“அது சரி… நான் அதெல்லாம் பாக்கவே இல்லையே! ஏன்டா கோழி இப்படி பண்ண?”

“நீ மட்டும் என்னய எப்பவும் லந்து பண்ணுவ. நான் பண்ண கூடாதா?”

“ஏன்டா கொஞ்சமிருந்தா என் இதயமே நின்னுருக்குமே… இனிமே உன்னைய லந்து பண்ண மாட்டேன் தெய்வமே”

“அது… போனா போவுது எப்பவும் போல எதையாவது லூசுத்தனமா எழுதிட்டு இரு. நான் ஆர்குட்ல வரேன்”

“ஆர்குட்டா? சரி வா”

ஆஹா நல்ல வேலை அப்ப எல்லாமே இலவசம் தான்….இல்லைனா?