ஸ்ரீ ஸ்ரீயும் நானும்!!!

ஒரு வழியாக படித்து முடித்து வேலை தேடி பெங்களூர் வந்தேன்… ஒரு ஆறு மாதம் பட்ட கஷ்டத்தில் ஒன்றிற்கு இரண்டு கம்பெனியில் வேலை கிடைத்தது.

ஒரு கம்பெனியில் மும்பையில் வேலை. மற்றோன்று பூங்கா (தற்போது டிராபிக் ஜாம்) நகரத்தில்.
நமக்கு ஹிந்தி மாலும் நஹி…
அதனால பெங்களூர்ல இருக்கற வேலைல சேர்ந்தேன்.

எங்க கம்பெனி பக்கத்துலயே நண்பர்களுடன் தங்க ஆரம்பித்தேன். கொஞ்ச நாள்ல பக்கத்து ரூம்ல 2 மளையாளி பசங்க வந்து ரூமெடுத்தாங்க.அதுல ஒருத்தன் நம்ம அந்நியன் ஸ்டைல நீட்டா முடி வெச்சிருந்தான்…அவன் பெயர் அஜய்.
எங்களுக்கு பார்த்த அன்னைக்கே கொஞ்சம் பயம்…

அப்பறம் ஒரு ரெண்டு நாள் கழிச்சி கைல 4-5 புக் எடுத்துட்டு எங்க ரூம்க்கு வந்தான்.உங்களுக்கு இவங்க எல்லாம் தெரியுமானு அந்த புக்கை காட்டினான். என்னன்னு பார்த்தா நம்ம பாரதியார், வ.ஊ.சி, விவேகானதர், காந்தி, குரு கோவிந்த் சிங் இந்த மாதிரி எல்லாரும் தெரிஞ்சவங்கதான்.

எங்களுக்கேவானு சொல்லிட்டு இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்கதான்… பக்கத்து ரூம்லதான் தங்கியிருந்தாங்க இப்பதான் வெளிய போயிருக்காங்கனு கொஞ்சம் நக்கல் அடிச்சோம்.
பையன் கொஞ்சம் டென்ஷனாகிட்டான்… அப்பறம் சமாதனப்படுத்தினோம்

அவந்தான் அந்த சைக்காலஜி கேள்வியெல்லாம் கேட்டவன்… அடிக்கடி அவன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமம் போவான். அவரை பத்தி ரொம்ப பெருமையா பேசுவான்…நாங்களும் கேட்டுக்குவோம்.

அவரை பத்தி அவன் சொன்ன விஷயத்துல எனக்கு பிடிச்சியிருந்தது அந்த மூச்சு பயிற்சி சுதர்சனக்கிரியா தான்.அதுவும் இல்லாமல் அவர் தான் கடவுளின் அவதாரம்னு சொல்லிகிட்டதில்லைனு கேள்விப்பட்டேன்.(அந்த மாதிரி யாராவது சொன்னா நான் பதிலுக்கு எப்பவும்.. இல்லை இல்லை…நாசர்தான் அவதாரம்னு நக்கலடிப்பேன்)

அந்த சமயத்தில் ஒரு நாள் அவர் பெங்களூர் ஆசிரமத்திற்கு வருகிறார், நீங்களும் வரீங்களா அவரை பார்க்கலாம்னு சொன்னான்.எங்க ரூம்ல ஒருத்தவனுக்கு இதில் நம்பிக்கை அதிகம்.. அதுவும் இல்லாம நாள பின்ன அவரை கடவுளாக்கிட்டா நம்மளும் கடவுள பாத்திருக்கோம்னு பந்தா பண்ணலாமினு நானும் கூட போனேன்.

பெங்களூரிலிருந்து கனகபுரா போகிற வழியில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் சில கோடிகளை விழுங்கி அந்த அறிகுறியே தெரியாமல் அமைதியாக அமைந்திருந்தது ஆசிரமம்.

அதில் புதிதாக கட்டியிருந்த மண்டபம் தாமரை வடிவிலிருந்தது. சில ஆயிரக்கனக்கானோர் அமர்ந்து தியானம் செய்யலாம்.அங்கே அமர்ந்து தியானம் செய்தால் மனதை ஒருமுகப்படுத்த வசதியாக இருக்கும் என்றான். அதை ஏனோ நான் முயற்சி செய்து பார்க்கவில்லை. ஆனால் அங்கே ஒரு அமைதி நிலவியதாகவே தோன்றியது.

நாங்கள் (4 பேர், அஜயையும் சேர்த்து) சரியாக 10 மணிக்கெல்லாம் ஆசிரமத்திலிருந்தோம். ரவி சங்கர் சரியாக 12 மணிக்கு வந்தார்.அஜய் அவரிடம் எந்த கேள்வி வேண்டுமென்றாலும் கேள் அதற்கு அவர் பதில் சொல்வார் என்றான்.

எனக்கு பல கேள்விகள் இருந்தன. இந்து மதம் பற்றியும், உருவ வழிப்பாடு பற்றியும், ஒரு கடவுளை விட மற்றவர் பெரியவர் என்ற குழு பிரச்சனைகளும், அசுரர்களுக்கு சிவன் எதுக்கு வரம் கொடுக்கனும் அதை திருமால் எதற்கு அழிக்க வேண்டும், இன்னும் பல…

ஆனால் என் கூட இருந்த நண்பனுக்கு ஒரே கேள்வி… எல்லாரையும் ஒரு ஸ்ரீ சொல்லி தான சொல்றாங்க உங்களை மட்டும் ஏன் 2 “ஸ்ரீ” (ஸ்ரீ ஸ்ரீ) சொல்லி கூப்படறாங்கனு.நான் யோசிச்சி பார்க்கும் போது என் கேள்விய விட அவன் கேள்விதான் ஞாயமா இருந்துச்சு…

ஸ்ரீ ஸ்ரீ வெள்ளை உடை அணிந்து எளிமையாக இருந்தார். அவர் வந்தவுடன் அவரை நம் மக்கள் சுற்றி கொண்டனர்.அவரை அனைவரும் தொட்டு வணங்கினார்கள். (என்னால் ஏற்று கொள்ள முடியாத ஒன்று)

இதைவிட கொடுமை அவரை தொட்டால் ஏதோ சக்தியும், பெரும் அமைதியும் கிடைப்பதை போல் முகத்தில் ஒரு உணர்ச்சியை காட்டினார்கள். என் கூட இருக்குற பையனும் அவரை தொட்டு அதே மாதிரி உணர்ச்சியை முகத்தில் காட்டி கொண்டிருந்தான்.ஏதோ அவன் உடம்பில் சக்தி பாய்வதை போல்.

இப்ப எனக்கு உண்மையாலுமே சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. ஒரு வேளை நாம்தான் அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டு கொண்டிருக்கோமோனு கூட்டத்தோட சென்று நானும் அவர் கையை தொட்டேன்…என்ன ஆச்சர்யம்… என் உடம்பிலும் சக்தி பாய்ந்தது…

அப்படினு நான் சொல்லுவன்னு எதிர்பார்த்திங்களா?ஒரு மண்ணுமில்லை… எல்லாம் ஓவர் ஆக்ஷன் பண்றானுங்கனு புரிந்துவிட்டது.

சிம்பு நயந்தாராவை கசக்கின மாதிரி அந்த கூட்டம் ஸ்ரீ ஸ்ரீயை நசுக்கி கொண்டிருந்தது. எனக்கு பார்க்கவே பாவமாக இருந்தது.பிறகு பக்தர் கூட்டம் வந்து அவரை காப்பாற்றியது தனிக்கதை. பிறகு மதியம் 1 மணிக்கு ஆசிரமத்தில் நன்றாக சாப்பிட்டோம்.

3 மணிக்கு அவருடைய சொற்பொழிவு. அதில்தான் இந்த கேள்விகளெல்லாம் கேட்க வேண்டுமென்றிருந்தேன்.கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன் கடும் வெயில் இருந்தது. கூட்டம் ஆரம்பித்து சில நிமிடங்களில் தூரல் போட்டு பூமியை இதமாக்கியது.ஒரு மாசமா இல்லாத மழை அன்று வந்தது ஆச்சர்யமாகவே இருந்தது.

ஸ்ரீ ஸ்ரீயின் குரல் இனிமையாக இருந்தது. தமிழ், கன்னடம் அவருக்கு தெரிந்திருந்தது. ரொம்ப சாத்வீகமா பேசினார். (திருச்சிக்காரர்தான்)

இறைவனை வெளியே தேடாதே என்று சொன்னார்… இன்னும் பல… சரியாக ஞாபகமில்லை. யாரும் அவரை எந்த கேள்வியும் கேட்கவில்லை… என்னையும் சேர்த்து

அங்கே நான் பார்த்தவரை உணர்ந்தது. ரவி சங்கர் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவுமே நம்மை போலவே தான் இருந்தார். அவரை சுற்றி கொள்ளும் நம் மக்கள் நடந்து கொண்ட விதம்தான் கேவலமாக இருந்தது.

அவர் சொல்லி கொடுக்கும் மூச்சு பயிற்சி அருமையான ஒன்று. அதற்காக அவரை கடவுளாக்குவது முட்டாள் தனத்தின் உச்சம்…