பொம்மரில்லு

தெலுகு படம்னா வெறும் மசாலா(மாஸ்) படம்னு ரொம்ப நாளா நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அது தவறு என்று ஒரு சில படங்கள் எனக்கு புரிய வைத்தன.

அதில் குறிப்பிடத்தக்கவை “ஆ நலுகுறு” , “அனுகோக்குண்ட ஒக ரோஜு” மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் “பொம்மரில்லு”.


“பொம்மரில்லு” என்றால் “பொம்மை வீடு” என்று பொருள். அதாவது வீட்டில் உள்ள அனைவருக்கும் சாவி கொடுப்பது ஒருவர் மற்றவர்கள் எல்லோரும் இயங்கும் பொம்மைகளே என்பது தான் அதன் கதை.

முதல் காட்சியிலே படத்தின் கருவை சொல்லிவிடுகிறார் இயக்குனர். கடற்கரையில் குழந்தையின் கைப்பிடித்து அந்த குழந்தைக்கு நடை பழக சொல்லி கொடுக்கிறார் தந்தை. இதுவே அந்த தந்தை குழந்தை பெரியவனாகியும் அவன் கையை விடாமல் பிடித்து நடக்க சொல்லி கொடுத்து கொண்டிருந்தால் என்ன ஆகும்? இது தான் படத்தின் மையக்கரு.

கண்டிப்பான தந்தை என்று சொல்வதைவிட, எங்கே தனியாகவிட்டால் மகன் தடுக்கி விழுந்திடுவானோ என்று அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்கும் தந்தையாக பிரகாஷ்ராஜ். வழக்கம் போல் அருமையாக நடித்திருக்கிறார். சராசரி அம்மாவாக ஜெயசுதா.

அப்பாவிடமிருந்து விடுதலை பெற்று தன் சொந்த காலில் நிற்க துடிக்கும் துடிப்புள்ள இளைஞனாக நடித்திருக்கிறார் சித்தார்த். ஆனால் தந்தை முன் அதை வெளிப்படுத்த முடியாமல் திணறுகின்ற பாத்திரம். தன் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் சித்தார்த்.

இதற்கு நேரெதிராக பட்டாம்பூச்சி போல் சுதந்திரமாக சுற்றி திரியும் பாத்திரத்தில் ஜெனிலியா. படத்தில் அனைவரையும் கவரும் கதாப்பாத்திரம். காபி சப்ளை செய்யும் சிறுவன், பானி பூரி கடை வைத்திருப்பவர், ஐஸ் விற்பவர் என்று சகலமானவர்களும் இவருக்கு பேர் சொல்லி கூப்பிடுமளவுக்கு பழக்கம்.

இயற்கையின் நீதியான எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்பது இங்கேயும் உண்மையாகிறது. முதலில் அவர்கள் இருவரும் நண்பர்களாகி வழக்கம் போல் காதலர்களாகிறார்கள். இறுதியில் காதலர்கள் எவ்வாறு இணைகிறார்கள். பிரகாஷ்ராஜ் எவ்வாறு தன் தவறை உணர்கிறார் என்பதே கதை.


யாராவது தலையில் ஒரு முறை முட்டினால் கொம்பு வரும் என்று நம்பும் அளவுக்கு குழந்தைத்தனம் மற்றும் ரசிக்கக்கூடிய பாத்திரம் ஜெனிக்கு. இறுதியில் பிரகாஷ்ராஜ் தலையில் ஒரு முறை தெரியாமல் முட்டிவிட, கொம்பு வருவதை தவிர்க்க இரண்டாவது முறை முட்ட ஜெனிலியா முயல்வதும் அதை தடுக்க சித்தார்த் தவிப்பதும் அருமையான காட்சி.

இது டைரக்டர் பாஸ்கருக்கு முதல் படம். முதல் படத்திலே அசத்தியிருக்கிறார் மனிதர். வழக்கமாக தெலுகு படத்தில் பாடல்களுக்கு குடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த படத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. பாட்டு சுமார் ரகம்தான்.

பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும். முடியாதவர்கள் காத்திருக்கவும். தமிழில் இந்த படத்தை எடுக்க கடும் போட்டி நிலவுகிறது. விஜய், ஜெயம் ரவி, பரத், ரவி கிருஷ்ணா முதலானோர் இந்த படத்தின் தமிழாக்கத்தில் நடிக்க முயற்சி செய்வதாக தெரிகிறது.