• Top Clicks

    • எதுவுமில்லை
  • அதிகம் பார்வையிடப்பட்டவை

  • Blog Stats

    • 33,907 hits

வேட்டையாடு விளையாடு

எல்லாரும் விமர்சனம் எழுதி முடிச்சதுக்கு அப்பறம் உனக்கு எதுக்குனு நீங்க நினைக்கலாம்…

நான் விமர்சனம் எழுத போறதில்ல… இந்த படத்துக்கு எப்படி போனேன்னு எழுத போறேன்…

அப்படி என்னடா இத பத்தி எழுதற அளவுக்கு ஸ்பெஷல்னு கேக்கறீங்களா??? இருக்கு… ஏன்னா நான் போனது உங்க எல்லோருக்கும் தெரிந்த ஒரு வலைப்பதிவரோட 😉

நான் ஒரு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் இருந்த ரூம்ல, ரூம்மேட் ஒருத்தர் கார் வெச்சிருந்தார். அவர் தெலுகுக்காரர், அதனால அவர் கூட வாராவாரம் பாஸ்டன் போய் தெலுகு படம் பார்த்துட்டு இருந்தோம்.

இப்ப ரூம்ல இருக்கற 2 பேர்கிட்டயும் கார் இல்ல (சீக்கிரம் வாங்கனும்)… இப்ப பாத்து “வேட்டையாடு விளையாடு” பாஸ்டன்ல ரிலீஸ் ஆச்சு. என்னடா கமல் படம் தியேட்டர்ல பாக்க முடியலையேனு ஒரு வருத்தம் வேற…

என் ரூம் மேட்… (அதுதான் உங்க எல்லாருக்கும் தெரியுமே!!! தனா தான்) எப்படி படத்துக்கு போகலாம்னு பிளான் போட்டுட்டு இருந்தான். மொத்தம் 2 டிரெயின் பிடிக்கனும். 2 இடத்துல டேக்ஸி பிடிக்கனும்.

இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் போக வேண்டாம்… டவுன்லோட் பண்ணி பாத்துக்கலாம்னு நான் சொல்லிட்டேன்.

அந்த நேரத்துல நம்ம வலைப்பதிவர் ஒருவரிடமிருந்து மெயில் வந்துச்சு… “Can u join us for the movie???”னு.

‘எங்களிடம் கார் இல்லை. அதனால் என்னால் வர முடியாது என்றே நினைக்கிறேன்’னு சொல்லி நான் பதில் சொல்லிவிட்டேன்.

‘நீங்கள் லோவலில் தானே தங்கியிருக்கிறீர்கள். நான் போகும் வழியில் உங்களை பிக்கப் செய்து கொள்கிறேன். இந்த நம்பருக்கு கால் செய்யவும்’னு சொல்லி மெயில் வந்தது.

‘ஆஹா… உலகத்துல இவ்வளவு நல்லவங்க கூட இருக்காங்களா?’னு ஒரு சந்தோஷம்… உடனே கால் செய்தேன்.

இரவு 9:30 காட்சிக்கு செல்லலாம் என்று முடிவானது. என் ரூம் மேட்டையும் அழைத்து வரலாமா? என்று நான் கேட்டதற்கு… ‘தாராளமாக.. கூப்பிட்டு வாருங்கள்’ என்று சொன்னார்.

தனாவிடம் நான் இந்த விஷயத்தை சொன்னவுடன், அவனுக்கு தயக்கம்.
“யாருனே தெரியாதவங்களை எதுக்குடா கஷ்டப்படுத்தற???”னு கேட்டான்.

“டேய் அவராதான்டா கேட்டாரு. அதுவும் இல்லாம இந்தியால இருக்கறவங்க எல்லாம் அடிக்கடி மீட் பண்ணிக்கறாங்க… எனக்கும் அந்த மாதிரி யாரையாவது பாக்கனும் ஆசையாயிருக்கு… அதனாலதான் சரின்னு சொல்லிட்டேன். உனக்கும் சேத்து சொல்லியிருக்கேன். வர இல்ல”

“வரேன் ஆனா ஒரு கண்டிஷன்… இந்த ஆரிய வந்தேறி, பின்னூட்டம், பின்னூட்ட கயமைத்தனம் இந்த மாதிரியெல்லாம் பேச கூடாது ஓகேவா???”

“சரி பேச மாட்டேன்”

8 மணிக்கு லோவல் டிரெயின் ஸ்டேஷனில் சந்தித்தோம். அங்கிருந்து அவருடைய காரில் படத்திற்கு சென்றோம்.

பொதுவாக பேச்சு சினிமா, வலையுலகம் சுற்றியே இருந்தது. கோழியின் அட்டகாசங்களை இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமென்று சொன்னார். நானும் சரி அடுத்த பாகத்தை சீக்கிரம் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

நான் இங்கு வந்து பார்த்த தெலுகு படங்களை பற்றியும், நயகரா பயணம்,ஃப்ளோரிடா பயணம், டிஸ்கவரி விண்கலம் (Discovery Shuttle Launch) பார்த்தையெல்லாம் பற்றியும் எழுத சொன்னார். நானும் கண்டிப்பாக எழுதுவதாக சொல்லியிருக்கிறேன். (இப்போது கூடவே யு.எஸ் ஓப்பன் பார்த்ததை பற்றியும் ஒரு பதிவிடலாம் என்று உள்ளேன்)

படம் பார்த்துவிட்டு வரும் போது படத்தை பற்றி விசாரித்தார். நானும் ஏதோ என் அறிவுக்கு எட்டிய வரை சொன்னேன். அவருடைய கருத்தையும் சொன்னார். பிறகு நாங்கள் வீட்டிற்கு வந்து சேரும் போது மணி 1:30 ஆகிவிட்டது.

காலையில் நான் எழுந்து பார்த்த போது அவருடைய விமர்சனம் தமிழ் மணத்தில் இருந்தது. அதை தனாவிடம் காட்டிய போது அவன் சொன்னது
“நேத்து பேசும்போது இவ்வளவு நுணுக்கமா இவர் பாத்துருப்பாருனு நான் சத்தியமா நினைக்கலடா… நீ சொன்ன மாதிரி அவர் தனி ஆள் இல்லதான் போலிருக்கு”

சரி நீங்களும் படிச்சு சொல்லுங்க அவன் சொன்னது உண்மையானு!!! வேட்டையாடு விளையாடு