ஒரு சின்ன சந்தேகம்!!!

ஒரு சின்ன சந்தேகம். யாரும் தப்பா எடுத்துக்காதீங்க!!!

கங்கை சிவனோட மனைவியா?

அப்படினா பாரதத்துல வர சந்தானு மன்னனை மணந்து 8 பிள்ளைகள் பெறுவதும் கங்கை தானே???

தெரிந்தவர்கள் சொன்னா நல்லா இருக்கும்…

68 பதில்கள்

 1. எனக்கு அவ்வளவு ஞானோதயம் இல்லீங்னா…யாராவது சொன்னா நானும் கேட்டுக்கறேன்… 🙂

 2. கங்கை சிவனின் மனைவிதான்.சாபம் பெற்றதால் பெண்ணாக அவதாரம் எடுத்து சந்தனுவின் மனைவியும் ஆனாள்.சாபம் தீர்ந்ததும் சிவனை அடைந்தாள்.

 3. $elvan,
  மிக்க நன்றி.

  பிதாமகனைப் பற்றி ஒரு தொடர் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். முதல்ல ஆரம்பிக்கும் போதே சந்தேகம் வந்துடுச்சு.

  யாரைக் கேக்கறதுனு தெரியல. அதனாலதான் இந்த பதிவு.

 4. syam,
  $elvan சொல்லிட்டாரு பார்த்துக்கோங்க!!!

 5. வெ.ப,

  எனக்குப் புராணக் கதைகள் தெரியாது. நீங்கள் கேள்வியில் கேட்ட சங்கதியே எனக்கு இப்போது தான் தெரியும். சிவனின் துணைவி உமாதேவி/பராசக்தி என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  இக்கேள்விக்கு குமரன், SK அய்யா, இராகவன் போன்றவர்களுக்குத்தான் விடை தெரியுமென நினைக்கிறேன்.

 6. பாலாஜி,

  கங்கா தேவி என்பது ஆறல்ல.கங்கை ஆற்றின் அதிதேவதை.அவள் சிவனின் மனைவியாகி அதன்பின் சிவனே அவளை மனிதருக்கு அருள்பாலிக்க பூமிக்கு அனுப்பினார்.அவள் செய்த தவறு காரணமாக சாபம் அடைந்து சந்தனுவை மணந்து அப்பாவ்ம் தீர்ந்தபின் மீண்டும் மனிதருக்கு தாயாக அருள் பாலிக்கிறாள்.

  தெய்வங்கள் மனிதரை மணப்பது இந்துபுராணங்களில் காணப்படுகிறது.விஷ்ணு கண்னன் அவதாரம் எடுத்து பல பெண்களை மணந்துள்ளார்.குந்தி சூரியன் மூலம் குழந்தை பெற்றாள்.

  பீஷ்ம பிதாமகரை பற்றி தொடர் எழுதுங்கள்.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

 7. வெற்றி,
  //எனக்குப் புராணக் கதைகள் தெரியாது. நீங்கள் கேள்வியில் கேட்ட சங்கதியே எனக்கு இப்போது தான் தெரியும். சிவனின் துணைவி உமாதேவி/பராசக்தி என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
  //
  உமாதேவியும் சிவனின் மனைவிதான்.

  //இக்கேள்விக்கு குமரன், SK அய்யா, இராகவன் போன்றவர்களுக்குத்தான் விடை தெரியுமென நினைக்கிறேன்//
  தனிப்பட்ட முறையில் யாரைக் கேட்பது என்று தெரியாமல்தான் இந்த பதிவு போட்டேன்.

  $elvan பதில் சொல்லிவிட்டார். $elvan எதனால அந்த சாபம்னு சொன்னிங்கனா நல்லா இருக்கும்.

 8. //கங்கா தேவி என்பது ஆறல்ல.கங்கை ஆற்றின் அதிதேவதை.அவள் சிவனின் மனைவியாகி அதன்பின் சிவனே அவளை மனிதருக்கு அருள்பாலிக்க பூமிக்கு அனுப்பினார்.அவள் செய்த தவறு காரணமாக சாபம் அடைந்து சந்தனுவை மணந்து அப்பாவ்ம் தீர்ந்தபின் மீண்டும் மனிதருக்கு தாயாக அருள் பாலிக்கிறாள்.
  //
  தெரியும் $elvan, பகிரதன் தவம் செய்து அவ்ன் முன்னோர்களின் சாபம் நீங்க கங்கா தேவியை பூமிக்கு கொண்டு வந்தான். அவள் பாரத்தை பூமித்தாய் தாங்க மாட்டாள் என்பதால் ஈசன் அவளை தன் தலையில் தாங்கினார்.

  //தெய்வங்கள் மனிதரை மணப்பது இந்துபுராணங்களில் காணப்படுகிறது.விஷ்ணு கண்னன் அவதாரம் எடுத்து பல பெண்களை மணந்துள்ளார்.குந்தி சூரியன் மூலம் குழந்தை பெற்றாள்.
  //
  செல்வன், இதுக்கு எதுக்கு கண்ணன்? என் பேருல இருக்கறவரே பூமிக்கு வந்து பத்மாவதியை மணக்கவில்லையா?

  //பீஷ்ம பிதாமகரை பற்றி தொடர் எழுதுங்கள்.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
  //
  தொடக்கம் தெரிகிறது. எங்கே முடிப்பது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

 9. மஹாபிஷன் என ஒரு தேவன் பிரம்மாவிடம் வேதங்களை பற்றி கேட்டுக்கொண்டிருந்தான்.அப்போது கங்கை அங்கே நடந்துபோக அவள் அழகை கண்டு மயங்கிய மஹாபிஷன் பிரம்மா சொல்வதை விட்டு அவளையே உற்றுப்பார்த்தான்.காதலில் விழுந்தான்.கங்கையும் அவனைக்கண்டு காதல் கொண்டாள்.

  “நீ வேதத்தை கேட்கும் பக்குவத்தை இன்னும் அடையவில்லை.பூமியில் பிறந்து ஆசையை நிறைவேற்றிக்கொண்டு அதனால் விளையும் சுக துக்கங்களை அனுபவி” என பிரம்மன் சொன்னார்.அதற்கேற்ப மஹாபிஷன் சந்தனு மன்னனாக பிரதீபா எனும் அரசிக்கு பிறந்தான்.

  அதே சமயம் அஷ்ட வசுக்கள் நந்தினி எனும் பசுவை திருட முயன்று மனிதனாக பிறக்கும் சாபம் பெற்றனர்.கங்கையை அணுகி தங்களுக்கு தாயக இருக்க வேண்டினர்.கங்கை மஹாபிஷன் பூமியில் பிறந்ததை அறிந்து பூமிக்கு வந்து அஷ்டவசுக்களை பெற்று அவற்றில் கடைசி குழந்தையை மட்டும் சந்தனுவுக்கு மகனாக தந்துவிட்டு மீண்டும் மேலுலகம் அடைந்தாள்.

 10. $elvan,
  மிக்க நன்றி.

  அஷ்ட வசுக்கள் வசிஷ்டரிடம் சாபம் வாங்கி பூமியில் பிறந்த கதை தெரியும்.

  Thanks a lot once again

 11. கங்கையை சிவனுக்கு மனைவி என்று சொல்வது வெறும் அலங்காரத்திற்குத் தானே ஒழிய கங்கை சிவபெருமானின் மனைவி இல்லை. பகீரதன் தவத்தால் கங்கை பூமிக்கு வந்த போது அதனைத் தன் சடைமுடியில் தாங்கியவர் தான் கங்காதரன். கங்கையின் மணவாளன் என்பதெல்லாம் சும்மா அழகுக்காகப் புலவர்கள் எழுதுவதே. அப்படி வரும் இடங்களில் எல்லாம் தலையில் ஒரு பெண், பாதி உடலில் ஒரு பெண் என்று கங்கைக்கும் பார்வதிக்கும் சண்டை மூட்டுவது போன்ற நகைச்சுவைக் கவிதைகளிலேயே வருவதைப் பார்க்கலாம். எங்கும் கங்கையை சிவபெருமான் மணந்ததாக இல்லை.

 12. Nice. இறைச்சல்களுக்கு மத்தியில் நல்ல ஆக்கப்பூர்வமான விவாதங்கள்.

  யாராவது, மகாபாரதத்தின்/கீதையின் தத்துவங்களை சேகரித்தால் நன்றாக இருக்கும். மன்னிக்கவும், எனக்கு இதிலெல்லாம் யானை (ஞானம்) குறைவு.

 13. குமரன் ஐயா,
  மிக்க நன்றி.

  $elvan,
  குமரன் சொன்னதைப் பார்த்தீர்களா?

  குழப்பம் தீரவில்லை :-((

 14. சீனு,
  //Nice. இறைச்சல்களுக்கு மத்தியில் நல்ல ஆக்கப்பூர்வமான விவாதங்கள்//
  மிக்க நன்றி.

  //யாராவது, மகாபாரதத்தின்/கீதையின் தத்துவங்களை சேகரித்தால் நன்றாக இருக்கும். மன்னிக்கவும், எனக்கு இதிலெல்லாம் யானை (ஞானம்) குறைவு//
  இதிலெல்லாம் நமக்கும் ஞானம் குறைவுதான். ஆனால் மகாபாரதத்தில் சின்ன சின்ன கதைகளை சொல்லலாம் என்றிருக்கிறேன். ஆரம்பத்திலே குழப்பம் வந்ததால் வலையேற்றிவிட்டேன்.

  தொடர்ந்து படிப்பதற்கு நன்றி.

 15. இல்லை குமரன்.

  சிவனின் மனைவி கங்கை என ஆதிசங்கரர் சவுந்தர்ய லஹரியில் தெளிவாக சொல்லுகிறார்

  ஷிவெ ஸ்ரிஙரர்த்ர தத்-இதர-ஜனே குட்சன-பரா
  ஸரோஷ காங்கேயம் கிரிச-சரிதே அரிடெ விஸ்மயவதி;
  ஹரஹிப்க்யொ ப்கித சரசி-ருகஸௌப்கக்ய-ஜனனி
  ஸக்கிஷு ச்மெர தெ மயி ஜனனி த்ரிச்டி சகருன

  (சிவனை பார்க்கும்போது உன் கண்கள் காதலாலும்
  அவனது இன்னொரு மனைவியான கங்கையை பார்க்கும்போது கோபத்தாலும் உன் கண்கள் நிறைகின்றன என்கிறார்)

 16. செல்வன்,
  நன்றிகள் பல….

  குமரன் ஐயா,
  தங்களின் பதில் என்னவோ???

 17. ஒரு சின்ன கேள்வி, குந்தி ரிமோட் ஏக்ஸஸ்-ல குழந்தை பெத்துக்கிட்ட மாதிரி வருதே, எதை வச்சு அப்படி கதை கட்டிருப்பாங்க? X குரோமோசோமும் Y குரோமோசோமும் சேராமல் எப்படி குழந்தை பிறக்கும். (டெஸ்ட் ட்யூப் பேபின்னாலும் மேலே சொன்னதுதான் உண்மை)… என்ன மேட்டர் நடந்தது அப்போ????

 18. உதயகுமார்

  குந்தி மானிட உருவில் வந்த சூரியனுடன் நார்மலாக சேர்ந்து தான் குழந்தை பெற்றாள்.ரிமோட் குழந்தை அல்ல அது.வழக்கமாக அனைத்து இடங்களில் நடக்கும் மேட்டர் தான் அங்கும் நடந்தது:-)

 19. அப்போ, குந்தி… வேண்டாம், இதுக்கு மேல நான் கேக்கப் போயி, எல்லோரும் தடியெடுத்து அடிக்க வர்றதுக்கு முன்னாடி எஸ்கேப்… பொன்னான வீக் எண்ட்… வீண் செய்ய மனமில்லை…

 20. யாரும் தடி எடுத்து அடிக்கப் போறதில்லை.கேட்க விரும்புவதை தாரளமா கேட்கலாம்.

  பொன்னான வீகெண்டை எஞ்சாய் செய்ய வாழ்த்துக்கள்.

 21. சரி என்னோட கேள்விக்கு பதில் கிடைச்சிடுச்சி. மிக்க நன்றி செல்வன்.

 22. இல்லை செல்வன். சிவபெருமானின் மனைவி கங்கை என்று அங்கே சொல்லவில்லை. நான் மேலே சொன்னது போல் கவித்துவத்துடன் ‘கங்கை எனும் பெண் சிவபெருமானின் தலைமேலே அமர்ந்திருப்பதைக் கண்டு அம்பிகை ரோஷம் கொள்கிறாள்’ என்று தான் சொல்கிறார். நீங்கள் சொன்ன சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தின் பொருளைச் சொல்கிறேன். பின்னர் புரியும்.

  சிவே ச்ருங்கரார்த்ர – சிவனைப் பார்க்கும் போது காதலுடனும்
  தத் இதர ஜனே குட்சன பரா – மற்ற ஆண்களைப் பார்க்கும் போது அலட்சியத்துடனும் (அதாவது சிவபெருமானைப் பார்ப்பது போல் காதலுடன் மற்ற ஆண்களைப் பார்ப்பதில்லை)
  ஸரோஷ காங்கேயம் – கங்கையைப் பார்க்கும் போது ரோஷத்துடனும் (கோபத்துடனும் என்றும் பொருள் கொள்ளலாம்)
  கிரிஷ சரிதே விஸ்மயவதி – மலைகளுக்கு அரசனான சிவபெருமானின் திருவிளையாடல்களைக் கேட்கும் போது வியப்புடனும்
  ஹரஹிப்யோ பீத: – சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் பாம்புகளைப் பார்க்கும் போது பீதியுடனும்
  சஹிஷு ச்மேர – தோழிகளைப் பார்க்கும் போது நட்புடனும்
  தே மயி ஜனனி சகருணா – நீ என்னைப் பெற்றவள்; என்னைப் பார்க்கும் போது கருணையுடனும்
  சரசிருஹ சௌபாக்ய ஜனனி த்ருஷ்டி: – தாமரை மலர் போன்ற உன் கண் பார்வை விளங்குகின்றது.

  ஆக இங்கே கங்கையைப் பார்க்கும் போது அம்பிகையின் கண்கள் ரோஷத்துடன் பார்க்கிறது என்று தான் சொல்கிறாரே ஒழிய கங்கையை சிவபெருமான் மணந்தார் என்றோ, கங்கை சிவனின் மனைவி என்றோ சொல்லவில்லை. கங்கையும் ஒரு பெண் என்பதால் அவள் சிவபெருமானின் தலையில் இருப்பது சிவபெருமானின் மனைவிக்குப் பிடிக்கவில்லை; அதனால் அவள் கோபித்துக் கொள்கிறாள் என்ற பொருள் தான் சரியே தவிர தன்னுடைய சக்களத்தி அவள் என்பதால் அன்னை கோபித்துக் கொள்கிறாள் என்று பொருள் இல்லை. அப்படி யாராவது பொருள் சொன்னால் அது தவறான புரிதலால் வந்தது. எங்கெல்லாம் கங்கை சிவபெருமானின் மனைவி என்று பொருள் சொல்லப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் போய் கொஞ்சம் துருவிப் பார்த்தால் இப்படி கவிநயத்திற்காகச் சொன்னதாகத்தான் இருக்கும் என்பது என் புரிதல். (புரிதல் என்று சொல்வது ஏனென்றால் நான் கங்கையைப் பற்றிச் சொன்ன எல்லாவற்றையும் படித்தவனில்லை. நான் படிக்காததில் எங்காவது கங்கையை சிவபெருமான் மனைவி என்று சொல்லியிருக்கலாம். அப்படி இருந்தால் என் புரிதல் மாறும் என்பதற்கே. ஆனால் நான் அறிந்தவற்றை வைத்துப் பார்க்கும் போது தற்போது இது தான் என் புரிதல்).

  செல்வன். வெகுநாட்களுக்குப் பிறகு சௌந்தர்யலஹரியைப் புரட்டிப் பார்க்க ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி.

 23. சபாஷ் சரியான போட்டி…

  மூணாவதா யாராவது வாங்கப்பா!!!

 24. கங்கை என்பது ஒரு யோகராஜனான சிவம் சுட்டும் ஒரு குறியீடு. ஆகாய கங்கை என்பது கேசரியோக உச்சத்தில் சோமபாகத்தில் எவர்க்கும் சுரக்கும் அமுதம். புராணக்கதைகள் எல்லாம் மாந்தர்க்கு அதனைச் சுற்றிவளைத்துச் சொல்பவை.

 25. அனானி,
  சத்தியமாக எதுவும் புரியவில்லை.

  கொஞ்சம் என்னை மாதிரி பாமர மக்களுக்கு புரியர மாதிரி சொல்றீங்களா?

 26. பெயர் சொல்லாமல் ஒரு பெரும் தத்துவத்தைச் சொல்லிச் சென்ற நண்பரே. உண்மை தான். இறைவனின் திருவுருவங்கள், திருக்கதைகள் எல்லாவற்றிற்கும் குறியீட்டுன் படி அருமையான மறைபொருள் சொல்லலாம். நீங்கள் சொல்லும் விளக்கம் ஏற்புடைத்தாய் இருக்கிறது. மிக்க நன்றி.

  வெட்டிப்பயல் பாலாஜிக்கு நீங்களே வந்து விளக்கம் சொல்வீர்கள் என்று எண்ணி விளக்காமல் விடுகிறேன்.

 27. குமரன்,
  //நீங்களே வந்து விளக்கம் சொல்வீர்கள் என்று எண்ணி விளக்காமல் விடுகிறேன்.
  //
  இது அநியாயம். விளக்கம் யார் சொன்னால் என்ன? புரியாத போது சரி.
  அருமையான விளக்கம்னு சொல்லிட்டு நீங்க சொல்லாம போனா நியாயமா?
  நாங்க எவ்வளவு நேரம் காத்திருப்பது.

 28. //இறைவனின் திருவுருவங்கள், திருக்கதைகள் எல்லாவற்றிற்கும் குறியீட்டுன் படி அருமையான மறைபொருள் சொல்லலாம். //

  டாவின்சி கோட் மாதிரி சொல்றீங்க!!!
  கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுங்க…

 29. //நாங்க எவ்வளவு நேரம் காத்திருப்பது.//

  குறைந்தது ஒரு நாள். அதற்குள் அவரோ மற்றவரோ சொல்லாவிட்டால் அவர் சொன்னதை நான் எப்படிப் புரிந்து கொண்டேன் என்பதைச் சொல்கிறேன். 🙂

  //டாவின்சி கோட் மாதிரி சொல்றீங்க!!!
  //

  அதே மாதிரி தான். என்ன டாவின்சி கோட்ல விவகாரமான குறியீடுகளைப் பற்றியே சொல்லியிருக்காங்க. இங்க அப்படிப்பட்ட விவகாரமெல்லாம் கிடையாது. 🙂

 30. குமரன் சொல்லியிருப்பதே சரி,…. நான் அறிந்தவரை.

  கங்கையை அழைத்துவரும் பகீரதனின் தவத்துக்கு மெச்சி சிவபெருமான் அவளைத் தலையில் தாங்கி ஒரு சடியை மட்டும் பிரித்து மெதுவாக விட்டதாகத்தான் புராணம் கூறுகிறது.

  மற்றபடி அவளைத் திருமணம் செய்ததாகவோ, வேறு விதமாகவோ எங்கும் சொல்லப்படுவதில்லை.

  கங்கை தலையில் அமர்ந்திருப்பது உமையவளுக்குப் பிடிக்கவில்லை என்பதாலேயே பொறாமையுடன் பார்க்கிறாளாம்!
  உமை கூட சற்று நேரம் விலகிப் போகலாம்.
  ஆனால், சதா சர்வகாலமும் தலையில் இவள் உட்கார்ந்து இருக்கிறாளே என்ன்னும் கோபம்!

  கங்கைக்கு, தான் இப்படி உயர்ந்த இடத்தில் இருக்கிறோமே என்ற பெருமை!
  உமையவளுக்கோ பொறாமை!

  இவ்வளவுதான் இந்தக் கதையில்.

  சந்தனு கதையை அழகுற செல்வன் விளக்கியிருக்கிறார்.

  அட்ட வசுக்களில் ஒருவர்தான் பீஷ்மரான கங்கையின் மைந்தன்.

  சில தத்துவங்களை கதைகள் மூலம் மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.
  ஆழ்நிலை சிந்தனைக்காக!

  ஆன்மீகச் சிந்தனை ஆண்டவனிடம் அழைத்துச் செல்லும்
  பகுத்தறிவுச் சிந்தனை விலக்கி வைக்கும்.
  அவரவர் விதிப்படி!

  ‘வாழ்வின் வழி’ என்னும் சனாதன தர்மத்தை நம்பினால் , கர்மா என்னும் விதி தத்துவத்தையும் நம்ப வேண்டும்.
  வேறெதற்கும் இல்லாவிடினும், மன அமைதி பெறவாவது!

 31. >>அதற்குள் அவரோ மற்றவரோ சொல்லாவிட்டால் அவர் சொன்னதை நான் எப்படிப் புரிந்து கொண்டேன் என்பதைச் சொல்கிறேன்.:-)

 32. ஒரு சிலருக்கு விக்ரமன் படம் (நிழல் உலகம்) பிடிக்கும்…ஒரு சிலருக்கு செல்வராகவன் படம் (நிஜ உலகம்) பிடிக்கும். உங்கள் கவிதை இரண்டாம் வகையை சார்ந்தது. உண்மை வலிக்கத்தான் செய்கிறது.

  உங்களின் இந்த வரிகள் லிவிங் ஸ்மைல்ஸின் பதிவில் பார்த்தேன். நன்றாக இருந்தது நீங்கள் இட்ட பின்னூட்டம்

 33. குமரன், SK ஐயா,
  நமக்கு சமஸ்கிரதம் தெரியாது. செல்வன் இதை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் அவர் விரைவில் பதிலலிப்பார் என்று நினைக்கிறேன்.

  நான் இதுவரை கேள்விப்பட்ட கதைகளில் சிவன் கங்கையை திருமணன் செய்த நிகழ்ச்சியை எங்கும் காணவில்லை. ஆனால் திருவிளையாடல் படத்தில் சிவாஜி சொல்லும்போது கூட ஒரு சம்சாரம் ஒடம்புல பாதி கேக்கறா இன்னொருத்தி தலை மேல உட்கார்ந்துட்டு பிரச்சனைப் பண்றா அப்படினு சொல்லுவாரு. இந்த மாதிரி அப்பப்ப கேள்விப்பட்டுருக்கன்.

 34. அனானி,
  எங்க குமரனுக்கே சவாலா??? சீக்கிரம் சொல்லுவாரு பாருங்க!!! நீங்க உங்க பேருலயே சொல்லலாம் இல்லை…

 35. பாலசந்தர் சார்,
  மிக்க நன்றி…
  மனசுல பட்டுத சொன்னேன். ஜயராமன் அவர்களை குறை சொல்லவும் எனக்கு விருப்பமில்லை. அவரவர் வளர்ந்தவாழும் முறையில் அவர்களுக்கு தோன்றியதை எழுதுகிறார்கள்.

  விக்ரமன்/பாக்யராஜ் படங்களில் பொதுவாக எல்லாரும் நல்லவர்களாக இருப்பார்கள். இதுவும் பார்க்க நல்லா இருக்கும். செல்வராகவன் படத்தில் கதாநாயகனும் கொடுரமானவனாக இருப்பான். இதுவும் பார்க்க நல்லா இருக்கும். இதில் யார் பெரியவர்கள் என்று சொல்வதற்கில்லை.

 36. பெயர் சொல்ல விரும்பாத நண்பரே. இதுவரை நான் ச்ரி ருத்ர ப்ரச்னம் படித்ததில்லை. நீங்கள் கொடுத்துள்ள வரிகளை வைத்து ஏதோ முயன்றிருக்கிறேன். தவறான பொருளாக இருந்தால் தயை செய்து சொல்லுங்கள். சரியான பொருளாக இருந்தால் இன்னும் கடினமான வரிகளைக் கொடுத்துப் பொருள் சொல்லச் சொல்லாதீர்கள். இதுவே கடினமாக இருந்தது. வேத மந்திரம் என்பதால் என்று எண்ணுகிறேன். (உடனே யாராவது சரி. வேத மந்திரம் கொடுக்கவில்லை. மற்ற சுலோகம் கொடுக்கிறோம். பொருள் சொல் என்று வராதீர்கள் ஐயா. அப்புறம் கைப்புள்ள போல் நான் அழவேண்டி வந்துவிடும். 🙂 நான் வடமொழி முறையாகப் பயின்றவன் இல்லை. ஏதோ கேள்வி ஞானம் மட்டுமே. )

  ஆபாதால நாப ஸ்தலாந்த புவன ப்ரஹ்மாண்ட மாவிஸ்புரது
  ஜ்யோதி ஸ்படிக லிங்க மௌலி விலஸத் பூர்ணேந்து வாந்தாமுதைஹி

  ஆ பாதால நாபஸ்தல அந்த புவன ப்ரஹ்மாண்ட மாவிஸ்புரது – பாதாள லோகம் முதல் உயர்ந்த வானுலகம் வரை உள்ள எல்லா உலகங்களையும் கொண்ட ப்ரஹ்மாண்டத்தை சூழ்ந்து கொண்டு இருக்கும் இறைவன்

  ஜ்யோதி ஸ்படிக லிங்க – அவனைக் குறிக்கும் குறியாக இருப்பது ஒளிமிகுந்த ஸ்படிக லிங்கம்

  மௌலி விலஸத் பூர்ண இந்து வாதாமுதைஹி – திருமுடியில் விளங்குகிறது பூர்ண சந்திரன் (வாதாமுதைஹி) என்றால் என்ன என்று தெரியவில்லை.

 37. //எங்க குமரனுக்கே சவாலா??? //

  பாலாஜி. என்ன இது? ஏன் இப்படி ஏத்தி விடறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

 38. குமரன்,

  காஞ்சி பரமாச்சாரியார் தெய்வத்தின் குரலில் கங்கை சிவனின் மனைவி என்றுதான் சொல்லுகிறார்.

  “ஸ ரோஷா கங்காயாம்” என்றால் சக்களத்தி காய்ச்சல் என்றுதான் பரமாச்சார்யார் சொல்லுகிறார்.முருகனுக்கு காங்கேயன் என பெயர் வந்தது அவன் கங்கையின் புதல்வன் என்பதால் தான் என்கிறார்.பிள்ளையாருக்கு த்வைமாதுர(இரண்டு அம்மாகாரர்) என பெயர் வந்தது கங்கையால் தான் என்கிறார்.

  தெய்வத்தின் குரலிலிருந்து

  “இரண்டு தாயார்க்காரர் !

  த்வைமாதுர :

  இந்த ச்லோகத்தில் விக்நேச்வரருக்குச் சொல்லியிருக்கிற பேர் இது (த்வைமாதுரன் என்பது) தான். அவருடைய வேறே பெயர் எதுவும் (ச்லோகத்தில்) இல்லை. கணபதி, கணேசர், விக்நேச்வரர், விநாயகர், கஜாநநர், லம்போதரர் என்றிப்படிப் பல பேர்கள் நம் காதில் அதிகம் பட்டிருக்கிற மாதிரி படாத பேர்:த்வைமாதுரர். அப்படியென்றால் “இரண்டு தாயார்களை உடையவர்”என்று அர்த்தம். ‘த்வி மாதா’- இரண்டு தாயார்கள். ‘த்வை மாதுரர்’:- இரண்டு தாயார்களை உடையவர். ‘இரண்டு பெண்டாட்டிக்காரன்’என்று கேள்விபட்டிருக்கிறோம். இவரோ நாம் கேள்விப்படாத விதமாக இரண்டு தாயார்க்காரர்’!

  யார் அந்த இரண்டு தாயார்கள்?ஒன்று, அம்பாள். இது எல்லாருக்கும் தெரிந்தது. இன்னொன்று கங்கை. ஈச்வரனின் தலையின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிற கங்கா தேவியையும் அவருக்குப் பத்னியாகவே சொல்வது வழக்கம்…

  அம்பாளுடைய நேத்ரமே ச்ருங்காரம், பீபத்ஸம், கோபம், ஆச்சர்யம், பயம், ஹாஸ்யம் முதலான எல்லா நாடக ரஸங்களையும் ஒவ்வொரு ஸந்தர்ப்பத்தில் காட்டுவதாக ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் ஒரு ச்லோகத்தில் வர்ணித்திருக்கிறார். அங்கே அம்பாளுடைய நேத்ரம் எப்போது கோபக் குறிப்பைக் காட்டுகிறது என்று சொல்லும் போது ‘கங்கையைப் பார்க்கும்போது’என்றே சொல்லியிருக்கிறது: ஸ ரோஷா கங்காயாம் . கங்கையை பார்த்தால் அம்பாளுக்கு சக்ளத்திக் காய்ச்சல்!அதுதான் கோபம் கோபமாக வருகிறது!

  ஆனால் அன்புருவமான பிள்ளையாரோ, ‘கங்கை யார்?நம்முடைய பிதாவின் பத்னி. அதனால், அவளையும் அம்பாளைப் போலவே எனக்கு இன்னொரு அம்மாவாக வைத்துக் கொள்ளுவேன். த்வைமாதுரன் என்றே பேர் பெறுவேன்’என்று ஒற்றுமைக்கு உருவமாக இருந்துகாட்டுகிறார்!

  எல்லாருக்கும் தெரிந்த கதை சிவ நேத்ரத்திலிருந்து பிறந்த அக்னிப் பொறிகள் ஆறும் கங்கையிலே தங்கித்தான் அப்புறம் ஸ§ப்ரஹ்மண்ய மூர்த்தியாயிற்று என்பது. பொறிகள் ஆறு;கங்கையும் ஆறு!கங்கையில் தங்கி உத்பவித்ததால் ஸ§ப்ரஹ்மண்ய ஸ்வாமி வெளிப்படையாகவே கங்கையின் புத்திரர். பிதாவின் பத்தினி என்ற அளவில் உபசாரமாகப் பிள்ளையார் அவளுக்கு மாத்ரு ஸ்தானம் கொடுத்தது போலில்லாமல் வ்யக்தமாக அவளுடைய ஸம்பந்தம் பெற்றே ஸ§ப்ரஹ்மண்ய ஸ்வாமி தோன்றினார். அதனால்தான் (கங்கா புத்ரர் என்று பொருள்பட) அவருக்கு கங்கேயர் என்றே பெயர். ”

  ….. அம்மாவைச் சொல்லிப் பிள்ளைக் குறிப்பிட்டால் பிள்ளை அன்புள்ளம், அருளுள்ளம் உள்ளவன் என்று அர்த்தம். நம்முடைய பிள்ளையர் இரண்டு அம்மாக்காரர் என்றால் அவர் இரட்டிப்பு மடங்கு அன்பும் அருளும் நிறைந்தவர் என்று அர்த்தம்!

 39. செல்வன். த்வைமாதுர: என்பதற்கு ஆசார்யர் சொன்னதைவிட எனக்கும் வேறு பொருள் எதுவும் தெரியவில்லை. ஆனால் அவரும் ‘கங்கா தேவியையும் அவருக்குப் பத்னியாகவே சொல்வது வழக்கம்’ என்று தான் சொல்லியிருக்கிறார். ‘கங்கையைப் பார்த்தால் அம்பாளுக்குச் சக்களத்திக் காய்ச்சல்’ என்பதும் கவித்துவமாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.

  ‘ஆனால் அன்புருவமான பிள்ளையாரோ, ‘கங்கை யார்?நம்முடைய பிதாவின் பத்னி. அதனால், அவளையும் அம்பாளைப் போலவே எனக்கு இன்னொரு அம்மாவாக வைத்துக் கொள்ளுவேன். த்வைமாதுரன் என்றே பேர் பெறுவேன்’என்று ஒற்றுமைக்கு உருவமாக இருந்துகாட்டுகிறார்! ‘

  இந்த இடத்தில் நேரடியாக ‘நம்முடைய பிதாவின் பத்னி’ என்கிறார். இதனைக் கொண்டு ஆசார்யரின் முடிவு கங்கையும் சிவனின் மனைவி என்று சொல்லலாம்; இல்லை உலக வழக்கைக் கொண்டு அப்படி ஆசார்யர் சொல்கிறார் என்றும் சொல்லலாம்.

  முருகப் பெருமானுக்கு ‘காங்கேயன்’ என்ற பெயர் வந்ததற்கு நேரடிக் காரணம் அவர் கங்கையின் பாகமான சரவணப் பொய்கையில் பிறந்தார் என்பது. அதனை ஆசார்யரும் சொல்கிறார். முருகப் பெருமான் அதனால் நேரடியாகக் கங்கையின் புத்திரர். ஆனால் அது கங்கை சிவபெருமானின் மனைவி என்று ஆகாது.

  ஆனால் ஆசார்யர் சொன்னதை வைத்து கங்கை சிவபெருமானின் மனைவி என்று எடுத்துக் கொள்வதானால் எந்த மறுப்பும் இல்லை. ஆனால் எங்கும் வேதங்களிலோ புராணங்களிலோ பார்வதி பரமேஸ்வரன் திருமணத்தைப் போல் கங்கைக்கும் கங்காதரனுக்கும் திருமணம் நடந்ததாக இல்லை. ஆசார்யர் அப்படி ‘பிதாவின் பத்தினி’ என்று சொல்வதும் உபசாரமாகத் தான் படுகிறது.

 40. உதயகுமார். X Y க்ரோமோசோம்ஸ் பத்திக் கேக்கறீங்க. நான் இதப் போல ஒரு விவகாரமான கேள்வியை எப்பவோ கேட்டேன். இன்னும் யாரும் சரியான பதில் சொல்லலை.

  http://koodal1.blogspot.com/2005/10/blog-post_10.html

 41. குமரன்,

  அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக எங்கும் சொல்லப்படவில்லை என்பது உண்மைதான்.ஆனால் கங்கையை சிவனின் ரகசிய மனைவியாக(அல்லது காதலியாக) கருதுவது தான் வழக்கம்.சிவனும் அவளை தன் சடைமுடியில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருப்பதாக கருதுவதுதான் ஐதீகம்.திருமணம் நடைபெறாதற்கு காரணம் உமையின் கோபமாகவும் இருக்கலாம்.அல்லது கங்கையை பாகிரதன் அழைப்பின் பேரில் பூமிக்கு அனுப்பியதும் காரணமாக இருக்கலாம்.

  ஆச்சாரியார் சொல்வதை வைத்து பார்த்தால் எனக்கு மனைவி என்று சொல்லியிருப்பதாக தான் தோன்றுகிறது.இதுமட்டுமன்றி கங்கையை சபத்னி,சிவபத்னி என்று அழைக்கும் பல ஸ்லோகங்களை கேட்டுள்ளேன்.சவுந்தர்யலஹரிக்கு உரை எழுதிய பலர் கங்கையை சக்களத்தி,இன்னொரு மனைவி என்று தான் குறிப்பிட்டுள்ளனர்.

  http://www.astrojyoti.com/SoundaryaLahari.htm

  Shive sringarardhra tad-ithara-jane kutsana-paraa
  Sarosha Gangayam Girisa-charite’vismayavathi;
  Har’ahibhyo bhita sarasi-ruha-saubhagya-janani
  Sakhishu smera the mayi janani dristih sakaruna

  Mother of all universe,
  The look from your eyes,
  Is kind and filled with love, when looking at your Lord,
  Is filled with hatred at all other men,
  Is filled with anger when looking at Ganga,
  The other wife of your Lord,
  Is filled with wonder , When hearing the stories of your Lord,
  Is filled with fear , when seeing the snakes worn by your Lord,
  Is filled with red colour of valour of the pretty lotus fine,
  Is filled with jollity, when seeing your friends,
  And filled with mercy, when seeing me.

 42. //வாதாமுதைஹி) என்றால் என்ன என்று தெரியவில்லை. //

  வாந்தாமுதை: அல்ல. வாந்தாம்ருதை:

  “பூர்ணேந்து வாந்த அம்ருதை:: = பூரண சந்திரனிலிருந்து பெருகும் அம்ருத தாரைகளினால்.

  என்று பொருள் வரும்.

 43. குமரன்,
  //பாலாஜி. என்ன இது? ஏன் இப்படி ஏத்தி விடறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.//
  குமரன் எல்லாம் உங்க மேல இருக்கற நம்பிக்கைதான்.

 44. செல்வன், குமரன், SK, anony,
  உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. குமரன் உங்களுக்கு திருப்தியான பதில் கிடைத்துவிட்டதா?

  செல்வன்,
  சவுந்தர்யலஹரியை தவிர வேறு எதிலாவது இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளதா?

 45. கந்தபுராணத்தில் கங்கை தோன்றிய வரலாறு விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

  வடமொழி நூலாகிய ஸ்காந்த புராணத்தின் ஒரு பகுதியே கந்தபுராணம்.

  சிவனும் உமையும் ஒருமுறை கைலாயத்திலுள்ள சோலையொன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, விளையாட்டாக தேவி சிவனின் இரு கண்களைப் பொத்திணாள். அதனால் அண்டசராசரமும் ஒளி இழந்து இருளாயின. தடுமாறும் உயிர்களுக்கு அருளும் பொருட்டு சிவனார் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். பிரபஞ்சம் ஒளி பெற்றது.

  நெற்றிக்கண்ணைத் திறந்ததைப் பார்த்ததும் தேவி நடுங்கிப் போய் தன் கைகளை எடுத்து விட்டாள். அவளுடைய பத்து விரல்களினின்றும் வியர்வைத்துளிகள் துளிர்த்தன. உமா தன் கைகளை உதறினாள். அவை பத்து கங்கைகளாகி பெருகி ஓடத் தொடங்கின. தேவர்கள் அஞ்சி ஓடிவந்து இறைவனை வேண்ட, அந்த ஆறுகளை எடுத்து தன் சடைமுடியில் விட்டார். அதன் பெருக்கு அடங்கி சிறு துளிகளாயின. “தேவியின் திருக்கரத்தில் இருந்து தோன்றியதாலும், தங்களது சடைமுடியில் அடைக்கலம் ஆனதாலும் அவை புனிதமாயின; அவற்றை எஙளுக்குத் தர வேண்டும்” எனத் தேவர்கள் வேண்ட இறைவனும் அருளி அவற்றை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களும் தத்தம் நகரங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

  தன் மூதாதையர் நற்கதி அடையும் பொருட்டு பகீரதன் பெரும் பாடுபட்டு செய்து தவமிருக்க பிரம்ம லோகத்தில் இருந்த கங்கை அவனுக்குக் கிடைத்தது. அவன் கொண்டு வந்தது ப்ரம்ம லோகத்தில் இருந்த கங்கையையே. தன் பிரவாகத்தைத் தாங்கக் கூடிய சக்தி யாருக்கும் இல்லை என்ற கர்வத்தில், பெருகி வந்த கங்கையை அடக்குமாறு பகீரதன் சிவனாரை வேண்ட, ஈசன் கங்கையை தம்முடைய சடையில் மீண்டும் தாங்கி, அதன் வேகத்தை ஒடுக்கி, பின்னர் பூமிக்குச் செல்லுமாறு விடுத்தார். இவ்வண்ணம் கங்கை பூமிக்கு வந்தது.

  ஈசன் கங்கையை சடையில் தாங்கியதன் காரணம் அவள் மேல் கொண்ட மோகத்தால் அல்ல! உலகங்கள் அழிந்து போகாவண்ணம் காக்கவே இருமுறை அப்படிச் செய்திருக்கிறார்.
  இதன்படி பார்த்தால், கங்கை ஈசனுக்கும், உமையவளுக்கும் மகள் ஆகிறாள்.
  தம் மக்களை, அதிலும் குறிப்பாக தந்தையர் தம் மகள்களை, தலைக்கு மேல் வைத்து கொண்டாடுவது நாம் அனைவரும் அறிந்ததே!!!!
  :))

  தேவகதைகள் நமக்கு உணர்த்தும் பொருளை அறியவே முயலவேண்டும்.

 46. SK ஐயா,
  நீங்கள் சொல்வது முற்றிலும் புதிதாக உள்ளது.

 47. கந்தபுராணத்தில் கங்கை தோன்றிய வரலாறு விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

  வடமொழி நூலாகிய ஸ்காந்த புராணத்தின் ஒரு பகுதியே கந்தபுராணம்.

  “ஸ்காந்த புராணத்தின் ஆறு சம்ஹிதைகளுள் சங்கர சம்ஹிதையின் முதற் காண்டமாகிய சிவரகசிய காண்டத்தில் விவரிக்கப்பட்டுவுள்ள நம்முடைய சரித்திரத்தைக் கந்தபுராணமாகத் தமிழிலே பெருங்காபிஅயமாகப் பாடு” என முருகன் கச்சியப்ப சிவாச்சாரியாருக்குக் கட்டளையிட்டார். அத்துடன் “திகடச் சக்கரச் செம்முக மைந்துளான்” என்ற அடியையும் கொடுத்து மறைந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

  அதில் வரும் ஒரு பகுதியே மேற்கூறிய வரலாறு.

 48. SK ஐயா,
  மிக்க நன்றி. நீங்கள் சொல்வது புதிய விஷயமாக உள்ளது.
  குமரன், செல்வன் நீங்க என்ன சொல்றீங்க?

 49. புராணங்களை ஓரளவுக்கு மேல் நம்ப இயலாது.அவற்றில் பிற்சேர்க்கைகள் நிறைய உண்டு.கங்கை சிவனின் மனைவி என்பதையே நான் ஏற்கிறேன்.கங்கை சிவனின் மகள் என்றால் காங்கேயனான முருகன் சிவனின் பேரனா?:)

  மேலும் பிரம்மாவும்,விஷ்ணுவும் இரு மனைவியரை மணந்திருக்க சிவனுக்கு மட்டும் ஏகபத்தினி விரதம் பட்டம் கட்ட முயலும் எஸ்.கேவின் செயல் கண்டிக்கத்தக்கது:)

 50. பிரம்மாவிற்கு இரு மனைவியரா? மூவர் அல்லவா? காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி. 🙂

  விஷ்ணுவிற்கும் மூன்று மனைவியர் தானே? பெரிய பிராட்டியார் என்ற மகாலக்ஷ்மி, பூமிப் பிராட்டியார் என்ற பூமா தேவி, இளைய பிராட்டியார் என்ற நீளா தேவி. 🙂

  ஆக சிவபெருமான் தான் ஒரே மனைவியுடன் இருக்கிறார்.

  ம்ம்ம். இதுவரை இதனைக் கவனித்ததில்லை. 🙂

  அப்பனைப் போல் பிள்ளைகள் இல்லையே? ஆளுக்கு இருவரை மணந்து கொண்டிருக்கிறார்கள். 🙂

 51. //SK ஐயா,
  மிக்க நன்றி. நீங்கள் சொல்வது புதிய விஷயமாக உள்ளது.
  குமரன், செல்வன் நீங்க என்ன சொல்றீங்க?//

  என்ன வெ.ப,
  விவாதத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கம் இல்லைப் போல இருக்கு?!:) எல்லாரையும் ஏத்தி விட்டுக்கொண்டிருக்கிறீங்கள். சரி, சரி, இந்த விவாதத்தின் மூலம் நான் அறிந்திராத பல சங்கதியளை அறியக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு மிக்க நன்றி, வெ.ப.

 52. குமரன்,
  காயத்ரி சரஸ்வதியின் பெயரில் ஒன்றுதானே?

  //ஆக சிவபெருமான் தான் ஒரே மனைவியுடன் இருக்கிறார். //
  அப்ப கங்கையை சிவனின் மனைவியாக நீங்க ஏற்றுக் கொள்ளவில்லை? 🙂

 53. வெற்றி,
  //என்ன வெ.ப,
  விவாதத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கம் இல்லைப் போல இருக்கு?!:) எல்லாரையும் ஏத்தி விட்டுக்கொண்டிருக்கிறீங்கள். //
  எல்லோரும் ஒரே விஷத்தை சொன்னால் நான் ஏன் ஏற்றிவிடப் போகிறேன்?
  ஒருவர் சிவனின் மனைவி என்று சொல்கிறார்.
  மற்றொருவர் சிவனின் மனைவி என்று மற்றவர்களால் கவித்துவமாக சொல்லப்படுகிறாரே தவிர உண்மையான மனைவி இல்லை என்று சொல்கிறார்.
  மற்றொருவர் மனைவி இல்லை மகள் என்கிறார்.
  மூவருமே தங்களுடைய கருத்துக்களுக்கு தெளிவான விளக்கமளிக்கிறார்கள். எதை நம்ப???
  அதனால் தான் நாரதர் பணி. நன்மையில் தான் முடியும் 🙂 பயப்படாதீர்கள்.

 54. குழந்தைகளே

  என்னைப்பற்றி பூவுலகில் பெரும் விவாதம் நடப்பதை அறிந்து யாம் இங்கு வந்தோம்.அப்பா பாலாஜி,செல்வன் சொல்வதுதான் உண்மை.கங்கை என் மனைவிதான்.

  குமரனும்,எஸ்.கேவும் விவரம் அறியா பச்சிளம் பாலகர்கள்.அவர்கள் இருவரும் என் மகனான முருகனின் பெயரை வைத்திருப்பதிலிருந்தே தெரியவில்லையா அவர்கள் இருவரும் சிறுகுழந்தைகள் என்று?அதனால் அவர்கள் சொல்வதை உண்மை என நம்பி குழம்ப வேண்டியதில்லை.

  செல்வன் அனைத்தும் அறிந்த மகாஞானி.அவர் சொல்வது தான் உண்மை

  ஆசிகளுடன்
  சிவபெருமான்

 55. $elvan,
  எனக்கு தெரியும் நீங்கதான் இந்த வேலை செஞ்சதுனு. நான் இதைப் படித்தவுடன் இது $elvan தான் என்று என் நண்பனிடம் சொல்லிவிட்டு பப்லிஷ் பண்ணேன்.

  ஆமாம் SK அவர்களின் பெயர் என்ன? பிரைவசி மேட்டராக இருந்தால் சொல்ல வேண்டாம்.

 56. >>மௌலி விலஸத் பூர்ண இந்து வாதாமுதைஹி – திருமுடியில் விளங்குகிறது பூர்ண சந்திரன் (வாதாமுதைஹி) என்றால் என்ன என்று தெரியவில்லை.

 57. பாலாஜி,

  காயத்ரியை சரஸ்வதியின் ஒரு அம்சமாகவும் சொல்வதுண்டு. காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என்று மூவராகவும் சொல்வதுண்டு.

 58. ஆகா…. மகாஞானி செல்வன் சொன்ன போது கேட்கவில்லை. சிவஸ்வரூபமான பரமாசார்யர் சொன்ன போதும் கேட்கவில்லை. இப்போது சாக்ஷாத் சிவபெருமானே வந்து சொல்லிவிட்டாரே. இனிமேல் என்ன அப்பீல்? 🙂

  ஆனா ஒரே ஒரு ஐயம். குமரன் சிவகுமாரன் சரி. ஆனால் எஸ்.கே.வுடைய பெயர் முருகனின் பெயர் இல்லையே. ஒருவேளை போலி சிவபெருமான் வந்துவிட்டாரோ? எல்லாம் அறிந்த பெருமானுக்கு எஸ்.கே. பெயரும் தன் பெயரும் ஒன்று தான் என்று தெரியாதா என்ன?

 59. மிக்க நன்றி பெயர் சொல்ல விரும்பாத நண்பரே. சிவலிங்காபிஷேகம் செய்யும் போது ருத்ரம் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் பொருள் தெரியாது.

 60. பாலாஜி,செல்வன்,குமரன்,SK,ராகவன், மகாபாரதம் கதையா? இல்லை உண்மை சம்பவமா?

 61. என்னங்க குமரன்? இப்படி சொல்லீட்டீங்க?

  நான் சங்கரனின் குமரன்.
  அது விநாயகருக்கும் பொருந்தும். முருகனுக்கும் பொருந்தும்!!

  என் அப்பனுக்குப் பாடம் சொல்லி நிறைய நாட்களாகி விட்டதால் மறுபடியும் குழம்புகிறார் போலும்!

  வாங்க குமரன்! அழைத்துப் பாடம் சொல்லலாம்…. இன்னொரு முறை!

  :))

 62. அப்பனே குமரா

  என் அப்பாவை கேள்வி கேட்டு மதுரைக்காரனான நக்கீரன் பட்ட பாடு அதற்குள் மறந்துவிட்டதா?அவர் சொன்னால் கேள்.எதிர்பேச்சு பேசி வம்பு செய்வது வேண்டாம்

  எஸ்.கேவின் பெயருக்கு பொருள் சிவனின் குமாரன் என வரும் அப்பனே.சிவனின் குமாரன் தான் தானே?என் அண்ணன் பிள்ளையாரப்பன் பார்வதியால் மட்டுமே உருவாக்கப்பட்டவன்.நான் மட்டுமே சிவபெருமானால் படைக்கப்ப்ட்டவன்.சிவகுமாரன் எனும் தகுதி எனக்கு மட்டுமே உண்டு.என் அண்ணனுக்கு கிடையாது

 63. //நான் சங்கரனின் குமரன்.
  //
  இதுதான் SKவா?

  SK ஐயா,
  நீங்க சொன்ன மாதிரி விநாயகரும், முருகரும் சங்கரனின் குமரர்கள் தான். ஆனால் நீங்கள் உங்கள் போட்டோவை தெரியாமல் போட்டுவிட்டீர்கள். அதுதான் காட்டி கொடுத்துவிட்டது.

 64. உதயகுமார்,
  என்னுடைய நம்பிக்கை ராமாயணமும், பாரதமும் கதைகள்தான்.
  நல்ல விஷயங்களை கதை மூலம் சொன்னால் பதியும் என்பதற்காக சொல்லப்பட்ட கதைகள்.

 65. //மகாபாரதம் கதையா? இல்லை உண்மை சம்பவமா?//

  உதயகுமார்,

  முழுக்க முழுக்க உண்மை என்றும் சொல்லமுடியாது,முழுவதும் பொய் என்றும் சொல்லமுடியாது.பாண்டவர்கள் என அரசர்கள் இருந்தது உண்மையாக இருந்திருக்கலாம் ஆனால் விண்ணீல் ஏறி இந்திரலோகம் போனார்கள் என்பது உண்மையாக இருந்திருக்காது

 66. இந்திர லோகம் போனதும் உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த இந்திர லோகம் விண்ணில் உள்ளதாக இல்லாமல் மண்ணுலகத்திலேயே ஏதோ ஒரு நாட்டை அந்தக் காலத்தில் இந்திர லோகம் என்று குறித்திருக்கலாம்.

 67. //இந்திர லோகம் போனதும் உண்மையாக இருக்க”லாம்”. ….. இந்திர லோகம் என்று குறித்திருக்க”லாம்”.//

  ‘லாம்’ என்பதில் உள்ள ‘லா’வை எடுத்துவிட்டு ‘ம்’ மட்டும் வைத்துப் பார்ப்பதே நம்பிக்கை.

  50 வருஷத்துக்கு முன் சந்திரனுக்குப் போகலாம் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை.

  இந்த ‘லா'[Law] வந்தாலே பிரச்சினை தான்!

  நம்பிக்கை தான் வாழ்க்கை.

  ஒன்றை நம்பினால், அது தொடர்பான முன்னோர் சொல்லையும் நம்பித்தான் ஆக வேண்டும்.
  நமக்குப் புரியவில்லை; நம் அறிவுக்குச் சரியாகப் படவில்லை என ஒதுக்காமல், கொஞ்சம் நம்பித்தான் பாருங்களேன்.
  வாழ்க்கை சற்று அமைதியாகவாவது இருக்கும்.

 68. SK,
  //நமக்குப் புரியவில்லை; நம் அறிவுக்குச் சரியாகப் படவில்லை என ஒதுக்காமல், கொஞ்சம் நம்பித்தான் பாருங்களேன்.
  வாழ்க்கை சற்று அமைதியாகவாவது இருக்கும்.
  //
  நீங்கள் சொல்லும் இதை நான் முழு மனதாக ஏற்றுக்கொள்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: