மருந்து வேண்டும்!!!



சின்ன வயசுல இருந்தே இந்த வியாதி நமக்கு இருக்குங்க. ஆனால் காலேஜ் சேர்ந்ததுக்கு அப்பறம்தான் இதை நானே உணர ஆரம்பித்தேன். இந்த வியாதியால் என்னை மாதிரி யாராவது பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

எங்க அப்பாக்கிட்ட இதப்பத்தி ஒரு தடவை சொன்னேன். அதுக்கு அவர் வியாதியும் இல்ல ஒரு மண்ணும் இல்லை… எல்லாம் கொழுப்பு வேற ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டாரு. எங்க அம்மாகிட்ட சொன்னா ஏதாவது சாமி குத்தமா இருக்கும்னு சொல்லி ஏதாவது கோவிலுக்கு கூட்டிட்டு போயிடுவாங்கனு சொல்லலை. சரி உங்கள்ல யாராவது அந்த வியாதிக்கு தீர்வு சொன்னா பரவாயில்லை.

அது என்னடா வியாதினு கேக்கறீங்களா? அதுதாங்க சோம்பேறித்தனம்.
காலேஜ்ல இருக்கும் போதுதான் இதை நான் அதிகமா உணர ஆரம்பிச்சேன். சில நாள் சாப்பிடறதுக்கு சோம்பேறித்தனம் பட்டுட்டு சாப்பிடாம கூட இருந்திருக்கேன். எங்க ரூம்ல இருந்து ஒரு 30-40 அடிதான் மெஸ்ஸுக்கு இருக்கும்.

ஆனால் எழுந்திரிச்சி, செருப்பு போட்டு, அவ்வளவு தூரம் நடந்து போயி, சாப்பாட போட்டு, சாப்பிட்டு… இவ்வளவு கஷ்டப்பட்டு சாப்பிடனுமானு ஃபீல் பண்ணி சாப்பிடாம அப்படியே படுத்து தூங்கிடுவேன். (அப்பறம் நைட் பசிச்சிதுனா தண்ணி குடிச்சிட்டு வந்து தூங்க வேண்டியதுதான். ) ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுக்கற கூட்டத்த சேர்ந்த ஆளு.. (இங்க யாரும் அந்நியன் இல்லைனு நம்பறேன்)

இப்பக்கூட ஒரு ஒரு பதிவு போடறதுக்கும் நிறைய தோணுச்சினாலும் டைப் பண்ண சோம்பேறித்தனம் பட்டுட்டு பாதியோட நிறுத்திக்கறேன். (மேட்டர் இல்லைனாலும் நல்லா ஒப்பேத்தறாண்டானு யாராவது சொன்னீங்க??? அப்பறம் அதுதான் உண்மைனு நான் ஒத்துக்க வேண்டியது வந்துடும்… ஆமாம் சொல்லிட்டேன்)

காலைல ஆறு மணிக்கு எழுந்திரிச்சா போயிடும்னு என் ஃபிரெண்ட் ஒருத்தவங்க சொன்னாங்க. நானும் ஒரு வாரம் ஆறு மணிக்கு அலாரம் வெச்சிட்டு எழுந்திரிச்சி பார்த்தேன் (எழுந்திரிச்சி அலாரத்தை ஆஃப் பண்ணிட்டு தூங்கிடுவேன்). இருந்தாலும் அந்த நோய் சரியான மாதிரி தெரியலை.

சரி உங்கள்ல யாருக்காவது இந்த நோய் இருந்துச்சுனா தயவு செய்து சொல்லுங்க. வேற எதுக்கு நமக்கு கம்பெனிக்கு ஆள் இருக்குனு நானும் சந்தோஷப்பட்டுக்குவேன். மருந்து தெரிந்தால் கண்டிப்பாக சொல்லவும். சரிங்க ரொம்ப டைப் பண்ணி டயர்டாய்யிட்டேன்… ரெஸ்ட் எடுக்க போறேன் 😉